Monday, 19 May 2025

விநோத் குமார் சுக்லவின் கவிதைகள்



2024ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது இந்தியின் புகழ்பெற்ற கவிஞர் விநோத் குமார் சுக்லவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சில கவிதைகள்.

1

 

தொலைவிலிருந்து வீட்டைப் பார்க்கவேண்டும்

0

தொலைவிலிருந்து வீட்டைப் பார்க்கவேண்டும்

அவசரத்துக்குக்கூட திரும்ப முடியாத் தொலைவிலிருந்து

உன் வீட்டை நீ காணவேண்டும்

எப்போதேனும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையே இல்லாத

தொலைவுக்குப் போய்விடவேண்டும்

ஏழுகடல்தாண்டிச் செல்லவேண்டும்

 

போகும்போதே திரும்பித் திரும்பிப் பார்க்கவேண்டும்

இன்னொரு தேசத்திலிருந்து உன்னுடைய தேசத்தை

ஆகாயத்திலிருந்து உன்னுடைய பூமியை

 

வீட்டில் குழந்தைகள் என்ன செய்கின்றன என்ற நினைப்பு

அப்போது பூமியில் குழந்தைகள் என்ன செய்கின்றன என்பதாகிவிடும்

வீட்டில் உண்ண உணவும் பருக நீரும் இருக்குமோ என்ற கவலை

பூமியில் உணவும் நீரும் உண்டோ என்ற கவலை ஆகும்

 

பூமியில் பசித்திருக்கும் யாரோ ஒருவர்

வீட்டில் பசித்திருப்பவராகிவிடுவார்

 

மேலும் பூமிக்குத் திரும்புவதென்பது

வீட்டுக்குத் திரும்புவது போலாகிவிடும்.

 

வீட்டுக்கணக்குப் புத்தகமென்பது மிகவும் குழப்பமானது

சிறிது தூரம் நடந்துவிட்டு

வீடு திரும்புகிறேன்

பூமிக்குத் திரும்புவதுபோல.

 

2

நம்பிக்கையிழந்தவனாய் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன்

0

நம்பிக்கையிழந்தவனாய் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன்

அந்த மனிதனை எனக்குத் தெரியாது

நம்பிக்கையிழப்பை நான் அறிவேன்

எனவே நான் அந்த மனிதனிடம் சென்றேன்

நான் கை நீட்டினேன்

என் கையைப் பற்றி அவன் எழுந்து நின்றான்

என்னை அவனுக்குத் தெரியாது

நான் கைநீட்டியதை அவன் அறிவான்

நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடந்தோம்

ஒருவருக்கொருவர் முன்பின் தெரியாதவர்கள் நாங்கள்

சேர்ந்து நடக்கத் தெரிந்திருந்தது எங்களுக்கு.

 

0

3

புதிய கம்பளிக்கோட்டு அணிந்த அந்த மனிதன்

ஒரு யோசனையைப்போல மறைந்துபோய்விட்டான்

0

புதிய கம்பளிக்கோட்டு அணிந்த அந்த மனிதன்

ஒரு யோசனையைப்போல மறைந்துபோய்விட்டான்

ரப்பர் செருப்புகளைப் போட்டிருந்த நான் தடுமாறி நின்றுவிட்டேன்

நேரம் காலை ஆறு மணி. குளிர்பருவ ஆடைகள் களைப்பட்டிருக்கும் பொழுது.

நடுநடுங்கச் செய்யும் கடுங்குளிர்

காலை ஆறு மணி என்பது காலை ஆறு மணியைப் போலவேயிருந்தது.

மரத்தடியில் ஒரு மனிதன் நின்றிருந்தான்.

மூடுபனியினூடே அவன் உருக்கரைந்த

தன் உருவத்தினுள்ளே நிற்பதுபோல இருந்தது.

உருக்கரைந்த மரமோ அச்சுஅசலாக மரம் போலவே தெரிகிறது.

அதன் வலப்புறம் உருக்கலைந்த மட்டரகக் குதிரையொன்று

மட்டரகக் குதிரையொன்றைப்போலவே தென்படுகிறது.

பசியுடனிருந்த குதிரைக்கு

பசும்புல்வெளிபோல் தோற்றமளிக்கிறது மூடுபனி.

வேறு வீடுகளும் மரங்களும் சாலைகளும் இருந்தன

ஆனால் குதிரை எதுவும் இல்லை.

தனித்து நின்றது ஒரு குதிரை. அந்தக் குதிரை நானில்லை.

ஆனால், நான் மூச்சிரைக்கும்போது

மூடுபனியிலிருந்து என் மூச்சுக் காற்றைப் பிரித்தறிய முடியவில்லை.

மரத்தடியில் குறிப்பிட்ட ஒரே இடத்தில் நிற்கும் அந்த மனிதன்தான்

குதிரைக்காரன் என்றால்

அவனைப்பொறுத்தவரை

குதிரையைப்போலவே லாடங்கள் அடிக்கப்பட்டிருக்கும் காலணிகளுடன்

ஓடிக்கொண்டிருக்கும் குதிரையல்லவா நான்.

 

4

வாழ்க்கைப் பழக்கம்

0

வாழ்க்கையை வாழும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டேன் நான்

வாழ்க்கையை வாழும் இந்தப் பழக்கத்தில்

மழை பெய்யும் என்றால்

வாழும் பழக்கத்திலும்

மழை பெய்யும்

குடையை எடுக்க மறப்பேன் என்றால்

வாழும் பழக்கத்திலும்

குடையை எடுக்க மறந்துதான் போகும்

முழுக்க நனைந்து போவேன்

எப்போதெல்லாம் இடியிடிக்கிறதோ

அப்போதெல்லாம் இடியிடிக்கிறது.

 

வாழும் இந்தப் பழக்கம் என்பது

எழுவதும் உட்கார்வதும் வேலைசெய்வதும்

கொஞ்சூண்டு எதிர்காலத்திலிருந்து

பெரும்பங்கு கடந்த காலத்தை சேமித்துக்கொள்வது

இருந்தும் எதிர்காலம் இன்னும் பெரிதாகவே இருக்கிறது.

 

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகத்தில்

நான் வேண்டுகிறேன்

என்னை நல்ல மனிதனாக இருக்கவிடு

எல்லோரையும் நலமுடன் இருக்கவிடு

 

அப்போதுதான் எப்படி எங்கிருந்து என்று தெரியவில்லை

வாழும் பழக்கத்தில்

அண்டைவீட்டின் துக்க அணை உடைந்துவிட்டாற்போல

துக்கத்தின் பெருவெள்ளம் பொங்கிப் பெருகியது

வெள்ளத்தில் மூழ்கிடாத மகிழ்ச்சியின் ஒரு சிறு துரும்பு

மிதந்து செல்கிறது

துயரம் நிறைந்த முகத்தில்

ஒரு சிறு புன்னகையைப்போல.

 

அது என்னையும் மூழ்கடிக்கவில்லை

என் அண்டைவீட்டுக்காரனையும்.

மின்னல் வெட்டிய பொழுதில்

மின்னல் வெட்டியது.

 

கும்மிருட்டில் மின்னலின் ஒளிக்கீற்றின் துணைகொண்டு

மெல்ல அடியெடுத்து வைத்தேன்

வாழும் பழக்கத்தில்

நான் செத்துப்போகும்போது

யாரேனும் ஒருவர் சொல்லக்கூடும்

நான் செத்துப்போகவில்லை என்று

அப்போதும் நான் செத்துக் கொண்டுதானிருப்பேன்

மழை பெய்துகொண்டுதான் இருக்கும்

வாழும் பழக்கதிலும்

மழை பெய்துகொண்டுதான் இருக்கும்

செத்துப்போன பின்பும்

வாழ்க்கையை வாழும் பழக்கத்தில்

நான் என் குடையை மறந்துபோவேன்.   

 

0

 


‘மேம்பட்ட மனிதனாவதற்கான பிரார்த்தனையே எழுத்து’ - விநோத் குமார் சுக்லா


 

“எழுத்து என்பது ஒரு பொறுப்பு. முதலில் இது எனக்குத் தெரியவில்லை. விளையாடிக்கொண்டே வளர்வதுபோல நான் எழுதிக்கொண்டே வளர்ந்திருந்தேன். ஆனால், எழுத்துக்கு ஒரு மரபு உள்ளது. நானும் இந்த மரபினூடே மிதந்திருக்கவே முயன்றேன். சிலர் இதில் நீந்தக் கற்றிருந்தனர். எழுதுவது எனக்கு தினசரி காரியங்களைப்போல பழக்கமாகிவிட்டது. எழுத்து எப்போதுமே செய்து முடிக்காத ஒரு காரியந்தான். இத்தனை ஆண்டுகளாக எழுதியபோதும் எழுத்துக் கலையை முழுமையாக கற்றுக்கொள்ளவில்லை. ஒரு எழுத்தாளனாக முன்னர் சந்தித்த சவால்களையே இப்போதும் சந்திக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எழுதுவது என்பது எழுத முயல்வதுதான்.”

விநோத் குமார் சுக்லாவுக்கு வயது 88. கண் பார்வை மங்கிவிட்டது. ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும், தீவிர சிகிச்சைப் பிரிவிலும்கூட சுக்லா எழுதுவதை நிறுத்தவில்லை. தினமும் தொடர்ந்து எழுதுகிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்தகாவ் என்ற சிறிய ஊரில் 1937ஆம் ஆண்டு பிறந்தார் வினோத் குமார் சுக்லா. அதே ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் ஜபல்பூரில் விவசாய அறிவியலில் இளங்கலை பட்டம் பயின்றார். பிறகு ராய்பூர், இந்திரா காந்தி அறிவியல் பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராக பணியாற்றி 1996இல் ஓய்வு பெற்றார். அக்கம்பக்கமுள்ள கிராமங்களுக்கு சென்று அங்குள்ள விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவதுதான் அவரது பணி.

கலைஞர்கள் பலரையும்போலவே அவருடைய எழுத்து ஆழமாகக் கால்கொண்டிருப்பது குழந்தைப் பருவ நினைவுகளிலேயே. 1937ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி அவர் பிறந்தார். அதே நாளில் அவருடைய வீட்டுக்கு எதிரில் கிருஷ்ணா டாக்கீஸ் என்ற திரையரங்கம் திறக்கப்பட்டது. தன் தாயின் மடியில் அமர்ந்தபடி எண்ணற்ற படங்களை அங்கு அவர் பார்த்திருக்கிறார். காட்சி ஊடகத்துடனான உறவு பால்குடி நாட்களிலேயே ஏற்பட்டுள்ளது. சிறு வயது முதலே சினிமா, நாடகங்கள், ராம்லீலா கூத்துகள் ஆகியவற்றின் வழியாக அவருடைய கற்பனை ஆற்றல் விரிவடைந்துள்ளது.

1958ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் இந்தி பாடத்தில் தேர்ச்சி பெறத் தவறியதால் பட்டப் படிப்பில் அவருக்கு அறிவியல் பிரிவில் இடம் கிடைக்கவில்லை. இந்தி ஒரு பாடமாக இடம் பெற்றிராத விவசாயக் கல்லூரியில் சேர்ந்தார். “எனக்கு இந்தி சுத்தமாக வரவில்லை என்று என்னுடைய ஆசிரியர்கள் கருதினார்கள்” என்று சிரித்தபடியே சொல்கிறார் “இந்தியில் நான் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்நேரம் நான் ஒரு பொறியாளராகவோ மருத்துவராகவோ ஆகியிருப்பேன்.” ஆனால், அதே ஆண்டில் இந்தியின் மாபெரும் கவிஞராக கருதப்படும் கஜானன் முக்திபோத் ராஜ்நந்தகாவில் குடியேறுகிறார். சுக்லாவின் கவிதைகள் முக்திபோதின் பார்வைக்கு வருகின்றன. அவரிடம் கவிதைக்கான ஒரு அபூர்வமான தெறிப்பு இருப்பதை முக்திபோத் காண்கிறார். முக்திபோதின் முயற்சியில் அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘ஏறக்குறைய ஜெய்ஹிந்த்’ 1971ஆம் ஆண்டு வெளியானது. இருபது பக்கங்களை மட்டுமே கொண்ட அந்த எளிய அத்தொகுப்பு அதன் தலைப்பின் காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பத்து ஆண்டுகள் கழித்து 1981ஆம் ஆண்டு இரண்டாவது தொகுப்பு ‘புதிய கம்பளி கோட்டு அணிந்த அந்த மனிதன் ஒரு யோசனையைப் போல கடந்து சென்றான்’ வெளிவந்தது.

அவரது கவிதைகளை முற்போக்குவாதப் பிரிவைச் சேர்ந்தவை என்றோ அல்லது நவீனக் கவிதை வகை என்றோ அடையாளப்படுத்தலாம். ஆனால், அவர் தன் அரிதான, ஆற்றல்மிக்க கவிதைகளின் வழியாக தொடர்ந்து இவ்வகையான அடையாளங்கள், வடிவம், மொழி, இலக்கணம் ஆகியவற்றுக்கான விதிகளுக்கு சவால்விடுத்து வருகிறார்.

ஒருமுறை இளம் எழுத்தாளர் ஆசுதோஷ் பரத்வாஜ் அவரை சந்திக்க வேண்டி தொலைபேசியில் அழைக்கிறார். உடனே வரச் சொல்கிறார். வீட்டுக்கு எப்படி வரவேண்டும் என்று விசாரித்தவுடன் சுக்லா சொல்கிறார் “வெள்ளை அலரிப் பூக்கள் பூத்திருக்கும் வீடு.” அவர் மறுபடியும் முகவரியை விசாரிக்க சுக்லாவிடமிருந்து அதே பதில்தான் வருகிறது. அவரது வீட்டைக் கண்டுபிடித்து, சந்தித்துப் பேசிவிட்டு திரும்பும்போதுதான் அவருக்குப் புரிகிறது, சுக்லாவின் கதாபாத்திரங்களும் கதைகளும் ஏன் அத்தனை எளிமையானவர்களாக அமைந்துள்ளன என்று. சுக்லா தான் எழுதும் புனைவுகளில் தன்னுடைய குணாம்சங்களையே அதிகமும் சேர்க்கிறார்.

தனக்குத் தெரிந்த நிலம், தான் அறிந்த மனிதர்கள், சம்பவங்களை மட்டுமே தன் புனைவுகளின் அடிப்படையாகக் கொண்டிருக்கிறார். பிற மொழிகளில் யார் என்ன எழுதுகிறார்கள், புதுவிதமான முயற்சிகள் என்ன நடக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதுமில்லை, கவனத்தில் கொள்வதுமில்லை. அதே நேரத்தில் அவரது படைப்புகள் யதார்த்தவாத பாணியில் அமைந்தவை மட்டுமல்ல. புதுமையான அணுகுமுறையைக் கொண்டவை. வாழ்க்கை, மரணம் சார்ந்த பெரும் கேள்விகளைக் குறித்த சிந்தனைகளோ நினைவோட்டங்களோ அவரது எழுத்தில் இருப்பதில்லை. மனிதனின் அகத்துடனான மோதல்களும் கிடையாது. அவரது கள்ளங்கபடமற்ற கதாபாத்திரங்கள் துயரத்துடன் ஒருவித இணக்கமான பிணைப்பை உருவாக்கி தம் வறுமையை நகைத்தபடி கடக்கின்றனர். எந்தவிதமான நம்பிக்கையோ எதிர்பார்ப்போ புகாரோ இல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடக்கும் அவர்களின் சாதாரணத்துவத்தில் தங்களுக்குள் அவர்கள் கொண்டிருக்கும் பரந்த, உணரப்படாத பிரபஞ்சமும் வெளிப்படுகிறது. வினைச் சொற்களை சற்றே மாற்றி வியத்தகு படிமங்களையும் உருவகங்களையும் உருவாக்குகிறார். கீழ் மத்திய தர குடும்பங்களின் வாழ்க்கையை அதன் எளிமையுடன் இயல்புடன் அன்றாடத்தின் நிச்சயமின்மையுடன் சித்தரிப்பதே அவரது பலம்.  

அவரது நாவல்களில் அங்கங்கே கவிதைகளைக் காணமுடியும். “நமது மரபு கவிதைகளால் ஆனது. நமது காப்பியங்களும் வேதங்களும் கவிதைகளால் ஆனவை. எனக்குள் அது உள்ளூர படிந்திருக்கிறது.” அவரது நாவல்களை எந்த பக்கத்திலிருந்தும் பத்தியிலிருந்தும் வாசிக்க முடியும். ஒரு நீண்ட பயணம் போன்ற அதில் எந்த பயணியும் எந்த இடத்திலும் சேர்ந்து கொள்ள முடியும். அவரது கதை முடிவுகள் தர்க்கப்பூர்வமானவை அல்ல. அதைப் பற்றி கேட்டபோது சொன்னார் “போதுமான அளவு எழுதிவிட்டேன் என்று தோன்றியவுடன் நிறுத்திவிடுவேன்.”

“ஒரு சிறுகதைக்கும் நாவலுக்கும் பெரிய அளவு வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சிறுகதையை ஒரு இடத்தில் முடிக்காமல் மேலும் தொடர்ந்து எழுதினால் அது நாவலாகிவிடும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வேறு எந்தவொரு எழுத்தாளரும் இதைச் சொல்லியிருந்தால் அது பெரும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும். ஆனால், இலக்கியத்தின் எந்த அளவுகோல் குறித்தும் பொருட்படுத்தாத இத்தன்மைதான் அவரை அசலானவராகவும் வித்தியாசமானவராகவும் உறுதிப்படுத்துகிறது. இலக்கிய மையங்களிலிருந்து அவர் விலகியிருக்கிறார். விவாதங்கள் எதிலும் பங்கேற்பதில்லை. பல எழுத்தாளர்கள் அவரது எழுத்துப் பாணியை பின்தொடர்ந்தபோதும், அவர் தனது எழுத்தைக் குறித்து இதுவரையும் ஒரு கட்டுரைகூட எழுதியதில்லை.     

சுக்லா தன்னுடைய சொந்த ஊரான ராய்ப்பூரைவிட்டு அதிகமும் வெளியில் போனதில்லை. வெளியுலகத்தான அவருடைய தொடர்பு மிகவும் குறைவு. உலக இலக்கியங்களுடன், இந்திய இலக்கியங்களுடன் அவருக்கு அவ்வளவு அறிமுகமும் இல்லை. அவருடைய வீட்டு அலமாரியில் இருக்கும் புத்தகங்களும் மிகச் சொற்பம்.

“உங்களுக்குப் பிடித்த உலக எழுத்தாளர்கள் யார்?” என்று அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் “நீங்கள் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களைச் சொல்லுங்கள். எனக்கும் பிடிக்கும் என்றால் சொல்கிறேன்.”

சத்தீஸ்கரில் உள்ள தன் வீட்டை விட்டு அதிகமும் வெளியில் வராத சுக்லாவின் மீது பெருமதிப்பு கொண்டவர்கள் இந்தியாவெங்கும் உண்டு. மிகுந்த ஞானமும் ஏராளமான பயணங்களையும் மேற்கொண்டவர்களில் முக்கியமான இருவர் கிருஷ்ண பல்தேவ் வைத், நிர்மல் வர்மா ஆகியோர். அவர்கள் இன்னொருவரை பாராட்டுவது என்பதே அரிது. நிர்மல் வர்மா வாசிக்கப் பரிந்துரைத்த நாவல்களில் ஒன்று ‘நௌகர் கீ கமீஜ்.” கிருஷ்ண பல்தேவ் வைத்துக்கும் இந்த நாவல் பிடித்தமான ஒன்று.

இந்த நாவலை எழுதியதன் பின்னணி சுவையான ஒன்று. மத்திய பிரதேச அரசு அதிகாரியாக விளங்கிய அசோக் வாஜ்பாய், ‘முக்திபோத் ஃபெலோசிப்’ நல்கையை சுக்லாவுக்கு வழங்க தீர்மானிக்கிறார்கள். இதற்காக குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு நாவலை எழுதித் தரவேண்டும். தன் பணியிலிருந்து நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு எழுதத் தொடங்குகிறார். பிரபல எழுத்தாளர்கள் பலரும் தட்டச்சுப் பொறியை பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிகிறார் சுக்லா. இந்த விடுப்பை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த முடிவு செய்து ராய்பூரின் கோல் பஜாரில் உள்ள துர்கா தட்டச்சு பயிலகத்தில் சேர்கிறார். ஆறு மாதங்கள் தொடர்ந்து வகுப்புகளுக்கு சென்றார். அதுவரையிலும் அவர் ஒரு வரிகூட எழுதியிருக்கவில்லை. தட்டச்சு செய்யவும் கற்றுக் கொள்ளவில்லை. வானொலியை பழுதுபார்க்க கற்றுக் கொள்ளவேண்டும் என்பது அவரது வெகுநாள் கனவு. அதற்கான வகுப்பிலும் இதே சமயத்தில் சேர்ந்திருந்ததுகூட இதற்கு காரணமாக இருக்கலாம். 

மனம் வெறுத்து அசோக் வாஜ்பாய்க்கு எழுதுகிறார் “கடந்த ஆறு மாதங்களாக நான் எதையுமே எழுதவில்லை. எனக்கு தரப்பட்டுள்ள நல்கையை ரத்து செய்துவிடுங்கள்.” வாஜ்பாய் பதில் எழுதுகிறார் “உங்களுக்கு வழங்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். இனி உங்கள் விருப்பம். நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.”

வாஜ்பாய் தன்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும்போது, ஏன் எழுதக் கூடாது என்று யோசிக்கிறார். அடுத்த ஆறு மாதத்தில் நாவலை எழுதி ஒப்படைக்கிறார்.

சத்தீஸ்கரும் அவர் சொந்த மாவட்டமும் கனிமவளச் சுரங்கங்கள் சார்ந்த தீவிர அரசியல் போராட்டங்களுக்கு பெயர் பெற்றது. ஆனாலும், கடும் நெருக்கடி தரும் இவ்வாறான நிகழ்வுகளிலிருந்து சுக்லா முழுவதுமாக விலகியே இருந்தார். இவரைப் போன்ற ஒரு பெரும் இலக்கிய ஆளுமை, இதுபோன்ற முக்கியமான பிரச்சனையில் பொருட்படுத்தத்தக்க அரசியல் ஊடுருவலை நிகழ்த்தியிருக்க முடியும் என்று இலக்கிய உலகும், பொதுமக்களும் கூட எதிர்ப்பார்த்தனர். அவருடைய மௌனம் தாங்க முடியாத ஒன்றாக இருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.

யார்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விக்ராந்த் டாடாவாலா சுக்லாவை ஒரு முறை சந்திக்கிறார். வீட்டு முற்றத்தில் அமர்ந்து ‘போகா’(தாளித்த அவல்)வைச் சுவைத்தபடியே, அவரது இளமைக்கால இடதுசாரி இலக்கியச் சூழலைப் பற்றி கேள்விகளை கேட்கிறார். சுக்லா உறுதியான எந்த பதிலையும் தருவதில்லை. எதிர்பார்த்ததைவிட மந்தமானவராக இருந்த சுக்லா சொல்கிறார் “மிகச் சாதாரணமான கீழ் மத்திய தர வாழ்க்கையையே நான் கழித்திருக்கிறேன். எழுதத் தகுந்த எந்தவொரு சம்பவமும் என் வாழ்க்கையில் நடந்ததில்லை. சிறு வயதிலேயே அப்பாவை இழந்துவிட்டேன். அவரது இழப்பைத் தொடர்ந்து குடும்பத்தை நிலைகுலைத்த பொருளாதாரச் சூழலை இன்னும் நான் மறக்கவில்லை. வழக்கமாக ஒருவருக்கு வாய்க்கும் சிறுவர் பருவத்தைவிட மிகக் குறுகியதாக அமைந்துபோனது என் சிறுபருவம். வீட்டைவிட்டு வெளியே வரும்போதெல்லாம் எனது கூண்டை சற்று விசாலாமாக்குவதாகவே எனக்குத் தோன்றும். ஏதேனும் ஒரு விதத்தில் நாம் அனைவருமே கூண்டுக்குள்தான் அடைபட்டிருக்கிறோம். சுதந்திரம் என்பது உங்கள் கணுக்காலைப் பற்றியிருக்கும் கயிற்றின் நீளத்தைப் பொறுத்ததுதான்.”

பதினைந்து வயதிலிருந்து எழுதி வரும் அவர் ஒரு நேர்காணலில் கூறுகிறார் “ஒருநாள் திடீரென்று எனக்குத் தெரிய வந்தது, மொழியின் வழியாக நான் சிந்திப்பதில்லை, படிமங்களின் வழியாகவே சிந்திக்கிறேன் என்று. மொழியை கண்டுபிடிப்பதற்கு முன்பு ஆதி மனிதன் படிமங்களின் வழியாகவே சிந்தித்திருப்பான். மொழி பிற்காலத்தில்தான் வந்தது. முதலில் படிமத்தைக் குறித்து யோசித்துவிட்டு அதை எழுத்தில் வடிக்கிறேன்.”

ஆறு நாவல்களை எழுதியுள்ளார். மாய யதார்த்த பாணிக்கு மிக நெருக்கமானது அவருடைய எழுத்து முறை. அதே நேரத்தில் அவரது எழுத்து அசலானதாகவும் காட்சியழகு கொண்டதாகவும் அமைந்திருக்கும். ‘சுவரில் ஒரு ஜன்னல் இருந்தது’ நாவலுக்காக 1999ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. அவருடைய முதல் நாவல் ‘வேலைக்காரனின் சட்டை’யை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணி கௌல் படமொன்றை இயக்கியுள்ளார்.

சர்வதேச அளவில் வழங்கப்படும் இலக்கியத்துக்கான PEN/Nabokov விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மை காலத்தில் அவர் குழந்தைகளுக்காக மிகுந்த ஆர்வத்துடன் நிறைய எழுதுகிறார். “குழந்தைகளுக்காக எழுதும்போது அவர்களுடைய வயதை நான் கவனத்தில் கொள்கிறேன். ஆனால், இளைஞர்களுக்கு பயன்படுத்தும் அதே மொழியையே குழந்தைகளுக்கும் பயன்படுத்துகிறேன். மொழியை நான் தளர்த்துவதில்லை. குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு புரியாது என்று நினைக்கவில்லை. அவர்களுடைய வயதுக்கு கூடுதலான புத்திசாலித்தனம் அவர்களிடம் உண்டு. எனவே, மொழியை நான் தளர்த்த மாட்டேன். சொல் முறையை தகுந்தபடி மாற்றிக் கொள்கிறேன்.

எழுதுவதற்கான உத்வேகத்தை எனக்கு அளிப்பது எதிர்காலம். அது முழுக்க நம்பிக்கை நிறைந்தது.”

அவரது எழுத்தில் சிறிதளவு கசப்பையோ அல்லது உலகுக்கு எதிரான புகாரையோ காணமுடியாது. “கெட்ட குணங்களுடன் யாரையேனும் சித்தரிக்கும்போதுகூட அவர் அப்படியிருக்க மாட்டார் என்பதற்கான சிறிய நம்பிக்கையோ அல்லது குறிப்போ நிச்சயம் இடம்பெற்றிருக்கும்” என்று விளக்கினார். “கெடுதலே உங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லையா?” என்று வினவியபோது அவர் சொன்னது “அப்படிச் சொல்லமாட்டேன். ஆனால், எழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரை இன்னும் மேம்பட்ட மனிதனாவதற்கான பிரார்த்தனைதான்.”

0

(2024ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது இந்தியின் புகழ்பெற்ற கவிஞர் விநோத் குமார் சுக்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. காலச்சுவடு மே 2025 இதழில் வெளியான கட்டுரை) 

 

 

Tuesday, 25 March 2025

ஆங்கில மொழியாக்கத்தில் என் கதைகள்

 


சிலர் தங்களது வேலைகளை மட்டும் கவனமாகவும் சிரத்தையாகவும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். அங்கீகாரம், பரிசு, விருது ஆகியவற்றைப் பற்றி பொருட்படுத்தாமல் தங்களுக்குப் பிடித்த பணியில் விரும்பி ஈடுபட்டிருப்பார்கள். அவ்வாறான ஒரு நண்பர் திரு சரவணன். Saravanan Karmegam கடந்த சில வருடங்களாக அவரைத் தெரியும். நேரில் இதுவரை சந்தித்ததில்லை. பத்து வருடங்களுக்கும் மேலாக மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார். புதுமைப்பித்தன் தொடங்கி திருச்செந்தாழை வரைக்குமான எழுத்தாளர்களின் 60 கதைகளை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளார். ப சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலின் 34 அத்தியாயங்கள் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவை தவிர, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் சிறந்த பல ஆக்கங்களை மொழிபெயர்த்துள்ளார்.
அவரது தளத்தில் என்னுடைய ஏழு சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கங்கள் உள்ளன.

‘அம்மன் நெசவு’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட பெரும் ஆர்வத்துடன் இருந்தபோதும் வெளியிடுவதற்கு பதிப்பகங்கள் எதுவும் இன்னும் அமைந்தபாடில்லை.

அக்கறையுடன் நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள அவரது மொழிபெயர்ப்புகளை ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.


Saturday, 22 March 2025

‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ ( ஸ்பாரோ விருது ஏற்புரை )


 

எளிய கைத்தறி நெசவாளர் குடும்பத்தின் நான்கு ஆண் குழந்தைகளில் மூன்றாமவன் நான். உடன்பிறந்தவர்களாய் பெண்கள் இல்லையென்றபோதும் பிறந்ததிலிருந்தே பெண்களால் தூக்கி வளர்க்கப்பட்டவன் நான். பெண்கள் சூழவே வளர்ந்தவன். கைத்தறி நெசவுக்குத் தேவையான நூல் நூற்பதற்காக எங்கள் பாட்டியிடம் வரும் தாவணி போட்ட இளம்பெண்கள் எப்போதும் என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு திரிவதாக அம்மா சொல்லியதுண்டு.

வளர்ந்து எனக்கு விபரம் தெரிந்த நாளில்கூட என்னைச் சுற்றிலும் பெண்கள்தான் இருந்தார்கள். கைத்தறி நெசவு என்பது குடும்பத்திலுள்ள அனைவரும் கூடி உழைக்கவேண்டிய ஒரு தொழில். சிறியவர் முதல் பெரியவர் வரை அவரவர் பங்கை சரியாக செய்யாமல் தறியில் ஒரு சீலையை நெய்வதோ அதை ஒரு பொருளாக சந்தைக்குக் கொண்டு வருவதோ சாத்தியமில்லை. எங்களது தெருவிலிருந்து எல்லா வீடுகளிலும் பெண்கள் நிறைய. என்னைவிட வயதில் மூத்தவர்கள். எல்லோருமே வீட்டு வேலைகளை செய்வதோடு தறி வேலைகளையும் செய்பவர்கள். பலரும் தறியில் இறங்கி நெய்பவர்கள். எனவே, அவர்களுடைய குரல்கள் எப்போதுமே என் காதுகளில் விழுந்துகொண்டிருந்தன. வேலை செய்தபடியே சினிமாக் கதைகளை பேசுவார்கள். அமாவாசை நாட்களில் டூரிங் டாக்கீஸில் காட்டப்படும் எம்ஜிஆர் படங்களுக்கு உற்சாகத்துடன் நடக்கும்போது என்னையும் அழைத்துச் செல்வார்கள். ஆடிப் பெருக்கு நாளன்று வேப்ப மரத்து தூரிகளில் பாவாடையை இடுப்பில் செருகிக்கொண்டு காற்றில் பறந்து ஆடுவார்கள்.

உழைக்கும்  நெசவாளப் பெண்களின் அந்தக் குரல் மெல்ல மெல்லத் தேய்ந்து பனியன் கம்பெனிகளில் தையல் இயந்திரங்களுக்கு நடுவே ஒலிக்கும் பெண்களின் குரலாக மாறிற்று.

குடும்பத்தின் தேவைக்காக பள்ளிக்கூடங்களை மறந்து பனியன் ஆலைகளுக்கு தூக்குவாளிகளைத் தூக்கிக் கொண்டு ஓடும் சிறுமிகளின் குரலாகக் கேட்கலாயிற்று.

ஆலைகள் வேலை வாய்ப்பைத் தந்தன. பொருளாதார சுதந்திரத்தை சாத்தியப்படுத்தின. பெண்களின் உடல்மொழி மாறிற்று. குரல் மாறிற்று. ஆண்களைச் சார்ந்திருக்கும் நிலையும் மாறியது. மாறாக, பெண்களை நம்பியே குடும்பம் என்று உறுதியானது.

கைத்தறி நெசவிலிருந்து பனியன் ஆலைகள் வரையிலும் இந்தக் குரல்கள் என்னைச் சுற்றிலும் எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. இன்றும் தொடர்ந்து ஒலிப்பவை. ஆடை ஏற்றுமதி உச்சம்தொட்ட காலங்களில் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் திருப்பூரை நோக்கி படையெடுத்தனர். அப்போது கொங்குத் தமிழுடன் சேர்ந்து பிற மாவட்டங்களின் தமிழும் ஒலித்தது. இப்போது வட மாநிலங்களின் மொழிகளும் ஒன்று கலந்துள்ளன.

இவையே என் கதைகளில் ஒலிக்கும் குரல்கள். கடந்த நாற்பதாண்டுகளாக திருப்பூரிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் வாழ்வில் ஏற்பட்ட, குறிப்பாக பெண்களின் உலகில், ஏற்றங்களையும் ஏமாற்றங்களையும் வாய்ப்புகளையும் சுரண்டல்களையும் கதைகளின் வழியே காட்ட முற்பட்டிருக்கிறேன்.

என் எழுத்துகளில் பெண் கதாபாத்திரங்கள் வலுவாக அமைந்திருப்பதின் ரகசியம் இதுதான். ‘மல்லி’ போன்ற சிறுகதைகளிலும் ‘மணல் கடிகை’ நாவலிலும் திருப்பூர் பனியன் ஆலைகளிலுள்ள பெண்களையும் அவர்களது குணாதிசயங்களையும் வெளிப்படுத்த முனையும்போது ‘சூடக்கொடுத்தவள்’, ‘சிவகாமி’ போன்ற கதைகளும் ‘மனைமாட்சி’ நாவலும் பெண் எனும் ஆற்றலின் சாத்தியங்களைக் காட்ட முயன்றுள்ளன.

எனது எழுத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தன்னிச்சையானவை. அவரவர் நியாயங்களை அவரவர் சூழலில் அழுத்தம்திருத்தமாக நிறுவ முயல்பவை. நான் எந்தப் பக்கச் சார்பும் கொள்வதில்லை. சரி தவறு என தீர்ப்பளிக்க நினைப்பதில்லை. இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று காட்டிவிட்டு நகர்ந்துவிடுகிறேன். அதுதான் என் வேலை என்றும் நம்புகிறேன்.

‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்பது அய்யனின் வாக்கு. அதுவே என் ‘மனைமாட்சி’ நாவலின் உப தலைப்பும்கூட.

பெண்களைக் குறித்த ஆவணங்களுக்கான அமைப்பான ‘ஸ்பாரோ’ என் எழுத்துக்களை அடையாளம் கண்டு, தேர்ந்தெடுத்து விருதளித்திருப்பது தற்செயல் என்று நான் நினைக்கவில்லை. என் எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கும் பெண் கதாபாத்திரங்களே இந்த விருதுக்கு சொந்தக்காரர்கள் என்று எண்ணுகிறேன். அந்த விதத்தில் இந்த விருது என்னளவில் முக்கியமானது, தனித்தன்மை வாய்ந்தது.

முப்பதாண்டு காலமாக எழுதுகிறேன். நான்கு நாவல்கள், அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என எல்லா வடிவங்களிலும் பங்களித்திருக்கிறேன். ‘சொல் புதிது’ பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்திருக்கிறேன். சொல்லிக்கொள்ளத்தக்க அங்கீகாரங்கள் எதுவும் இல்லை என்ற நிலையிலும் நான் தொடர்ந்து செயல்படுகிறேன். தீவிரமாக எழுதுகிறேன். எங்கேனும் சிலர் என் எழுத்தை வாசிக்கக்கூடும் என்ற நம்பிக்கையும், ‘நான் எழுதவேண்டிய சிலவற்றை வேறு யாரும் எழுத முடியாது’ என்கிற உறுதியும் என்னைத் தொடர்ந்து எழுதச் செய்கின்றன.

‘ஸ்பாரோ’ போன்ற ஒரு அமைப்பு என் எழுத்துகளை கௌரவப்படுத்துவதென்பது என் பணியை மேலும் ஊக்கத்துடன் தொடர்வதற்கான உற்சாகத்தையும் ஆற்றலையும் அளிக்கும்.

விருதுக்கான என் பெயரைப் பரிந்துரைத்த ஆலோசகர்களுக்கும், ‘ஸ்பாரோ’ அமைப்புக்கும் மனமார்ந்த நன்றிகள்.

( 2021ஆம் ஆண்டுக்கான ஸ்பாரோ இலக்கிய விருது அக்டோபர் 2021இல் அறிவிக்கப்பட்டது. பெருந்தொற்று காலம் என்பதால் விருது விழா நடைபெறவில்லை. விருதுப் பட்டயம் அஞ்சலில் அனுப்பப்பட்டது. விருதேற்பு படம் வீட்டில் எடுக்கப்பட்டது. ஏற்புரை எழுதப்பட்டு ஸ்பாரோ அமைப்புக்கு அனுப்பப்பட்டது.)

Wednesday, 19 March 2025

கிரிராஜ் கிராதுவின் ஏழு கவிதைகள்


 

கிரிராஜ் கிராது

நவீன ஹிந்தி இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத பெயர் கிரிராஜ் கிராது.

1975ல் ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் பிறந்தவர். பிரதிலிபி என்ற இருமொழி மாத இதழின் நிறுவனர். கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, பத்திரிக்கையாளர் என்று பலதுறைகளிலும் பங்களிப்பவர். இவருடைய கவிதைகள் இந்தியில் மிகவும் புகழ்பெற்றவை என்றாலும் இதுவரையிலும் தொகுப்பாக வெளியிடப்படவில்லை.

வழக்கமான கவிதையின் வடிவத்தில் அல்லாமல் உரைநடையின் வடிவத்தில் இவரது பெரும்பாலான கவிதைகள் அமைந்துள்ளன. பல கவிதைகளில் இவர் முற்றுப்புள்ளிகளையோ பிற நிறுத்தற்குறிகளையோ இடுவதில்லை. காலங்காலமாக கவிதையில் சொல்லப்பட்டுள்ள பாடுபொருள்களை இவர் கவிதைகளில் காணமுடிவதில்லை. நவீன மனத்தின் சலனங்களை அபத்தங்களை கையாலாகத்தனங்களை நுட்பமாக சித்தரிக்கின்றன கிரிராஜ் கிராதுவின் கவிதைகள்.

அண்மையில் எழுதப்பட்ட அவரது இந்த ஏழு கவிதைகளும் ‘சமாலோசன்’ என்ற இணைய இதழில் வெளியானவை.

0

1

SPB

கிராமிய மக்களின் எழுச்சிப் பாடலாக ஒலிக்கவிருந்த ஒன்று

குறும்புக்கார வாலிபர்களின் துடுக்குப் பாடலானது

பிரிவுத்துயரொலிக்க வேண்டிய ஒன்றோ ஆக்ரோஷமானது

காதல் கவிதையோ ஒப்பாரியானது

சோகப் பாடலோ சமூக அவலம் சொல்லும் உபதேச கீதமானது

தமிழென்று நினைத்தது மலையாளமானது

மலையாளமோ தெலுங்கானது

போபர்ஸ், ரதயாத்திரையின் நிழலில் கழிந்த

1990ஆம் ஆண்டின் அந்த வசந்த காலத்தின்போது

பழைய ஒரு புகைப்படத்தில்

நீயென்று எண்ணிய உருவம் இளையராஜாவின் உருவமானது.

மனோவோ, ராஜேஷ் கிருஷ்ணனோ

உன்னுடைய குரலில் பாடிய எத்தனையோ பேரையும் நீ என்றே நினைத்திருந்தேன்

 

உன் குரலிலிருந்து அவர்கள் தங்கள் குரலைக் கண்டடைந்திருக்க வேண்டும்

எனக்கென்று குரல் இல்லை, உன் குரலின் நகல்தான் அது.

ஏதேனும் ஒரு நாள் நான் உன்னுடைய ‘மன்றம் வந்த’ அல்லது ‘இது ஓர் பொன் மாலை’

அல்லது ‘நகுவா நயனா’ அல்லது ‘நா நிச்சலி’ யை பாடுவேன்

ஏன் இத்தனை பக்திப் பாடல்களை பாடினாய் நீ

ஏன் இத்தனை தன்மையானவனாக இருந்தாய் நீ

உன்னுடைய உடல் நலம் குறித்த செய்திகளை

சக்தி வாய்ந்த தலைவர்கள் ஏன் மூடி மறைத்தார்கள்

அவர்கள் செய்த கெடுதல்களையெல்லாம் மன்னிப்பதற்கு

நீ பாடிய அனைத்து கானங்களும் சேர்ந்து முயன்றால்கூட முடியாது.

 

இரண்டு முறை நாம் சந்தித்திருக்க முடியும், முயலவில்லை நான்

ஆனால் ஏழாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவனின் வாழ்வில்

மரியா அல்லது ஜானியின் பாடல்களை பாடியபடி வந்திராமல் போயிருந்தால்,

பெருமைமிக்க பிரதேசப் பேச்சு வழக்கை

இந்தியல்லாத உச்சரிப்புடன் மாற்றியும் தேற்றியும் நீ பாடாமல் இருந்திருந்தால்

கலைகளின் வர்ணாசிரமம் புரிந்திருக்காது

முன்பின் அறியாத மொழி எழுத்துகளின் நடுவே மூன்று ஆங்கில எழுத்துகளைக் கொண்ட

அந்த மேக்னா சவுண்ட் கேசட்டை எடுக்காமல் போயிருந்தால்

சுத்த சங்கீதக் காவலர்களின் நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டிருக்க முடியாது

 

உனக்கான பிரிவுப் பாடல் என்னிடம் கிடையாது

அது தமிழோ தெலுங்கோ இந்தியோ தெரியாது

அது உங்களது ‘நீ கூடு செதிரிந்தி’யாக இருக்கலாம் வேறு ஏதேனும் இருக்கலாம்

ராஜேஷ் மனோ ரகுமான் ராஜா அனைவரும் உனக்கு விடை தந்துவிட்டார்கள்

என்னால் எப்போது சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை

‘ரம்பம்பம் ஆரம்பம்’ பாடல் சோகப் பாடலுக்கு சரியாக வராது

உஷா உதூப்போ ராஜேஷோ மனோவோ நானோ புனித் சர்மாவோ அமித் ஸ்ரீவத்ஸாவோ

இருந்திருந்தால் அது எப்படிப்பட்ட வழியனுப்புதலாக இருந்திருக்கும்

தேசத்தின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தின் முன்னால் நின்று

உன்னை அழைத்துப் பாடத் தொடங்குவோம்

‘ரம்பம்பம் ஆரம்பம் ரம்பம்பம் ஆரம்பம்’.

 

2

செல்ஃபி

 

கிளிக் செய்யும் சமயத்தில் பார்க்க முடியவில்லை

துக்கம் மூன்று டிகிரி குனிந்திருந்தது

டிராஃபிக் சிக்னலில் புத்தகம் விற்கும் சிறுவனுடன் நிற்கிறது ஒரு குழந்தை

பின்னால் விளம்பர பதாகையில் சுதீர் சௌத்ரி சிரித்துக் கொண்டிருக்கிறார்

மூன்று நாட்களுக்குப் பிறகு வரவிருக்கும் ஹார்ட் அட்டாக் குறித்து தெரியாமல்

 

இரவு ஒன்பது மணிக்கு போஸ்ட் போடவேண்டும்

மதியம் இரண்டு மணிக்கான எனது ஆன்ட்ராய்டு முகத்தை

 

 

3

பெங்களூரு 4.0

 

கார்கள் மூழ்குகின்றன ஸ்கூட்டர்கள் நீந்துகின்றன

துணிகளும் காண்டமும் காமவாசனைகளும் ஏழு வாரங்களுக்கு ஈரமாகவேயிருக்கும்

ஸ்விகி பிளிங்கிட் ஜமோடா அமேசான் அலிபாபாக்களின் டிரோன்கள்

கவலைகளுடன் சுற்றுகின்றன.

சிலைகள் சிலைகளாக கிடக்கும்

ஏரியின் கல்லறையின் மீது திருவிழா கொண்டாடினால் எத்தனை பிரமாதமாக இருக்கும்.

0

4

லைவ்

 

ஒரு கொலையை நேரடி ஒலிபரப்பு செய்வதென்பது சிறிதும் கஷ்டமில்லை,

அதிக ஆரவாரம் கூடாது.

ஒரு ஸ்மார்ட் போனும் ஐம்பது நூறு ரூபாய்க்கு டேடாவும் வைத்து

யார் வேண்டுமானலும் யூ ட்யூப் சேனலை உருவாக்க முடியும்

ராத்திரி அவசியமில்லை, பகல் வெளிச்சமிருந்தாலே வீடியோ நன்றாக வரும்

ஒரேயடியாக யாருமில்லாமல் இருப்பது ஆகாது,

எத்தனைக்கெத்தனை கூட்டம் உள்ளதோ அத்தனைக்கத்தனை நல்லது

கத்தி இருந்தால் நல்லதுதான் ஆனால் கட்டாயமில்லை.

மனிதனின் கையும் காலுமே போதுமானது.

              

போரை நேரடியாக ஒலிபரப்புகிறது சி என் என்

கொலை எண்ணத்தால் உற்சாகமடைந்து

கொலையை மக்களுக்குப் பிடித்த எண்ணமாக உருவாக்குகிறது பிரைம் டைம்

கொலையை நேரடியாக ஒலிப்பரப்பும் நாடாக ஆக்குகிறதா?

 

5

ஒரு அலைபேசி எண்ணைப் போல

 

உங்களை அழைப்பதாக இருந்தேன் நான்.

 

ஒரு நாள் நாம் இருவரும் ஒன்றாகவே படப்பிடிப்பை முடித்தோம்

இத்தனை சீக்கிரம், மூன்று நாட்களுக்கு உள்ளாகவே,

வேறுமாதிரியாகும் என்று எனக்குத் தெரியாது

இந்த மூன்று நாட்களில் பல முறை உங்களைப் பற்றி யோசித்தேன்

எந்த ஊரில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதுபோல

மந்தமாக, ஆகவே சற்று பின்தங்கியவராக,

இருபதாம் நூற்றாண்டிலேயே மாட்டிக் கொண்டவர் என்றும்

இப்போதெல்லாம் உங்கள் வேலையை நீங்கள் சொன்னபடி சரியாக செய்வதில்லை

இந்து குடும்பத்திலிருந்து வந்த உங்கள் மனைவி எப்படி இருக்கிறார்கள்

உங்களுக்குக் குழந்தைகள் உண்டல்லவா? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?

இந்த ஊரிலிருந்து போய் விட்டீர்களா?

என்றெல்லாம் நான் யோசித்தேன்

 

உங்கள் கேமரா பழைய தூர்தர்ஷனின் தரத்துக்கு சமமாக இல்லாமல் இருந்திருக்கலாம்

ஆனால் அதன் உணர்வுகள் சரியாக பொருந்தியிருந்தன.

நாள் முழுவதும் உங்களுடைய கண்கள் மனிதர்களை அல்ல, ஒளியையே பார்த்திருக்கும்

ஜே பி, இந்திரா இருவரையும் நீங்கள் இதே கண்களால் நேரில் பார்த்திருக்க வேண்டும் என்று நான் நினைப்பது ஏனென்று எனக்குத் தெரியவில்லை

ஆனால் ஏதாவது செய்யுங்கள், உங்கள் உபகரணங்கள் பழசாகிவிட்டன

தூர்தர்ஷனை நீங்கள் வேலையாக மட்டும் பாருங்கள், காதலைப் போல் அல்ல.

 

ஆனால், உங்களைப் பற்றி பேச நான் உங்களிடம் வரவில்லை

அடுத்த படப்பிடிப்பு எப்போது என்று தெரியாது

உங்களுக்கான சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது

இன்னும் நாம் நண்பர்களாகவில்லை

ஒருவேளை அது நடக்காமலும் போகலாம், ஏனெனில் எனக்கு நண்பர்கள் யாருமில்லை

இப்போதும் நான், இந்த எளிய நகரத்தில்

தற்பெருமை, அகங்காரம், சுயவிரக்கத்துடன் அலைந்து திரியும் கைவிடப்பட்டவன்தான்

நல்லது, நான் என்னைப் பற்றியும் உங்களிடம் பேச வரவில்லை

தவிர வேறெதையும் செய்வதுகூட இப்போது மேலும் சிரமமாக இருக்கிறது.

உங்களிடம் நான் ஒரு தாங்க முடியாத துயரத்தைப் பகிரவே வந்திருக்கிறேன்

 

என்ன நடந்தது என்றால் உங்களை நான் அழைப்பதாக இருந்தேன்

என்னுடைய அலைபேசியில் உங்களைப் பெயரை இட்டு,

தேடி வெகு நேரத்துக்குப் பிறகு கிடைத்தது

என் வாழ்வில் உள்ள இஜாஸ் நீங்கள் மட்டுமே அல்ல.

நண்பர்களற்று கைவிடப்பட்டு வருடக்கணக்கில் ஊர் ஊராக திரியும்

என்னுடைய அலைபேசியில் அந்த இன்னொரு இஜாஸின் எண்

எப்படி தங்கியதென்று எனக்குத் தெரியவில்லை

 

அந்த எண்ணையும் பெயரையும் கண்ட அந்த நொடியில்

எஞ்சியிருந்த இறகுகள் உடைந்து நொறுங்கின

நண்பர்களற்ற, கைவிடப்பட்ட ஒருவன் அழுவதுபோல அழுது கொண்டிருக்கிறேன்

நாற்பத்தி ஆறு டிகிரி கொதிக்கும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலில்

மோட்டர் சைக்கிள் ஓட்டியபடியே அழுது கொண்டிருக்கிறேன்.

 

உங்களுக்குப் புரிகிறதல்லவா? இஜாஸ் அகமது இந்த உலகில் இல்லை

இப்போது அவர் என் அலைபேசியில் உள்ள ஒரு எண்.

இஜாஸ் அகமது இல்லை என்பது

இப்போது எத்தனை துக்கம் அளிக்கக் கூடியதென்பதை

உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?

0

6

புதிய யுகத்தில் நட்பு

 

பெண்களை இழிவுபடுத்திய ஒரு அதிகாரிக்கு எதிரான

கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர்

அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்கவில்லை.

அப்போது என்னை தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்

“நானொரு அரசியல்வாதி.”

அன்று முதல் அவரை நான் மரியாதையுடன் அவ்வாறே ஏற்றுக்கொண்டேன்.

 

அதிகாரிகள் ஏற்பாடு செய்யும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் செல்லக்கூடாது என்பது

இந்திக் கலாச்சாரம் என்றவர்

ஒருமுறை அதில் சென்று கலந்து கொண்டார்

அப்போது அவர் என்னிடம் சொன்னார் “எனக்குத் தெரியாது”

இதை நான் மரியாதையுடன் ஒப்புக்கொள்ளவில்லை

 

இலக்கிய அமைப்புகள் தில்லியில் ஏற்பாடு செய்யும் மாலை நிகழ்ச்சிகளில்

ஒரு நாள் மாலையில்

வெளியில் நின்று சிகரெட் புகைத்தபடியே கேட்டார்

“இந்த ஒலிப்பதிவு வேலையில் போதுமான சம்பளம் கிடைக்கிறதா?”

என்னுடைய சம்பளத்தைச் சொன்னவுடன் அவர் கூறினார்

“இதுபோன்ற வேலைகள் இருந்தால் சொல். இதைவிட குறைவு என்றாலும் பரவாயில்லை”

அன்றிலிருந்து ஒவ்வொரு முறை சம்பளம் கிடைக்கும்போதும்

அவருடைய முகம், சிகரெட்டுடன் சேர்த்து நினைவில் எழுகிறது

அப்போது அவருக்கு வயது எழுபது, சாவதற்கு இரண்டு வருடத்துக்கு முன்பு.

 

அவருடைய பிரசித்திபெற்ற ‘துணை’ கவிதையைப் பற்றி இரண்டு முறை எழுதினேன்

முதல் முறையில் சில கேள்விகள் இருந்தன,

இந்தி மொழிக்குள் உள்ள அரசியலின் தாக்கம் குறித்து.

இரண்டாம் முறையில் பாராட்டு இருந்தது,

இவ்வுலகில் கலை சார்ந்த அரசியலின் தாக்கம் பற்றி

முதலாவதை எழுதும் வரையில் நாங்கள் இருவரும்

ஹிந்தியின் இரு வேறு முகாம்களைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணியிருந்தேன்

இரண்டாவதை எழுதுகையில் ஹிந்தியில் அவ்வாறான முகாம்கள் இல்லையென்று கருதினேன்

ஆனால் இரண்டு முறையும் இக் கவிதையைக் குறித்தோ அல்லது

அதைப் பற்றியது எழுதியது பற்றியோ அவரிடம் பேசவில்லை

ஒருபோதும் பேசிக்கொள்ளவே இல்லை

 

 

எப்படி அவர் கவிஞராக இருக்கிறாரோ அதுபோலவே

மனிதனாக, தொழிலாளியாக, கூலியாக, பொறியாளராக, ஆசிரியராக, வழக்கறிஞராக,

தலைவராக, பெயின்டராக என யாராகவும் ஆகக்கூடிய வாய்ப்பு எத்தனைக் குறைந்திருக்கிறதோ

அந்த அளவுக்கு அப்படி ஆவதற்கான தேவைகள் கூடியுள்ளன.

படுகொலைகளை எதிர்த்து கண்டன அறிக்கைகளில்

எழுத்தாளர்கள், கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், ஓவியர்கள் கையெழுத்திட்டபோதும்,

அவ்வப்போது ஆழமான புரிதலுடனும் வேறு வழியற்ற அப்பாவித்தனத்துடனும்

அத்தகைய சக்திகளுக்கு எதிராக போராடியுமிருந்தனர்.

 

நாம் இருவரும் நண்பர்களாக இருக்கவில்லை, இருந்திருக்க முடியும்

ஆனால் சந்தித்தபோது நண்பர்களைப் போலவே சந்தித்தோம்

விடைபெற்றுச் சென்றபோதும் நண்பர்களைப் போலவே விடைபெற்றோம்.

 

7

வணக்கம், நான் ரவீஷ் குமார்

 

தவறாக நினைக்காதீர்கள், உங்களுடைய பார்வையல்ல

என்னுடைய பயமே என்னைக் காப்பற்றியது

உங்களுடைய நேசமல்ல, என்னுடைய அமைதியற்ற அகங்காரமே காப்பாற்றியது

உண்மையாக இருக்க விரும்பியதும்

என்னையே நான் உண்மையானவனாக எண்ணியதுமே என்னைக் காப்பாற்றியது

என் குடும்பமும் நட்புமே என்னைக் காப்பாற்றியது

 

என்னைப் பற்றி என்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?

பொதுமக்கள் என்பது ஒருவரல்ல, பலர்

என்னை விசாரணையின்றி கொல்வதை பிரைம் டைமில் பார்க்க ஒரு பொதுஜனம் விரும்பினார்

இன்னொரு பொதுஜனம் என்னை அழைத்துப் பேசினார்

வெல்லமும் பழங்களும் தானியங்களும் இனிப்புகளையும் பரிசாக அனுப்பினார்

வேறொருவர் என்னுடன் செல் ஃபி எடுத்துக் கொண்டு அதற்காக பிறரது வசைகளைப் பெற்றார்

 

எப்போதும் உண்மையான, நிபந்தனையற்ற வெறுப்பைக் கொண்டிருக்கும்

ஒரு பொதுஜனம் எப்போதும் உண்டு

உன் மீதும், என் மீதும்

மறைந்த, முழுவதுமாக மறந்துபோன ரகுவீர் சகாயின் மீதும்.

0

( இக் கவிதைகள் அனைத்தும் ‘கவிதைகள்’ மின்னிதழ் ஜனவரி, பிப்ரவரி 2025 இதழ்களில் வெளியாயின. )

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...