Sunday, 24 November 2024

மூடிக்கிடக்கும் வாசல்கள் - ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை

 

 

எழுதப்படும் படைப்புகளுக்கு இருவகையான எதிர்வினைகள் சாத்தியம். ஒன்று, பொது வாசகனின் வாசிப்பிலிருந்து உருவாவது. ஒரு வாசகனுக்கு அந்த படைப்பு அவனது அனுபவத் தளத்தில் ஏற்படுத்திய அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டது இந்த எதிர்வினை. பலசமயங்களில் இந்த எதிர்வினை வாசகனுக்குள்ளேயே அந்தரங்கமானதாக நின்றுவிடுவதுண்டு. ஆனாலும் ஒரு படைப்பாளனுக்கு இத்தகைய நுட்பமான வாசக எதிர்வினையே முக்கியமானதாக படுகிறது. மற்றொரு வகையான எதிர்வினை விம

ர்சகப்
பார்வையிலிருந்து உருவாவது. கலை, இலக்கியம், தத்துவம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு வகையான அடிப்படைகளின் ஆதாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள சட்டகங்களைக் கொண்டு ஒரு படைப்பை விமர்சன நோக்கில் அணுகுவது. ஒரு படைப்பை இலக்கியத்தின், வரலாற்றின் தொடர்ச்சியாக எவ்வாறு பார்க்க முடியும் என்கிற ஆதாரமான பார்வையை கொண்டிருக்க வேண்டும்.

 

இவ்வகையான எதிர்வினைகளின் வழியாகவே தொடர்ந்து ஒரு படைப்புச் சூழல் ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும். ஆனால் இன்று தமிழில் இலக்கிய விமர்சனம் என்பது அருகிப்போய்விட்ட ஒன்றாகவே உள்ளது. தனிநபர் வாசிப்பு என்பது பெரும்பாலும் மெளன வாசிப்பு என்ற நிலையில் தொடர்ந்து இருக்க, விமர்சன அடிப்படையிலான எதிர்வினைகளோ படைப்பிற்கு அப்பாலான அரசியலின் கருவியாக அமைந்துபோயின.

 

கநாசு, வெங்கட்சாமிநாதன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன் என்று முக்கிய படைப்பாளிகள் பலரும் விமர்சனத்திற்கா ஆரோக்கியமான பங்களிப்புகளை தந்துள்ளார்கள். .நா.சு வகுத்துத் தந்த ரசனை அடிப்படையிலான விமர்சன அளவுகோல்களை அடியொற்றி தமிழ் இலக்கிய முன்னோடிகளைக் குறித்து ஜெயமோகன் எழுதிய விமர்சன நூல்கள் இந்த வகையில் முக்கியமானவை. புதிய தலைமுறை வாசகர்களுக்கு வாசிப்பைக் குறித்த தெளிவுகளை ஏற்படுத்தவும் அவர்களது அடுத்த கட்ட வாசிப்புக்கு ஒரு தூண்டுதலாகவும் இந்த நூல்கள் அமைகின்றன.

 

தமிழ் இலக்கியத்தைப் பற்றி பேசும்போது ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இலங்கையின் போர்ச் சூழலுக்குப் பிறகு ஈழத் தமிழ் எழுத்து என்பது இலங்கையின் பிரதேச எல்லையைக் கடந்து சர்வதேச அளவிலான ஒரு விரிவையும் பரப்பையும் அடைந்துள்ளது. உலகெங்கிலும் புகலிடம் தேடிச் சென்ற இலங்கைத் தமிழர்கள், தங்கள் வாழ்க்கையோடு சேர்த்து தமிழையும் அந்தந்த வாழ்நிலங்களில் செய்கிறார்கள். உலக அளவிலான வாசிப்புச் சூழலையும் பதிப்புச் சூழலையும் மாற்றி அமைத்துள்ளது. இன்று சர்வதேச அளவில் பெருகி நிறையும்  தமிழ் வலைமனைகளின் வாசக தளமும் இதிலிருந்து உருவாகியதே.

 

ஈழ இலக்கியம் - ஒரு விமர்சனப் பார்வை என்ற ஜெயமோகனின் இந்த நூல் ஈழ இலக்கியச் சூழலையும் அதில் உருவாகி வந்த ஆறு ஆளுமைகளைக் குறித்தும் தமிழ் இலக்கியச் சூழலின் அடிப்படையாகக் கொண்டு விரிவாக விவாதித்துள்ளார். 'இலக்கிய படைப்புகளை வைத்துப் பார்க்கும்போது ஆழ்ந்த, அனுபவங்களுக்குள் செல்லாமல் புறவயமான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மட்டுமே நம்பி இலக்கியம் படைக்கும் ஒரு போக்கு அங்கு வலுவாக இருந்ததே முக்கிய காரணம் என்று எனக்குப் படுகிறது' என்று முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் ஜெயமோகன், இந்த நூலில் 'தீவிரமான படைப்பூக்கத்துடன் செயல்பட்டவர்கள்' என்று தான் எண்ணும் ஐந்து படைப்பாளிகளைக் குறித்தும், ஒரு விமர்சகர் குறித்தும் தன்னுடைய விரிவான விமர்சனங்களைப் பதிவுசெய்துள்ளார்.

 

இலங்கை தமிழ் இலக்கியம், தன் சூழலின் சாதக அம்சங்களை தாண்டியும் நம்பிக்கை தருமளவிற்கு வளராது போனதற்கு இலங்கையில் வெகு காலம் செல்வாக்கு செலுத்திய விமர்சன கோட்பாடுகளும், கோட்பாட்டாளர்களுமே என்ற கருத்தை தொடர்ந்து தன் கட்டுரைகளில் அடிக்கோடிட்டு செல்கிறார் ஜெயமோகன். கா.சிவத்தம்பியைக் குறித்த கட்டுரையில் இதையொட்டிய ஒரு விரிவான விவாதம் இடம் பெற்றுள்ளது. கைலாசபதி, கா.சிவத்தம்பி இருவரும் இலங்கையின் இலக்கியச் சூழலில் செலுத்தியிருந்த ஆளுமை என்பது அதன் ஆரோக்கியமான படைப்பு செயல்பாடுகளுக்கு பெரும் தடையாக அமைந்தது என்பதை விளக்கியுள்ளார். தமிழின் விமர்சன சூழலுடன் ஒப்பிட்டு நகரும் இவ்விவாதத்தின் முடிவில் 'தரவுகளை முறைப்படுத்தி அவற்றில் இருந்து பொதுமைப்பாடுகளைப் பெற்று கருத்துக்களை உருவாக்குவதில் வைலாசபதியைவிடவும் அறிவியல்பூர்வமான அணுகுமுறை சிவத்தம்பியிடம் காணப்படுகிறது. தமிழின் நவீன இலக்கியத்தில் செயல்பட்ட முதல் பெரும் கோட்பாட்டாளர் சிவத்தம்பியே' என்று அவரது பலத்தைப் பற்றிக் கூறும் ஜெயமோகன், 'இலக்கியத்தை அவரால் புரிந்துகொள்ளவோ மதிப்பிடவோ முடியாமல் போகிறது' என்று அவரது பலவீனங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

 

'கோட்பாட்டாளர்களின் ஆணவத்தால் அழிக்கப்பட்ட இலக்கிய நிலம் ஈழம்' என்று குறிப்பிடும் ஜெயமோகன், இந்தக் கோட்பாட்டு மையத்துக்கு மாற்றாக இரு புள்ளிகள் மட்டுமே இருந்தன என்று குறிப்பிடுகிறார். உண்மையான படைப்பூக்கமும் இலக்கியத்தின் கட்டற்ற பாய்ச்சலையும் கொண்டிருந்த மு.தளையசிங்கம், எஸ்.பொ ஆகிய இருவரும்தான் அந்த புள்ளிகள். இவ்விரு இலக்கிய ஆளுமைகளைக் குறித்தும் தனித்தனிக் கட்டுரைகள் அமைந்துள்ளன.

 

இன்றைய தமிழ் இளம் வாசகர்களுக்கு மு.தளையசிங்கம் என்ற பெயரே முற்றிலும் புதிய ஒன்றாக இருக்கும் என்றால் அதில் ஆச்சரியம் இல்லை. அவரது படைப்புகளோ, அவற்றைப் பற்றிய விவாதங்களோ இன்றைய சூழலில் இல்லாதிருக்கும் நிலையில் மறந்து போன ஒரு ஆளுமையை, அதன் முக்கியத்துவத்தை நிறுவும் ஒரு முக்கிய முயற்சியாகவே இந்த கட்டுரை அமைந்துள்ளது. படைப்பாளி என்ற நிலையைவிட ஒரு சிந்தனையாளன் என்ற நிலையில் மு.தளையசிங்கத்தின் இடம் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தக் கட்டுரை விவாதிக்கிறது. இந்திய சிந்தனை முறை, அதன் வளர்ச்சிப் போக்கு, ஐரோப்பிய சிந்தனை முறை மற்றும் கல்வி இந்திய சிந்தனை முறையின் மீது ஏற்படுத்திய தாக்கம், அவற்றிலிருந்து விலகி வளர்ந்த ஒரு மாற்று சிந்தனை முறை, அதில் மு.தளையசிங்கம் எவ்வாறு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார், ஒரு சிந்தனையாளராக அவர் பெற்ற தோல்விக்கான காரணங்கள் என்று பல்வேறு புள்ளிகளில் இந்த விவாதம் நகர்கிறது. 'தளையசிங்கம் தன் சிந்தனையின் பயணத்தில் வரலாறு உருவாக்கி வைத்திருந்த ஒரு அகழியில் அகப்பட்டுக்கொண்டதன் மூலம் பயணம் தடைபட்ட ஒரு மேதை' என்று சொல்லும் ஜெயமோகன், மீண்டும் மீண்டும் கண்டடையப்படவேண்டிய ஒரு சிந்தனையாளராக மு. தளையசிங்கத்தை அடையாளம் காண்கிறார்.

 

'கோட்பாட்டாளர்களின் பொதுமைப்பாடுகளைத் தன் படைப்பனுபவம் மூலம் நிராகரித்தவராக' ஜெயமோகன் காணும் எஸ்.பொ குறித்த கட்டுரையின் முதற்பகுதி தமிழ் இலக்கிய விமர்சனத்தின் இன்றைய நிலையைக் குறித்தும், கோட்டபாட்டாளர்களுக்கும் படைப்பாளிகளுக்குமான இடைவெளியைக் குறித்தும் ஆழமாக விமர்சிக்கிறது. இலங்கை இலக்கியச் சூழலில் சமூகக் குரல் சார்ந்தே ஒரு படைப்பாளி செயல்படவேண்டும் என்ற பொது நிலைக்கு எதிராக, தனிமனிதவாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆற்றலாக எஸ்.பொ உருவாகிய விதம் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. .மாதவனுடன் எஸ்.பொவை ஒப்பிட்டு இருவருடைய எழுத்திலும் உள்ள பொது அம்சங்களை குறித்தும், அவற்றுக்கிடையிலான நுட்பமான வேறுபாடுகளைக் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. இயல்புவாத எழுத்து குறித்த தெளிவான சித்திரத்தை ஜெயமோகன் இந்த கட்டுரையில் தந்திருக்கிறார். இன்று மறைந்துபோய்விட்ட ஈழப் பண்பாட்டை, ஈழ மண்ணை நமக்குக் காட்டும் ஒரே இலக்கிய ஆவணம் எஸ்.பொவின் எழுத்துக்களே என்று ஆணித்தரமாக நிறுவியுள்ளார்.

 

தமிழ்நாட்டில் தமிழ் போராளிகளுக்கான ஆதரவும் குரலும் வலுவாக இருந்த காலகட்டத்தில், மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியவை ஈழத்தில் எழுதப்பட்ட கவிதைகள். போராட்டத்திற்கும், புரட்சிக்கும் கவிதைக்கும் நேரடியான தொடர்பு உண்டு. ஒட்டுமொத்தமான ஒரு எழுச்சியை, வேகத்தை துடிப்பும் வீரியமும்கொண்ட கவிதைகள் சாத்தியப்படுத்தின. அந்த வகையில் சேரனின் கவிதைகள் தமிழகத்தில் அன்றைய சூழலில் ஏற்படுத்திய பாதிப்புகள் கணிசமானவை. சேரனின் கவிதைகள் குறித்த ''ரத்தம், விந்து, கவிதை...'' என்ற கட்டுரையில், காலவோட்டத்தில் சேரனின் கவிதைகள் இன்று வந்து சேர்ந்திருக்கும் இடம் குறித்தும், அவருடைய போராட்ட கவிதைகளின் இன்றைய பொருத்தம் குறித்தும் ஜெயமோகன் தனது விமர்சனங்களை பதிவுசெய்துள்ளார். ''புரட்சிகரக் கவிதைகள் அவற்றின் காலகட்டத்தைத் தாண்டி வாசித்துப்பார்க்கும்போது, அவை ஆழமில்லாத தட்டையான உணர்ச்சி வெளிப்பாடுகளாகவே'' ஒரு நல்ல கவிதை வாசகனுக்கு அனுபவமாகும். சேரன் எழுதத்தொடங்கிய அதே காலகட்டத்தில் எழுதத் தொடங்கிய சுகுமாரனின் கவிதைகளோடு சேரனின் கவிதைகளை ஒப்பிட்டு பொதுவாக புரட்சிகரக் கவிதைகளின், காதல் கவிதைகளின் தன்மைகளைக் குறித்து கட்டுரை அலசுகிறது.

 

தனது புரட்சிகரக் கவிதைகளால் சேரன் தமிழகச் சூழலில் பேசப்பட்ட காலத்துக்கு முன்பிருந்தே கவிதைகள் எழுதியிருந்தாலும், அவரைக் குறித்த வாசககவனம் வெகு பின்னால்தான் ஏற்பட்டது. ஈழக் கவிஞர்களில் முதன்மையானவர் சு.வில்வரத்தினமே என்று பலரும் குறிப்பிடுகிறார்கள். ஒரு போர்ச்சூழலில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் கவிதைகளை தந்தவர்கள் சேரன், ..சு ஜெயபாலன் போன்றோர். ஆனால் சு.வில்வரத்தினம் கவிதைவெளி முற்றிலும் வேறானது. மரபுக்கவிதையிலிருந்து யாப்பை உதறிவிட்டு தனித்த சந்த ஒழுங்குடன் கவிதைகளை எழுதிய மரபைச் சேரந்தவர் சு.வில்வரத்தினம். வாசகனிடம் செய்யுள் மொழியில் நேரடியாக பேசும் தன்மை கொண்டவை. சு.வில்வரத்தினத்தின் கவிதைகளின் முக்கியமான பலம் 'உண்மையான உணர்ச்சிகள்தான்' என்று சொல்லும் ஜெயமோகன், 'ஈழச்சூழலில் நின்றபடி அழிவுகளையும், துயரங்களையும் பாடும் கவிஞராக இருந்தபோதும், பிரச்சாரம் செய்யப்படும் கருத்துகளை விலக்கி தன் அந்தரங்க நோக்கையே கவிதைகளில் முன்வைத்தார்' என்றும், 'அவரது கவிமனம் இயல்பாகவே தன் சைவப் பெருமரபுடன் இணைந்துகொள்ளும்விதமும், அதைத் தன் ஆளுமைக்கேற்ப மறு ஆக்கம் செய்தெடுக்கும் படைப்பூக்கமும்தான் அவருடைய பலம்' என்றும் அவருடைய சிறப்புக்கான காரணங்களை விவரித்துள்ளார்.

 

மண்ணை இழந்த துயரத்தை தம் படைப்புகளின் வழியாக உக்கிரமாக வெளிப்படுத்தும் ஈழப் படைப்பாளிகளுக்கு நடுவே, .முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் எவ்வாறு தனித்துவம் பெற்றுள்ளன என்று விவாதிக்கும் கட்டுரை ''புன்னகைக்கும் கதைசொல்லி''. இலக்கிய வரலாற்றில் கதைசொல்லிகளின் முக்கியத்துவத்தைக் குறித்தும், தமிழ்ச் சூழலில் முதன்மையான கதைசொல்லியான கி.ராஜநாரயணின் எழுத்துக்களோடு .முத்துலிங்கத்தின் எழுத்துக்களை ஒப்பிட்டு நோக்கியும் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கி.ரா, அசோகமித்திரன், புதுமைப்பித்தன் ஆகியோரின் எழுத்துக்களில் உள்ள சிறப்பம்சங்கள் பலவும் எவ்வாறு .முத்துலிங்கத்தின் கதைகளிலும் அமைந்துள்ளன என்பது உதாரணங்களோடு விளக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களிலிருந்து .முத்துலிங்கத்தின் எழுத்துக்களை தனித்துவப்படுத்திக் காட்டுவது அவரது 'புன்னகை' என்று குறிப்பிடும் ஜெயமோகன், அங்கதத்தின் அடிப்படையில் எழுத்துக்களில் உருவாகும் அந்த புன்னகை எவ்வாறு .முத்துலிங்கத்தின் கதை உலகில் வெற்றிகரமாக உருவாகிறது என்பதை விளக்கியுள்ளார். .முத்துலிங்கத்தின் இலக்கியத்தின் அடிப்படை அந்த புன்னகையே என்றும் குறிப்பிடுகிறார்.

 

விமர்சனக் கட்டுரைகளுக்கான பொது அம்சங்களை விலக்கி, கச்சிதமாக மொழிநடை, தர்க்க ஒழுங்கு, ஒப்பீட்டு பார்வை என இக்கட்டுரைகள் வாசிப்புத் தன்மை கொண்டவையாக அமைந்துள்ளன. ''மொழியின் மடியில் கவிதை மட்டும் நிரந்தர இளமையுடன் வாழும்'', ''சுகுமாரனின் புரட்சிகரக் கவிதைகள் கிளர்ந்து எழுந்த இளமையின் குரல் அல்ல, கைவிடப்பட்ட நிராதரவான இளமையின் குரல்'' போன்ற வரிகள் கட்டுரைகளுக்கு தனித்த அழகைச் சேர்த்துள்ளன.

 

விமர்சகர்கள் குறித்தும், குறிப்பாக மார்க்சீய விமர்சகர்கள் குறித்தும் எழுதும்போது ஜெயமோகனின் எழுத்தில் ஒரு பாய்ச்சலும் ஆவேசமும் தெரிகிறது. அந்த ஆவேசத்திலிருந்து பீறிடும் அங்கதம் தெறிக்கும் சில வரிகள் வாய்விட்டுச் சிரிக்கவைக்கிறது. உதாரணம் ''திறனாய்வாளராக சிவத்தம்பி கையில் பிரம்புடன் நிற்க படைப்புகள் அவரைச் சுற்றி ஓடிவிளையாடும் காட்சியையே நாம் காண்கிறோம்''.

 

''இலக்கிய விமர்சனம் என்பது வாசகனுக்கு இலக்கியத்தைப் புதிய கோணங்களில் மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்வது. இலக்கியப் படைப்புகளில் புதிய வாசல்களை வாசகனுக்குத் திறந்து காட்டுவது. இலக்கிய விமர்சனம் என்பது ஒரு சமூகம் கொள்ளும் வாசிப்புப் பயிற்சி'' என்று ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கும் இந்த விமர்சனம், இன்று தமிழ் இலக்கிய பரப்பில் மூடப்பட்ட வாசலாகப் போனது தமிழ் வாசகர்களின் துரதிர்ஷ்டமே! இந் நூல் ஈழ இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் முதன்மையான படைப்பாளிகளைப் பற்றி பேசுவதாக அமைந்திருந்தாலும், ஒட்டு மொத்த தமிழ் இலக்கிய விமர்சன உலகம் குறித்த ஒரு பெரும் விவாதத்தையும் அதன் தேவையையும் வலியுறுத்துவதாகவே உள்ளது.

 

வார்த்தை இதழ் மார்ச் 2009

 

 

No comments:

Post a Comment

மூடிக்கிடக்கும் வாசல்கள் - ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை

    எழுதப்படும் படைப்புகளுக்கு இருவகையான எதிர்வினைகள் சாத்தியம் . ஒன்று , பொது வாசகனின் வாசிப்பிலிருந்து உருவாவது . ஒரு வாசகனுக்கு...