எழுத்தாளன் தனக்கு அனுபவமாகும் உலகிற்கும் தான் அர்த்தப்படுத்திக்கொண்டுள்ள உலகிற்குமான இடைவெளி சார்ந்த கேள்விகளுக்கான பதிலை தன் எழுத்தின் வழியாகக் கண்டடைய முயல்கிறான். அவனது வாசகன் தனது அகவழிப் பயணத்தில் எதிர்கொள்ள நேர்கிற கேள்விகளுக்கான பதிலை வாசிப்பின் வழியாகக் கண்டடைய உத்தேகிக்கிறான். வெவ்வேறு பாதைகளிலான இவ்வரண்டு தேட்டங்களும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்கும்போது எழுத்தாளனும் வாசகனும் ஒருவரையொருவர் பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.
நாஞ்சில்நாடனின் கதைகளின் வழியாக
நாம் கண்டடைய முடிகிற விடைகள் யாவுமே நேரடியானவை. யதார்த்தமானவை. உள்ளதை உள்ளபடி முகத்திலறைந்து
சொல்லுபவை. நாஞ்சில்நாடனின் அகமனவோட்டமும் வாசகனின் அகமனவோட்டமும் சந்திக்க நேர்கிற
புள்ளி, ஆதி மனிதனை முதன்முதலாய் சுட்டெரித்த பசி எனும் நெருப்பு கனன்றபடியிருக்கும்
புள்ளியாகும். காட்டுப்பழங்களைக் கொண்டும் கிழங்குகளை உண்டும் கானுயிர்களை வேட்டையாடியும்
உந்தித் தீயை அணைக்க மனிதன் மேற்கொண்ட முயற்சிகள்தான் மனித நாகரிகத்தின் அஸ்திவாரங்கள்.
காலந்தோறும் மனிதனை ஓயவிடாது அலைக்கழிக்கும் இந்த நெருப்பே நாஞ்சில்நாடனின் கதையுலகைக்
கட்டி எழுப்பியுள்ளது.
மனித இயல்பின் எல்லாக் குணங்களுமே
ஏதோவொரு வகையில் பசியிலிருந்து கிளைத்தவை. அல்லது பசியின் பொருட்டாக அமையப்பெற்றவை.
சுயநலம், சுரண்டல், பித்தலாட்டம், கருணை, ஆங்காரம் என அதன் ஜூவாலைகள் விரிந்து பரவியபடியே
உள்ளன. இந்த ஜூவாலைகளின் தீராத நடனமே நாஞ்சில்நாடனின் சிறுகதை உலகம். புலன்கள் அனைத்தையும்
புத்தி மொத்தத்தையும் கூர்மழுங்கச் செய்யும் இந்த நெருப்பை எதிர்கொள்ள வேண்டி நாஞ்சில்நாட்டு
கிராமத்து மனிதர்கள் வரித்துக்கொண்டிருக்கிற வாழ்வை அதன் எல்லாப் போக்குகளுடனும் இக்கதைகள்
மையப்படுத்தியுள்ளன.
பொருளாதார ரீதியாகவும் பாலியல்
ரீதியாகவும் பல்வேறு சுரண்டல்களுக்கு ஆட்படும் எளிய மனிதர்களின் பசி நியாயமான வகையில்
தணிக்கப்படாத நிலையில் அவர்களுக்கு வசமாகிற முதல் ஆயுதம் வன்முறைதான். இந்த வன்முறைதான்
கருக்கிருட்டில், வெள்ளிக் கிழமையானாலும் பத்து ரூபாய் தாளைக் காட்டி, களை பறிக்க வந்தவளை
அணைக்கவரும் கங்காதரம் பிள்ளையை வயலில் சவட்டித் தள்ளச் செய்கிறது. (உபாதை) உளுந்தச்
சோற்றைத் தொட்டு நக்கியதற்காக உதைத்து வெளியேற்றும் சாமிப் பண்ணையாரை இறுக்கமாகக் கிடக்கிறார்
என்று கறுத்த செல்லையாவை ஊரெங்கும் தமுக்கம் போடவைக்கிறது (ஆங்காரம்). மாந்தோப்பு சூனாப்பிள்ளையின்
தென்னம்பிள்ளைகளை சூறையாடச் செய்கிறது (நேர்விகிதம்). உழைப்பைச் சுரண்டுவோரின் ஆதிக்கத்துக்கு
எதிராக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இந்த வன்முறை மூர்க்கங்கொள்ள முடிவதில்லை. தணிந்து
சமரசம் கொள்ள நேர்கிறது (விலாங்கு, வாய்கசந்தது). இவ்வகையான சமரசங்கள் எந்த வகையிலும்
சுய கௌரவம் சார்ந்த சரிவுகளுக்கு இடம் தருவதில்லை. சொந்த மகள்களின் வீட்டிலும்கூட
‘பசிக்குது’ என்று இறங்கிவிடாமல் தன்வீட்டு பழைய சோற்றையே புசிக்க வைக்கும் (விரதம்)
அதேசமயத்தில் ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்று திரிகிற இடாலாக்குடி ராசாவைக்கூட ‘ஊட்டாதார்
தம் மனையில் உண்ணாமை’யை பேணச் சொல்லி கம்பீரம் கொள்கிறது.
வயிற்றுக்குப் பசி, நாவுக்கு ருசி.
வயிற்றிலிருந்து மூண்டெழும் தீயே நாக்கினில் ருசியாகச் சுடர்கிறது. பசியின் வாட்டத்தில்
திருகி யெளியும் மனிதர்களின் உடல் கோணல்களை சித்தரித்த அதே தீவிரத்துடன் ருசியின் நிறங்களையும்
நாஞ்சில்நாடன் தீட்டியிருக்கிறார். ‘குளித்து சாப்பிட்டுவிட்டு வந்தமர்ந்தார்’ என்று
அவரால் வெறுமனே சொல்லிவிடமுடியாது. ‘குளித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் சாப்பிட உட்கார்ந்தார்.
கொடுப்பைக் கீரை துவரன், பருப்புக் குழம்பு, எள்ளுத் துவையல், தாளிச்ச மோர், நல்ல நிமிரச்
சாப்பிட்டார்’ என்று விஸ்தாரமாகத்தான் எழுத முடியும் (பேரம்). உணவின் ருவி பேதங்களை
பகுத்தறிகிற இந்த நுட்பம் அவரது தனிப்பட்ட விசேஷம் என்ற தளத்திலிருந்து விரிந்து அவருடைய
கதையுலகிற்கு கூடுதலான, தனித்த சுவையை அளிக்கிறது. மரவுரீதியான உணவுப் பழக்கங்களில்
ருசி கண்டுவிட்ட மனம் அத்தகைய பழக்கத்தின் மீது கடுமையான மாற்றங்களைத் திணிக்கிற இன்றைய
அவசர வாழ்வில் எதிர்கொள்ள நேர்கிற சரிவுகளையும் சமரசங்களையும் நாஞ்சில்நாடன் மட்டுமே
கரிசனத்துடன் கவனப்படுத்தியுள்ளார். இந்த சரிவுகளும் சமரசங்களும் நமது உணவுப் பழக்கம்
சார்ந்தவையாக மட்டுமில்லாமல் கலாச்சாரம் சார்ந்த, விழுமியங்கள் சார்ந்த, மதிப்பீடுகள்
சார்ந்த சரிவுகளாகவும் சமரசங்களாகவும் அழுத்தம் பெற்றிருப்பது அவரது கரிசனத்தை அர்த்தப்படுத்துகிறது.
பசியும் ருசியுமாய் குவியும் புலன்களின்
வேர்கள் நிலத்திலிருந்தே கிளைத்திருக்க முடியும். வயல்வெளிகளும் சிற்றாறும் மரங்களும்
பூக்களும் கனிகளுமாய் இந்த நிலம் செழித்திருக்க அதன் மனிதர்களு சுடலைமாடன்களும் நம்பிக்கைகளுடன்
பயங்களுடன் திரிகின்றனர். நிலத்தின் நிறங்களும் வாசனையும் மொழியுமே படைப்புகளை வாழ்க்கைக்கு
வெகு அருகில் நிழலாடச் செய்கின்றன. நாஞ்சில்நாடன் காட்டுவது இந்த நிழலாட்டமாய் மட்டுமில்லாமல்,
வாழ்வின் அடுக்குகளே என்கிறபோது அவரது எழுத்து தனித்துவமடைகிறது. நாஞ்சில்நாட்டு விவசாயத்தின்
ஒவ்வொரு படிநிலையையும் வேர்வை மணக்கச் சொல்கிறார். இவை அனைத்துமே மரபுவழிப் பயிர்முறையை
இழந்துவிட்ட இன்றைய சூழலில் பெரும் ஆவணங்களே.
உழவையும் உழுபவனின் பசியையும் களமாகக்கொண்டு
எழுத நேர்பவனுக்கு அறம் சார்ந்த கேள்விகள் எழுவது இயல்பானது. தமிழ் மரபில் ஆழமான வேர்களைக்
கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியின் அறச்சீற்றம் அவனது எழுத்தின் தவிக்கமுடியாத பகுதியாகவே
அமைந்துவிடும். சந்தர்ப்பம் கிடைத்த இடத்திலெல்லாம் நாஞ்சில்நாடன் தனது விமர்கனங்களை
கோபமான வகைசளாகவோ எள்ளல்களாகவோ விட்டுச்செல்லத் தவறுவதில்லை. “அவர் (பிள்ளையார்) வயிற்றில்
பதினாலு அண்டங்கள் இருக்குமென்றால் இவர்கள் (ஊர் முதலடி, பெரிய பண்ணையார்கள், நடவடிக்கைக்காரர்கள்
) வயிற்றில் தலா ரெண்டு டஜன் அண்டாங்களாவது இருக்கும்.” (தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்).
“சிலர் பிடிவாதமாக வில் வண்டியில் ஏற மறுத்து காரில்தான் போவேன் என்றார்கள். தேர்தல்கள்
இல்லாவிட்டால் இதையெல்லாம் எப்படித்தான் அனுபவிப்பது” (ஒரு இந்நாட்டு மன்னர் ). மரபு
இலக்கியத் தேர்ச்சி பல இடங்களில் நாஞ்சில்நாடனுக்கு தன் எள்ளகளையோ நகை விமர்சனங்களையோ
வெளிப்படுத்த பெருமளவு கைகொடுத்துள்ளது. “ஐந்தே முக்காலடி உயரம். காலில் செருப்பு இல்லாமல்
கருமருதுப் பலகைபோல் விரிந்த மார்பும் முதுகும். ‘இன்றுபோல் இருத்தி’ என்று எந்த சீதை
வாழ்த்தினாளோ?” (இடலாக்குடி ராசா ). பொதுவாக எழுத்தாளனின் இத்தகைய ‘இடைவெட்டுகள்’ கதைகளின்
கலை நேர்த்திக்கு பாதகமாகவே அமையும். ஆனால் நாஞ்சில்நாடன் ‘கதைசொல்லி’களின் கதை வடிவத்தை
கையாள்வதன் வழியாக அவ்வாறான மீறல்களை இயல்பாக்கிவிடுகிறார்.
கதைகளின் போக்கில் முன்வைக்கிற
தனிவிமர்சனங்களால் திருப்தியடைய முடியாதபோது கதை மொத்தத்தையும் விமர்சனத்துக்காகவே
பணித்துவிடுகிறார். அரசியலும் இலக்கியவாதிகளின் மீதான சமூகத்தின் அலட்சியமும் அப்படியொரு
நிர்பந்தத்தை ஏற்படுத்தியகை எழுத்தின் வழியாகவே எதிர்கொள்கிறார். திராவிட இயக்கங்கள்
தமிழ்நாட்டில் கோலோச்சியிருந்த காலகட்டத்தில் அவை மீதான அவரது விமர்சனங்களில் காணமுடிகிற
கூர்மை துணிச்சல் கொண்டது. ‘ராஜாக்களும் சீட்டுக் கம்பெனிக்காரர்களும்’ போன்றொரு கதையை
இன்றைய சூழலில் உத்தேசிக்க முடியுமென்று தோன்றவில்லை. அரசியலின்பேரிலான கயமைகளைக் குறித்து
நேரடியாகச் சொல்லும் இக்கதைகளின் பின்னணியில் அத்தகைய துரதிர்ஷ்டங்களைக் கொண்டாடி நிற்கும்
‘வாக்காளப் பெருமக்களின்’ மன்னிக்கிற, மறக்கிற பெருந்தன்மைகளையும் சுட்டிக்காட்டும்போது
நாஞ்சில்நாடனின் விமர்சன இலக்கு எதுவென மயக்கம் ஏற்படுகிறது. அரசியல்வாதிகளிடத்தில்
காட்டும் அதே கண்மூடித்தனத்துடன் இலக்கியவாதிகளையும் இந்த சமூகம் அணுகுகிறது என்கிற
அவலம் நாஞ்சில்நாடனைப் போன்ற அசலான நேர்மையான எழுத்தாளர்களை சினம்கொள்ள வைக்கிறது.
நாட்டின் வளம் சார்ந்த சீரழிவுகளுக்கு நேரடிக் காரணமாகிற அரசியலின்பால் சமூகம் காட்டுகிற
அலட்சியத்தைக் காட்டிலும் கலாச்சார சீரழிவுகளுக்குக் காரணிகளாகிற கலை, இலக்கியம் சார்ந்த
அக்கறையின்மை, சுரணையின்மையை உரத்துச் சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. இக்கதைகள்
ஒவ்வொன்றிலும் இழையோடுகிற நுட்பமான தன்னிரக்கத்தின் வெம்மையை அக்கறையற்ற இந்த சமூகம்
உணர நேரும்போது மட்டுமே விமோசங்கள் சாத்தியம்.
நாஞ்சில்நாடனின் நாவல்கள் எதிரெதிர்
துருவங்களான இரண்டு களங்களையும் அவற்றுக்கு இடையேயான பயணங்களையும் அலைக்கழிப்புகளையும்
அடிப்படையாகக் கொண்டவை. பொருளாதார சாதிய ஏற்றத்தாழ்வுகள் மட்டுமே மனித மதிப்பீடுகளை
உருவாக்கி ஆளுமைய செய்யும் நாஞ்சில்நாட்டு கிராமத்தில் தனது இருப்பை நியாயப்படுத்த
அல்லலுறும் இளைஞனின் கதைகளாக அமைந்த ‘தலைகீழ்விகிதங்களும்’, ‘என்பிலதனை வெயில்காயும்’
நாவலும், மனிதக் கீழ்மைகளுக்கு நடுவில் தன் அன்றாடங்களை அனுசரித்து நகர்கிற எளிமையான
கிராமத்தின் குரலாக அமைந்த ‘மாமிசப் படைப்பு’ம் மண் வாசனையுடன் மனிதர்களை வாசகனுடன்
புழங்கவைக்கிற உரையாடல் நுட்பத்துடன் தமிழ் நாவல் தளத்தில் சில புதிய பரிமாணங்களை நிறுவின.
கிராமத்துக்கும் அதன் மனிதர்களுக்கும் நேர் எதிரான போக்கைக் கொண்ட பெருநகரத்தையும்
பொருளாதார அடுக்கின் இரண்டு முனைகளுக்கு நடுவில் சமன்பாடின்மையுடன் அலையும் அவசர மனிதர்களையும்
களமாகக்கொண்டிருப்பவை ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரை’, ‘எட்டுத் திக்கும் மத யானை’ ஆகிய
நாவல்கள். புறச்சூழலின் காரணமாக அமையும் வாழ்வின் நெருக்கடிகள்தான் பொதுச்சரடென்றாலும்
கிராமத்துப் பின்னணியிலான நெருக்கடிகள் ஏற்படுத்தாத தேட்டங்களை நகர வாழ்வின் நெருக்கடிகள்
உருவாக்கித் தந்திருப்பதை உணரமுடிகிறது. இவ்வாறான தேட்டங்களின் பாதைகளே அவரது நாவல்களில்
அமைந்துள்ள திசையறியாத பயணங்கள். முந்தைய மூன்று நாவல்களிலிருந்து இந்த மூன்று நாவல்களையும்
தனித்துவப்படுத்தி நிற்பதும் இத்தேட்டங்களே. அந்நியத்தன்மைமிக்க ஒரு சமூகச் சூழலின்
நிழல் பிரதேசங்களில் தொலைந்துபோகாது தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அவசியம், கிராமங்கள்
உருவாக்கி வைத்திருந்த அர்த்தங்களையும் மதிப்பீடுகளையும் மறுபரிசீலனை செய்யவைக்கின்றன.
இந்த மறுபரிசீலனையின் வழியான அலைக்கழிப்புகளும் கேள்விகளும் உருவாக்கும் விரிவான களத்தில்,
மனிதர்களின் கீழ்மையை சட்டென்று அடையாளம் கண்டுகொள்ளும் நாஞ்சில்நாடனின் கண்களின் வழியே
திரண்டெழும் உலகத்தின் இருண்ட நிறங்கள் வாசகனிடத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மிக
வலுவானவை.
நாஞ்சில்நாடனின் நாவல்களுடன் ஒப்பிடும்போது
அவரது சிறுகதைகள் நாவல் உலகத்துக்குள் பொருந்தாத உதிர்க்காட்சிகள் என்று உத்தேசிக்கலாம்.
இந்த உதிரிக் காட்சிகளின் வழியாக உருவாகிற சித்திரங்கள் அவரது நாவல்களுக்கு இணையான
அனுபவங்களை சாத்தியப்படுத்துகின்றன. நாவல்களின் வழியாக மனம் வகுத்துக்கொண்டிருக்கும்
பிரதேச எல்லையை அவரால் எளிதாகக் கடந்துவிட முடிகிறது. இதன் வழியாகவே அகஎல்லைகளைத் தாண்டிச்
செல்கிற முனைப்பையும் பெறமுடிந்துள்ளது. சிறுகதைகளின் பாதையோ இப்போக்கிற்கு நேர் எதிரானது.
நாஞ்சில்நாட்டின் பிரதேச எல்லையைத் தாண்டிய பின்னணியில் எழுதியுள்ள கதைகளின் மொழியும்
மனிதர்களும் வேறுபட்டிருந்தாலும் அக்கதைகளில் யங்கும் அடிப்படை மனம் நாஞ்சில்நாட்டு
எல்லைக்குள்ளேயேதான் நின்றிருக்கிறது. நாஞ்சில்நாட்டுக் களத்தில் நிகழும் ‘காலக்கணக்கு’
கதையில் உணர நேர்கிற மரணபயம்தான் பம்பாய் சூழலில் எழுதப்பட்டுள்ள ‘வந்தான், வருவான்,
வாரா நின்றான்’ கதையிலும் வெளிப்பட்டுள்ளது. ‘எருமைக்கடா’வில் சுரக்கும் கருணையே ‘உடன்படுமெய்’
கதையிலும் அழுத்தம் பெற்றுள்ளது.
நாஞ்சில்நாடனின் படைப்புலகை ஒரு
பெண்டுலமாக உருவகித்துக் கொள்ளலாம். அந்த பெண்டுலத்தின் ஒரு எல்லை நாஞ்சில்நாடாகவும்
மறு எல்லை நாஞ்சில் நாடல்லாத பிற பிரதேசங்களாகவும் அமைந்திருக்க இவ்விரண்டுக்கும் நடுவிலான
ஊசராட்டங்களே அவரது பயணங்களும் அலைக்கழிப்புகளும். மரபுசார்ந்த அவரது மனம் இத்தகைய
ஊசலாட்டங்களினூடே சமரசங்களுக்கு உள்ளாவதென்பது ‘விரதம்’ கதையிலிருந்தே முளைவிட்டிருக்கிறது
என்றாலும் ‘பிராந்து’ தொகுப்பில் உள்ள சில கதைகளிலேயே தீவிரப்பட்டுள்ளது. ‘சைவமும்
சாரைப் பாம்பும்’ கதையில் எளிமையாகத் தொடங்கும் இந்த சமரசம் ‘பிணத்தின் முன் அமர்ந்து
தேவாரம்’ கதையின் வழியாக வாழ்வின் நிர்ப்பந்தங்களுக்குள் வசப்பட்டுவிடுகிறது. இந்த
நிர்ப்பந்தம் எல்லை தாண்டும்போது ஏற்படுகிற மனச்சரிவுதான் ‘சாலப்பரிந்து’ கதையில் அடைய
நேர்கிற குரூரமான சமரசம். பெற்ற தாய் என்றாலும்கூட பயன்மதிப்பற்ற ஒரு சுமையாகக் கருதவைக்கிற
நகரவாழ்வின் நெருக்கடிகள் அவளைக் கொலை செய்கிற அளவுக்கு மனிதனைச் சீர்குலைத்துவிடுகிறது.
இந்த சீர்குலையும் சமரசங்களும் மறு எல்லையில் பெருங்கருணையாகவும் சகமனிதனின் மீதான
பரிவாகவும் ஒளியேற்கின்றன. இவ்வாறான கருணையும் பரிவுமே மலைப்பாதையில் சூடாகி நின்றுவிட்ட
பேருந்து ஓட்டுநரின் உதவிக்காக குடிதண்ணீர் பாட்டில்களை வேண்டி நிற்கிறது. காட்டுப்
பாதையில் இருளில் சாலையை மெல்லக்கடக்கும் பாம்பொன்றை ‘போ மகளே போ’ என்று சொல்லிக் காத்திருக்க
வைக்கிறது. அறம் சார்ந்த சீற்றமும் சமூகக் கேடுகளுக்கு எதிரான நேர்மையான விமர்சனங்களையும்
கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி தன் தேட்டத்தின் வழியே சென்றடையும் இடம் இவ்வாறான கருணையும்
பரிவும் ஊற்றெடுக்கும் சிகரத்தைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்?
எழுபதுகளில் தொடங்கி இன்றுவரையிலும்
எழுதப்பட்ட இக்கதைகளை வாசிக்கும்போது இரண்டு விஷயங்களை கவனிக்க முடிகிறது. ஒன்று வாசகனிடத்தில்
கதையை முன்வைக்கிற நேர்த்தி. இரண்டாவது அவரது மொழியாளுமை, ஒரு படைப்பில் வாசகன் எதிர்பார்க்கும்
இந்த முதன்மையான அம்சங்களை மிகச் சுலபமாகக் கடந்துவிடுகின்றன நாஞ்சில்நாடனின் கதைகள்.
ஒரு கிராமமும் அதன் மனிதர்களும் அவர்களுக்கான மொழியும் என்று பிரத்தியேகமான கதையுலகை
நிறுவிக்கொண்ட வகையில் அவர் கி.ராவுடன் ஒப்பிடத்தக்கவர் என்றாலும் கறாரான நேர்மையான
விமர்சனப் பார்வை நாஞ்சில்நாடனை தனித்துவப்படுத்துகிறது. அவரது எழுத்தின் உயிரோட்டமாக
உள்ள இந்த அம்சமே நாஞ்சில்நாடனை அவரது தலைமுறை எழுத்தாளர்களின் வரிசையில் முதன்மைப்படுத்துவதோடு
இன்றும் அவருடைய படைப்புகளை ஜீவனுடன் இருத்தியுள்ளது.
வடிவம், மொழி மற்றும் உத்தைகள்
சார்ந்த மாற்றங்களும் கோட்பாடுகளும் சிறுகதையாளர்களை மிரட்டியடித்த காலத்திலும்கூட
நாஞ்சில்நாடன தனது கதைகளை தனக்கு ஆகிவந்த வடிவத்திலும் மொழியிலுமே எழுதியிருக்கிறார்.
உட்குறிப்பு, வாசக இடைவெளி என்ற சிக்கல்களுக்கு இடம்தராமல் சொல்ல வந்ததை பட்டவர்த்தனமாக
முன்வைத்துவிடும் தன்மைகொண்டவை அவர் கதைகள். இவ்வாறான நேரடித்தன்மையுள்ள படைப்புகள்
மறுவாப்புக்கு இடமளிக்காதவை என்ற பொதுவான எண்ணம் நாஞ்சில்நாடன் கதைகளைப் பொறுத்தவரை
பொருந்தி வராதது. அகம்சார்ந்த கேள்விகளுக்கும் தர்க்கங்களுக்கும் அழுத்தம் தராமல் வாழ்வின்
புறவுலக நிகழ்வுகளைக்கொண்டு கதைசொல்லும் ‘கதைசொல்லி’களின் குணாம்சம் அது. விஸ்தாரமான
தொடக்கம், நுட்பமான தகவல்கள், ழலைக் கச்சிதமாகக் கட்டமைக்கும் சித்தரிப்பு, மண்மணம்
கமழும் வாட்டாரச் சொல்லாடல், உத்தேசித்ததற்கு மேல் ஒரு வரியோ வார்த்தையோ இல்லாமல் கதையை
நிறைவு செய்தலென்று இலக்கண சுத்தமான வார்க்கப்பட்டுள்ள இக்கதைகள் அகவழிப் பயணங்களுக்கு
இடமளிக்காதவை. முக்கியத்துவம் தராதவை. இருளும் மயக்கங்களும் நிறைந்த அந்தப் புதிர்வழிகளைவிட
பசியும் வலியும் வாழ்வின் ரணங்களுமான யதார்த்தமான ஒற்றையடிப்பாதை போதுமானது என்று
‘கதைசொல்லி’கள் நம்புவதையும் தள்ளிவிட முடியாதல்லவா?
உந்தித் தீயின் வெம்மையும் நாவின்
சுவை மொட்டுக்களில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய
கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய் மனித வாழ்வின் கீழ்மைகளும்
அவலங்களும் ஊடாட நாஞ்சில்நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது. இல்லாமைகண்டு
வருந்தியும் தன் பசியாறி பிறர் பசி மறுப்போரின் கயமையை நொந்தும் தினம் மாறும் குணம்
கொண்டோரை கண்டு வெகுண்டும் கதை பேசுகிறது. எள்ளி நகையாடியும் எடுத்தெறிந்து பேசியும
முகத்திலறைந்தும் முணுமுணுத்தபடியும் தொடர்கிறது. காட்சிகள் மாறுகின்றன. முகங்களும்
மாறுகின்றன. நிலமும் நீள் விசும்பும் வேறாகி திரைகள் விழுந்தும் விரிந்தும் கதையாடல்
நடந்தபடியே இருக்கிறது. அந்தக் குரல் மட்டும் தன் கதியில் இருந்தபடி நடுவாண்மை பிசகாது
எவர்க்கும் அஞ்சாது யாவற்றையும் உரசிப் பார்த்து உள்ளதை உள்ளபடி சொல்கிறது. மெல்ல மெல்ல
அந்தக் கதை சொல்லியின் குரலே காலத்தின் குரலாகவும் அறத்தின் குரலாகவும் ஒலிக்கத் தொடங்குகிறது.
(முன்னுரை, சிறுகதைத் தொகுப்பு, தமிழினி வெளியீடு.)
No comments:
Post a Comment