Sunday, 24 November 2024

இசையின் ‘பழைய யானைக் கடை’

 

 


0

பேசாப் பொருளைப் பேசத் துணிவதும், புதிய மொழியில் சொல்ல முனைவதுமே கவிஞர் இசையின் தனித்துவம். அதே கல்யாணகுணங்களைப் பேணியுள்ள அவரது உரைநடையும் பிறிதொன்றைக் காண்பதில் பிழையொன்றுமில்லாத புதுமையைக் கொண்டவை. பாரதியின் கவிதைகளில் சத்தியத்தை காணும் அதே கண்கள்தான் குத்துப்பாட்டுகளோடு ஆட்டமும் போடுகிறது. தமிழ்க் கவிதைகளைப் பற்றி அக்கறையுடன் பேசும் அதே சொற்கள்தான் வடிவேலுவின் வசனங்களைப் பற்றியும் மணியன்பிள்ளையின் சாகசங்கள் குறித்தும் சிறப்பித்துப் பேசுகின்றன. பொதுப்புத்தியிலிருந்து விலகி தனக்கான ஒற்றையடிப்பாதையில் முதலடி வைக்கும் பித்துமனத்தின் தத்தளிப்புகளே அவரது கட்டுரைகளுக்கு உரமேற்றியுள்ளன. இசையின் மொழிதலில் முந்திக்கொண்டு நிற்கிற எள்ளலும் கேலியும் தாங்கவொணா துக்கத்தின், விழுங்கமுடியா கசப்பின், உச்சகட்ட வெறுப்பின் திரிபுகளேயன்றி வேறல்ல. வெறுமனே சிரிப்பு மூட்டுவதல்ல அவற்றின் உத்தேசம். எதிர்மறை இருளில் திளைப்பது போன்று தோற்றம்தரும் கட்டுரைகள் உண்மையில் உத்தேசிப்பது ஆழத்தில் மங்கித் தென்படும் ஒளியையே. இசையின் இடித்துரைத்தல்கள், தலைகனத்த புலமையின் விமர்சனங்கள் அல்ல. கரிசனையும் அக்கறையும்கூடிய உரையாடல்களே.

0

தமிழ் நவீன கவிதை மரபில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சேர்ந்திசைபோல் ஒரே குரலில் ஒலிக்கிற தன்மைக்கு மாறாக விநோதமான தனித்துவமான குரல் ஒன்று ஒலிக்கும். அதுவரையிலான சொல்முறையிலிருந்தும் பாடுபொருளிலிருந்தும் விலகி தன்னைத் தனித்து அடையாளப்படுத்தும். ஞானக்கூத்தன், கலாப்ரியா, யூமா வாசுகி, பிரான்சிஸ் கிருபா, பாலை நிலவன் எனத் தொடரும் தனித்த அடையாளங்களுடனான கவிஞர்களின் அந்த வரிசையில் வந்து சேர்ந்திருப்பவர் இசை.

கவிதையில் இதையெல்லாம் எழுத முடியுமா என்று பிறர் யோசிக்கக்கூட முடியாத ஒன்றை இசை வெகு இயல்பாக தன் கவிதையில் இடம்பெறச் செய்துவிடுகிறார். குட்டி குட்டியாக, டம்மி இசை, ஜிலேபிகளுக்கு ஆசிர்வதிக்கப்பட்டவன், நைஸ், க்ரிஷ்கெய்லிற்கு பந்து வீசுதல், நளினக்கிளி, தேன்மொழிகளின் ஸ்கூட்டிகள் என்று உதாரணங்கள் ஏராளம்.

அவலங்களைப் பேசும் கவிதை துயரச் சாயல்தான் கொண்டிருக்கவேண்டும் என்பதை மாற்றி அதை நகையொலிக்கும் சித்திரமாக மாற்றிக் காட்டுகிறார். இப்போது சொல்ல உத்தேசித்த துக்கம் சொல்லப்பட்ட உத்தியினால் மேலும் பீறிட்டு வெடிக்கிறது. ஒரு குள்ளமான காதல், எவ்வளவு பெரிய கருணை, இப்பிறப்பு, பைத்தியத்தின் டீ, ல்யூகோடெர்மா கன்னியின் விநாயகர், தோத்தகாலிகளின் பாடல் வருகிறது, வீடு, இடமுலை வடிவக் கல், ஒரு கோடியே நூற்றியெட்டு துயரங்கள் உள்ளிட்ட பல கவிதைகளும் இத்தன்மையைக் கொண்டவை.

சமகால கவிதையில் பகடியின் அசாதாரண உயரத்தைத் தொட்டவர் இசை என்பதைச் சொல்ல ‘ரிசல்ட்’, ‘வருக என் வாணிஸ்ரீ’, ‘நம் அறவுணர்ச்சிக்கு ஒரே குஷி’, ‘போலீஸ் வதனம்’, ‘ஊடுருவல்’ உள்ளிட்ட பல கவிதைகள் உண்டு.

அழுத்தமாகவும் சீரான கோடுகளுடனும் இலக்கணச் சுத்தமாக வரையப்பட்டிருந்த தூரிகை ஓவியமாக அமைந்திருந்த கவிதைகளிலிருந்து இசையின் கவிதைகள் வேறாகவும் கவனிக்கத்தக்கதாகவும் தனித்துத் தெரியக் காரணம் அவர் தன் கவிதைகளை கேலிச் சித்திரங்களாக மாற்றி அமைத்துவிடுவதுதான்.

0

கவிதையைக் குறித்து தொடர்ந்த அவரது அக்கறை கட்டுரைகளை எழுதச் செய்திருக்கிறது. கவிதைகளில் ஒலிக்கிற விநோதமான குரலையே கட்டுரைகளிலும் கேட்க முடிகிறது. ‘லைட்டா பொறாமைப்படும் கலைஞன்’ என்று நகைச்சுவை நடிகர் வடிவேலுவை முன்வைத்து எழுதியதே அவரது முதல் கட்டுரை. ஆனாலும் மூன்று தொகுதிகளாக வெளிவந்திருக்கும் கட்டுரைகளில் பெரும்பகுதியும் கவிதைகள் குறித்தே. ‘உய்யடா உய்யடா உய்’ என்ற பெயரை சுகுமாரனின் கவிதைகள் குறித்த ஒரு கட்டுரைக்குத் தலைப்பாக இசையால் மட்டுமே யோசிக்க முடியும்.

0

‘பழைய யானைக் கடை’ என்ற இந்த நூலை அவர் எழுதிக்கொண்டிருந்த சமயங்களில் ஒன்றிரண்டு சந்திப்புகளின்போது இதைப் பற்றி உரையாடியிருக்கிறார். எழுதி முடித்த பின்பு இதன் மென்பிரதியை எனக்கு அனுப்பியிருந்தார். அப்போது இந்த நூலுக்கு இட்டிருந்த பெயர் ‘கள்வன் மகன்’. ஆனால் எனக்கு மென்பிரதிகளைப் படிப்பதில் இன்னும் கொஞ்சம் மனத்தடை உண்டு. எனவே இதை நான் முழுமையாக வாசிக்கவில்லை.

0

தமிழ் கவிதைகளில் ‘விளையாட்டு’ என்பதே இந்த நூலின் இலக்கு.

விளையாட்டு என்றவுடன் ‘இவ்வளவுதானா’ என்றொரு அலட்சிய எண்ணம் எழும். யோசித்துப் பார்த்தால் அது அத்தனை எளிதானதல்ல என்பதும் புரியும்.

‘விளையாட்டுக்காகச் சொன்னேன்’, ‘விளையாட்டுப் பிள்ளை’,‘ விளையாட்டு வினையானது’, ‘ஓடி விளையாடு பாப்பா’, ‘சொல்றத வெளையாட்டா எடுத்துக்காதே’ என்று விளையாட்டு என்ற சொல்லுக்கு புழக்கத்தில் உள்ள அர்த்தங்களும் அழுத்தங்களும் அதிகம்.

விளையாட்டு என்பதை Fun என்ற பொருளிலேயே இசை பயன்படுத்தியிருக்கிறார் என நான் நினைத்தேன். ஆனால் அப்படியில்லை. Play என்ற தன்மையில் பயன்படுத்தியுள்ளார். ‘மொழிக்குள் ‘விளையாட்டு’ என்பது எது? நகைச்சுவை, பகடி, சுவாரஸ்யம், வினோதம் இவற்றுடன் ‘பரிட்சார்த்த முயற்சி’ என்கிற ஒன்றையும் சேர்த்து நான் ‘விளையாட்டு’ என்று புரிந்துகொள்கிறேன்’ என்று இசை தன் புரிதலை விளக்கியுள்ளார்.

0

இந்த அளவுகோலுடன் சங்க இலக்கியம் தொடங்கி 2000 ஆண்டு கால தமிழ்க் கவிதைப் பரம்பரையை ஆராய்ந்திருக்கிறார் இசை. ஏராளமான பல்கலைக் கழகங்களும் உயராய்வு மையங்களும் பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் இதற்கெனவே நேர்ந்து விடப் பட்டிருக்கும்போது இவருக்கு எதற்கு இந்த அதிகப்பிரசங்கித்தனம்?

முதிரா இளம்பருவத்தில் எல்லாருக்குமே ‘காதலி’க்கிற ஆசை வருவதுபோல கவிதை எழுதவும் ஆசை வரும். வரத்தான் செய்யும். பருவக் கோளாறு. இசைக்கும் அப்படி ஆசை வந்ததில் தவறில்லை. அப்படி ஆசை வந்ததும் என்ன செய்திருக்கவேண்டும்? ஏற்கெனவே முன்னால் கவிஞன்மார்கள் சொந்த காசைப் போட்டு காண்போரிடமெல்லாம் பொரி கடலைபோல ஓசியில் கொடுத்திருக்கும் தொகுப்புகளை வாங்கி அதில் உள்ள கவிதைகளைப் படித்து அவற்றைப் போலவே எழுதிப் பழகி தமிழ் கவிதையின் நீண்ட வரிசையின் பின்னால்போய் அடக்கமாகவல்லவா நின்றிருக்கவேண்டும்.

இவர் அப்படிச் செய்யவில்லை. இவருக்குள் இருக்கும் ‘அதிகபிரசங்கி’ அப்படிப் போய் வரிசையில் நிற்பதை அவமானமாய் கௌரவத்துக்கு இழுக்காய் எண்ணியதின் விளைவு ‘இவர்களைப் போல நான் எழுதமாட்டேன்’ என்று தானாக தோன்றியதயெல்லாம் கவிதை என்று எழுதிவிட்டு ஓரிடத்தில் போய் வீறாப்புடன் நின்று கொள்ளச் செய்கிறது. கவிதையில் எதற்கெல்லாம் அனுமதி இல்லையோ அதையெல்லாம் அனுமதிக்கிறார். சிவாஜிகணேசனுக்கு முத்தங்கள் தருகிறார், வாணிஸ்ரீயை வரச் சொல்லுகிறார். நைஸ் என்று கவிதைக்குத் தலைப்பிடுகிறார். மொத்தத்தில் வகுப்பில் ‘மிக மிக அடங்காத’வனாய் திரிகிறார்.

துணிந்து ஒருவன் இப்படி தனித்து நிற்கும்போது தமிழ் சங்கப் பலகை அவனை கேள்வி கேட்கிறது. ‘தமிழ் கவிதைக்கு நீ ஒரு களங்கம்’ என்று குற்றம் சாட்டுகிறது. ‘கவிதையின் புனிதங்களை மாசுபடுத்தும் நீ ஒரு கவிதை நக்ஸலைட்’ என்று பயணப்படிக்கான வவுச்சரில் கையெழுத்து போட்டபடியே கொந்தளிக்கிறது.

‘இதற்கு நான் மட்டும் பொறுப்பல்ல. நம் மரபிலேயே இப்படி உள்ளது’ என்று தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க இசை முயன்றபோது எகத்தாளமான சிரிப்புடன் நாட்டாமைகள் சொல்கிறார்கள் ‘செரி. அப்பிடி என்ன இருக்குது இந்த மரபுல? எங்களுக்குத் தெரியாதா மரபா?’ என்று சவால் விடுகிறார்கள். பரண்களில் கிடந்த சங்க இலக்கியங்களிலிருந்து PODயில் பத்து பிரதிகள் மட்டும் அச்சடித்து நேற்று சுடச்சுட வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்புகள் வரை எல்லாவற்றையும் எடுத்து அடுக்குகிறார் இசை. விடிய விடிய கண்மூடாமல் கட்டன் சாயாவைக் குடித்தபடி புரட்டிப் படித்து தன் தரப்புக்கு நியாயம் செய்யும் வரிகளைத் தேடிப் பிடிக்க முயல்கிறார். அதன் விளைவே இந்தப் புத்தகம்.

0

தன் கவிதைத் தரப்புக்கு நியாயம் சேர்ப்பதற்காக இந்த வேலையை எடுத்துக்கொண்ட இசைக்கு இதில் ஒரு உபரி லாபமும் இருந்திருக்கிறது. யாரும் நாளைக்கு சங்க இலக்கியம் தெரியுமா? பக்தி இலக்கியம் தெரியுமா? என்று அவரை யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது. எல்லாவற்றையும் வாசித்திருக்கிறார். அதைப் பற்றி சுருக்கமான அறிமுகத்தைத் தந்த பிறகே அவற்றில் தன்னால் தேடிக் கண்டுபிடிக்க முடிந்த விளையாட்டுக்களைப் பட்டியலிடுகிறார்.

விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் வினை புரிந்திருக்கிறார் இசை.

0

தமிழ் இலக்கியத்தில் பொதுவாகவே விளையாட்டு அம்சங்கள் குறைவு. திருமூலர் தத்துவம் சார்ந்த சொல் விளையாட்டுக்களை செய்திருக்கிறார். சிலேடைக் கவிதைகள் உண்டு. ஆனாலும் நகையுணர்வு குறைவுதான். சிறுகதை, நாவல்களில் இன்னும் பஞ்சம். புதுமைப்பித்தனில் அபாரமாகத் தொடங்கிய அந்த நகை மரபை நாஞ்சிலாரும் சுஜாதாவும் க.சீ.சிவக்குமாரும் கொஞ்சமே தொட்டுப் பார்த்தார்கள். புரண்டு புரண்டுத் தேடிப் பார்த்தாலும் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’, ‘திருக்குறள் குமரேசபிள்ளை’, ‘குதிரை’, ‘கும்பமுனிக் கதைகள்’ என்று பத்து கதைக்கு மேலாக தேறுவது கடினம். நாவல் வகையறாவில் ஸ்ரீலால் சுக்லவின் ‘தர்பாரி ராகம்’ போன்ற ஒன்று நம்மிடையே இல்லை.

இவ்வளவு நீண்டகன்ற செம்மொழிப் பரப்பில் ஏன் நகைச்சுவைக்கும் விளையாட்டும் இத்தனை பஞ்சம்? இசை தேடிச் சலித்தும் கிட்டியது மிகச் சொற்பமே.

‘விளையாட்டு என்கிற பதத்தால் விளிப்பது சொல்விளையாட்டுக்களை அல்ல. கவிதையின் ஆன்மாவுக்குள் நிகழும் விளையாட்டைத் தரிசிப்பதே என் ஆசை’ என்று இசை தீர்மானித்திருப்பதால் காளமேகத்தின் சொல்விளையாட்டுக்களை கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. அவரது நிந்தாஸ்துதிகளை விரிவாக அலசியிருக்கிறார்.

திருக்குறள், கம்பன், பாரதி என்று தமிழின் கவி உச்சங்கள் யாவற்றிலுமே நகைப்பதற்கான விளையாட்டுக்கள் தேறவேயில்லை. அகம், புறம், பக்தி, சிற்றிலக்கியங்கள் என்று எந்த வகைமையையும் விட்டுவிடாது இசை மிகுந்த அர்ப்பணிப்புடன் தேடியும் அவை இசையின் தரப்புக்கு ‘எவிடென்சு’களைத் தர மறுத்துவிட்டன.

0

ஆனால் இன்றைய கவிதை அவ்வாறில்லை. கிண்டலும் கேலியும் பகடியுமாய் நகைக்கிறது. உரக்கச் சிரிக்கிறது. கெட்ட வார்த்தைகள் பேசுகிறது. நவீன கவிதையில் மட்டும் இந்த மாற்றம் எப்படி சாத்தியமாயிற்று. இசை அதற்குத் தரும் காரணம் யோசிக்க வேண்டிய ஒன்று. ‘லட்சியவாதங்கள் தன்னுடைய கழுத்தைத் தானே அறுத்துக்கொண்ட பிறகு அதன் இரத்தப்பெருக்கிலிருந்து விளையாட்டும் கேலியும் எழுந்து வருவது இயல்பான ஒன்றுதான். இன்றைய இளம்கவிஞர்கள் பலரிடமும் இந்த விளையாட்டு அம்சம் லேசாகவேனும் வெளிப்படுவதை காணமுடிகிறது. நாங்கள் 21ம் நூற்றாண்டின் பிள்ளைகள். எங்களுக்குப் பற்றிக் கொள்ள வலுவாக ஒன்றுமில்லை.”

‘உங்க கவிதையில சினிமா அதிகமா வருதுன்னு குற்றம் சொல்றாங்களே…’ என்று மனுஷ்யபுத்திரன் எழுப்பும் கேள்விக்கு இசையின் பதில் ‘தமிழ் வாழ்வோடு சினிமா இவ்வளவு கலந்துவிட்ட பிறகு அது கவிதைக்குள்ள வர்லைன்னாதான் குற்றம்.” சரியான பதில்தான்.

ஆனால் இந்தத் தன்மை பிற இலக்கிய வடிவங்களை ஏன் பாதிக்கவில்லை? சொல்லப்போனால் சிலர் இன்னமும் அழுகாச்சிக் கதைகளாகவே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

0

நூலின் அடிப்படையைப் பார்த்தால் எத்தனை சிரமமான காரியம் என்பது தெரியும். இதை எத்தனை சீரியஸாக எழுதியிருக்கவேண்டும்? ஆனால் இசைக்கு அப்படி எழுத வராது. சீரியஸான ஒரு விஷயத்தைக்கூட சீரியஸ் ஆக எழுத முடியாதது இசையின் இசைகேடு.

அவரது வழக்கமான பாணியில் தெறிக்கும் வரிகளைப் படிக்கும்போதுதான் வாய்விட்டுச் சிரிக்க முடிகிறது. ‘யோக்கியர்கள் சுவாரஸ்யமற்றவர்கள் போலும். அதிலும் மணிமேகலையில் வரும் குடிகாரன் ‘களிமகன்’ என்ற பெயராலேயே அழைக்கப்பட்டிருக்கிறான். அதாவது களிப்பு முற்றியவன். பொருத்தமான பெயர்தானே?’, ‘பொடியா… அ.சா வோடே தர்க்கிக்கிறாயா?’ போன்ற வரிகள் நூல் முழுக்க தொடர்கின்றன.

விளையாட்டின் அழகியலைக் குறித்த தெளிவுடன் அணுகியிருக்கும் இசையின் கவனம் எங்கும் பிசகவில்லை.

‘கவிதையில் விளையாடுவதென்பது அப்படியொன்றும் விளையாட்டுக் காரியமில்ல. ஆபத்துக்கள் அதிகம். அடிக்கடி சொல்வதுபோல, டீக்கடைப் பெஞ்சில் அமர்ந்து பகடி பேசுவதும் கவிதைக்குள் பகடி பேசுவதும் ஒன்றல்ல.”

0

நவீன கவிதைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் குறித்தும் அதற்கான காரணங்களைக் குறித்தும் யோசிக்கவேண்டிய ஒரு கருத்தை இசை இந்த நூலின் வழியாக முன்வைத்திருக்கிறார். போகிறபோக்கில் சொல்லாமல் நமது கவிதை மரபின் பின்னணியில் அக்கருத்துக்கான நியாயத்தை அணுகியிருக்கிறார். கவிதையைத் தவிர, அதிலும் தான் எழுதும் கவிதையைத் தவிர, வேறெதையுமே வாசிக்கமாட்டேன் என்றிருக்கும் கவிஞர்கள் பலருக்கு நடுவே இசை தனித்துவமானவர், அவரது கவிதைகளைப் போலவே.

0

அதென்ன ‘பழைய யானைக் கடை’? என்ற கேள்வி. ‘ஆய் அண்டிரன் இரவலர்க்கு ஈந்த யானைகளின் அளவானது வானத்தில் பூத்திருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாம். சோற்றுக்கு சிங்கியடிக்கும் புலவர் பெருமக்கள் யானையை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்? ஒருவேளை போகிற வழியில் ‘பழைய யானைக் கடை’யில் விற்றுவிடுவார்களா?’ என்று இசை யோசித்ததன் விளைவே இந்தத் தலைப்பு.

0

x

No comments:

Post a Comment

மூடிக்கிடக்கும் வாசல்கள் - ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை

    எழுதப்படும் படைப்புகளுக்கு இருவகையான எதிர்வினைகள் சாத்தியம் . ஒன்று , பொது வாசகனின் வாசிப்பிலிருந்து உருவாவது . ஒரு வாசகனுக்கு...