Wednesday, 1 April 2026

விட்டல்ராவ் எனும் வியத்தகு மனிதர்

 


0


கோவையில் ‘அருவி’ என்றொரு அமைப்பு செயல்பட்டு வந்தது. சீனிவாசன், சூரி, சுரேஷ் குமார் ஆகிய மூன்று நண்பர்கள் ஒருங்கிணைத்தனர். இரண்டு மாதங்களுக்கு ஒரு நிகழ்ச்சி. இலக்கியம் மட்டுமல்லாமல் பிற கலை, அறிவுத்துறை சார்ந்த முக்கியமான ஆளுமைகள் கலந்துகொண்டனர். அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில்தான் விட்டல்ராவை முதன்முதலாக சந்தித்தேன். ‘தமிழகக் கோட்டைகள்’ குறித்த உரை. விட்டல்ராவ் எடுத்த புகைப்படங்களுடனான காணொளியுடன் கூடிய நிகழ்ச்சி. முன்பே அவருடைய நாவல்கள் ‘போக்கிடம்’, ‘வண்ண முகங்கள்’ இரண்டையும் வாசித்திருந்தேன். ஆனால் அன்றைய நிகழ்ச்சியில் அவருடைய இன்னொரு பக்கத்தையும் அறிய முடிந்தது. தமிழகத்திலுள்ள பல்வேறு கோட்டைகளுக்குச் சென்று அவற்றைக் குறித்து எழுதிய அவரது ஆர்வமும் தகவல்களை சொன்ன விதமும் அவரை நெருங்கச் செய்தது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரது பிற நாவல்கள், சிறுகதைகளைத் தேடியெடுத்து வாசித்தேன்.

சில வருடங்களுக்கு முன்பு, இதே அரங்கில் நடைபெற்ற ‘பாவண்ணனைக் கொண்டாடுவோம்’ நிகழ்ச்சியின்போது மீண்டும் அவரைச் சந்திக்க வாய்த்தது. ஒரே அறையில் தங்க நேர்ந்தது. நிறைய உரையாடுவதற்கான சந்தர்ப்பம். எழுத்தைத் தவிர பிற துறைகளில் அவரது ஆர்வம் குறித்து நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது.

அவர் எழுத்தாளர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. 10 நாவல்கள், 5 தொகுதிகளாக 140 சிறுகதைகள், வெவ்வேறு துறை சார்ந்த 12 கட்டுரை நூல்கள் என்று கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக அழுத்தமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்.

 

விட்டல்ராவ் ஒரு ஓவியர். சென்னை கவின் கலைக் கல்லூரியில் முறையாகப் பயின்றவர். அவரது ஓவியங்கள் பல்வேறு கண்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன. எனவே, தனது புனைவுகள் கட்டுரைகள் என சந்தர்ப்பம் வாய்க்கும் இடங்களிலெல்லாம் ஓவியங்களைக் குறித்து அவர் குறிப்பிடத் தவறுவதில்லை.

அண்மையில் சென்னை கோட்டை அருங்காட்சியகத்துக்கு சென்றேன். பிரிட்டிஷ் ஆட்சியின்போது இங்கிலாந்திலிருந்து வந்து இந்தியாவை ஓவியமாக வரைந்தவர்களில் முக்கியமானவர்கள் தாமஸ் டேனியலும் வில்லியம் டேனியலும். தமிழகத்திலுள்ள பல முக்கிய இடங்களை அவர்கள் ஓவியமாக வரைந்துள்ளனர். சென்னை கோட்டை, திருச்சி மலைக்கோட்டை, தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம், ராயக்கோட்டை, சேலம் சங்ககிரி கோட்டைகள், மதுரை நாயக்கர் மகால் என்று பல இடங்களுக்கு சென்று ஓவியங்களை வரைந்துள்ளனர். அந்த ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் உள்ளன. இவர்களைப் பற்றியும் இவர்கள் தங்கள் படங்களை அச்சிடப் பயன்படுத்திய நுட்பம் பற்றியும் ‘தமிழகக் கோட்டைகள்’ நூலில் மிக விரிவாக எழுதியிருக்கிறார்.

அதேபோல சேலத்தைச் சேர்ந்த நவீன ஓவியரான கே.எம்.கோபால் வரைந்த ‘அர்த்தகணேஸ்வரி’ என்ற தாந்திரீக உலோகப் புடைப்பு படைப்பை குறித்து எழுதியுள்ள குறிப்பு மிக முக்கியமானது.

ஒருமுறை, சென்னை அண்ணா சாலையில், அப்போது மவுண்ட் ரோடு, அலங்கார் தியேட்டருக்கு அருகில் நடைபாதையில் இருந்த பழைய புத்தகக் கடையில் வழக்கம்போல பேரம் பேசிக்கொண்டிருக்கிறார். புத்தகக் கடை வைத்திருந்த வாய் பேச முடியாதவர் ஆவேசமாகக் கைகளை அசைத்து தியேட்டர் பக்கமாய் பார்க்கும்படி சொல்கிறார். தியேட்டர் வாசலில் கமலஹாசனின் பெரிய கட் அவுட். கீழே பிரமாண்டமான பேனர். இந்த இரண்டையும் பார்த்து ஓவியர் ஒருவர் தன் குறிப்பேட்டில் என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறார். வரைகிறார. நடைபாதை ஓரத்தில் உள்ள சிமெண்ட் ஜாலியில் சாய்ந்தபடி வரைவதும் எழுதுவதுமாக இருக்கிறார். அடர்ந்த நரைமுடி, தாடி மீசை, இறுக்கமான ஜீன்ஸ். பகல் பனினொன்றரை மணிக்கு சாலை பரபரப்பாக இருக்க இவர் எதையும் யாரையும் கண்டுகொள்ளாமல் காரியத்திலே கண்ணாக இருக்கிறார். அவரையும் வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர் தன் வேலையை முடிக்கும் வரை அருகில் சென்று கவனிக்கிறார் விட்டல்ராவ். வேலை முடிந்தவுடன் பேச்சு கொடுக்கிறார் “மிஸ்டர் ஹூசைன்?” அவர் நிமிர்ந்து பார்த்து “ஆமாம். நான்தான். என்னை உங்களுக்குத் தெரியுமா?” உற்சாகத்துடன் பேச்சு நீள்கிறது. வேறு தியேட்டர்களுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்கிறார். அங்குள்ள பேனர்களைப் பார்த்து குறிப்பேட்டில் வரைந்து கொள்கிறார். பிறகு ஒரு ரிக்ஷாவில் ஏறி விடைபெறுகிறார். இந்தியாவின் புகழ்பெற்ற எம்.எஃப்.ஹூசைன் சென்னை மவுண்ட் ரோடில் ஓவியம் வரைந்த நாள் அது.

ஓவியம் குறித்து பேசும்போது இன்னொரு செய்தியையும் அறிய முடிந்தது. கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஒரு ஓவியரும்கூட. தான் வரைந்த நீர்வண்ண ஓவியங்களை பொங்கல் பண்டிகையின்போது தன் வீட்டில் அவர் காட்சியாக வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. அத்தோடு அவர் வீணை வாசிப்பதிலும் தேர்ச்சி மிக்கவர் என்றொரு செய்தியும் உண்டு.

‘ஓவியக் கலை உலகில்’ என்ற அவரது புத்தகம் மிக முக்கியமானது, சிறப்பானதும்கூட. தமிழில் நவீன ஓவியங்கள் குறித்து எழுதப்பட்ட முதல் நூலாக இருக்கவேண்டும். இத்தாலிய மறுமலர்ச்சி காலம் தொடங்கி ஜென் புத்திச காலம் வரைக்குமான உலக அளவில் குறிப்பிடத்தக்க ஓவியர்கள், ஓவியங்களை அறிமுகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது இந்தப் புத்தகம். 1979இல் வெளியான இந்த நூலில் லியோனார்டா டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ, ரஃபேல், ரெம்ப்ரேண்ட், வெர்மிர் உள்ளிட்டோரைப் பற்றியும் அவர்களது முக்கியமான ஓவியங்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.

 

அவர் ஒரு புகைப்படக் கலைஞரும் கூட. இப்போதும் தோளில் கேமராவுடன்தான் பயணம் செல்கிறார். பழைய எஸ்.எல்.ஆர் கேமராவைக் கொண்டு எடுத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களை ஆல்பமாக தொகுத்து வைத்திருக்கிறார். பிறகு டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட படங்களையும் கோப்புகளில் சேமித்திருக்கிறார். அவரது கட்டுரைகளுக்கும் நூல்களுக்கும் இந்தப் படங்களே ஆதாரமாக அமைந்துள்ளன.

 

அத்துடன் விட்டல்ராவ் சினிமா ஆர்வலர். 75 வருட காலமாக சினிமா பார்த்து வருபவர். தமிழ், இந்திய, உலக சினிமாவைக் குறித்து அவருக்கு ஆழமான அனுபவமும் அறிவும் உண்டு. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் தொடக்க காலம் முதல் இன்று வரையிலான பயணம் என்றே கூறலாம். சேலம் மாடர்ன் தியேட்டர் உருவான காலத்திலிருந்து இன்று வரை சினிமாவுடனே அவரது காலமும் தொடர்கிறது. தன்னுடைய நான்கு வயதில், புகலூரில் துணிக் கூடாரத்தில் (டென்ட்) ‘கண்ணகி’ படத்தை பார்ப்பதில் தொடங்கியுள்ளது அவரது சினிமா அனுபவம். கூடாரம், ஓலைக் கொட்டாய், பழைய பாணி தியேட்டர்கள், நவீன ரக தியேட்டர்கள். திரைப்படச் சங்கங்கள், அயலக தூதரக திரை விழாக்கள், ஃபிலிம் பெஸ்டிவல்கள் என்று திரைப்படங்களைக் காணும் சாத்தியங்கள் உள்ள எல்லா வழிகளிலும் அவர் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறார்.  அன்று தியேட்டர்களில் பார்க்கக் கிடைத்த அமெரிக்க, ஐரோப்பிய படங்களும் அவற்றைக் குறித்து வெளிநாட்டு இதழ்களில் வாசிக்க நேர்ந்த கட்டுரைகளும் புத்தகங்களும் அயல்நாட்டு சினிமா குறித்த அவரது பார்வைக்குக் காரணங்களாய் அமைந்துள்ளன.

அதேபோல, இந்திய சினிமாவையும் அவர் தொடர்ந்து கவனித்திருக்கிறார். மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, பெங்காலி படங்களைக் குறித்தும் அவ்வப்போது எழுதியிருக்கிறார். நடிகர்கள் மட்டுமல்லாது தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார்.

கன்னட சினிமாவைக் குறித்து அவர் எழுதிய நூல் ‘நவீன கன்னட சினிமா’. கன்னட திரையுலகில் புதிய அலையை உருவாக்கிய எட்டு இயக்குநர்களைப் பற்றிய நூல். கிரீஷ் கர்னாட், எம்.எஸ்.சத்யு, ஜி.வி.ஐயர், நாக் சகோதரர்கள், பி.வி.காரந்த், பட்டாபி ராம ரெட்டி, புட்டண்ண கனகல், கிரீஷ் காசரவள்ளி ஆகியோரது படங்கள் கன்னடத் திரையுலகில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தின என்று விரிவாக அலசிய நூல். கன்னட சினிமா குறித்து எழுதப்பட்ட முதல் புத்தகமும் அதுவே.  அண்மையில் நல்லதம்பி அவர்களால் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

‘சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும்’, ‘தமிழ் சினிமாவின் பரிணாமங்கள்’, ‘நவீன கன்னட சினிமா’, ‘பயாஸ்கோப்காரன்’ ( புக் டே இதழில் வெளியான தொடர் ) ஆகிய சினிமா குறித்த பிற புத்தகங்களும் முக்கியமானவை.

சினிமா நூல்களில் இவர் கதையையோ, சுருக்கத்தையோ மட்டும் எழுதுவதில்லை. சினிமா தொழில்நுட்பங்கள், இசை, ஒலிப்பதிவு, கேமரா கோணங்கள் என்று எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துக்கொண்டே அதன் சிறப்புகளை எழுதுகிறார்.

இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு, ஓவியத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு, இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆங்கில சினிமாக்கள் என்று பல கோணங்களிலும் திரைக் கலையை அவர் அணுகியுள்ளார்.

 

வரலாறு அவருக்கு பிடித்த இன்னொரு துறை. ஓவியம், கட்டடங்கள், கோயில்கள், சினிமா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் அவர் வரலாற்றுடன் தொடர்பு படுத்தியே பார்க்கிறார். ஆகவே, இயல்பாகவே வரலாறு குறித்த ஆர்வத்தையும் ஆழக் கற்கும் நோக்கையும் காண முடிகிறது. அவரது புனைவுகள், புனைவு அல்லாத எழுத்துகளிலிருந்து வரலாற்றை பிரிக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு அவரது எல்லா எழுத்துகளிலும் வரலாறு தவிர்க்க முடியாத செல்வாக்கை செலுத்திருயிருக்கிறது.  

‘தமிழகக் கோட்டைகள்’ தமிழில் வெளிவந்துள்ள முக்கியமான ஒரு நூல். நாமக்கல் தொட.ங்கி கிருஷ்ணகிரி, சங்ககிரி, ஒசூர், செஞ்சி என நகர்ந்து இறுதியில் சீரங்கப்பட்டணத்தில் முடிகிறது. சிறு வயதில் தொடங்கி வாழ்வின் பல்வேறு பருவங்களில் காண வாய்த்த கோட்டைகளையும் அவற்றை பார்த்த அனுபவங்களையும் மிகச் சுவையாக சித்தரித்திருக்கிறது. தொல்பொருள் துறை, ஆவணக் காப்பகம் போன்ற பல்வேறு இடங்களிலிருந்து பெற்ற தகவல்களை மட்டும் சொல்வதல்ல இது. ஒவ்வொரு கோட்டையுடனும் தொடர்பான அத்தனை சம்பவங்களையும் செவி வழிக் கதைகளையும் கட்டுமானத் தொழிற்நுட்பங்களையும் இணைத்து சொல்லியிருக்கும் விதம் மிக முக்கியமானது. இந்த நூலை நாம் ஒரு புனைவு இலக்கியத்தைப் படிக்கும் ஆர்வத்துடனும் சுவையுடனுமே வாசிக்க முடியும். இந்த வகையில் தமிழில் இதுபோல இன்னொரு நூல் இல்லை.

 

இதற்கு இணையான இன்னொரு நூல் ‘வாழ்வில் சில உன்னதங்கள்’. சென்னையில் மூர் மார்கெட் என்ற இடம் இருந்தது என்பதே இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. அப்பா அம்மாவைத் தவிர எல்லாவற்றையும் வாங்க முடியும் என்று சொல்லுவார்கள். 1900ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு 1985ஆம் ஆண்டு தீக்கிரையானது. இந்தோசார்சனிக் பாணியில் கட்டப்பட்ட மூர் மார்கெட் பழைய புத்தகங்கள், இசைத்தட்டுகள், பழம்பொருட்கள் ஆகியனவற்றை கொண்ட முக்கியமான ‘குஜிலி’ அங்காடியாக விளங்கியுள்ளது. அங்கிருந்த பழைய புத்தகக் கடைகளைப் பற்றி, முருகேசன், நாய்க்கர், ஐரே போன்ற வியாபாரிகளைப் பற்றியும் வியாபார நடவடிக்கைகள் குறித்தும் விட்டல் ராவ் எழுதியுள்ள குறிப்புகள் பெருமதி மிக்கவை.  

சென்னையில் மூர் மார்கெட்டிலும் பிற இடங்களிலும் இருந்த பழைய புத்தகக் கடைக்காரர்களைப் பற்றிய குறிப்புகள் சுவாரஸ்யம் மிகுந்தவை. ஒவ்வொருவரும் துல்லியமான கதாபாத்திரங்கள். மயிலாப்பூர் ஆழ்வார், மவுண்ட் ரோடு தர்கா அருகிலிருந்த அப்துல் கரீம் பாய், முர்ரேஸ் கேட் சாலை மூர்த்தி, மயிலாப்பூர் லஸ் மூலை முருகேசன், பாரத் இன்சூரன்ஸ் கட்டடம் நடைபதை ஊமையன் என்று ஒவ்வொருவருடனும் விட்டல்ராவுக்கு ஆழமான நட்பு இருந்துள்ளது.  

பழைய புத்தகக் கடைகளில் அவர் சேகரித்திருக்கும் பல்வேறு அயல்நாட்டு இதழ்களின் பட்டியல் மலைக்க வைக்கிறது. தேடித் தேடி சேகரித்திருக்கிறார். சேகரித்தது மட்டுமல்ல, ஒவ்வொரு இதழையும் கரைத்துக் குடித்திருக்கிறார்.

தமிழின் முன்னணி இதழ்களுக்கு மாதிரியாய் அமைந்த அமெரிக்க வார இதழ் கோலியர்ஸ், ( ஒரு பக்க கதைகள் ) த சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்,  டைம், லைஃப், ஸ்பேன், பிளேபாய், இல்லஸ்ட்ரேட் வீக்லி, சோவியத் லிட்டரேச்சர், ஏரியல் ( இஸ்ரேல் ), ஓப்சர் ( பல்கேரியா ), என்கவுண்டர் ( லண்டன் ), இம்பிரிண்ட் ஆகிய இதழ்களை தேடித் தேடி சேகரித்துப் பாதுகாத்த கதைகளை இன்றைக்கு வாசிக்கும்போது வியப்பாக உள்ளது. தொலைப்பேசி நிறுவனத்தில் வேலை என்பது ஒரு சாக்குதான். மற்றபடி இவர் இப்படி நடைபாதைகளிலும் பழைய புத்தகக் கடைகளிலுமே திரிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. 

குறிப்பிட்ட சில புத்தகங்களை, இதழ்களை கடைகளில் தேடி அலைந்த கதைகளை சுவைபடச் சொல்லியிருக்கிறார்.

ஸ்டான்லி ஓல்பிரெட் என்பவர் எழுதிய நாவல் ‘இராமனுக்கு ஒன்பது மணி நேரம்’ ( Nine hours to Rama ). காந்தியை கொல்வதற்கு முன்பு நாதுராம் கோட்ஸே மனதளவில் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் ஒன்பது மணி நேரமே இதன் களம். மார்க் ராப்சன் என்பவர் இதை திரைப்படமாக்கினார். பிளிட்ஸ் பத்திரிக்கையில் கே.ஏ.அப்பாஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதியதைத் தொடர்ந்து படமும் நாவலும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. இந்த நாவலை மூர் மார்கெட் நாயக்கர் கடையில் தற்செயலாகப் பார்க்கிறார். மிகுந்த ஆர்வத்துடன் ஒரு ரூபாய்க்கு வாங்கி பரபரப்புடன் படிக்கிறார். நாவல் அவரை கவரவில்லை. இதற்குப் போய் இத்தனை ஆர்ப்பாட்டமா என்று ஏமாற்றம். அவரது அலமாரியில் ஒதுங்குகிறது நாவல். அதே சமயத்தில் காந்தியின் மீது சினிமாக்காரர்களின் கவனம் குவிகிறது. பத்திரிகையாளர் நண்பர் ஒருவர் கட்டுரை எழுதுவதற்காக இவரிடமிருந்து இரண்டு காந்தி புத்தகங்களை இரவல் வாங்கிச் செல்கிறார். அதன் பிறகு காணாமல் போய்விடுகிறார். இரண்டில் ஒரு புத்தகம் மட்டுமே சிறிது காலம் கழித்து திரும்பி வருகிறது. தடைசெய்யப்பட்ட நாவல் ‘ராமனுக்கு ஒன்பது மணி நேரம்’ அத்துடன் கையைவிட்டுப் போய்விட்டது.

இந்த குறிப்புகளுக்கு நடுவே அழகான சிறு கதைகள் சில உண்டு. உதாரணமாக, பழைய புத்தகக் கடை பாய் திடீரென இறந்துவிட, அவருக்குத் தரவேண்டிய 25 ரூபாயை கொடுப்பதற்கென்று நண்பருடன் அவருடைய வீட்டைத் தேடிச் செல்கிறார். குடும்பத்தினரைச் சந்திக்கிறார். விடைபெறும்போது மூத்த மகனிடம் நூறு ரூபாயை எடுத்துத் தருகிறார்.

1900ஆம் ஆண்டில் கட்டப்பட்டு, 85 ஆண்டுகள் இருந்த மூர் மார்கெட் எரிந்து முடிந்த மறுநாள். ஒரு பழம் புத்தகக் கருவூலம், புத்தக அருங்காட்சியகம் தீக்கிரையானது. அதன் அடையாளமாக நின்ற சிவப்பு இந்தோசார்சானிக் கட்டடம் முழுக்க எரிந்துவிட்டது. வெளியே நின்று வேடிக்கை பார்த்தபடி விசாரிக்கிறார். புத்தகக் கடைகள் எதுவும் மிஞ்சவில்லை, எரிந்து நாசமாகிவிட்டன என்று சொல்கிறார்கள். முதலியார், ஐரே என்று ஒவ்வொரு கடையைப் பற்றியும் திரும்பத் திரும்பக் கேட்கிறார். பிறகு நாயக்கரைப் பற்றி விசாரிக்கிறார். ‘அவரு ஒரு மாதிரி ஆயிட்டாராம்.’ ‘ஒரு மாதிரி மென்டலாயிட்டாரு.’ நண்பர் கிருஷ்ணன் நாயக்கர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோயில் குளத்தை அடுத்துள்ள ஒரு தெருவில் வீடு. உள்ளே சாவு வீடு போல பேரமைதி. நாயக்கர் நாற்காலி ஒன்றில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். “வணக்கம்” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து திருதிருவென்று விழிக்கிறார். பிறகு பழையபடி எங்கோ வெற்றிடத்தை வெறிக்கிறார். “என்னைத் தெரியுதா?” கேட்கிறார். எந்த அசைவுமில்லை. தன் பெயரை இரண்டு முறை சொல்லிப் பார்க்கிறார். எந்த சலனமும் இல்லை. “எங்களையே அவருக்குத் தெரியலீங்க…” என்கிறார் அவரது மனைவி. அவர் இன்னும் வெறித்துப் பார்த்தபடியே தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறார்.   

எம்.கே.தியாகராஜ பாகவதரின் இறுதி நாட்கள். சேலத்தைச் சேர்ந்த எம்.ஏ.வி பிக்சர்ஸ் நிறுவனம் ‘சிவகாமி’ எனும் படத்தை தயாரிக்கிறது. எம்.கே.தியாகராஜ பாகவதர் கதாநாயகன். அதுவே அவரது இறுதித் திரைப்படமும். அப்போதே அவருக்கு கண்பார்வை போய்விட்டது. கருப்புக் கண்ணாடி அணிந்து சமாளித்திருக்கிறார். நிற்கவும் நடக்கவும் முடியாமல் தடியூன்றியிருக்கிறார். படத்திலும் அதே போன்று ஒரு கதாபாத்திரம். முன்புபோல அவரால் பாட முடியவில்லை. எனவே, பழைய இசைக் கோப்புகளிலிருந்து பாடல்களை எடுத்துச் சேர்த்துக் கொண்டனர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் எங்காவது அமர்ந்து எதையாவது பாடிக் கொண்டிருப்பார். ஒரு நாள், ஓடையின் மீது போடப்பட்ட சிறு மோரி மீது, தாடியும் மீசையும் கருப்புக் கண்ணாடியுமாய் ஜிப்பா வேட்டியில் மெலிந்த பெரியவர் ஒருவர் மங்கிய குரலில் பாடிக் கொண்டிருக்கிறார். ஆட்கள் சிலர் நின்று வேடிக்கைப் பார்த்தபடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யார் என்று கேட்கும்போது அவர்களில் ஒருவர் சொல்கிறார் “பாகவதர்.”

இந்த சம்பவங்களையெல்லாம் விட்டல்ராவ் சில வரிகளில்தான் சொல்லியிருக்கிறார். ஆனால், வலுவான சிறுகதைகளுக்கான ஆழத்தையும் உணர்ச்சி மோதல்களையும் கொண்டுள்ளன.

அண்மையில் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சி 48வது கண்காட்சி. 47 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி அது தொடங்கியது என்பது மிக சுவாரஸ்யமானது. முதல் சென்னை புத்தகக் கண்காட்சி. 1977 டிசம்பரில் தமிழ்நாடு வெள்ள நிவாரணத்துக்காக சென்னை புத்தகக் கண்காட்சி, காயிதே மில்லத் கலைக் கல்லூரியில் நடத்தப்பட்டது. கல்லூரியின் வகுப்பறைகளில் புத்தகங்கள் காட்சிப் படுத்தப்பட்டன. இரண்டு மூன்று வகுப்பறைகள், பழைய புத்தகங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் தான் வாங்கிய புத்தகங்களை பட்டியலிட்டிருக்கிறார்.

 

அத்துடன், விட்டல்ராவ் ஒரு சினிமா பின்னணிப் பாடகரும்கூட. ஆமாம், சினிமாவில் ஒரு பாடலில் அவரது குரல் ஒலித்திருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘மகேஸ்வரி’ படத்தில் ஏ.எம்.ராஜா, ஜிக்கி ஆகியோருடன் பாடியிருக்கிறார். ஜி.ராமநாதன் இசையமைத்த இந்தப் படத்தில் விட்டல்ராவின் இசை ஆசிரியரான மரி ஜோசப் சேர்ந்திசை பாடச் சென்றிருக்கிறார். அப்போது இன்னொரு குரலும் தேவைப்பட, அப்போது பள்ளியில் பாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பிடித்து பரிசு பெறுகிற விட்டல்ராவையும் அழைத்துச் சென்றிருக்கிறார். பாடலில் அவரது குரலும் பதிவாகியுள்ளது. அதற்கு சம்பளமாய் ஐந்து ரூபாயும் மட்டன் பிரியாணியும் கிடைத்திருக்கிறது-

 

‘தொலைபேசி நாட்கள்’ என்ற நூல்ல் சென்னையில் தொலைபேசி உருவான வரலாறு, அத்துறையில் பணியில் சந்தித்த மனிதர்களின் சித்திரங்கள் ஆகியனவற்றை சுவைபட எழுதியுள்ளார்.        

 

‘பேசும் புதிய சக்தி’ மாத இதழில் எழுதிய ‘கலையும் காலமும்’ மிக விரிவான முக்கியமான ஒன்று. குகை ஓவியங்கள் தொடங்கி நவீன கட்டடக் கலை வரையிலுமான பரிணாம வளர்ச்சியைப் பற்றியது. சுவரோவியம், சுடுமண் சிற்பம், கற்றளிகள், குகைக் கோயில்கள், சுதைச் சிற்பங்கள் ஆகியவை உருவாகி வளர்ந்த விதத்தை ஹம்பி, மாமல்லபுரம் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் எழுதியிருக்கிறார்.

‘கலை இலக்கிய சங்கதிகள்’ கட்டுரைத் தொகுப்பில் சென்னையில் இருந்த நாட்களில் தான் சந்தித்த முக்கியமான ஆளுமைகளுடனான அனுபவங்களை விவரித்திருக்கிறார். அந்த காலத்தில் ஆனந்த விகடன் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் ‘நடைபாதை’. அதை எழுதியவர் இதயன். பிழைப்புக்காக பம்பாய் சென்று அங்கு நடைபாதை கடை நடத்தியிருக்கிறார். பின்பு அது ஒரு கலவரத்தின்போது சூறையாடப்பட்டிருக்கிறது. அந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது அந்த நாவல். பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியை குறித்த ‘கிராண்ட்  ரோடு’ எனும் இன்னொரு நாவலும் உண்டு. திருமணம் செய்து கொள்ளாத அவர் இசை ரசிகராகவும் இருந்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் தன் எழுத்தை யாருமே அங்கீகரிக்கவில்லை என்று பிளேடால் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறார்.

 

விட்டல் ராவ் அவர்களின் பெங்களூர் வீட்டில் இன்றும் ஒரு பழைய சைக்கிளை வைத்திருக்கிறார். தொலைபேசி இலாகாவில் சேர்ந்த சமயத்தில், சைக்கிளுக்கென தரப்பட்ட கடன் தொகையைக் கொண்டு அதே இலாகாவில் வேலை செய்த ஒருவரிடமிருந்து பழைய சைக்கிளை விலைக்கு வாங்கியிருக்கிறார். நாட்டிங்ஹாமில் உருவாக்கப்பட்ட ராலி சைக்கிள். கியர்கள் கொண்டது. ஆனால், அதற்கான உதிரிப் பாகங்கள் சென்னையில் கிடைக்காது. அது தெரிந்துதான் அதை விற்றிருக்கிறார். ஆனால், விட்டல்ராவ் அந்த சைக்கிளைக் கடைசி வரையிலும் விடாமல், பணி ஓய்வு பெற்று பெங்களூர் செல்லும்போதுகூட அதை தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கிறார். பெங்களூரில் சில நாட்கள் ஓட்ட முயன்று முடியாமல், இருக்கட்டும் என்று அப்படியே வைத்திருக்கிறார். அவரது சென்னை வாழ்க்கையின் குறியீடு, நினைவுச் சின்னம் என்று அதை வைத்துக் கொள்ளலாம். நாட்டிங்ஹாமில் தயாரிக்கப்பட்ட அந்த சைக்கிளுக்கு ஒரு ‘ஆண்டிக்’ தன்மை உண்டு. விலைமதிக்க முடியாத பழமையைக் கொண்டது. விட்டல்ராவ் அவர்கள் சேகரித்து வைத்திருக்கிற நினைவுகளும் தகவல்களும் சம்பவங்களும் அத்தகைய பொருண்மையும் பழமையும் மிக்கவை. சைக்கிளைத் தூக்கிப் போட முடியாதது போலவே அவரால் தன் நினைவுகளையும் தூக்கிப் போட முடியாது. அதே சமயம் அந்த சைக்கிள்தான் அவருக்கு உற்சாகமூட்டும் ஊக்கியாகவும் நின்றுகொண்டிருக்கிறது.

 

1942ஆம் ஆண்டு பிறந்தவர். 1967ஆம் ஆண்டு அவரது முதல் சிறுகதை வெளியாகிறது. அறுபது ஆண்டு கால இலக்கிய வாழ்க்கை. இன்னும் அவர் ஓய்ந்துவிடவில்லை. எழுதிக் கொண்டிருக்கிறார். எழுத்துடன் நுண்கலைகள் சார்ந்த அவரது அக்கறை பிற எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான அம்சம். வேறொரு எழுத்தாளர் இத்தனைத் துறைகளில் பங்களிக்கவில்லை.

அவரை நெருங்குந்தோறும் எனக்கு இப்போதும் வியப்பைத் தருவது, ஒரு மனிதரால் எப்படி இத்தனை காரியங்களிலும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் ஈடுபட முடியும்? அவர் எடுத்துக்கொண்ட எல்லா வேலைகளிலும் தீவிர ஈடுபாட்டை காணமுடியும். கேட்கிறார்களே என்று எந்த வேலையையும் சாதாரணமாக செய்வதில்லை. ஒரு சிறுவனின் வற்றாத ஆற்றலும் ஆர்வமும் உற்சாகமும் ஈடுபாடும் அவரிடம் எப்போதும் உண்டு. அதுவே அவரை சலிப்பில்லாமல் கசப்பில்லாமல் தொடர்ந்து செயல்படச் செய்கிறது.

அண்மையில் பாவண்ணனுக்கு அளித்த பேட்டி ஒன்றில், முப்பது சிறுகதைகளுக்கான குறிப்புகள், மூன்று நாவல்கள் எழுதும் திட்டமும் உள்ளது என்று கூறியிருந்தார்.

அங்கீகாரங்கள், விருதுகள், பரிசுகள் பற்றிய எதிர்பார்ப்போ ஆசையோ கவலையோ இல்லாமல், எனவே பொறாமையும் வயிற்றெரிச்சலும் இல்லாமல் ஆரோக்கியமாக தன் காரியங்களில் ஈடுபட முடிகிறது. அவரிடம் நான் கற்றுக் கொள்வதும் பெற்றுக் கொள்வதும் இந்த வற்றாத ஆர்வத்தையும் எதையும் எதிர்பார்க்காது செயலூக்கத்தை தக்கவைத்துக் கொள்வதையும்தான். அந்த வகையில் என்னுடைய ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.

 

ஓசூரில் கெனில்வர்த் கேசில் என்றொரு மாளிகை 1864ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள கெனில்வர்த் கேசில் அமைப்பிலேயே அது பெங்களூர் சாலையில் கட்டப்பட்டது. இதைக் கட்ட ஏற்பாடு செய்தவர் அப்போது சேலம் மாவட்டத்தின் கலெக்டராக இருந்த பிரெட்.. இங்கிலாந்தில் அவர் திருமணம் செய்ய நிச்சயித்திருந்த பெண், இந்தியாவில் கெனில்வர்த் கேசில் போன்ற மாளிகை இருந்தால் தான் வருவேன் என்று சொன்னதை நிறைவேற்றும் பொருட்டு தன் சேமிப்புப் பணத்தையும் போட்டு கட்டினார். கதவு ஜன்னல்களுக்கு பர்மா தேக்கும், தரையில் பீங்கான் ஓடுகளும் பதிக்கப்பட்டன. ஆனால், பிரெட்டின் துரதிர்ஷ்டம் நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண் இன்னொருவனின் மேல் மையல் கொண்டு இவரை நிராகரித்துவிட்டாள். இதையறிந்த பிரெட் மனமுடைந்து துப்பாக்கியில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அதே மாளிகையில் அவரை புதைத்து சமாதி எழுப்பப்பட்டது.

தனது 53வது வயதில் மீண்டும் ஓசூருக்குப் போகிறார் விட்டல்ராவ். ஊர் முழுக்கவே மாறிப் போயிருக்கிறது. பஸ் நிலையத்தில் ஒரு பழக்கடையில் விசாரிக்கிறார் ‘கெனில்வர்த் கேசிலுக்கு எப்படிப் போகவேண்டும்?’

அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

அருகில் இருந்த தபால் ஆபிசுக்குப் போய் விசாரிக்கிறார். அவர்கள் கதவு எண், எந்த தெரு, என்ன அடையாளம், பின்கோடு என்ன என்று கேள்வி கேட்கிறார்கள்.

“ஜூஜூவாடி ஏரிக் கரையில, கோட்டை பக்கத்துல…” என்று அடையாளம் சொல்ல முயல, அங்கிருந்த பெண் கூறுகிறாள் “ஜூஜூவாடி ஏரியே இப்ப இல்ல. அதுமேல தான் இப்ப தொழிற்பேட்டையே நிக்குது. கோட்டையல்லாம் இப்ப கெடையாது.”

வெளியே வரும்போது ஊழியர்கள் பேசிக்கொள்கிறார்கள் “பாவம், எதையோ நெனச்சிட்டு, எதையோ தேடிட்டு, இந்த வயசுல பைத்தியக்காரத்தனமா…”

வேறு வழியில்லாமல் காவல் நிலையத்துக்குள் போகிறார். கோட்டையைப் பற்றியும் மாளிகையைப் பற்றியும் கேட்கிறார்.

அங்கிருந்த காவலர் கேட்கிறார் “என்னவாச்சும் காணாம போயிருச்சா?”

“இல்லீங்க. அது வெள்ளைக்கார மாளிகை.”

“அய்யா, இது போலீஸ் ஸ்டேஷன். கம்ப்ளெய்ண்ட் எதாவது குடுக்கணுமா?”

“இல்ல அந்த மாளிகையைப் பாக்கணும்?”

“எந்த மாளிகை?”

“கெனில்வர்த்”

“யாராவது வெள்ளைக் கார துரையா?”

“இல்லை. துரை கட்டின மாளிகை.”

“அதெல்லாம் தெரியாது. வேற யாருகிட்டயாவது கேளுங்க.”

ஒரு வழியாக முட்டிமோதி கோட்டையை அடைகிறார். பாழடைந்த கோட்டை. அகழிகள் பெரும் பள்ளங்களாக மட்டும் எஞ்சியிருக்கின்றன. கோட்டையின் எஞ்சிய பகுதிகளையும் ஒரு புல்டோசர் இடித்துத் தள்ளுகிறது. எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. ஒரு காலத்தில் ஒசூரின் அடையாளமாக இருந்த கோட்டையும் கெனில்வர்த் மாளிகையும் ஜுஜுவாடி ஏரியும் இப்போது காணாமல் போயிருந்தது.

ஒரு காலத்தில் ஓசூரின் அடையாளமாக விளங்கிய கோட்டை, மாளிகையைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

மாநில அரசின் அருங்காட்சியகங்களில் உடைந்த சிற்பங்களும் நடுகற்களுமே உள்ளன. பாராமஹால் கோட்டைகள், மாளிகைகள் குறித்த குறிப்புகளோ புகைப்படமோ எங்கும் இல்லை. விசாரித்தாலும் பயனில்லை. யாருக்கும் எதுவும் தெரிவதில்லை.

வரலாறு, வரலாற்றுச் சின்னங்களின் மீது நாம் காட்டுகிற அக்கறையின்மைக்கும் அலட்சியத்துக்கும் உதாரணம் இது.

 

இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டிப் பார்க்கும்போது அவர் தன் எழுத்தின் வழியாக சேகரித்து வைத்திருக்கும் தகவல்கள் பெருமதிப்புமிக்கவை. சமூக நோக்கிலும் இலக்கிய நோக்கிலும், இத்தகவல்கள் ஒவ்வொன்றும் நமக்கும் அடுத்த தலைமுறைக்கும் மிக அவசியமானவை. வேறு எந்த ஆவணங்களின் வழியாகவும் இவற்றை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட ‘டிஸ்டிரிக்ட் மானுவல்’ என்ற தகவல் தொகுப்பு முறை இப்போது பயன்பாட்டில் இல்லை. யாருக்கும் அதைப் பற்றிய அக்கறை இல்லை. நிலம், மக்கள், பண்பாடு, பழக்கவழக்கம், வாழ்க்கை முறை சார்ந்த இத்தகவல்களே மானுட வரலாற்றின் ஆதாரங்கள். காலப்போக்கில் இவை பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பத்தினாலும், உலகமயமாக்கலின் காரணமாகவும் நம் அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கணிசமானவை. மிக வேகமானவையும்கூட. ஒவ்வொரு நாளும் புதிய மாற்றங்கள் தொடர்ந்து வெகு வேகமாக நிகழ்கின்றன. திரும்பிப் பார்க்கும்போது பல விஷயங்கள் காணாமல் போயிருப்பதையும் மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதையும் உணரலாம். சென்னை, சேலம் ஆகிய நகரங்களை குறித்த அடிப்படைத் தகவல்களை யாரும் பெற வேண்டுமெனில் விட்டல்ராவின் நூல்களே உதவ முடியும். கூடவே, சென்னை பெருநகரம் சார்ந்த பல அவசியமான முக்கியமான தகவல்களும் அவரது நாவல்களிலும் நூல்களிலுமே இடம் பெற்றுள்ளன.

டானியல்களின் ஓவியங்களின் பாதையில் இவர் கோட்டைகளுக்கு பயணம் செய்ததுபோல விட்டல்ராவின் நூல்களிலுள்ள குறிப்புகளை வைத்துக் கொண்டு யாரேனும் சென்னையிலும் சேலம், நாமக்கல், ஓசூர் பகுதிகளிலும் பயணம் செய்வார்கள் என்றால் அவருக்கு பெரும் அனுபவங்கள் காத்திருக்கின்றன.

ஒரு தனி மனிதராக தன் வாழ்நாள் முழுக்க பெருமதிமிக்க வரலாற்றுத் தகவல்களை, குறிப்புகளை, சம்பவங்களை சேகரித்து தனது எழுத்துகளில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் விட்டல்ராவ். வேறு எந்த நோக்கமும் இல்லாமல் தனது ஆர்வத்தின் காரணமாக மட்டும், சொந்தப் பணத்தை செலவு செய்து இந்த அரும்பணியை செய்திருக்கிறார்.

விட்டல்ராவ் போன்ற அபூர்வமான இந்த மனிதர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்பது பெரிய கேள்விக்குறி. இன்று இங்கு வழங்கப்பட்டுள்ள ‘விளக்கு’ விருதின் மூலமாக அவர்மீதும் அவரது அளப்பரிய பங்களிப்புகளின் மீதும் வெளிச்சம் விழுமாயின் அதுவே அந்த நன்றிக்கடனின் சிறு பகுதியாக இருக்கும் என்று நம்புகிறேன்.  

0

( சென்னையில் 18,01,2025 சனிக்கிழமை மாலை கவிக்கோ அரங்கில் நிகழ்ந்த விளக்கு விருது விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் )

 

Thursday, 19 March 2026

இலட்சியவாதத்தின் எஞ்சும் நிழல்கள் - நிழல்கள் மாறும் நொடி • விவேக் ஷான்பாக்

 

 



0

‘காச்சர் கோச்சர்’ நாவல் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. அதன் மூலமாக விவேக் ஷான்பாக்கும் தமிழில் பிரபலமடைந்துள்ளார். இந்த நாவல் இன்னொரு வகையிலும் முக்கியமானது. இன்று கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்துக்கும் தீவிரமாகவும் பரவலாகவும் மொழியாக்கம் செய்துவரும் கே.நல்லதம்பி தமிழில் மொழிபெயர்த்த முதல் நாவல் ‘காச்சர் கோச்சர்’.

0

‘ஊரு பங்கா’ என்ற தலைப்பில் 2015ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியானது இந்த நாவல். ‘காச்சர் கோச்சர்’ நாவலைப் போலவே பெங்களூரையும், நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் களமாகக் கொண்டிருக்கிறது.

ஐந்து படலங்களைக் கொண்ட இந்த நாவல் வாழ்க்கையைக் குறித்த இரண்டு தலைமுறைகளின் அணுகுமுறையை நுட்பமாக விவாதித்திருக்கிறது.

இலட்சியவாதமே வாழ்வென கொண்டிருந்த ஒரு தலைமுறையே மதிப்பீடுகளை உருவாகிக் கொடுத்திருக்கிறது. சுமுகமான சமூக வாழ்வுக்கான அடிப்படைகளை வகுத்துத் தந்திருக்கிறது. அதற்காக கடுமையான தடைகளையும் சிக்கல்களையும் கடந்து வந்திருக்கிறார்கள் இலட்சியவாதிகள். வாழ்க்கையையே பணயம் வைத்திருக்கிறார்கள். ஆனால், லட்சியத்தை எட்டிய பிறகான சூழலில் அவர்கள் பலசமயங்களில் தேவைப்படுவதில்லை. பொருந்திப்போக முடியாதவர்களாய், யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களாய் ஒதுக்கப்படுகிறார்கள். தங்களது இடம் என்ன என்று தெரியாமல் போகும்போது அவர்கள் பிறரது கேலிக்கும் கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகிறார்கள். வரலாற்றில் அவர்களது இடம் முக்கியமானது. ஆனால், நடைமுறை சமூகத்துக்கு அவர்கள் தேவைப்படாதவர்கள். இலட்சியவாதத்தின் கோட்பாடுகளும் யதார்த்தத்தின் அனுசரித்தலுக்குமான பலப்பரீட்சையில் எப்போதும் கைதணிந்து ஓய்வது இலட்சியவாதமே என்பது வரலாற்றுத் துயரம். இத் துயரத்தின் அடித்தளத்தில் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யக்கோரும் இன்றைய நவீன நடைமுறை வாழ்வை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது இந்த நாவல்.

குடும்ப அமைப்பு பெரும் மறுபரிசீலனைக்கு உள்ளாகியிருக்கும் காலம் இது. இன்றைய புதிய தலைமுறையினர், ஜென் ஸீயினர், திருமண உறவு சார்ந்து முக்கியமான சில அடிப்படை கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பெங்களூர் போன்ற பெருநகர வாழ்வின் பின்னணியில் இந்தக் கேள்விகள் மேலும் தீவிரம் கொள்கின்றன. ஒரு நடுத்தர வயது ஆணுக்கும் இளம் பெண்ணுக்கும் இடையிலான உறவு இந்தப்  பின்னணியில் எப்படி பரிணாமம் கொள்கிறது, வளர்கிறது, முடிகிறது என்பது இந்த நாவலின் இன்னொரு முக்கியமான சரடு. 

 கிராமத்துப் பின்னணியைக் கொண்ட நடுத்தர வயது ஆணின் சிக்கல் ஒழுக்க மரபுகளாலான கயிறு அவன் கையை எப்போதும் பிணைத்திருப்பதுதான். ‘தெங்கனகேரி மகிமை’ என்று நாவலில் சுட்டப்பட்டிருக்கும் அந்தக் கயிறு, ஒரு இளம்பெண்ணின் வருகையால்,நட்பால், இருப்பால், உறவால் அறுபடுகிறது. மனைவி, பிள்ளை, கௌரவமான வேலை என்று சமூக அந்தஸ்துடன் வாழும் அவனுக்கு இளம்பெண்ணின் நெருக்கமும், இளமையும் தேவைப்படுகிறது. தயக்கங்களும் தடுமாற்றங்களும் இருந்தபோதும் அதற்காக அந்தக் கயிறைத் துண்டிக்காமல் இருக்க அவனால் முடிவதில்லை. ஒழுக்கம் சார்ந்த குழப்பத்துக்கும், ஒருவகை அச்சத்துக்கும், இளம் பெண்ணின் மீதான இச்சைக்குமிடையிலான அவனது ஊசலாட்டத்தில் பெண்ணுடலே வெல்கிறது. அவ்வளவாக பரிச்சயமில்லாமல் அறிமுகமான முதல் சந்திப்பிலேயே தன்னை பியர் குடிக்க அழைக்கும் பெண், அவனுள் ஊறிக்கிடக்கும் தெங்கனேரி மகிமையின் மீது முதல் கல்லை எறிகிறாள். பழக்கம் நெருக்கமாகி நட்பாகும்போது, அவளை வசீகரிக்கவென கிராமத்துக் கதைகளைச் சொல்கிறான். கிமானி வக்கீல், சுங்காபுரர், சந்து போன்ற லட்சியவாதிகள், புரட்சியாளர்கள் பற்றிய கதைகள் அவளைக் கவர்வதற்கான தூண்டில்களாக அமைகின்றன. ஒரு நாள் பிடித்தமான கதையைச் சொன்னதற்கு பரிசாக கன்னத்தில் முத்தம் தருகிறாள். தெங்கனேரி மகிமையின் மீது விழும் வலுவான இரண்டாவது கல் இது. கதைக்கு முத்தத்தைப் பரிசாகத் தந்தவள், அவன் எழுதும் கவிதைகளுக்கு தன்னையே பரிசாகத் தருகிறாள். தயக்கங்களுக்கும் தடுமாற்றங்களுக்கும் நடுவே துணிந்து இப்படியொரு சாகசத்தை மேற்கொண்ட நடுத்தர வயது மனிதருக்கு இதைத்தாண்டி அந்த உறவில் அடுத்த அடியை எடுத்து வைக்க பயம். வெளியே தெரிந்துவிடக்கூடாது என்கிற பதற்றம். ஆனால், இளம்பெண்ணுக்கு இது பிரச்சினையே இல்லை. இப்படி அவன் அஞ்சி நடுங்குவது அவளைச் சீண்டுகிறது. வெறுக்கச் செய்கிறது. அவனை உதறிச் செல்கிறாள். அதுவே நடுத்தர வயது குடும்பஸ்தனுக்கு பெரும் ஆசுவாசத்தை அளிக்கிறது.

மரபுக்கும் நவீனத்துக்குமான மோதல்களை பல்வேறு கதாபாத்திரங்களையும், தருணங்களையும் கொண்டு விவாதிக்கும் இந்த நாவல் ஒரு தரப்பில் லட்சியவாதம் யதார்த்த வாழ்வுடன் சமரசம் செய்து கொள்வதை பகடியாகவும் இன்னொரு பக்கம் பரிவுடனும் விவாதத்துக்கு உட்படுத்தியுள்ளது. கைது செய்யப்படவேண்டும் என்ற நோக்கத்துடன், நெருக்கடி நிலைக்கு எதிராக திறந்த மைதானத்தில் அரசுக்கு எதிராக உரத்த விமர்சனங்களை எழுப்பும் கிமானி வக்கீலை, ‘பைத்தியங்களுக்கெல்லாம் சிறையில் இடமில்லை’ என்ற காரணத்துக்காக கைது செய்யாமல் விட்டுவிடுகிறது காவல்துறை. ஆனால், அதே சமயம் சுங்காபுரத்தார் கைது செய்யப்பட்டாரா, என்றால் அதன் பிறகு என்ன ஆனார் என்பதைப் பற்றி எந்த விடையுமில்லை.

நாவலில் இணைச்சரடுகள் சிலவும் உள்ளன. அவை இந்த விவாதத்துக்கு மேலும் வலு சேர்க்கும் விதமான சில கேள்விகளையும் எழுப்புகின்றன. கதையின் நாயகனாக வார்க்கப்பட்டுள்ள மன்மோகன் ஒரு நிறுவனத்தின் தணிக்கை அதிகாரி. தன்னுடைய இரகசியமான உறவையும் தொழில்முறை அணுகுமுறையையும் அவன் இணைத்துப் பார்ப்பதை உதாரணமாகச் சுட்டலாம். நாவலின் இறுதிப் பகுதியில் மீண்டும் சந்துவைச் சந்தித்து மது விடுதியில் நிகழும் உரையாடல் இன்னொரு உதாரணம்.

காமத்தின் இச்சைக்கு போதுமென்ற மனம் கிடையாது, மேலும் மேலும் என்று வாய்ப்புகளைத் தேடியபடியே இருக்கும். முற்றிலுமாகத் துண்டித்துவிட்ட உறவை அல்ப ஆசை, நடுத்தர வயது மன்மோகனை வீட்டின் சுற்றுச் சுவர் தாண்டி மரத்தில் ஏறி வாசலில் நிற்கச் செய்கிறது. அங்கிருந்து அவனால் வந்த வழியில் மட்டுமே திரும்ப முடியும். அது சாத்தியமா? என்ற கேள்வியுடன் நாவல் முடிகிறது. சுவர் ஏறி அங்கிருந்து மரத்தில் தாவி உள்ளே குதித்தவனுக்கு வெளியே வரவும் தெரிய வேண்டுமல்லவா?

விவேக் ஷான்பாக் தன் புனைவுகளை வலுவான கதாபாத்திரங்களின் மூலமாகவே அடர்த்திப் பெறச் செய்வார். இந்த நாவலிலும் அபாரமான சில கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. கிமானி வக்கீல், மன்மோகன், ஷமி, சுங்காபுரர் போன்ற முதன்மை கதாபாத்திரங்களுக்கு நடுவே சிறிதும் பெரிதுமான அழுத்தமான கதாபாத்திரங்களும் தனித்தன்மையுடன் இடம் பெற்றுள்ளன. கிமானி வக்கீலின் அம்மா நீலாவதியும் சதானந்த ஆசிரியரின் மனைவி ரமாவையும் உதாரணமாக கவனிக்கலாம். 

நேரடியான, சீரான கதையாக அல்லாமல் கதைக்குள் கதை, கதையை மீறிய கதை போன்ற உத்திகளால் புனையப்பட்டிருந்தபோதும் இந்த நாவல் தான் எழுப்பும் கேள்வியை தெளிவாகவும் உரக்கவும் முன்வைத்திருக்கிறது. அதற்கான பதிலை யோசிக்க வேண்டிய இன்றைய தலைமுறை, சென்ற தலைமுறையினர் உருவாக்கி வைத்திருக்கிற மதிப்பீடுகளை ஒரு முறை திரும்பிப் பார்த்து பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என்ற பரிந்துரையையும் இந்த நாவல் செய்திருக்கிறது.

0

கே.நல்லதம்பியின் மொழியாக்கம் சீரான மொழிநடையுடன் இலகுவாக அமைந்திருப்பது நாவலை அணுக பெரிதும் உதவியுள்ளது. 2015ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் கன்னட இலக்கிய உலகிலும் பொது வெளியிலும் எந்தவிதமான வரவேற்பை, விமர்சனத்தைப் பெற்றது என்பது குறித்தும் ஒரு சிறிய முன்னுரையை எழுதியிருந்தால் நாவலை மேலும் புரிந்துகொள்ள துணைநிற்கும்.

0

நிழல்கள் மாறும் நொடி – விவேக் ஷான்பாக் – தமிழில் கே.நல்லதம்பி

ஸீரோ டிகிரி பதிப்பகம். அக்டோபர் 2025

புத்தனைத் தேடும் சித்தார்த்தன் - காந்த்ரூக் - சதீஷ் சப்பரிகே

 


0

பிறப்பு முதல் இறப்பு வரையிலான காலமே ஒரு மனிதனின் வாழ்க்கை. இந்த இரு எல்லைக்கும் உட்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை அறுதியிட்டு வரையறுக்கும் கருவிகளோ குறைந்தபட்ச அளவீடுகளோ இதுவரை உருவாகவில்லை. கல்வி, வேலை, தொழில், வியாபாரம், பொருளாதார நிலை, குடும்பம், உறவுகள், சமூக அந்தஸ்து, ஜாதி, பதவி, அதிகாரம், அரசியல் என்று தனிப்பட்ட முறையிலும் பொதுவான நிலையிலும் ஒரு மனிதனை வகைப்படுத்த எண்ணற்ற அளவுகோல்கள் இருந்தபோதும் இவற்றைக் கொண்டு ஒரு மனிதனின் வாழ்க்கையை அனைவரும் ஒப்புக்கொள்ளும்படி அளந்து, தகுதிப்படுத்துவது என்பது இயலாத ஒன்று. மேலும் இவை அனைத்துமே புறப் பார்வையிலிருந்து உருவாகியிருக்கும் அளவுகோல்களே. இவற்றுக்கு இணையாகவோ அல்லது மேலானதாகவோ குறிப்பிட்ட மனிதனின் அகத்துள் தனக்கேயான அளவுகோல்களும் தீர்மானங்களும் நிச்சயமாக இருக்கும். அவற்றைக் கொண்டு தன்னைத் தானே அவன் எவ்வாறு மதிப்பிடுகிறான் என்பதும் முக்கியம். ஆனால், பலசமயங்களில் தன் அக மதிப்பீடுகளை ஒருவன் வெளிப்படையாக எவரிடமும் எதன்பொருட்டும் முற்றிலுமாக திறந்து காட்டுவதில்லை.

தனிப்பட்ட வாழ்விலும் வியாபாரத்திலும் தோல்வியைச் சந்திக்க நேரும் இளைஞன் சித்தார்த்தன் ஹொசமனே அனைத்திலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டு, தன்னைத் தானே அறிந்துகொள்ளும் பொருட்டு இமயத்தில் கால்பதிக்கிறான். நவீன கணினித்துறையில் உலகையே வியக்க வைத்த ஒரு இளைஞன், யாருமே அடையாளம் காணாத ஒரு பிரதேசத்தில் தன்னிச்சையாக மலையேறுகிறான். கிட்டத்தட்ட ஒரு மாத காலப் பயணத்தில் அதுவரையிலான தன் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறான். இதுவரை என்ன நடந்தது, எதை சாதித்தேன், எதை இழந்தேன், இனி என்ன செய்யப் போகிறேன் என்று அசைபோட்டபடியே அந்தப் பயணத்தில் தற்காலிகமாக வாய்க்கும் நபர்களுக்கு நடுவே இமயத்தின் சவாலான மலையேற்றப் பாதையில் ஏறி இறங்குகிறான். 420 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலின் சுருக்கம் இதுதான்.

இது சித்தார்த்தனின் கதையாக மட்டும் நின்றிருந்தால் ஏற்கெனவே எழுதப்பட்ட இதுபோன்ற நாவல்களில் ஒன்றாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால், ‘காந்த்ருக்’ சித்தார்த்தனின் பயணத்தினூடே தன்னல நோக்குடனான ஒருவனின் வாழ்க்கையும் பொதுநல நோக்கு கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையும் எத்தகைய சவால்களை சந்திக்க நேர்கின்றன என்பதையும் இணைத்து விவாதித்துள்ளது. சமகால உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களின் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்முறைகளையும், அடக்குமுறைகளையும் அவற்றுக்கான காரண காரியங்களையும் அவற்றின் விளைவுகளைக் குறித்தும் தீவிரமாக அலசுகிறது. இந்த விவாதத்தின் மூலமாக தனிமனித வாழ்வுக்கும் உலகப் பொது வாழ்வுக்குமான கண்ணுக்குத் தெரியாத தொடர்பை, சமன்பாட்டைக் குறித்த ஆழ்ந்த சிந்தனைகளும் எழுகின்றன. தனிமனிதன் தன் லட்சியத்தை எட்டுவதும் எட்டாமலிருப்பதற்குமான தொலைவையும் சாத்தியத்தையும் நிர்ணயிப்பது உலகின் ஆற்றல்வாய்ந்த அதிகார வர்க்கத்தின் கொடுக்கல் வாங்கல் விளையாட்டுகளே என்பதையும் அழுத்தமாக விவரிக்கப்படுகிறது. அமைதி, நல்லிணக்கம், வளர்ச்சி, நல்லுறவு, சர்வதேச ஒப்பந்தம் போன்ற சொல்லாடல்களின் பின்னணியில் ஆயுத வியாபாரம், செயற்கையாக உருவாக்கப்படும் போர் நெருக்கடிகள், மதத்தின் பேரிலான பிரிவினைகள், போதைப் பொருட்களின் சர்வதேச வலைப்பின்னல், மனிதவளங்களைக் கொண்டு நடத்தப்படும் சூதாட்டங்கள் என்று அனைத்து சாத்தியங்களின் ஆழங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

உள்நாட்டுப்போர், இருநாடுகளுக்கு இடையிலான போர், இன ஒழிப்பு, இனத் தூய்மைவாதம், எண்ணெய் வளம், மனிதவளம் இவற்றின் பேரால் உலகெங்கும் உருவாக்கப்படும் அகதிகளைச் சுற்றி உலகெங்கும் உருவாகியிருக்கும் பெரும் அரசியலையும் அதன் பெயரிலான வியாபாரத்தையும் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையையும் இந்த நாவல் தெளிவாகப் பேசுகிறது. சிரியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் நடந்தேறும் வன்முறைகளை சுட்டிக் காட்டுகிறது. இவற்றின் பெயரால் எந்தநேரமும் எங்கும் பொங்கியோடும் இரத்த வெள்ளத்தை சாட்சியாகக் கொண்டு கேள்விகளை எழுப்புகிறது.  

வெற்றிகரமான ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கி உலகின் கவனத்தை ஈர்க்கும் இளம் தொழிலதிபர் சித்தார்த் ஹொசமனே தன் தந்தையை இழந்து, தன் திறமையால் உருவாக்கிய நிறுவனத்தையும் இழந்து அதனால் ஏற்படும் மன வெறுமையின் காரணமாக தனிமையைத் தேடி இமயமலைக்கு வருகிறான். அவனது உள்ளத்துக்குள் ஆயிரம் கேள்விகள். அதுவரையிலான தனக்கு வாய்த்த உறவுகள், நண்பர்கள், வியாபாரத் தொடர்புகள், பெண்கள், உல்லாசங்கள் என அனைத்தைக் குறித்தும் யோசித்தபடி தன்னையே தான் திரும்பிப் பார்த்தபடி தனித்து அலைகிறான். அமெரிக்காவின் பெரும் போதைப் பொருள் மாஃபியாவின் பேத்தி ஷோஃபியா, தனது வேர்களைத் துறந்து அதன் ரத்தக் கறையை அகற்றும் பொருட்டு, அகதிகள் நலவாழ்வுக்காகப் போராட விரும்பி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தின் அதிகாரியாக பதவியேற்கிறாள். பல்வேறு நாடுகளில் சந்திக்கும் வன்முறையையும் இரத்த வெள்ளத்தையும் பலிகளையும் கண்டு மனம் வெறுத்து பதவியைத் துறந்து இமயமலையில் ஒதுங்கி நிற்கிறாள். அவளுக்குள்ளும் ஆயிரம் கேள்விகள். உலகெங்கும் அகதிகளாய் தவித்து நிற்கும் குழந்தைகளின் நிலைமைக்கு யார் காரணம், அதற்கான நிவாரணம் என்ன என்ற ஆழமான கேள்வி அவளையும் அனைத்திலிருந்தும் விலகியிருக்கச் செய்கிறது. சித்தார்த்தும் ஷோஃபியாவும் மலையேற்றப் பாதையில் சந்திக்கும்போது அவர்களுக்குள் உள்ள கேள்விகளும் இணைந்துகொள்கின்றன. மோதுகின்றன. தனிமனிதனின் தோல்வியும், உலகப் பொதுமைக்கான லட்சியத்தின் தோல்வியும் ஒன்றையொன்று சந்திக்கின்றன. ஒன்றையொன்று பூர்த்தி செய்ய விழைகின்றன.

இவ்வாறான இருபெரும் துருவங்களுக்கு இடையில் மலையேற்றப் பாதையில் உள்ள சிறிதும் பெரிதுமான ஊர்களில் மலையேறுபவர்கள் பசியாறி, இளைப்பாறுவதற்காக உருவாகியுள்ள சிறிய விடுதிகளின் பொறுப்பாளர்களின் வாழ்க்கையும் இணைந்து கொள்கின்றன. எங்கெங்கோ உள்ள மனிதர்களின் சிறிதும் பெரிதுமான லட்சியங்கள் அனைத்தும் இமயத்தின் மடியில் சிகரத்தில் ஒன்றுமில்லாமல் ஆகி, வாழ்வின் அடுத்த கணம் என்ன என்கிற சின்னஞ்சிறு புள்ளியில் குவிந்து விடுகின்றன.

இயற்கையை விதிகளை மீறும் மனித முயற்சிகளே வளர்ச்சி என கருதப்படுகிறது. அதை நோக்கியே அறிவியல் துறைகள் தொடர்ந்து முன்னகர்கின்றன. ஆனால், இந்த முயற்சிகளின் பலனாக மேம்படும் வாழ்வின் பொருள் என்ன என்பதைப் பற்றிய தெளிவை எந்த அறிவுத்துறையாலும் இதுவரை எட்ட முடியவில்லை. இயற்கையைச் சுரண்டுவதோடு அடுத்தவர்களை, அவர்களின் வளங்களைச் சுரண்டி அனைத்தின் மீதும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே அதிகாரமும் ஆற்றல்களும் பயன்படுத்தப் படுகின்றன. அதன் விளைவுதான் உலகெங்கிலும் உள்ள உள்நாட்டு போர்கள், எல்லைப் பிரச்சனைகள், இன ஒழிப்புச் சண்டைகள், வன்முறைகள், ரத்த வெள்ளங்கள், அணு ஆயுதக் குவிப்புகள். தொடர்ந்து மனிதன் தன் கீழ்மையின் எல்லைகளை விரித்துக் கொண்டே போவதைத்தான் அதிகாரத்தின் மூலமாக நிறுவியபடியே இருக்கிறான். ஆனால், உண்மையில் மனிதன் மேலும் மேலும் எவ்வாறு தன்னை மனிதனாக மேம்படுத்திக் கொள்கிறான் என்பதுதான் வாழ்க்கை என்பதையே இயற்கை தொடர்ந்து வலியுறுத்துகிறது. பேரிடர்களின் வழியாக அவனுக்கு வலியுறுத்தப் பார்க்கிறது. பனி மூடிய சிகரங்களைத் தொட்டிறங்கும் மனிதர்களும், அந்த மலைப் பகுதியில் இயற்கையோடு ஒன்றி வாழும் மக்களும் இதைப் புரிந்துகொள்கிறார்கள், தற்காலிகமாகவேனும். இந்தப் புரிதல் அனைவருக்குமானதாக மாறுமா என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்பியிருக்கிறது.

சதீஷ் சப்பரிகே தொழில்முறை பத்திரிகையாளர். அத்துறையில் நீண்ட அனுபவம் மிக்கவர். சிறுகதைகள், பத்திகள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள் என தொடர்ந்து எழுதி வருபவர். அவரது முதல் நாவலான ‘காந்த்ருக்’ கன்னடத்தில் எழுதப்பட்டிருக்கும் உலக நாவல் என்று குறிப்பிடும்படியான சர்வதேசக் களத்தையும் பின்னணிகளையும் கதை மையத்தையும் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் தொழிலதிபரின் வாழ்க்கைச் சுழல், இமயமலை அன்னபூர்ணா மலைப்பாதையின் மலையேற்ற அனுபவம், சர்வதேச மனித உரிமைக் கழகத்தின் அதிகாரியாக போர்ச் சூழலில் அகதிகளின் நிலையை மேம்படுத்த முனையும் அமெரிக்கப் பெண் அதிகாரியின் வாழ்க்கை என்ற மூன்று புள்ளிகளின் வழியாக விரிவான அனுபவத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறார். மலையேற்ற நாட்களினூடாகவே இவ்விருவரின் கடந்த கால வாழ்க்கை நடப்புகளை நகர்த்தி காட்டியிருக்கும் புனைவுத்தி நாவலின் வாசிப்புத்தன்மைக்கு வலு சேர்த்திருக்கிறது. இமயமலையைக் களமாகக் கொண்ட நாவல் என்பதால் மலைகளைக் குறித்த வர்ணனைகளை, புறக்காட்சிகளைக் கொண்டு நிரப்பாமல் அங்குள்ள சிறிய ஊர்களில் பயணிகள் தங்கவும் இளைப்பாறவும் பசியாறவுமான சிறிய விடுதிகளை நடத்தும் மனிதர்களைக் குறித்து எழுதுவதில் கூடுதல் அக்கறை காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கே.நல்லதம்பியின் மொழியாக்க வேகம் வியக்கச் செய்கிறது. அடுத்தடுத்து நூல்கள் வெளியானபடியே உள்ளன. ‘காந்த்ருக்’ நாவலில் சதீஷ் சப்பரிகே கையாண்டிருக்கும் புனைவு மொழியின் தன்மையைப் புரிந்துகொண்டு தமிழிலும் அதேத் தன்மையுடன் மொழிபெயர்த்திருப்பதை உணர முடிகிறது.

இமயமலையில் உள்ள ஒரு சிறு நகரத்தின் பெயரே நாவலின் தலைப்பாக அமைந்திருக்கிறது. மனவெறுமையும் குழப்பங்களுமாக மலையேறத் தொடங்கும் சித்தார்த்தன், மலையேற்றத்தின்போது ஷோபியா வழியாக வாழ்க்கையைப் பற்றிய புதிய புரிதல்களை அடைகிறான். காந்த்ருக்குக்கு வந்து சேரும்போது குழப்பங்கள் தீர்ந்து நம்பிக்கையுடன் மீளும் அவனுக்கு முன்னால் நான்கு புதிய சாத்தியங்கள், பாதைகள் தயாராக உள்ளன. காந்த்ருக் அவனது அடுத்த அடியை தீர்மானிக்கும் இடமாக அமைகிறது. காந்த்ருக்கில் தன்னை உணர்ந்த புத்தனாக சித்தார்த்தன் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறான் என்பதுதான் நாவலின் முடிவு.

0

காந்த்ருக் – நாவல்

சதீஷ் சப்பரிகே

கன்னடத்திலிருந்து தமிழில் கே.நல்லதம்பி

காலச்சுவடு

டிசம்பர் 2025 422 பக்கங்கள் விலை ரூ.550

Friday, 13 March 2026

பழமையிலிருந்து புதுமையை நோக்கிய பயணம் - நிச்சலனம் - துருக்கி நாவல்

 



துருக்கியைச் சேர்ந்த எழுத்தாளர் ஓரான் பாமுக்குக்கு 2006ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை அடுத்து உலகெங்கும் அவர் மீதும் அவரது நாவல்களின் மேலும் வெளிச்சம் விழுந்தது. தமிழில் முதன்முறையாக அவரது புகழ்பெற்ற நாவல் ‘என் பெயர் சிவப்பு’, ஜி.குப்புசாமியின் மொழியாக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியானது. அந்த நாவலுக்கு எழுதிய குறிப்பில், ‘பாமுக்கின் மற்ற நாவல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதற்கு இது ஓர் ஆரம்பமாக இருக்க வேண்டும்’ என்று குப்புசாமி குறிப்பிட்டிருந்தார். அடுத்து வந்த ஆண்டுகளில் அதைச் செய்தும் காட்டினார். இஸ்தான்னபுல், பனி, வெண்ணிறக் கோட்டை ஆகிய நாவல்களை அவர் மொழிபெயர்த்தார். அகிலன் எத்திராஜின் மொழியாக்கத்தில் ‘கருப்புப் புத்தகம்’ வெளியானது.

தமிழில் வெளியான இந்த மொழிபெயர்ப்புகளின் வழியாக, துருக்கி இலக்கியத்தின் மீதான கூடுதலான கவனம் விழுந்தது. ஓரான் பாமுக்கிலிருந்து தொடங்கிய இப் பயணம் தன்பினார், அய்ஃபர் டுன்ஷ் ஆகியோரிடம் தொடர்கிறது.

துருக்கி ஒரு சிறிய நாடு. அதன் பூகோள அமைப்பே மிகச் சிக்கலானது. மேற்கு ஆசிய நாடாகவும் அதே சமயம் தென் கிழக்கு ஐரோப்பிய நாடாகவும் இரட்டை அடையாளங்களைக் கொண்டிருக்கிறது. தனது எல்லைகளை எட்டு நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதுடன் மூன்று கடல்கள் இதன் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. மத்திய தரைக் கடலை கருங்கடலுடன் இணைக்கும் துருக்கிய நீர் இணைகள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒருபுறம் இஸ்லாமிய நாடுகளும் மறுபக்கம் கிறித்துவ நாடுகளும் சூழ்ந்துள்ளன. பூகோள அமைப்பிலான இந்த சிறப்பம்சங்களே துருக்கியின் கலை, அரசியல், கலாச்சார அம்சங்களுக்கு தனித்தன்மையையும் சவாலையும் ஒருங்கே அளிப்பதாக அமைந்துள்ளன.

தொன்மையும் பாரம்பரியமும் மிக்க துருக்கியின் கவிதை, இலக்கியம், இசை, நாடகம் உள்ளிட்ட கலைகளில் ஆழமான மரபைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் நாட்டார் கலைகள் சார்ந்த வலுவையும் கொண்டுள்ளது. உலக அளவில் துருக்கியின் கவிதைகள் மிகவும் புகழ்பெற்றவை. ஓரான் பாமுக்கின் வருகைக்குப் பின்னரே அதன் நாவல் இலக்கியம் பரவலாக அறிமுகமாயிற்று. ஆனால், பாமுக்குக்கு முன்பே தன்பினார் உள்ளிட்ட நாவலாசிரியர்கள் வலுவான படைப்புகளை எழுதியுள்ளார்கள். துருக்கிய உணவு வகைகளும் தேநீரும் ‘ராக்கி’ எனப்படும் மதுவும் கொண்டாடப்படுபவை. உலக சினிமா அரங்கிலும் மிக முக்கியமான இயக்குநராக அறியப்படும் நூரி பீகி சிலான் துருக்கிய இயக்குநரே.

நூற்றாண்டுகால சரித்திரத்திரத்தில் துருக்கி வெவ்வேறு பேரரசுகளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. உலகின் பழமையான நாகரிகத்தின் நினைவுகளைத் தாங்கி நிற்கும் நிலமாக விளங்குகிறது. பழமையும் பாரம்பரியமும்கொண்ட ஒட்டாமன் பேரரசை 1923ஆம் ஆண்டு முஸ்தபா கெமால் அட்டார்டக் (1881-1938) கலைத்துவிட்டு நவீன துருக்கியை கட்டமைத்தார். ஒட்டாமன் இஸ்லாமிய கலாச்சாரத்திலிருந்து துருக்கியை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டு அதனை  ஒரு ‘நவீன’ நாடாக உருவாக்க முனைந்தார். உணவு, உடை, கல்வி முறை என்று அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் கடைபிடிக்கப்பட்ட மரபு சார்ந்த அடையாளங்கள் அனைத்தும் கைவிடப்பட்டன. உடைகள், ஆபரணங்கள், பாத்திரங்கள், மேசை நாற்காலிகள், ஓவியங்கள், இசைக் கருவிகள் உள்ளிட்ட பழம்பொருட்கள் அனைத்துமே கழித்துத் தள்ளப்பட்டு சந்தையில் குவிந்தன. பல நூற்றாண்டுகளாக துருக்கிய மொழிக்கு பயன்படுத்தப்பட்ட அராபிய எழுத்துருவும் எண்முறையும் விலக்கப்பட்டு அவற்றுக்கு பதிலாக லத்தீன் எழுத்துருவும் எண்முறையும் பயன்படுத்தப்பட்டன. துருக்கியர்கள் வழக்கமாக அணியும் தலைப்பாகைக்கு தடை விதிக்கப்பட்டு அதற்கு பதிலாக தொப்பிகளை போடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. துருக்கி மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. பெண்களுக்கான சுதந்திரம் உறுதிசெய்யப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு வாக்களிக்கவும் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடவும் உரிமை வழங்கப்பட்டது. அரசு பொறுப்பேற்று நடத்தும் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. மதம் தொடர்பான கல்வியை போதிக்கும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. எல்லா வகையிலும் மேற்கத்திய நாகரீக முறைப்படி, நவீனமயமாக்கிக் கொள்ளும் மோகமும் அவசரமும் நடைமுறைப்படுத்தப்பட்டன. மரபுடனும் பழமையுடனுமான உறவுகள் அனைத்தும் முற்றிலுமாக மறுக்கப்பட்டு உதறப்பட்டன. புறக்கணிக்கப்பட்டன.

நவீன துருக்கியைக் குறித்த பெருங்கனவும் எதிர்ப்பார்ப்பும் அனைவரிடமும் இருந்த அதே சமயத்தில் நிச்சயமின்மையும் பயமும் குழப்பமும் இருந்தன. அரசியலிலும் தன்னை ஒரு ஜனநாயகக் குடியரசாக நிறுவிக் கொண்டிருக்கவில்லை. உலகப் போர் தொடங்கியிருந்தது. எத்தரப்பைச் சார்ந்து நின்று எந்தவிதமான பங்களிப்பைத் தரப்போகிறோம் என்பதைப் பற்றிய தெளிவோ முடிவோ எட்டப் படவில்லை. போருக்குப் பிறகு நாடு என்ன நிலையில் இருக்கும் என்பதைப் பற்றிய அச்சமும் இருந்தது.

நாடு மொத்தமும் பெரும் குழப்பத்திலும் தத்தளிப்பிலும் உழன்றிருந்தது. நூற்றாண்டு காலமாக அனைத்திலும் வேர்கொண்டிருக்கும் மரபையும் அதன் அடையாளங்களையும் முற்றிலுமாக உதறவும் முடியாமல், நவீன மேற்கத்திய கலாச்சார அம்சங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் இயலாமல் சமூகம் மொத்தமும் ஊசலாட்டத்தின் நடுவே அலைபாய்ந்திருந்தது.

இந்த காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல் அகமத் ஹம்தி தன்பினாரின் ‘நிச்சலனம்’ நாவல்.

அகமத் ஹம்தி தன்பினார்  (1901-1962) துருக்கி நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமானவர். கவிஞர், நாவலாசிரியர், விமர்சகரும்கூட. பண்டைய ஒட்டாமன் பேரரசு கோலோச்சியிருந்த காலத்தில் பிறந்து வளர்ந்தவர். இஸ்தான்புல் பல்கலைக் கழகத்தில் ஒட்டாமன், துருக்கி இலக்கியத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரது வாழ்நாளில் பிரபலமான கவிஞராகவும் சிந்தனையாளராகவும் கட்டுரையாளராகவும் அறியப்பட்ட அளவுக்கு புனைகதை ஆசிரியராக பெயர் பெற்றிருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் துருக்கிய இலக்கியம் மிக அரிதாகவே மொழிபெயர்க்கப்பட்டிருந்தன என்பதால் ஆங்கிலத்தில் வாசிக்கும் அயல்நாட்டினருக்கு அதைப் பற்றிய அறிமுகம் இருக்கவில்லை. தன்பினார் காலமாகி பத்தாண்டுகளுக்குப் பிறகே நாவலாசிரியராக அவர் அறியப்பட்டார். தமிழில் ப.சிங்காரத்துக்கு நேர்ந்தது போன்றே, தன்பினாரின் காலத்துக்குப் பிறகே அவருடைய நாவல்களும் புகழ்பெற்றன. பழைய ஒட்டாமன் மரபின் இலக்கிய வளமையைத் தேடிச் செல்லும் முயற்சியின்போதுதான் தன்பினாரின் புனைகதைகள் கண்டடையப்பட்டன. பழமையான ஒட்டாமன் கலாச்சாரத்தையும் நவீன துருக்கியின் வளர்சிதை மாற்றங்களையும் நன்கறிந்தவர் தன்பினார். துருக்கியின் பரிணாம வளர்ச்சியை உருமாற்றத்தை கண்டறிந்த சிந்தனையாளர் என்பதை அவருடைய புனைவுகளும் உறுதிப்படுத்தின. அதன் பிறகே அவைக் கொண்டாடப்பட்டன. துருக்கியின் இன்றைய இலக்கிய முகமாக அறியப்படும் ஓரான் பாமுக், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற துருக்கி நாவலாசிரியர் தன்பினார் என்றும் தன்னை மிகவும் பாதித்த எழுத்தாளர் என்றும் குறிப்பிடுவதிலிருந்து சமகால துருக்கிய இலக்கியத்தில் தன்பினாரின் செல்வாக்கைப் புரிந்துகொள்ள முடியும்.

‘Huzur’ என்ற பெயரில் துருக்கியில் எழுதப்பட்ட இந்த நாவல் 1948ஆம் ஆண்டு தினசரி செய்தித் தாள் ஒன்றில் தொடராக வெளியானது. ஆங்கிலத்தில் ‘A mind at peace’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

இந்த நாவலின் காலம் 1938லிருந்து 1939வரையிலான ஆண்டுகள். இரண்டாம் உலகப் போருக்கான ஆயத்தங்கள் தீவிரம் கொண்டிருந்த நாட்கள். துருக்கி தன்னை ஒரு ஜனநாயக குடியரசு நாடாக முன்னிறுத்தி பதினைந்து ஆண்டுகளே ஆகியிருந்தன. நாவலின் கதை நாயகனான மும்தாஜ், நாட்டின் விடுதலைப் போரில் உயிரிழந்த தன் பெற்றோரை நினைவு கூறுவதிலிருந்து இந்த நாவல் தொடங்குகிறது. நான்கு முதன்மை கதாபாத்திரங்களின் கோணத்தில் நாவல் சித்தரிக்கப்படுகிறது. நாவலின் நாயகனான மும்தாஜ், போர் காரணமாக பற்றி எரிந்துகொண்டிருக்கும் ஒரு ஊரிலிருந்து அமைதியான வேறொரு ஊருக்கு இடம் பெயர்கிறான். செல்லும் வழியில் வெறிச்சோடி பாழ்நிலமாகக் கிடக்கும் அனடோலியாவின் நிலைமையிலிருந்து போரின் கொடுமைகளைப் புரிந்துகொள்கிறான். இஸ்தான்புல்லுக்கு செல்லும் வழியில், இரவு தங்குமிடமொன்றில் ஒரு இளம்பெண் அவனைப் பயன்படுத்திக் கொள்கிறாள். கணப்பொழுதின் புரியாத அந்த இன்பம், பெற்றோர்களை இழந்த துக்கத்தைப் போலவும் தேசத்தின் பெருந்துயரைப் போலவும்  வாழ்நாள் முழுக்க அவனை அலைகழிக்கிறது. இஸ்தான்புல்லில் அவனுடைய உறவினரான இஷான், கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையிலும், அவனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்கிறார். ஆனாலும், கடந்த காலத்தின் துயர நினைவுகள் அவனை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை.

மும்தாஜ் இழந்த தன் காதலியின் நினைவுகளில் தத்தளிக்கிறான். நாவலின் பெரும்பகுதி மும்தாஜ் தன் காதலியான நூரனைக் குறித்து ஏங்கி வருந்துவதாகவே அமைந்துள்ளது. இவர்களின் காதல் கதை நீண்டவொரு பின்கதையாகவே சொல்லப்படுகிறது. துருக்கிய படகுகளிலும் போதையில் நண்பர்களுடன் நீண்ட விவாதத்தில் ஈடுபடும் இரவுகளிலுமாக அவர்களது காதல் வளர்வதை தன்பினார் சித்தரிக்கிறார். குழப்பத்தில் தடுமாறும் இஸ்தான்புல் அவர்களுக்கு உல்லாச நகரமாகவே காட்சியளிக்கிறது. மும்தாஜ், நூரன் இருவருக்குமே காதலின் வலியைத்தவிர வேறு எதுவுமே பொருட்டில்லை என்பதுபோன்ற மிதப்பில் சுற்றித் திரிகிறார்கள். ஆனால், விதி வலியது. இருவரும் சிதைந்த தம் ஊர்களைத் தேடிப் போக நேரிடுகிறது. தன்பினார் இந்த சந்தர்ப்பத்தை துருக்கியின் கடந்த காலத்தை வாசகர்களுக்கு சொல்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார். காலப்போக்கில் சிதைவுகளும் அழிவுகளுமேகூட மறக்கப்பட்டுவிடும் என்பதை அறிவார் அவர்.

கணவர் பஹீர் தனக்கு துரோகம் இழைத்ததன் காரணமாக அவரிடமிருந்து பிரிந்து வாழும் நூரன் மும்தாஜின் மீது காதல் கொள்கிறாள். ஆனால், அவளுடைய மகள் பாத்திமா இந்த உறவை வெறுக்கிறாள். இதனால், புதிய காதலுக்கும் தாய்மைக்கும் நடுவில் முடிவெடுக்க இயலாமல் தவிக்கிறாள். சேர்ந்து வாழ்வதென்று தீர்மானித்த நிலையில், மீண்டும் மணமுடிக்க சட்டத்தின் படி குறிப்பிட்ட காலம் முடியவேண்டி காத்திருக்கிறாள்.

காதலிக்கும் காலத்தில் இருவரும் நகரத்தின் அறிவுஜீவிகளுடன் நேரம் செலவழிக்கிறார்கள். இசை கேட்கிறார்கள். கவிதை, இலக்கியம் குறித்து உரையாடுகிறார்கள். நூரன் நம்பிக்கையுடன் தங்களுக்கென புதிய வீடு ஒன்றை ஏற்பாடு செய்து தயாராகிறாள். ஆனால், மும்தாஜை இனந்தெரியா இழப்பின் அச்சம் துரத்துகிறது. இவர்களுக்கிடையில், நூரனின் மீது முன்பே பித்துற்றிருந்த சுவாத் வரும்போது குழப்பமும் சிக்கலும் அதிகரிக்கிறது. சொந்த வாழ்க்கையில் ஏமாற்றங்களையும் துயரங்களையும் சந்தித்து தடுமாற்றத்தில் இருக்கும் சுவாத், எப்படியேனும் நூரனை அடையவேண்டும் என முயல்கிறான். ஆனால், அது நடக்காது என்ற பரிதவிப்பில் புதிதாக அவள் தயார் செய்திருக்கும் வீட்டுக்குள் நுழைந்து தற்கொலை செய்துகொள்கிறான். சுவாத்தின் இந்த முடிவு நூரனுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இனி இந்த வீட்டில் நூரனுடன் வாழ்வது இயலாது என்று தீர்மானித்து அவனுடனான தன் உறவை முறித்துக் கொள்கிறாள்.

முன்னும் பின்னுமாக ஊசலாடும் வடிவில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல், ஒரு காதல் கதையினூடாக மரபுக்கும் நவீனத்துக்கும் நடுவில் தன்னை நிலைநிறுத்தத் தடுமாறும் தேசத்தின் கதையை விவரிக்கிறது. போரை சந்திக்கவிருக்கும் ஒரு நாட்டின், சமூகத்தின் ஒட்டுமொத்த மனநிலை, தனியொருவனின் மனநிலையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் குழப்பங்களையும் அழுத்தமாக பேசுகிறது. அதே நேரத்தில் ஆண்-பெண் உறவில் தவிர்க்க முடியாத உளவியல் முரண்களையும் மிக நுட்பமாக கையாண்டுள்ளது. விவாகரத்துப் பெற்ற ஒரு பெண்ணுக்குள், இன்னொருவனுடன் வாழத் தீர்மனிக்கும்போது ஏற்படும் அச்சம், சந்தேகம், தயக்கம், அவற்றின் காரணமாக கிளைக்கும் உரசல்கள் என அனைத்துமே மிக நேர்த்தியாக வெளிப்பட்டுள்ளன. மனத்துக்குள் இறுகும் புரியின் அழுத்தம், காதலின் எத்தனை உன்மத்தமான தருணமென்ற போதிலும், சொற்களில் வெடித்து ஒட்டுமொத்த மனநிலையையே புரட்டிப் போடும் தன்மையை வெகு அநாயசமாக பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. மன ஆழத்தில் நித்தமும் நிகழும் உளவியல் மோதல்கள், உறவின் கதியை சட்சட்டென்று திசைமாற்றிக் கொண்டேயிருக்கும் யதார்த்தத்தையும் காண முடிகிறது.

கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு சமூகத்தின் கையறு நிலையை சரடாகக் கொண்டிருக்கும் இந்த நாவல், மேற்கத்திய அளவுகோல்களைக் கொண்டு அவசரகதியில் நவீனமயமாகத் துடிக்கும் அறிவுஜீவிகளின் தவிப்பையும் போதாமைகளையும் விமர்சிக்கிறது.

தன்பினார் ஒட்டாமன் பேரரசின் காலத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், அந்த மரபின் கலாச்சார அம்சங்கள் அனைத்திலும் ஆழமான ஈடுபாடு இருந்திருக்கும். ஆனால், அத்தகைய ஒரு வாய்ப்பு நவீன துருக்கியின் தலைமுறைகளுக்கு மறுக்கப்படுவதின் மீதான கடுமையான விமர்சனமும் நிச்சயமாக இருந்திருக்கும். அட்டார்டக் தன் கலாச்சார மாற்ற நடவடிக்கைகளின் மூலம் முன்பிருந்த அனைத்தையும் சுவடில்லாமல் அழித்துவிட்டு, மேற்கத்திய அம்சங்களை மட்டுமே நாட்டில் நிலைபெறச் செய்யவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இந்தப் போக்கின் மீதான விமர்சனங்களையே தன் கதாபாத்திரங்களுக்கு இடையிலான விவாதங்களின் வழியாக வெளிப்படுத்தினார். தலைப்பாகைகளை உதறச் செய்து தொப்பிகளை மாட்டலாம்,  இஸ்லாமிய காலக்கணக்குகளை மறுத்துவிட்டு ஐரோப்பிய நாட்காட்டிகளை எடுக்கலாம், அராபிய எழுத்துக்களையும் எண்களையும் மாற்றி லத்தீன் எண்,எழுத்துகளை அறிமுகப்படுத்தலாம். இவற்றின் மூலமாக மட்டும் மக்களிடத்தில் ‘நவீன’ துருக்கியை கட்டமைத்துவிட முடியாது என்ற ஆழமான நம்பிக்கை தன்பினாருக்குள் இருந்ததையே நாவல் முழுக்க காண முடிகிறது.

1949ஆம் ஆண்டு வெளியான இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 2009ஆம் ஆண்டில்தான் வெளியானது. இதற்கு காரணம், துருக்கிய மொழி மிகவும் கடினமான ஒன்று எனக் குறிப்பிடப்படுகிறது. ஆங்கில வாக்கியங்களுக்கு மாறாக துருக்கிய வாசகங்கள் கடைசியிலிருந்து தொடங்கி நகர்பவை. பதினெட்டு எழுத்துக்களைக் கொண்ட சொற்களும்கூட துருக்கி மொழியில் உண்டு. அவற்றின் மரபுத் தொடர்கள் மொழிபெயர்க்கவே முடியாதவை. ஆகச் சிறந்த மொழியாக்கங்களில்கூட மிக முக்கியமான ஒரு கூறு விடுபட்டுவிடக்கூடிய சாத்தியம் உண்டு. இன்றைய நவீன துருக்கிய தலைமுறைகளில் பலருக்குமேகூட, பழைய துருக்கி மொழியிலிருந்த பல சொற்களுக்கு பொருள் தெரியாது. எனவே, ஆங்கில மொழியாக்கத்திலிருந்து தன்பினாரின் நாவலை தரப்படுத்துவது என்பது மிகக் கடினமான ஒன்று என்றே விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், இந்த நாவலின் தமிழ் மொழியாக்கத்தில் அத்தகைய சிக்கல்கள் எவற்றையும் உணர முடியவில்லை. இந்த அளவுக்கு இயல்பான, மொழியமைதி கூடிய இன்னொரு மொழிபெயர்ப்பை தமிழில் காண்பது அரிது. துருக்கி போன்ற முற்றிலும் வேறொரு கலாச்சாரப் பின்னணியும், வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட ஒரு நாவலை தமிழில் மொழிபெயர்ப்பது சவாலானது. மூல நூலின் கதை அமைப்பு, சொல்முறை, மொழிநுட்பம் ஆகிய அனைத்தையும் கருத்தில்கொண்டு தமிழ் வாசகன் இயல்பாகவும் சரளமாகவும் உணர்வோடும் வாசிக்கச் செய்யுமளவுக்கு செம்மையான ஒரு காரியத்தை செய்திருக்கிறார் தி.அ.சீனிவாசன்.

0

நிச்சலனம் - நாவல்

அகமத் தன்பினார் ( துருக்கி )

தமிழில் - தி.அ.சீனிவாசன்

காலச்சுவடு பதிப்பகம், 2014 வெளியீடு. 424 பக்கங்கள்

Monday, 2 March 2026

இந்திய ஆட்சியாளர்களின் அரசவை ராகம் - தர்பாரி ராகம்

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியர்கள் அனைவரின் கனவும் நாடு இனி சுபிட்சமடையும், தொழில் வளர்ச்சி அடைந்து வளம் பெருகும், சமத்துவம், சகோதரத்துவத்துடன் நாட்டில் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இருக்காது, அனைவருக்கும் அனைத்திலும் சம வாய்ப்பு கிட்டும் என்பதாகவே இருந்தது. ஆங்கிலேயர்கள் வெளியேறியவுடன் இந்தியா அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்று அதன் குடிமக்கள் அனைவரும் நிறைவும் மகிழ்ச்சியும் அடைவர் என்றே எதிர்பார்க்கப்பட்டது. விடுதலைக்காகப் போராடிய தலைவர்களும் அவ்வாறே வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், சுதந்திரம் அடைந்து வெகு சில நாட்களிலேயே அப்படி எதுவும் பெரிதாய் மாறிவிடவில்லை என்பதை மக்கள் உணர்ந்தார்கள். இங்குமங்குமாய் எண்ணற்ற பிரச்சனைகள். நாடு இரண்டாகப் பிளவுபட்டது. சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பது பெரும் சவாலாக அமைந்தது. பணஇருப்பும் இல்லை. ஒருவழியாக அனைத்தையும் சரிசெய்து, திட்டங்கள் வகுக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, அமைப்புகள் உருவானபோது அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், நடைமுறையில் எதுவும் திட்டமிட்டதுபோல தொடரவில்லை. எங்கும் எதிலும் ஊழல்கள் மலிந்தன. புதிய வகையிலான நிலப்பிரபுத்துவம் உருவானது. புதிய முதலாளிகளும் ஜமீன்தார்களும் நிலச்சுவான்தார்களும் முளைத்தனர். சாதிய அடுக்குகள் இன்னும் தீவிரமாக பேணப்பட்டன. எங்கும் எதிலும் அலட்சியம். பொதுத்தொண்டு என்பது மெல்ல மெல்ல மறைந்துபோய் தனிநபர் செல்வாக்கு, சுயநலப்போக்குகளே அதிகரித்தன. ஆட்சியாளர்கள்தான் புதியவர்களே ஒழிய, மக்களின் நிலையில் மாற்றம் எதுவும் நேரவில்லை.

ஸ்ரீலால் சுக்ல 1925ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ மாவட்டத்தில் உள்ள அத்ரலி எனும் கிராமத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே நாட்டில் நடைபெற்று வந்த சுதந்திரத்திற்கான பல்வேறு நடவடிக்கைகளை, போராட்டங்களை நேரடியாகப் பார்த்து வளர்ந்தவர். விடுதலைப் போராட்டத்தின் முக்கிய அங்கமான ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது அவருக்கு வயது 16. நாடு விடுதலையானபோது அவருக்கு வயது 21. எனவே, அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த அனைத்து இந்தியர்களைப் போலவே அவருக்கும் எதிர்காலத்தைக் குறித்த பெரும் கனவுகள் இருந்தன. அவர் கண்டு, கேட்டு வளர்ந்த தலைவர்கள் பலரும் அவ்வாறான வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், நடைமுறையில் அத்தகைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டபோது பெரும் மனச்சோர்வை, நிராசையை அடைந்தார். நாடு விடுதலையடைந்த அதே ஆண்டு, 1947ஆம் வருடத்திலேயே இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். தன் பணிக்காலத்தில் ஆக்ரா, முசாபர்நகர், அலகாபாத் உள்ளிட்ட பல நகரங்களிலும் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். பதவியில் இருந்த காலத்தில் இந்திய அதிகார வர்க்கம் செயல்படும் விதத்தை நேரில் பார்த்தறிந்தார்.

தனது மனக்குமுறல்களை, ஏமாற்றங்களை வெளிப்படுத்த எழுத்தை நாடினார். இந்தியாவின் உண்மைநிலையை களமாகக் கொண்டு, நொறுக்கப்பட்ட உத்தரவாதங்களை, உடைந்த கனவுகளைக் குறித்து 1950ஆம் ஆண்டு முதல் எழுதலானார். 1957இல் தனது முதல் நாவலான ‘சூனி கடி கா சூரஜ்’ வெளியிட்டார். கனவுக்கும் நடைமுறைக்குமான முரண்களை, ஏமாற்றங்களைச் சந்தித்தவர்களை கதாபாத்திரங்களாக உலவவிட்டார். அவரது எழுத்துகள் எதிர்மறையாகவும் அவநம்பிக்கையை விதைக்கும்படியாகவும் உள்ளன என்று விமர்சனங்கள் எழுந்தன. ‘அவநம்பிக்கைமிகுந்தவை என்று நீங்கள் சொல்லலாம், ஆனால், அதுதான் உண்மை’ என்று பதிலளித்தார்.

தர்பாரி ராகம் நாவல் 1968ஆம் ஆண்டு வெளியானது. விடுதலைக்குப் பிறகான இந்தியாவில் அற மதிப்பீடுகளும் விழுமியங்களும் பொருளற்று மதிப்பிழக்கும் துயரத்தை அங்கதச் சுவையுடன் சித்தரிக்கிறது இந்த நாவல். அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், சமூக விரோதிகளுக்கிடையிலான நெருக்கமான ஊழல் பின்னலுக்கு முன்னால் அறிவுஜீவிகளும் சாமானியர்களும் எதுவும் செய்ய முடியாத கையாலாகதவர்களாய் குறுகிப் போவதன் அவலச் சித்திரம் இது. இந்தியாவின் எளிய கிராமமொன்றின் அன்றாட நடப்புகளின் வழியாக சமூக பொருளாதார அரசியல் நிலையை கேலியும் கிண்டலுமாக விவரிக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின், அவுத் பகுதியில் அமைந்திருக்கும் சிவபால்கஞ்ச் என்ற கற்பனை கிராமத்துக்கு முதுகலை வரலாற்றுப் பட்டதாரியான ரங்கநாத், மோசமான தன் உடல்நிலையை சீராக்கிக் கொள்ளும்பொருட்டு, வைத்தியரான தன் மாமாவிடம் வருகிறான். வைத்தியர்தான் அந்த ஊரை ஆட்டி வைப்பவர். கிராமத்தின் கூட்டுறவு சங்கம், பள்ளிக்கூடம் இரண்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். சூதுவாது தெரியாத கொள்கைவாதியான ரங்கநாத் கிராமத்தில் நடைமுறையில் உள்ள அரசியலையும் அதிகாரத்தையும் நேரடியாகப் பார்த்து அனுபவிக்க நேர்கிறது. பொதுமக்களின் சமூக நலனுக்காக உருவாக்கப்பட்ட கிராமிய அமைப்புகள், அதிகாரத்தில் உள்ள தனிநபர்களின் சுயநலத்துக்காக சீரழிக்கப்படுகின்றன. தேர்தல் என்பது ஆள் பலமும் பண பலமும் உள்ளவர்களுக்கு சாதகமாகவே நடைபெறுகின்றன. கல்வியைத் தவிர போதைப் பழக்கம், அடிதடி, மோசமான நடத்தைகள் என இதர அனைத்து விஷயங்களையும் கற்பிக்கும் இடமாக மாறுகிறது பள்ளிக்கூடம். சூதாட்டத்தைவிட மோசமாக நடந்தகொள்ளும் நீதித்துறை. இவை அனைத்தையும் காணும்போது அவனுக்கு மக்களாட்சியின் மீதான நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து நொறுங்குகின்றன.

அறுபதுகளில் கிராமப் பொருளாதார முன்னேற்றத்துக்கான மூன்று முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டவை, கிராமப் பஞ்சாயத்துகள், கூட்டுறவுச் சங்கங்கள், கல்வி நிலையங்கள் ஆகியன. இவற்றுக்கான நிதி ஆதாரங்களை, கிராமத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊழலின் மூலம் பொதுமக்களை சென்றையவிடாது சுயநலத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதையே இந்த நாவல் விவரிக்கிறது.

தர்பாரி ராகம், சிறிதும் இரக்கமில்லாமல் உள்ளதை உள்ளபடி விமர்சிக்கும் ஒரு நாவல். இது வெளிவந்தபோது வாசகர்களை உலுக்கியது. தொந்தரவுக்கு உள்ளாக்கியது. ஒட்டுமொத்த இந்தியாவின் ஊழல் அமைப்பை தோலுரித்துக் காட்டியது. வெளியான சமயத்தில் இந்த நாவல் பெரிய அளவில் வரவேற்கப்பட்வில்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

இது இந்தியில் எழுதப்பட்ட நாவல் என்றாலும் இதன் கதைமொழி, சாதாரணமான இந்தி உரைநடை மொழியில் எழுதப்பட்டதல்ல. இவ்வாறான ஒரு கதைமொழியை இந்த நாவலுக்கு முன்னும் சரி, பின்னும் சரி எந்த நாவலிலும் பார்க்க முடியவில்லை என்று இந்தி விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு பத்தியிலும், ஒவ்வொரு வரியிலும் கிராமங்களில் மக்களிடையே புழங்கும் சொலவடைகளை, மரபுத் தொடர்களை, பழமொழிகளைக் காண முடியும். லால் சுக்லவின் அங்கதத் தொனிக்கு இவை அனைத்தும் வலு சேர்த்துள்ளன.

இதன் அங்கத மொழி சில இடங்களில் நகைக்கச் செய்கின்றன. சில இடங்களில் சிந்திக்கச் செய்கின்றன. இன்னும் சில இடங்களில் உள்ளூற வருந்தவும் செய்கின்றன. கேலியும் கிண்டலுமாக வசைபாடும் இந்தக் குரல் அனைத்தையும் கேள்வி கேட்கிறது. அரசியல்வாதிகளை, அதிகார வர்க்கத்தை, கல்விச் சூழலை, ஆட்சியாளர்களின் செயல் திறனை, கிராமிய மக்களின் அறியாமையை என அனைத்தையுமே இது கடும் வசைச் சொற்களால் விமர்சிக்கின்றன. இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளை, மூன்று முக்கிய விதங்களில் இந்த நாவல் வரையறுத்துள்ளது.

தர்பாரி ராகம், தான்சேனால் உருவாக்கப்பட்ட ஒன்று. கம்பீரமான தியான அனுபவத்தைத் தரவல்லது என்று இசை வல்லுநர்களால் குறிப்பிடப்படுவது. ஆனால், ‘தர்பாரி ராகம்’ என்ற இந்த நாவலின் தலைப்புக்கும் இசைக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. நாவலின் மையக் கதாபாத்திரமான வைத்தியரின் பாட்டுக்கேற்ப ஒட்டுமொத்த கிராமமும் அதன் மனிதர்களும் பின்பாட்டு பாடுவதன் கேலிக் குறியீடாகவே இத்தலைப்பு பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அரசவையின் ராகம் என்ற தன்மையிலும் இதைக் கொள்ளலாம். என்னதான் ஜனநாயக நாடாக இருந்தபோதும் இந்தியாவிலும் அதன் மாநிலங்கள் பெரும்பாலானவற்றிலும் நடப்பது மன்னராட்சிதான். தலையில் கிரீடங்கள் இல்லை, பொன்னாலான சிம்மாசனங்கள் இல்லை, கவரி வீசும் அழகிகள் இல்லை என்பதுதான் வித்தியாசம். மற்றபடி எங்கும் ஒலித்திருப்பது தர்பாரி ராகங்களே.

இந்திய கிராமத்தின் அசலான மண் மணத்தை இந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் காணமுடியும். அதே சமயம் இதிலுள்ள ஒவ்வொரு வாக்கியமும் ஒட்டுமொத்த இந்திய அரசியல் சூழலையும் அதிகார ஆட்டத்தையும் கூர்மையாக விமர்சிப்பதாக அமைந்துள்ளன.

இந்திய அரசமைப்பின் செயல்பாடுகளை சுருக்கமாக விமர்சிக்கும் விதமாக இந்த நாவலில் ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘நொண்டி’ என்றே நாவல் முழுக்க அறியப்படும் அவன், தனது நிலத்துக்குரிய அரசாங்கப் பத்திரத்தின் நகலைப் பெற வேண்டி விண்ணப்பிக்கிறான். நகலைத் தரவேண்டி அத்துறையைச் சேர்ந்த ஒரு எழுத்தர், மூன்று ரூபாய் லஞ்சம் கேட்கிறார். நொண்டி தர மறுக்கிறான். என்னுடைய நிலத்துக்கான பத்திரத்தின் நகலை நான் பெறுவதற்கு விண்ணப்பிக்கிறேன், ஒரு இந்தியக் குடிமகனாக. அரசின் சார்பாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்குத்தான் துறையும், அதிகாரிகளும், எழுத்தர்களும். எதற்கு லஞ்சம் தரவேண்டும? என்பது அவன் வாதம். நியாயமான வாதம்தான். ஆனால், எழுத்தர் அவனது விண்ணப்பத்தில் பிழைகள் உள்ளன, தேதி சரியில்லை, கையெழுத்து சரியில்லை, என்று பல காரணங்கள், பிழைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. சரியான விண்ணப்பத்தை எழுதிக் கொண்டு வா என்று திருப்பித் தந்துவிடுகிறார். ஒரு முறையல்ல, பல முறை. புதிது புதிதாக பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படாமல் திருப்பித் தரப்படுகின்றன. நொண்டியும் சலிக்காமல் புதிய விண்ணப்பங்களை எழுத்தர்களை வைத்து எழுதித் தருகிறான். ஏழு வருடங்கள் இது நடக்கிறது. இதற்கு நடுவே அவன் தன் கிராமத்தையும் நிலத்தையும் குடும்பத்தையும் இழக்க நேர்கிறது. ஆனாலும் அவன் தன் தர்ம யுத்தத்தை கைவிடுவிதில்லை. நம்பிக்கையுடன் புதிய விண்ணப்பங்களை எழுதி அனுப்புகிறான். கடைசியில் ஒரு வழியாக அவனுக்கு நகல் தயாராகிறது. ஆனால், மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவன் உடனே வந்து அதைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. உடல்நிலை சரியாகி வரும்போது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வந்து நகலைப் பெற்றுக் கொள்ளாததால் அது கிழித்துப் போடப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க மறுத்து, நேர்மையுடன் நடப்போரின் கதி என்னாகிறது என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நொண்டியின் போக்கையே அனைவரும் விமர்சிக்கிறார்கள். ‘பேசாம மூணு ரூபா குடுத்துட்டு போக வேண்டிதுதானே’ என்பதே அனைவரின் அறிவுரையாகவும் உள்ளது.

நம்மில் பலரும் அப்படித்தானே?

70ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலின் பல அம்சங்கள் இன்றும் மிகப் பொருத்தமானவைகளாக இருப்பதை இந்த நாவலின் பெருமை என்று எடுத்துக்கொள்வதா இல்லை இந்த நாட்டின் அவலம் என்று வருத்தப்படுவதா தெரியவில்லை.இந்த நாவலில் உள்ள சிவ்பால்கஞ்ச் என்னும் சிறு கிராமம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான ஒன்றுதான். இந்தியாதான் சிவ்பால்கஞ்ச். சிவ்பால்கஞ்ச்தான் இந்தியா. நீதி நெறிமுறைகளை அனுசரிக்க முடியாத கதாபாத்திரங்கள், நாகரீகமற்ற, ஊழல் என்பது நமது அமைப்பின் ஓர் அங்கம் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிலை, கொள்கைகள் அணிகலன்கள், இங்கு பிழைத்திருப்பது என்பது நேர்மையைக் காட்டிலும் உள்ள நிலைக்கு அனுசரித்திருப்பதே.

நாவலின் 19வது அத்தியாயத்தில், ஸ்ரீலால் சுக்ல தேர்தலில் வெற்றிப் பெற, ராம்நகர் வழி, நேவாதா வழி, மகிபால்பூர் வழி என்று மூன்று வழிமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. எதிர்க் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க இருப்பவர்களை பொய்க்குற்றம் சாட்டி வாக்களிக்க விடாமல் செய்வதே முதல் வழி. சாதி, மத நம்பிக்கையின் அடிப்படையில் வாக்குகளைப் பிரிப்பது நேவாதா வழி என்னும் இரண்டாவது வழி. தவறான கால நேரத்தை வகுத்து விஞ்ஞான ரீதியாக தேர்லை முன்னரே முடிவுக்குக் கொண்டு வந்து வேண்டிய வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்வது மூன்றாவது வழி. இந்திய நாட்டில் அடுத்து வரும் தேர்தல்களில் இத்தகைய வழிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்பதை மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் எழுதியிருக்கிறார்.     

லால் சுக்ல 10 நாவல்கள், 4 சிறுகதைத் தொகுப்புகள், 9 அங்கதக் கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றை எழுதியிருந்தபோதும், ‘தர்பாரி ராகம்’ அவருக்கான அடையாளமாக, மறுபெயராக மாறிவிட்டது. உண்மையில், அவரது பிற நாவல்களும் சிறுகதைகளும் அதேயளவுக்கு ஆழமும் அழுத்தமும் கொண்டவை.

அதிகாரத்தைப் பற்றி, யார் அதை கையில் வைத்திருக்கிறார்கள், எப்படி அதை பயன்படுத்துகிறார்கள், அது அவர்களுக்கு எவற்றைக் கொண்டு வருகிறது, பிறருக்கு அதனால் என்னவாகிறது என்பதை எழுதியவர் சுக்லா. சுக்லாவின் கதைகளில் கற்பனையோ சாகசங்களோ இருக்காது. மேன்மையான குடிமக்களையோ அழகான கிராமங்களையோ காணமுடியாது. சுதந்திரம் புதிய எந்த மதிப்பீடுகளையும் கொண்டு சேர்க்கவில்லை. பதிலாக, புதிய சொற்களையே உருவாக்கியுள்ளது என்பதையே அவை விமர்சிக்கின்றன. நிலபிரப்புத்துவ அமைப்பு, சாதி அடுக்குகள், அதிகார அமைப்பின் செயலின்மை என யாவும் அப்படியேதான் இருந்தன, அரசு வன்முறை நீடித்ததைப்போலவே. இப்போது அவை வேறு பெயர்களில் உலவின, வேறு முழக்கங்களை ஒலித்தன, அவ்வளவுதான். இந்தியின் முதன்மை நாவலாசிரியர்களான பிரேம்சந்தும் மைதிலி சரண் குப்தாவும் காட்டாத ஓர் கிராமத்தை அச்சு அசலாகக் காட்டியிருப்பவர் லால்சுக்ல. இந்த நாவலில் ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லை என்று சொல்லவேண்டும். கயாதீனின் மகள் பேகா பிற கதாபாத்திரங்களின் உரையாடல்கள் வழியே மட்டுமே காட்டப்படுகிறாள். நேரில் அவள் காட்சிப்படுவதேயில்லை.

1969ஆம் ஆண்டு ‘தர்பாரி ராகம்’ நாவலுக்காக சாகித்திய அகாதமி விருதும், அவரது இலக்கியப் பங்களிப்புக்காக 2008ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும், 2011ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கப்பட்டன.

லால் சுக்லாவின் அங்கதம், கேலி, கிண்டலுக்குப் பின்னால் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி விடுதலை பெற்ற பின் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றவர்கள் தங்களது வாக்குறுதியை நிறைவேற்ற மறந்து துரோகம் புரிந்தவர்களின் மீதான தார்மீக சினமும் சீற்றமுமே அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆகத் துயரமான வாழ்வை வாழ்ந்து கடக்க ஒரே வழி சிரித்துக்கொண்டே அதைக் கடப்பதுதான்.

பிற இந்திய மொழிகளிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் தமிழுக்கு வந்துள்ளன. வங்க, கன்னட, மலையாள நாவல்களே எண்ணிக்கையில் அதிகம். இந்தியிலிருந்து ஒருசில நாவல்களே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பகுதி நாவல்களை மொழிபெயர்த்திருப்பவர் சரஸ்வதி ராம்நாத். இந்த நாவலில் அவரது மொழிபெயர்ப்பு மேதமை வியக்கும்படியாகவும் பாராட்டும்படியாகவும் உள்ளன. நாவலில் ஒலிக்கும் அங்கதத்தை துல்லியமாகவும் சிறிதும் வலுவிழக்காமலும் மொழிபெயர்த்திருப்பது பெரும் சாதனை. சில உதாரணங்களைக் குறிப்பிடலாம்.

‘தற்காலக் கல்வி இருக்கிறதே அது வழியில் படுத்துக் கிடக்கும் நாய் மாதிரிதான். யார் வேண்டுமானாலும் அதை எட்டி உதைக்கலாம்’. ( பக் 9 )

‘நானும் சரித்திர பாடத்தில் எம்.ஏ.பாஸ் செய்திருக்கிறேன். 61 சதவீதம் மார்க் வாங்கியிருக்கிறேன். காலத்தின் கோலம். இப்போது இங்கே பிரின்ஸ்பாலாக இருக்கிறேன்.’

‘மோசமான டிவிஷன் வாங்கி இருந்தால் தாங்கள் இங்கேயா இருப்பீர்கள்?’

‘அது சரிதான். அப்படியிருந்தால் ஏதாவதொரு யுனிவர்ஸிடியில் லெக்சரராக இருந்திருப்பேன். மூன்றாம் டிவிஷனில் பாஸ் செய்த என் நண்பர்கள் எத்தனையோ பேர் யுனிவர்ஸிடியிலே இருக்கிறார்கள்.’ ( பக் 199 )

‘குற்றவாளிகளின் வீட்டில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாட்டுத் துப்பாக்கி என்று அழைக்கப்படும் இரும்புத்துண்டு கட்டாயம் தேடி எடுக்கப்படும் என்பதை அறிந்திருந்தார். அதைப் பார்த்ததுமே பதினெட்டாவது, பத்தொன்பதாவது நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு இந்தியர்கள் தோற்றுப்போனது ஏன் என்ற வரலாற்று உண்மை தானாகவே தெளிவாகிவிடும்.’ ( பக் 187 )

கல்வித் துறை சம்பந்தமான பொருள்களை சப்ளை செய்யும் ஒரு கம்பெனியின் காலண்டர் அவர் முகத்துக்கு நேரே சுவரில் தொங்கியது. வெற்றுடம்பில் சருகு போன்ற மெல்லிய சேலையைச் சுற்றிக் கொண்டிருந்த யாரோ ஒரு திரை நடிகை மெய்ம்மறந்த நிலையில் லட்டுமாதிரி ஆடவன் ஒருவனை நெருங்கிக் கொண்டிருந்தாள். அந்த ஆடவனின் முகத்திலே ரோமக்காடு. ஒரு கரத்தை உயர்த்திக் கண்களை மறைத்துக்கொண்டிருந்தான். லட்டைத் தின்று தின்று அஜீர்ணம் வந்துவிட்டது போன்ற பாவம். இவர்கள்தான் மேனகையும் விஸ்வாமித்திரரும்.’ ( பக் 93 )

‘யாரேனும் கேட்டால் கேட்கட்டும், கேளாவிட்டால் போகட்டும் என்று பிரசார இலாக்கா பற்றற்றுப் பணிபுரிவதுபோல், பிரின்ஸ்பாலும் பேசிக்கொண்டே இருந்தார்.’ ( பக் 207 )

‘வெற்றிலைப் பாக்குக் கடையில் பாட்டிரியில் இயங்கும் ரேடியோ இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. திரைப்படப் பாடல்கள் என்ற சாக்கடையிலிருந்து, ‘ஆசைகள், காதலனே, அழகிய மந்திரவாதியே, உன் பார்வை, என் இலட்சியம், நீ எங்கே, நெஞ்சம், மது, நெஞ்சோடு அணைத்துக்கொள், புன்சிரிப்பு, நெருப்பு, வாழ்க்கை, சாவு, இரக்கமற்றவளே, சித்திரம், வெண்நிலவு, வானம், இன்பக் கனவு, போதை’ ஆகிய சொற்கள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் நாடுகளில் புத்தெழுச்சியின் செய்தியைப் பரப்ப முற்றிலும் பொருத்தமானவை என்ற முறையில் சரமாரியாக வந்து விழுந்து கொண்டிருந்தன.’ ( பக் 277 )

 

இந்திய நாவல்கள் என்று பேசும்போது எப்போதும் நினைவில் எழும் நாவல்கள், ஒரு குடும்பம் சிதைகிறது அல்லது ஆரோக்கிய நிகேதனம். இந்த இரு நாவல்களும் தமிழ் நாவல்களாகவே மாறிப் போனவை.

இந்த இரு நாவல்களுக்கு சற்றும் குறையாத தகுதியைக் கொண்டது தர்பாரி ராகம். கதை, கதாபாத்திரம், வாழ்க்கை நோக்கு என்று நாவலின் அடிப்படைகளைப் பொறுத்தவரை தர்பாரி ராகம் சற்று பலவீனமான ஒன்றுதான். ஆனால், லால் சுக்லவின் கதைமொழி இந்த நாவலை தனித்தன்மை மிக்கதாக நிறுவுகிறது. பிற இந்திய நாவல்களிலிருந்து வேறுபட்ட ஒன்றாக பிரித்துக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த நாவலின் மையம் இந்தியாவைப் பொறுத்தவரையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப் பொருத்தமாக இருப்பதும் முக்கியமானது. அரசியல் அதிகார அமைப்புகளும் ஊழல்வாதிகளும் இந்தியாவின் வளங்களைச் சுரண்டும் நிலைமையில் எந்த மாற்றங்களும் இல்லை.

அந்த வகையில் இன்றும் தன் பொருத்தத்தை இழக்காமல் இருப்பதாலும், தனித்தன்மை மிக்க தன் அங்கதச் சுவையாலும் இந்தியாவின் தலைசிறந்த நாவல்களின் வரிசையில் ‘தர்பாரி ராகம்’ நிச்சயமாக இடம் பெற்றுவிடுகிறது.

லால் சுக்லவைப் பற்றியும் அவரது அங்கதம், அதன் பின்னணியில் உள்ள அறச்சீற்றம் ஆகியவற்றைக் குறித்தும் யோசிக்கும் வேளையில் உடனடியாக நாஞ்சில்நாடனை நினைவுக்கு வந்தார். ‘தர்பாரி ராகம்’ போன்ற அங்கதம் மிகுந்த முழு நாவலை எழுத நாஞ்சில்நாடனே தகுதியானவர் என்று உறுதியாகக் கூறலாம். இந்திய அரசியல், அரசியல்வாதிகளின் எல்லையற்ற ஆட்டங்கள், அதிகார வர்க்கத்தின் கூசவைக்கும் நடைமுறைகள், திரைப்படங்களின் தரம், திரைப்படங்களின் மேல் மக்களுக்கு உள்ள அதீத ஈடுபாடு, எல்லாவற்றையும் கண்டும்காணாமல் பொறுத்துப்போகும் எளிய மக்களின் கையறுநிலை ஆகியவற்றின் மீது தொடர்ந்து காட்டமான, கூரிய விமர்சனங்களை தன் கட்டுரைகள், கதைகளின் வழியாக தயக்கமோ, அச்சமோ, தயவுதாட்சண்யமோ இன்றி நேர்மையாக வெளிப்படுத்துபவர் நாஞ்சில்நாடன். எதற்காகவும் யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல், தனக்கு சரியெனப் பட்டதை நேரடியாக எழுத்தில் காட்டும்போது அதை அங்கதமும் கேலியும் கிண்டலுமாக தனக்கேயுரிய மொழியில் எழுதுவார். படிப்பவர்கள் அவற்றை சிரித்துவிட்டு கடக்க முடியாதபடியான கூரிய விமர்சனங்களும் சிந்திக்கத் தூண்டும் கேள்விகளும் எழுப்பப் பட்டிருக்கும்.

0

நாவல் - தர்பாரி ராகம்

மூலமொழி - இந்தி

நாவலாசிரியர் - ஸ்ரீலால் சுக்ல

மொழியாக்கம் – சரஸ்வதி ராம்நாத்

வெளியீடு – நேஷனல் புக் டிரஸ்ட்

முதல் பதிப்பு – 1977, இரண்டாம் பதிப்பு 1990

பக்கங்கள் -402 – விலை ரூ. 28.00

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...