அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பரின் சொந்த ஊர் திருச்சிக்குச் செல்லும் நெடுஞ்சாலையை அடுத்திருக்கும் ஒரு கிராமம். மனைவியும் அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு கிராமத்தைச் சேர்ந்தவர். இருவரும் பட்டதாரிகள். ஒருநாள் மாலை புதிதாக வாங்கிய உடைகளை என் மனைவியிடம் காட்டிக்கொண்டிருந்த நண்பரின் மனைவி சிரித்தபடியே சொன்னார் “சுடிதார், நைட்டியெல்லாம் இங்கதான். ஊருக்குப் போனா ஸாரி மட்டுந்தான் கட்டமுடியும்.” கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மென்பொருள் நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் நண்பரின் மகள் தோளைக் குலுக்கியபடியே சிரித்தாள் “ஊருக்குன்னு தனி டிரெஸ் கோட் இருக்கு ஆண்டி. நான் மட்டும் சுடிதார் போட்டுக்கலாம். கோயில், கல்யாணம்னா தாவணிதான்.”
கோயமுத்தூருக்கும் அவர்களின் ஊருக்குமான
தொலைவு நூறு கிலோ மீட்டர். இரண்டு இடங்களிலும் பெண்கள் வெவ்வேறு விதமாய், தங்கள் விருப்பத்துக்கும்
வசதிக்கும் மாறாக, தங்களை தகவமைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம். கல்வியும் வேலைவாய்ப்பும்
உலகின் தொலைவுகள் பலவற்றை கடந்து செல்லும் வாய்ப்புகளை நல்கியுள்ளன. பொருளாதார தற்சார்பு
பல தடைகளை உடைத்திருக்கிறது. உடை, உணவு, திருமணம் தொடர்பான தேர்வுகளை விருப்பத்துக்கேற்ப
தெரிந்தெடுக்கும் உரிமையயை அளித்துள்ளது. புறவயமான இந்த மாற்றங்களுக்கு அப்பால் நேரடியாக
புலப்படாத நுட்பமான சிக்கல்களையும் அவர்கள்
சந்திக்க நேர்கிறது. மரபுக்கும் புதுமைக்குமான இடைவெளியைக் கடக்குந்தோறும் சந்திக்க
நேரும் தடுமாற்றம்.
நவீனமயமான வாழ்க்கைச் சூழலில் இன்றைய
பெண்கள் சந்திக்க நேரும் உளவியல் தடுமாற்றங்களை களமாகக் கொண்டவை லாவண்யாவின் சிறுகதைகள்.
மூன்று தலைமுறைப் பெண்களின் எதிரும் புதிருமான மனநிலைகளை உள்ளடக்கியுள்ளன. மரபான குடும்ப
அமைப்பைச் சேர்ந்தது முதல் தலைமுறை, மரபையும் மீறலையும் ஒன்றாக கடைபிடிப்பது இரண்டாம்
தலைமுறை, இவ்விரண்டுக்கும் தொடர்பில்லாதது புதிய மூன்றாவது தலைமுறை.
இரண்டாம் தலைமுறைப் பெண்கள் தங்களது
ஆளுமையை நிறுவிக்கொள்ள முடியாமல் எதிர்கொள்ளும் முதல் சவால், தன்னிலிருந்தே தன்னை முற்றிலுமாய்
விடுவித்துக்கொள்ள முடியாதது. இதனால் கடுமையான தடுமாற்றங்களிலும் முடிவெடுக்க முடியாத
ஊசலாட்டத்திலும் உழல நேர்கிறது. மரபிலிருந்து தம்மை முற்றிலும் துண்டித்துக்கொள்ளவும்
தயக்கம். நவீனத்தை முற்றிலுமாய் ஏற்றுக்கொள்ளவும் தயக்கம். சமையல், திருமணம், பிள்ளைப்பேறு,
வீட்டுப் பராமரிப்பு போன்ற மரபார்ந்த குடும்பக் கடமைகளை நிறைவேற்றியபடியே அலுவலகத்தில்
அணித் தலைவராய், முடிவெடுக்கும் நிர்வாகிகளாய், இலக்கை எட்டுவதற்காக கடுமையாக உழைப்பவர்களாய்
இன்னொரு ஆளுமையாகவும் தம்மை நிறுவிக்கொள்ள முயல்கிறார்கள். கல்வி, சிந்தனை, விசாலமான
உலகியல் பார்வை என்று பல்வேறு காரணிகள் இருந்தபோதும் புதிய சூழலில் தன்னை நிலைநிறுத்தவும்
நிரூபிக்கவும் முடியுமா என்ற இயல்பான சந்தேகமும் அச்சமும் தலையெடுக்கின்றன. பின் மெல்ல
மெல்ல அவற்றிலிருந்து விடுபடும் முயற்சியில் வெற்றிபெற முடிகிறது. ‘சப்தபர்ணி மலர்கள்’
கதையின் நாயகி ஆண்களை தன் வசம் ஈர்க்க முடிவதை அப்படியொரு நடவடிக்கையாகவே அணுகுவதும்
அவ்வாறான ஒரு முயற்சிதான். ‘பயணங்கள்’ கதையில் அர்ச்சனாவுக்குத் தோன்றும் விபரீதமான
விநோதமான கற்பனைகள் அனைத்துமே அவளது ஆழ்மனக் கோலங்களே.
இரண்டாவது சவால், முந்தைய தலைமுறைக்கும்
அடுத்த தலைமுறைக்கும் இடையிலான குழப்பமான கண்ணியாக இருக்க நேர்வது. மகள் சமையல் வேலைகளைக்
கற்றுக் கொள்வதுடன் வீட்டிலும் வெளியிலும் உடல் சார்ந்த கவனத்துடன் இருக்கவேண்டும்
என்ற கவலை அம்மாக்களுக்குப் பொதுவானது. வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் அவர்களின்
சின்னஞ்சிறு செயல்களின் மேலும் ஆத்திரப்பட்டு கத்தவும் திட்டவும் நேரிடுகிறது. இருவருக்கும்
நடுவிலான இடைவெளியை ஏற்படுத்துகிறது. உறவுக்காரர்களிலோ நண்பர்களிலோ நடந்திருக்கும்
ஏதோவொரு மீறல் மகளைக் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. கணவனை இழந்த ஒரு பெண் தனக்கான
துணையைத் தேடிக்கொள்ளும் விருப்பத்தை அங்கீகரிக்கும் மனப்பான்மை, சொந்த மகள் அப்படியொரு
முடிவை எடுத்துவிடக்கூடும் எனும் நிலையில் தலைகீழாகிறது. ‘முற்றத்து அணில்’ கதையில்
அண்ணியின் போக்குடன் மகளின் நடவடிக்கைகளை அச்சத்துடன் அணுகும் அம்மாவின் உளநிலையும்
இவ்வாறானதுதான்.
மூன்றாவது சவால், சக பெண்களுடனான
உளவியல் மோதல்கள், சீண்டல்கள். ‘தான்’ எனும் அகமே ஆளுமையை உருவாக்குகிறது. பிறரிடமிருந்து
தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறது. பல்வேறு விதமான உறவுச் சிக்கல்களையும் பணியிட நெருக்கடிகளையும்
விளைவித்தபோதும் இந்த அகத்தை எந்தநிலையிலும் விட்டுக்கொடுக்க முடியாது. ஒரு பொது நிகழ்ச்சியில்
அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படியாக ஒரு பெண் வளையவரும்போது, அங்கிருக்கும் மற்ற
பெண்களை உள்ளூர அவர் சீண்டுகிறார். குறிப்பிடும்படியாக எந்தக் காரணமும் இருக்கத் தேவையில்லை.
எளிமையான தோற்றமும் திருத்தமான நடவடிக்கைகளுமேகூட அந்தப் பெண்ணின் மீது அனைவரின் கவனத்தையும்
குவிக்கப் போதுமானது. மற்றவர்களின் இந்த கவனக் குவிப்பு இன்னொரு பெண்ணிடம் பொறாமையை
போட்டியை கிளர்த்துகிறது. அவரை எந்தவிதத்திலாவது மீறிக் காட்டவேண்டும் என்ற வேகத்தை
ஏற்படுத்துகிறது. பெண்களின் மனத்துள் நடக்கும் இந்த விளையாட்டை நுட்பமாக அணுகியிருக்கிறது
‘பூ மரம்’ கதை.
பணியிடங்களில் இவ்விதமான நிழல் யுத்தங்களை
அன்றாடம் சந்திக்க நேரிடும். உயர்பதவியிலிருக்கும் பெண்களின் நடுவே மட்டுமல்ல, பணியடுக்கின்
கடைசி படிநிலையில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களின் இடையிலும் இத்தகைய போட்டிகள் நிலவுவதுண்டு
என்பதைச் சுட்டுகிறது ‘ஜொலிக்கும் கண்ணீர்’. அலுவலக ஊழியர்களிடம் நல்ல பெயர் எடுப்பது,
இன்னொரு பணியாளரின் மீது அவதூறுகளைக் கிளப்புவது, பாராட்டும்படியான காரியங்களுக்கு
தானே காரணம் என்றும் தவறுகளுக்கு அடுத்தவர்தான் பொறுப்பு என்றும் முன்னிறுத்துவது என்று
பல்வேறு வகைமாதிரிகள். அலுவலகப் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றாமல், அதே சமயத்தில் அதிகாரிகளுக்கான
சொந்த வேலைகளையும் தேவைகளையும் கச்சிதமாக கவனிப்பதன் மூலம் முக்கியத்துவம் பெறுவதுண்டு.
இதில் சின்னதும் பெரியதுமான தவறுகள் அனைத்தும் இன்னொரு பணியாளரின் மீதே சுமத்தப்படும்.
அம்மா மகளானாலும்கூட இத்தகைய அகமோதல்களுக்கு விதிவிலக்கில்லை என்பதை உணர்த்துகிறது
‘விடுபூக்கள்’.
இந்த மூன்று சவால்களுக்கு அடுத்து
பெண்கள் சந்திக்க நேரும் நான்காவது சவால்தான் ஆண்கள். குடும்பம், உறவுகள், பணியிடம்,
பொதுச்சூழல் என எல்லா இடங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் பெயர்களில் ஆண்களுடன் புழங்க
வேண்டியுள்ளது. உடன் பிறந்த சகோதரர்களானாலும், அப்பாவானாலும் கணவன் என்றாலும் பெற்ற
பிள்ளையானாலும் முதலில் அவர்கள் ஆண்கள். பிறகுதான் உறவும் தொடர்பும். லாவண்யாவின் பல
கதைகளில் ஆண்களுடனான முரண்நிலை விவாதிக்கப்பட்டுள்ளது. ‘அப்பா’ கதையில் ஒலிக்கும் மகளின்
மனக்குறைகளில் பலவும் பொதுவானவை. ‘சப்தபர்ணி மலர்கள்’ உள்ளிட்ட சில கதைகள் கணவனுக்கும்
மனைவிக்கும் இடையிலான சிறிதும் பெரிதுமான முரண்களையும் சமரசங்களையும் உள்ளடக்கியுள்ளன.
குடும்பத்திலும் உறவுகளிலும் பல
நேரங்களில் இந்த மோதல்களையும் போட்டிகளையும் கைவிட்டுவிட்டு சமரசம் செய்துகொள்ள வேண்டிய
சூழ்நிலைகள் உண்டு. ஆனால், பணியிடச் சூழலில் ஏற்படும் பாலின மோதல்கள் அத்தனை எளிதில்
தீர்ந்துபோவதில்லை. நீறு பூத்த நெறுப்பாக எப்போதும் உள்ளுக்குள் கனன்றபடியேதான் இருக்கும்.
சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கும். ‘தீர்வு’, ‘உடன்பாட்டறிக்கை’, ‘புகை’,
முரட்டுப் பச்சை’ , ‘திமிங்கிலம்’, ‘பறக்கும் மாயக்கம்பளம்’ ஆகிய கதைகள் மிகக் கச்சிதமாக
இந்த முரண்உறவுவை விவரித்திருக்கின்றன.
வாழ்க்கைச் சூழலும், பணியிடச் சூழலும்
மேலும் சில சவால்களை முன்னிறுத்துகின்றன. வேலையின் பொருட்டு புதிய நகரங்களுக்கும் புதிய
நாடுகளுக்கும் இடம்பெயர நேர்கிறது. அந்தந்த இடத்தின் சூழலுக்கேற்ப தங்களை தகவமைத்துக்
கொள்ளவும் வேண்டியுள்ளது. மூத்த தலைமுறையைச் சார்ந்த பெண்கள் இத்தகைய சூழலுக்கு அந்நியமாகிவிடும்போது
இரண்டாம் தலைமுறையினருக்கு அவர்கள் பெரும் சுமையாகி விடுகின்றனர். அடுக்கங்களின் பால்கனியில் அடையும் புறாக்களைக்
கொண்டு இரண்டு தலைமுறை பெண்களின் மனநிலையை அணுகும் கதை ‘புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை’.
புறாக்களை ஒரு பிரச்சினையாக அணுகும் இன்றைய சூழலில் ‘அதுபாட்டுக்கு இருந்துட்டு போட்டுமே,
உன்னை அது என்ன பண்ணுது?’ என்று புறாக்களுக்கான இடத்தை அங்கீகரிக்கும் அம்மாக்கள் பொருந்தாமல்
போவதில் வியப்பேதுமில்லை.
ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும்
அலுவலகச் சூழல் பெரும் மன அழுத்தத்தையும் உடல் உபாதைகளுக்கான முக்கியமான காரணியாகவும்
அமைகிறது. கர்ப்பிணியானாலும், குழந்தை ஈன்று மாரில் பால்கட்டியிருக்கும் இளம்தாயானாலும்
அலுவலகம் எதிர்பார்ப்பது குறித்த நேரத்துக்குள் குறித்த வேலைகளை முடிக்கிறார்களா என்பதைத்தான்.
கழிப்பறைக்குச் செல்வதையும் தண்ணீர் குடிப்பதையும்கூட காலவிரயம் என்று சுட்டிக்காட்டும்
இயந்திரநுட்பத்துக்கு நடுவில்தான் திறன்களை நிருபிக்கவேண்டியிருக்கும் நிலையை விவரிக்கும்
‘தீர்வு’ கதையை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
0
லாவண்யாவின் புதிய தலைமுறைக் கதாபாத்திரங்கள்
இயல்பானவர்களாய் இருப்பதைக் குறிப்பிடவேண்டும். திறன்மிக்கவர்கள், வீட்டையும் அலுவலகத்தையும்
ஒருசேர நிர்வகிப்பவர்கள், முனைப்புடன் முன்னேற உழைப்பவர்கள் என்றபோதும் அவர்களுக்கான
பலவீனங்களை வெளிப்படுத்த தயங்குவதில்லை. திசை தெரியாத புதிய நாட்டில், தங்குமிடத்துக்கு
எதிரிலேயே இருந்தும் திகைத்து அழுகிறார்கள். குடும்பத்தைப் பிரிந்து வெளியே செல்ல நேரும்போது
எல்லாவற்றையும் அஞ்சுகிறார்கள், எல்லோரையும் சந்தேகப்படுகிறார்கள். சுயலாபத்துக்காக
ஆண்களை வசீகரிக்கும்போதும் எல்லையறிந்து விலகுகிறார்கள். அதிகாரிகள் மதிக்காதபோதும்
அவர்களின் சிக்கல்களின்போது உதவுகிறார்கள். தமிழ்ப் புனைவுலகுக்கு இவர்கள் புதியவர்கள்.
லாவண்யாவின் கதைகள் தமிழ்ப் புனைவுலகில் ஏற்கெனவே உள்ள பெண் கதாபாத்திரங்களின் குணாம்சங்களில்
புதிய பரிமாணங்களைச் சேர்த்துள்ளன.
0
கணினி அறிவியல், மென்பொருள் துறைகளின்
புழங்குமொழி பெரும்பாலும் ஆங்கிலம். இத்துறைகளைக் களமாகக் கொண்டு கதைகளை எழுதும்போது
துறைசார்ந்த பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் தமிழில் உருவாக்க வேண்டியுள்ளது.
புதிய கலைச் சொற்களைக் கண்டடைய வேண்டியுள்ளது. ஏற்கெனவே உருவாக்கப்பட்டு புழக்கத்தில்
இருக்கும் சொற்களை ( உடல் கூராய்வு, குடியேற்றப் பிரிவு, பயனாளர்கள், பணியமர்வு ஆணை
)பயன்படுத்தியிருக்கும் லாவண்யா சுந்தரராஜன், தேவைப்படும் இடங்களில் புதிய சொற்களையும்
உருவாக்கியிருக்கிறார். அவற்றுள் சில மிகப் பொருத்தமானதாக அமைந்துள்ளன. மதிப்பாய்வு
பலகை ( Evaluation Board ), பரிசோதனைக் களம், செயலியின் உள்ளீடு மென்பொருள், மின்னணுத்
தகடுகள், உற்பத்திச் சங்கிலி, மின்னணு நுண் சில்லு என்று நிறைய உதாரணங்கள். அதே சமயம்
இன்னும் சில சொற்களை (ஸ்டேன்ட் அப் மீட்டிங், டார்கெட், ஸிஃப்டில், மிஸ்ட் கால்) அப்படியே
பயன்படுத்தியிருக்கிறார். இன்னும் சில இடங்களில் தமிழ்ப்படுத்தியிருக்கும் சொற்கள்
ஒலியமைதியின்றி உள்ளன. இருக்கையின் கவ்வி (Seat Belt), அச்சுச் சுவடுகள் (Print
out), சிற்றுந்தின் சேமிப்பறை ( Car Boot space ), நெருக்கு நாட்கள் (Release
date). இவற்றை இன்னும் கவனத்துடன் சீரமைக்கலாம். புதிய ஒரு அறிவியல் துறை புனைவுலகில்
களமாக வரும்போது இதுபோன்ற முனைப்புகளின் வழியாகவே தேவையான கலைச் சொற்கள் உருவாக முடியும்.
0
லாவண்யா தன் புனைவுலகில் சிறு உயிர்களுக்கும்
மலர்களுக்கும் தாவரங்களுக்குமான இடத்தை வலிந்தே உருவாக்கியிருப்பதை இக்கதைகளில் கவனிக்க
முடிகிறது. அலுவலகம் செல்லும் பரபரப்பிலும் சாலையோர மரங்களையும் மலர்களையும் விவரிக்கிறார்.
அப்பாவின் மீதான கடுமையான மனத்தாங்கலுடன் பயணம் செய்யும்போதும் பாதையோர செடிகளையும்
பூக்களையும் ரசிக்கிறார். நொய்டா, பெங்களூரூ, ஸ்டாக்ஹோம், டெல்லி என பல்வேறு நிலப்பிரதேசங்களின்
செடிகொடிகளை பூக்களை அவற்றின் மணத்தை சித்தரிக்கிறார். குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைக்குள்
இயங்கும் கதைக் களத்தின் வெறுமையை புறவுலகின் இயற்கை வளங்களைக் கொண்டு ஈடுசெய்கிறார்.
‘தீர்வு’ கதைக்கான விடையை அவர் பூங்காவில் பின்னி நிற்கும் மரத்தைக் கண்டவுடன் அடைவதாகச்
சொல்லியிருப்பதைக் குறிப்பிட முடியும்.
பெண்களின் புறம்பேசும் குரல்கள்
பல கதைகளில் ஒலிக்கின்றன. கூடவே சமையல், வீடு, தூய்மை, பிள்ளைகளின் மேலான கரிசனம் போன்ற
வழக்கமான அடையாளங்களும் கதைகளில் நிறைந்துள்ளன. சமையலறையில் தொடங்கி சமையலறையிலேயே
முடியும் ‘முற்றத்து அணில்’ கதை நெடுக பதார்த்தங்கள் தயாராவது சித்தரிக்கப்படுகிறது.
சமையலின் மணமும் சத்தங்களும் கதை முழுக்க நிறைந்துள்ளன.
புனைவுக்காக லாவண்யா தேர்ந்தெடுக்கும்
களங்களும் கதாபாத்திரங்களும் வலுவாக அமைந்துள்ள அளவுக்கு அவரது கதைமொழி, சித்தரிப்பு,
உரையாடல்கள் ஆகியவை அமையவில்லை. நுட்பங்கள் மேலும் செறிவுற வேண்டியிருக்கிறது. கதையினூடே
நிகழும் சிறு அசைவுகளே கதாபாத்திரங்களை நினைவில் நிறுத்தும். மற்றபடி அவை வெறும் பெயர்களாகவே
நின்றுவிடும் அபாயம் உள்ளது.
கதைமாந்தர்களை இலக்கிய ஆர்வமுள்ளவர்களாகவோ
எழுத்தாளர்களாகவோ காட்டுவதில் தவறேதுமில்லை. அதற்கான தேவை அந்தக் கதையில் இருக்கவேண்டும்.
‘திமிங்கிலம்’ கதையின் நாயகி ‘குழந்தையைக் கொஞ்ச வேண்டிய நேரத்தில்தான் கவிதை எழுதினேன்’
என்று சொல்வது கதைநாயகி சந்திக்கும் நெருக்கடிக்கு பொருந்திப் போகவில்லை.
0
மென்பொருள் துறையைக் களமாகக் கொண்டு
புனைவுகள் கணிசமாக எழுதப்படுகின்றன. கணினி, தகவல் தொழில்நுட்பத் துறை பணி சார்ந்து
பொதுபுத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் சித்திரத்துக்கு மாறான அசலான நிலவரங்களை சுட்டிக்காட்ட
அவை முனைகின்றன. எல்லாத் துறைகளிலும் நீக்கமற ஊடுருவியிருக்கும் பால், இனம், மொழி,
படிநிலை அரசியல் இந்தத் துறைகளிலும் ஆழமாகப் பரவியிருப்பதை உறுதிசெய்கின்றன. இந்தத்
துறைகளில் பெண்கள் சந்திக்க நேரும் அழுத்தங்களை, இடர்ப்பாடுகளை வெளிப்படுத்துவதன் காரணமாக
லாவண்யா சுந்தரராஜனின் இக்கதைகள் கவனம் பெறுகின்றன.
0
(‘முரட்டுப் பச்சை’ சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரை.)
No comments:
Post a Comment