Monday, 11 November 2024

நீரம்

 


1975

சிம்னி விளக்கின் ஒளியில் படித்துக்கொண்டிருந்தான் ராதாகிருஷ்ணன் “காற்று, வெயில், நீர் இவை யாவும் இயற்கையாக நமக்குக் கிடைப்பவை. இதற்கென விலை எதுவும் இல்லையானாலும் இவை விலைமதிப்பற்றவை.”

“படிச்சது போதும். பக்கத்து வீட்ல தண்ணி சேந்தப் போறாங்க. கூடப் போயி ரெண்டு கொடம் கொண்டு வா” இருட்டிலிருந்து அம்மாவின் குரல் விரட்டியது.

லாந்தரின் மஞ்சள் வெளிச்சம் பாதையைக் காட்ட விறகுக் கடையின் ஒற்றையடி பாதையில் நடந்தார்கள். பிளந்து கிடக்கும் விறகின் ஈர வாசனை காற்றில் அலைந்திருந்தது. கிணற்றின் சேந்துருளைச் சத்தம் கேட்டது. இரவு பகலாக கேட்கும் சத்தம்தான். விறகுகளை எடைபோட நிறுத்தியிருக்கும் தராசுக்கு சற்று தள்ளி கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தார் ரங்கசாமி. வாயிலிருந்த சுருட்டின் நுனியில் நெருப்புக் கங்கு. தோளில் பச்சை போர்வை.

மாலாமணி கயிற்றில் தோண்டியைக் கட்டி உள்ளிறக்கினாள். “அம்மிணிகளா. இந்த நேரத்துல வந்திருக்கீங்க. ஆம்பளைங்க யாரையாச்சும் கூட கூட்டிட்டு வந்திருக்கலாமில்ல” ரங்கசாமியின் கரகரத்த குரல் கேட்டதும் வசந்தி ராக்கியின் தலையில் தட்டியபடி சொன்னாள் “அதான் இவன் வந்திருக்கான்ல தாத்தா.” இருமியபடி அவர் சிரித்தார். சேந்து கயிற்றை வேகமாக மேலிழுத்தான் ராக்கி.

“ரோஷம் வந்துருச்சா உனக்கு. மெதுவா இழுடா ராக்கி” மாலாமணி தோளில் இடித்தாள்.

இடதுபுறம் கள்ளிவேலிக்கப்பால் சோளத் தோட்டம். வலதுபக்கம் பாவுணத்தும் கட்டாந்தரைகளின் நடுவிலிருந்த பாதை நிலா வெளிச்சத்தில் தனித்து நீண்டது. தலையிலும் இடுப்பிலுமாக குடங்களுடன் கொலுசொலிக்க நடந்தவர்களுடன் தோளில் ஒரேயொரு குடத்தை இருத்தியபடி நடந்தான்.

நெசவாளர் காலனி, கண்ணகி நகர், திருவள்ளுவர் நகர், திருமலை நகர் அனைத்துக்குமான தண்ணீர் தேவையைத் தீர்க்கவென இருந்தது இந்த விறகுக் கடை கிணறு மட்டுமே. காலனி இரண்டாவது வீதியிலிருந்த செண்பகா அமாவாசை ராத்திரியொன்றில் குதித்து செத்துப் போன பின்பு ஆரம்ப பள்ளிக்குப் பின்னால் இருந்த சேந்து கிணற்றுத் தண்ணீரை யாரும் பயன்படுத்துவதில்லை. கோடை காலங்களில் சொரப்புரடையுடன் ஒரேயொரு முறை நீச்சல் பழக முயன்றிருக்கிறான்.

விறகுக் கடை கிணற்றுக்கு மாற்றாக இருந்த கிணறு பிச்சம்பாளையம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அரச மரத்தையொட்டி இருந்தது. அவ்வளவு சுலபத்தில் அங்கே போய் தண்ணீர் சேந்தி எடுத்து வந்துவிட முடியாது. பிச்சம்பாளையத்தில் இருந்த ஊர் பெண்கள் அனுமதித்தால் மட்டுமே ஒற்றையடிப் பாதையிலேயே கால்வைக்க முடியும்.

குரங்குபெடலில் சைக்கிள் ஓட்டி பழகிய பின்பு மாரியம்மன் கோயில் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்திருக்கிறான் ராக்கி. பனை மரங்களூடே வளைந்து நெளிந்தோடும் இட்டேரி பாதையில் உற்சாகத்துடன் சைக்கிளை செலுத்தி கோயிலுக்கு கொஞ்சம் முன்பு ஓடையில் சரிந்திறங்கி அதே வேகத்தில் மேலேறுவது சாகசமானது.

பிச்சம்பாளையத்தின் மேற்கு கோடியில் அங்கேரிபாளையம் சாலையில் சந்திரா கொட்டாய் இருந்த வரைக்கும் சினிமாவுக்கு போய்விட்டு வரும்போது இதே பாதையில் வருவதுண்டு. ஆனால் மாரியம்மன் கோயில் கிணற்றின் சுற்றுச்சுவர் மிகவும் பழையது. அங்கங்கே இடிந்து பிளந்திருக்கும். ஆழமும் கூடுதல். உதிர்ந்த அரசிலைகள் மிதக்கும் நீர் பரப்பில் சூரியக் கதிர்கள் விழுந்து நெளியும்.

1977

ஆழ்துளை கிணறு என்ற ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டிராத நிலையில் நெசவாளர் காலனி ஆரம்ப பள்ளிக்கு வடக்குப் பக்கத்தில் நிலத்தடி நீரோட்டம் இருப்பதைக் கண்டு ஆழ்துளை கிணறு தோண்ட அரசு உத்தரவு பிறப்பித்த விபரங்கள் யாருக்கும் தெரியாது. ஒருவேளை காலனி சுப்பராவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

காலை பதினோரு மணிக்கு ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கான ராட்சத இயந்திரம் பொருத்தப்பட்ட மஞ்சள் வாகனம் கொழுஞ்சியும் தும்பைகளும் ஊமத்தைகளும் அடர்ந்த அந்த வெட்டார பரப்பில் வந்து நின்றதை காலனி வடக்கு வீதியின் முகப்பில் உள்ள ஜி.செல்வராஜ்தான் ஓடிவந்து சொன்னான். ‘நெலத்துல சொரங்கம் தோண்டி தண்ணி எடுக்கப் போறாங்களாண்டா. லாரி வந்துருக்கு.’

இறுக்கிச் சுற்றிய நூல் பந்தில் கட்டாந்தரையில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த ராக்கி எல்லோருடனும் சேர்நது ஓடினான்.

ராட்சத இயந்திரம் இயங்கத் தொடங்கியதும் புழுதி கிளம்பியது. பலத்த ஓசையுடன் கிடுகிடுவென உள்ளிறங்கியது துளைப்பான். விலகி நின்று வேடிக்கை பார்த்தது பெருங்கூட்டம். லாரியிலிருந்து குழாய்கள் இறக்கப்பட்டன. தும்பைச் செடிகள் கால்களில் நசுங்கும் வாசனை. இரண்டு மணிக்கு இயந்திரம் நிறுத்தப்பட்டபோது வலது பக்கத்தில் மண் மேடாகி நின்றது.

“சாப்ட போறாங்கடா. நாமளும் போய் சாப்ட்டுட்டு வந்தர்லாம்” எல்லோரும் கால்புழுதியுடன் வீடுகளை நோக்கி ஓடினார்கள்.

நான்கு மணிவாக்கில் மண்ணில் ஈரம் தென்பட்டதும் ஆர்ப்பரித்தார்கள். “தண்ணி வரப்போகுது… இன்னும் பத்து பதினஞ்சு அடிதான்.” எல்லா பக்கத்திலிருந்தும் குரல்கள். கூட்டம் பெருத்திருந்தது.

மேற்கு வானில் மஞ்சள் சூரியன். கூடு திரும்பும் பறவைகளின் வரிசை. யாரும் எதையும் பார்க்கவில்லை. அனைவரின் கண்களும் துளைப்பானின் மேல் குவிந்திருந்தன. சுழன்று நிலம் துளைத்த இரும்புத் துண்டு ஒரு கணம் திணறியது. இன்னும் ஆற்றலுடன் மோதி இறங்கிய நொடியில் திடுக்கென அதிரும் ஓசை. துளைப்பானை இயக்கி நின்றவன் அருகில் நின்றவர்களைப் பார்த்து நிறைவுடன் சிரித்தான். சுற்றிலும் நின்றவர்களைப் பார்த்து கூவினான். அதே கணத்தில் பீறிட்டு தெறித்தன நீர்த் துளிகள்.

பிள்ளையார் கோயில் பூசாரி தேங்காய் உடைத்து பூசை செய்த பின்பு முதல் குடம் தண்ணீர் பிள்ளையாருக்கு வார்க்கப்பட்டது.

தண்ணீர் பீறிட்டு மேலேழுந்த பிறகும் இன்னும் இன்னும் என துளைத்து நின்றது இயந்திரம். சாம்பலும் மண்ணும் கலந்த நீர் பெருகியோட சிறுவர்கள் உடல் நனைய உருண்டு விளையாடினார்கள். காட்டன் மில் வரை சென்று திரும்பும் பத்தாம் நம்பர் டவுன் பஸ்ஸிலிருந்து பலரும் இறங்கி வேடிக்கை பார்த்தனர்.

“இதுக்கு மேல எறக்க முடியலை. போதும்” என்று இயந்திரம் விலகியபோது இருட்டியிருந்தது.

அடி பம்பு பொருத்தப்பட்ட பின்பு மூன்றாம் நாள் காலையில் மீண்டும் பூசை. முந்தின நாளே ஊர்க் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஊர் முழுக்க அறிவிக்கப்பட்டிருந்தது. தண்ணீர் அடிக்க வரிசை வைக்கப்படும். நெசவாளர் காலனிக்கு இரண்டு வரிசை. கண்ணகி நகருக்கும் திருமலை நகருக்கும் தனித்தனி வரிசை. ஒரு நபர் ஒரு முறையில் இரண்டு குடங்கள் மட்டுமே அடித்துக் கொள்ளலாம். இதை மேற்பார்வை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இரண்டாம் வீதியைச் சேர்ந்த வெங்கடேச முதலியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அன்று ஒலிக்கத் தொடங்கிய அடிப்பம்பின் சத்தம் இரவும் பகலுமாய் தொடர்ந்து ஒலித்திருந்தது. வண்ணக் குடங்களின் வரிசைகள் நீண்டு காத்திருக்க வெங்கடேச முதலியார் கட்டிலை போட்டுக்கொண்டு அங்கேயே காவல் காக்க வேண்டியதாயிற்று.

வரிசையில் வைத்த குடங்கள் காணாமல் போகவும் உடைந்த வாளிகளும் ஒடுங்கிய தோண்டிகளும் வரிசையில் இடம் பிடித்தன. முதலியாரின் கவனம் சிதறிய சந்தர்ப்பங்களில் மூன்றாவது குடத்தையும் சமயத்தில் ஐந்தாவது குடத்தையும்கூட நிரப்பிக் கொண்டார்கள் சாமர்த்தியசாலிகள்.

மோட்டார் பொருத்துவதென முடிவு செய்யப்பட்டபோது குடத்துக்கு ஒரு பைசா வசூலிப்பதென ஊர்க் கூட்டத்தில் தீர்மானித்தனர்.

இண்டோலியத்தில் செய்யப்பட்ட காசு பெட்டியில் முதலியார் சில்லறைகளை எண்ணிப் போட்டார். சில்லறைகள் நோட்டாகி நோட்டுகள் தொகையாகி நிறைந்தபோது மோட்டாரைப் பொருத்தி பெரிய இரும்பு தொட்டியில் நீர் நிறைக்கப்பட்டது. பக்கத்துக்கு நான்காக தொட்டியின் நாலாபக்கமும் குழாய்கள் நீரைக் கொட்டின.

எந்நேரமும் ஒலிக்கும் அடிப்பம்பின் ஓசை மறைந்தது. குடங்களின் வரிசைகள் காணாமல் போயின. முதலியாரின் கட்டிலுக்கும் இண்டோலிய காசுப் பெட்டிக்கும் வேலையில்லை. இப்போது காலையில் ஐந்து மணிக்கு தோளில் சுற்றிய போர்வையுடன் கைவிளக்குடன் மெதுவாக நடக்கிறார்.  தண்ணீர் தொட்டிக்கு வடபுறத்தில் அமைக்கப்பட்ட மோட்டார் பெட்டியைத் திறந்து ஸ்விட்சை போடுகிறார். சிறிது நேரத்தில் தண்ணீர் திடுதிடுவென தொட்டிக்குள் கொட்டுகிறது. பத்துமணி வரைக்கும் யாரும் வரலாம். எத்தனை குடம் வேண்டுமானால் பிடிக்கலாம். சரியாக பத்து மணிக்கு மீண்டும் பெட்டிக்கு வந்து ஸ்விட்சை அணைத்துவிடுவார். மறுபடி மாலை நான்கு மணிக்குத்தான். இரவு ஒன்பது மணிவரைக்கும் தண்ணீர் கொட்டி நிறைந்தவுடன் மீண்டும் அணைக்கப்படும்.

விறகுக் கடை கிணற்றின் சேந்துருளை துருப்பிடித்திருந்தது. ரங்கசாமி கட்டிலை எடுத்து கடைக்கு வெளியே போட்டுக்கொண்டார். இரண்டு பக்கமும் குடங்களை சுமந்துகொண்டு போய்வரும் சைக்கிள்களை வேடிக்கை பார்த்தபடியே கண்ணாடியைத் துடைத்துக்கொள்கிறார்.

சைக்கிள் கேரியரின் இருபுறமும் பக்கத்துக்கு ஒன்றாக கழுத்தில் இறுகிய குடங்களுடன் தண்ணீர் சுமப்பது இப்போது ராக்கிக்கு சுலபமாக இருந்தது. பத்து குடம் தண்ணீர் இருந்தால் புழக்கத்துக்குப் போதும் என்ற நிலை மாறி அம்மா இன்னும் தாராளமாக புழங்கினாள். குளிப்பதும் துவைப்பதும் தினம் சாத்தியமாயிற்று.

0

1983

பச்சைப் போர்வையை இழுத்துப் போர்த்திக் கிடந்த ராக்கியை அம்மா உலுக்கி எழுப்பினாள்.

“சைக்கிள் பெல் சத்தம் கேக்கலையா… அன்பழகனாட்ட இருக்கு.”

கண்களைத் தேய்த்துக்கொண்டு திண்ணையிலிருந்து இறங்கினான். கருக்கிருட்டில் எதுவும் புலனாகவில்லை. விடிகாலையில் குளிர்காற்று முகத்தில் மோத கொட்டாவி விட்டபடி வாசலுக்கு வந்தான்.

“எத்தன நேரமாடா கூப்பிடறது. நல்லதண்ணி வந்து ரொம்ப நேரமாயிருச்சுடா. சீக்கிரம் வாடா. ரெண்டு நடையாச்சும் எடுத்தர்லாம்” அன்பழகன் பரபரத்து நின்றான்.

பிளாஸ்டிக் குடங்களில் கழுத்து வாப்பாட்டில் கயிற்றை இறுக்கி கேரியரில் மடித்துப் போட்ட அரிசி சாக்கின் இருபுறமும் மாட்டினான். சக்கரங்களில் காற்றின் அளவை அழுத்திப் பார்த்துவிட்டு உந்தித் தள்ளினான்.

“கருணா மூணாவது நடைக்கு வர்றான் பாரு…” அன்பழகன் சொன்ன அதே நேரத்தில் கிணு கிணுவென மணி ஒலித்தபடி கருணா ஒட்டிக்கொண்டு வந்தான்.

“இப்பிடித் தூங்குனா குடிக்கறக்கு நல்ல தண்ணிக்கு எங்கடா போறது?” விறுவிறுவென்று பெடலை அழுத்தியபடியே சிரித்தான்.

ஸ்பேரோ நிட்டிங் அருகே பன்னீர் பூக்களின் வாசனை. உயர்ந்து நின்ற மரங்களில் விண்மீன்களென மின்னின., சுடுகாட்டு மேட்டில் சைக்கிளை ஏறி மிதிக்கும்போது கிழக்குவானில் மஞ்சள் வெளிச்சம். ‘முந்தானை முடிச்சு’ போஸ்டரில் பாக்யராஜ் குழந்தையை ஏந்தி நின்றிருந்தார்.  மேட்டுப்பாளையம் பிள்ளையார் கோயில் வீதியில் திரும்பியபோது தலையிலும் இடுப்பிலும் குடங்களுடன் மூன்று பெண்கள் எதிரில் வந்தனர். அசோக மரங்கள் உயர்ந்து நின்ற சுற்றுச்சுவர் அருகே பன்றிகள் உறுமித் திரிந்தன. நீலக்கதவுள்ள வீட்டின் வாசலில் சைக்கிள்களை நிறுத்தினார்கள். மூன்று குடங்கள் வரிசையில் காத்திருந்தன. சுண்ணாம்பு கரையுடன் சாணமிட்டு மெழுகப்பட்ட திண்ணையிலும் வாசலிலும் சிறு கோலங்கள். கோடாலி முடிச்சிட்ட கூந்தலுடன் படியில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தவள் ஏறிட்டுப் பார்த்தாள்.

மூவரும் தண்ணீரைப் பிடித்து சைக்கிளில் ஏற்றியதும் கருணா திரும்பி நின்று சத்தமாக சொன்னான் “இன்னொரு நடைக்கு வருவோங்க்கா…”

தெருமுனையில் திரும்பியதும் அன்பழகனிடம் கேட்டான் ராக்கி “இவங்களுக்கெல்லாம் நம்மகிட்ட பேசினா எதாச்சும் ஒட்டிக்குமாடா?”

“நா பேசறேன்லடா…” கருணா முதுகை வளைத்து குனிந்திருந்தான். சுடுகாட்டு மேட்டு இறக்கத்தில் சைக்கிளை அழுத்தவேண்டாம். ஆனால் வேகத்தில் கட்டுப்பாடு இல்லாமல் போனால் குடத்து நீர் வீணாகிப்போகும்.

“நீதான்டா அக்கா அக்கான்னு கொஞ்சறே. அவ மொகத்தைக்கூட திரும்பிப் பாக்கறதில்லை.”

“அவ பாத்தா என்ன பாக்காட்டி நமக்கென்னடா. நாலு கொடம் தண்ணி புடிக்கறதுக்கு விடுதில்ல… அதே போதும்.” அன்பழகன் சொன்னபோது எதிரில் பத்தாம் நம்பர் பஸ் படியில் தொங்கும் கூட்டத்துடன் மெதுவே ஊர்ந்து வந்தது.

பளீரென்ற சூரிய வெளிச்சத்தில் பி.என் ரோடும் காலனி பேருந்து நிறுத்தமும் சுறுசுறுப்படைந்திருந்தன. ராமசாமி கடை பெஞ்சுகளில் உருமாலை சுற்றிய ஆட்கள் கூட்டம். கல்லடுப்பில் ஏற்றப்பட்டிருந்த இட்லி பானையில் ஆவி பறந்தது.

வீட்டில் அம்மா தவலையையும் அண்டாக்கள் இரண்டையும் கழுவி வைத்திருந்தாள்.

“என்னம்மா… இன்னும் ரெண்டு நடைக்கு போணுமா?” சிணுங்கியபடியே லுங்கியை ஏற்றிக் கட்டினான்.

“வீட்ல குடிக்கறதுக்கு பொட்டுத் தண்ணி இல்ல. இதெல்லாத்தையும் நெறச்சு வெச்சாத்தான் ஒரு வாரத்துக்கு தாங்கும். இன்னும் நேரமிருக்கில்ல. கௌம்பு” அம்மா விரட்டினாள்.

“நேரத்துலயே வந்திருச்சாம். சீக்கிரம் நின்னுரும்டா. நாயம் பேசிட்டே லேட் பண்ணாதீங்க.” அவளது குரல் ராக்கியைத் தொடர்ந்தது.

காலனி முனையில் கருணாவும் அன்பழகனும் சேர்ந்துகொண்டனர். பள்ளிக்கூடத்துக்கு முன்னாலிருந்து பொது குழாய் அருகே நசுங்கிய பானைகளும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளும் வரிசையில் கிடந்தன.

“சாயங்காலம் இந்தப் பக்கமே வரமுடியாதுடா… தண்ணி வந்திருச்சுன்னா குடுமிப்புடி சண்டையா கெடக்கும்.”

பி.என் ரோடில் பனியன் கம்பெனிகளுக்கு செல்லும் சைக்கிள்களின் எண்ணிக்கை கூடியிருந்தது.

மூன்றாவது நடையின்போது சட்டை முழுக்க வேர்வையில் நனைந்திருக்க பையிலிருந்து காசை எடுத்து எண்ணினான். நான்கு நடைக்கு எட்டு குடங்கள். குடத்துக்கு இருபத்தி ஐந்து பைசா கணக்கில் இரண்டு ரூபாயை எடுத்து திண்ணையின் மேல் வைத்தான்.

கருணா மீண்டும் சத்தமாகச் சொன்னான் “காசு வெச்சுட்டோம்க்கா…”

வாசலின் வடகோடியில் செம்பருத்திச் செடிக்கு பக்கத்திலிருந்த அம்மியில் அரைத்திருந்தவள் நிமிர்ந்து பார்க்காமலே தலையாட்டினாள்.

சாந்தி தியேட்டர் அருகே ஆட்டோவிலிருந்து ஒலிபெருக்கி அலறியது.

“நாளை மாலை பின்னி காம்பவுண்டில் நடைபெறவுள்ள விழாவில் நமது முதல்வர் மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன்மனச்செம்மல் எம்ஜியார் அவர்கள் கலந்துகொண்டு இரண்டாவது குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். நமது பகுதியின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் இந்த நன்னாளில் நீங்கள் அனைவரும் பெருந்திரளென பங்கேற்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.”

“எத்தன வருஷமா சொல்லிட்டிருக்காங்க. திட்டம் போட்டு கொழாயப் போட்டு தண்ணி வர்றதுக்குள்ள நமக்கெல்லாம் கல்யாணம் ஆயி குழந்தையே பெத்துருவோம்டா.” கருணா சலிப்புடன் சிரித்தான்.

“அதோட போச்சுன்னா பரவால்லே. நம்ம பசங்களையும் இதுமாதிரியே சைக்கிள்ல தண்ணி எடுக்க வெக்கமாம இருந்தா சரி” அன்பு நெற்றி வேர்வையைத் துடைத்தான்.

0

1998

வீட்டு வாசலில் வேப்பமரத்தடியில் அமைத்திருந்த குடிநீர் குழாயில் இணைக்கப்பட்ட பச்சை பிளாஸ்டிக் குழாய் நீண்டு கிடந்தது. ஈரத்துடன் பளபளத்தது காரை வாசல். குளியலறை தொட்டி நிறைந்தவுடன் குழாயை எடுத்து ஜாதிமல்லி செடிக்கடியில் போட்டாள் அம்மா. செம்மண்ணில் சீறிப் புரண்டோடியது தண்ணீர்.

துணிகளை அலசிப் பிழிந்து கொடியில் போட்டுவிட்டு திரும்பிய கோகிலா முகத்தைத் துடைத்தபடியே சொன்னாள் “நேத்து நம்ம ஜீவா வூட்டுக்கு பொண்ணு பாக்க வந்தாங்க இல்ல… என்னாச்சு?”

கழுவி உலர்த்திய பாத்திரங்களை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தவளின் கனத்த மூக்குத்தி வெயிலில் மின்னியது. “அந்த எடம் வேணாங்கற இவ.”

“மாப்ள தாராபுரந்தானே?”

“அதான். அங்க தண்ணி கஷ்டமாம். என்னால இடுப்பொடிய கொடமெல்லாம் சொமக்க முடியாது. வேற எடம் பாருங்கன்னு சொல்லிட்டா.”

வாளி நீரை வேப்பமரத்தடியில் கொட்டிவிட்டு நிமிர்ந்த கோகிலா சிரித்தபடியே சொன்னாள் “எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருந்தப்ப ‘போயும் போயும் திருப்பூர் மாப்ள பாத்துருக்காங்களே. தண்ணி இல்லாத காடு அது. எப்பிடி போயி காலந்தள்ளப் போறமோ’ன்னு நானுந்தான் வெசனப்பட்டேன்.”

அம்மா தண்ணீரை அள்ளி முகத்தை கழுவினாள் “இந்த கொமுரிகளுக்கு இடுப்புல கொடம் வெக்கவே தெரியாது. எல்லா பக்கமும் கொழா போட்டு வெச்சிருக்கு. திருப்பி வுட்டுட்டு நிக்கிதுங்க. தண்ணிக்கு நாம பட்ட கஷ்டத்தை சொன்னா ‘உங்க தல விதி அப்பிடி’ன்னு பழமை பேசுதுங்க.”

“அது செரிதாங்க்கா… அவங்களாவது நல்லா இருக்கட்டும்.” கோகிலா இடுப்புச் சேலையை அள்ளிச் செருகியபடி நகர்ந்தாள்.

ஜாதிமல்லி செடியருகே செம்மண் கலந்த தண்ணீர் புரண்டோடியது.

களைப்புடன் ஆட்டோவிலிருந்து இறங்கினான் ராக்கி. காசு கொடுத்துவிட்டு திரும்பியபோது ஆட்டோகாரர் குரல்கொடுத்தார் “தம்பி, காசு குடுத்து வாங்கின தண்ணி பாட்டிலை விட்டுட்டு போறீங்க. எடுத்துக்குங்க.”

0

மதுமிதா தொகுத்த ‘தண்ணீர்’ கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றது.

 

 

No comments:

Post a Comment

ஆங்கில மொழியாக்கத்தில் என் கதைகள்

  சிலர் தங்களது வேலைகளை மட்டும் கவனமாகவும் சிரத்தையாகவும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். அங்கீகாரம், பரிசு, விருது ஆகியவற்றைப் பற்றி ப...