Thursday, 1 January 2026

டி என் ஏ பெருமாள் ( 1932 – 2017 ) - அடர்வனத்தில் தேய்ந்து மறைந்த ஒற்றையடிப் பாதை


 


காடுகள் காணாமல் போய்விட்டன. வசிப்பிடங்களை இழக்கும் வன விலங்குகள் பலவும் புகலிடம் தேடி அலைந்து மின்சார வேலிகளிலும் ரயில்களிலும் அடிபட்டுச் சாகின்றன. அடர்ந்த காடுகளும் அவற்றை அண்டியிருந்த சிறிதும் பெரிதுமான பல்வேறு உயிர்களும் பூமியின் சமன்நிலைக்கு ஆதாரமாக அமைந்திருப்பதைப் பற்றி இன்று விவாதிக்கிறோம். புவி வெப்பமயமாதல் குறித்தும் அவற்றை கட்டுக்குள் கொண்டுவருவதன் அவசியத்தைப் பற்றியும் உலகநாடுகள் மாநாடுகளைக் கூட்டி குளிர்பதன அரங்குகளுக்குள் கவலையுடன் தீர்மானங்கள் நிறைவேற்றுகின்றன. அழியும் கானுயிர்களைக் குறித்து கவலைப்படவோ அரியவகை உயிரினங்களைக் காப்பாற்றிப் பேணுகிற காருண்யத்தைப் பற்றி யோசிக்கவோ நேரமில்லாத அளவுக்கு இந்தியாவில் நமக்கு வேறு பல கவலைகளும் காரியங்களும் உள்ளன.

 

இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் கைங்கரியத்தால் இயற்கையை வெகுவாக புறந்தள்ளிவிட்டோம். மரங்களோ மனிதநடமாட்டமோ கிராமங்களோ கண்ணில்படாத விரைவுச் சாலையே நமது வாழ்வு. இன்று விசைப்பலகையை தட்டினால் உலகத்தின் எந்தவொரு சரணாலயத்தைப் பற்றியும் தகவல்களை பெறமுடியும். எப்படிப் பட்ட விலங்கைக் குறித்தும் அறிந்துகொள்ளமுடியும். ஆனால் இன்று நமக்கு கிடைக்கும் இத்தகைய தகவல்களை, படங்களை யார் திரட்டினார்கள்? எப்போது எப்படி காட்டுக்குள் சென்று இவற்றையெல்லாம் சாத்தியமாக்கினார்கள் என்பது பற்றியெல்லாம் நாம் யோசிப்பதில்லை. நமக்கு தேவையான விஷயங்கள் ஒரு விசை சொடுக்கில் பெற முடியும். அதற்கப்பால் எதையுமே நாம் சிந்திக்கவோ கவலைப்படவோ நேரமில்லை.

 

காடுகள்தோறும் அலைந்து பல்வேறு விலங்கினங்களையும் பின்தொடர்ந்து, தாங்களே உருவாக்கியெடுத்த கண்காணிப்பு முறைமைகளை கடைபிடித்து விலங்குகளின் போக்குகள், பழக்கவழக்கங்கள், வசிப்பிட நியதிகள், சமிக்ஞைகள் என்ற பல்வேறு நுட்பமான தகவல்களையும் கண்டறிந்து தொகுத்தளித்த கானியலாளர்கள் பலரையும் நாம் அறிந்துகொண்டதில்லை. இன்றைக்கு சரணாலயங்கள் முறையாக அமைக்கப்பட்டு விலங்குகளை பாதுகாப்பான தூரத்தில் இருந்துகொண்டு நாம் விரும்பும்படி புகைப்படம் எடுத்துவிட முடியும். இன்றைய புகைப்படக்கருவிகளின் அதிநவீன வசதிகள் நாம் விரும்பும் வண்ணம் விரும்பும் நுட்பத்துடன் புகைப்படங்களை எடுக்க வகைசெய்கின்றன. இவையெல்லாம் மனிதனின் கற்பனையிலேயே உருவாகியிராத ஒரு காலத்தில், பாதுகாப்பற்ற காடுகளுக்குள் பயணித்து, விலங்குகளை நெருங்கி அப்போதைக்கு கையிலிருந்த புகைப்படக்கருவிகளைக் கொண்டு புகைப்படங்களை எடுத்து இன்று ஒரு பெரும் பொக்கிஷமாக நமக்கு விட்டுப் போயிருக்கிற கானுயிர் புகைப்படக் கலைஞர்கள் பலரைப் பற்றியும் நாம் அறிந்துகொண்டதில்லை.

 

மேற்கத்திய நாடுகளைப் போலல்லாமல் இன்றைக்கும் இந்தியாவில் கானுயிர் புகைப்படக் கலை என்பது போதிய அளவு வளர்ச்சி பெறாத ஒரு துறையாகவே இருந்து வருகிறது. முக்கியமான ஒரு காரணம் கானுயிர் புகைப்படங்களின் மீதான பொதுமக்களின் ரசனை வளர்த்தெடுக்கப் படாததுதான். இன்றும்கூட அதுவொரு பொழுதுபோக்கு அம்சமாகவே பெரிதும் அணுகப்படுகிறது.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை தியோடர் பாஸ்கரனின் தொடர்ந்த முயற்சிகளின் காரணமாகவே கானுயிர்கள் சொல்லாடல்களின் குறைந்தபட்ச அறிமுகம் சாத்தியமாகியுள்ளது. தமிழகத்தின் முக்கியமான கானுயிர் வல்லுநராகவும் புகைப்படக் கலைஞராகவும் திகழ்ந்தவர் எம். கிருஷ்ணன். அவரைப் பற்றி தமிழில் வெளியாகியுள்ள கட்டுரைகளும் குறிப்புகளும் அவருடைய அசலான ஆகிருதிக்கு போதிய நியாயம் செய்யாதவை என்றே தோன்றுகிறது.

 

தமிழகத்தில் அறியப்படாத இன்னொரு கானுயிர் புகைப்படமேதை டிஎன்ஏ பெருமாள்.

 

1932ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி தஞ்சையில் பிறந்தார் டி என் ஏ பெருமாள்.பொ ற்கொல்லரான அவரது தந்தை நடேசன் ஆசாரி தொழில் நிமித்தமாக பெங்களுரிலேயே  வசித்திருந்தார்.  பிறந்ததுமே  தாயைஇழந்த பெருமாள் அறிந்ததெல்லாம்  தன் தந்தையாரை மட்டுமே.

தந்தையின் மரணம் பெருமாளை மீள முடியாத ஒரு சுழலில் தள்ளியது. தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சரிவுடன் குடும்ப பாரத்தையும் சுமக்க நேர்ந்தது. சிறுவயதிலேயே வேட்டையர்களின் சாகசங்கள்  குறித்த புத்தகங்களை பெருமாள் ஆர்வத்துடன் வாசிப்பதுண்டு. குடும்பச் சூழலிலிருந்து தன்னை தற்காலிகமாக  விடுவித்துக் கொள்ள பெருமாள் காடுகளை நாடலானார். வேட்டையாடுமளவுக்கு பொருளாதார சூழல் இல்லை என்றாலும் காடுகளில் அலைந்து விலங்குகளை காணும் ஆர்வம் இருந்தது.  இந்த தணியாத ஆர்வம் அவருக்கு நல்ல நண்பர்களை கொண்டு சேர்த்தது. இதன் மூலமாக துப்பாக்கி சுமந்து வேட்டையாடும் அவரது ஆசை நிறைவேறியது.

 

கானுயிர்களைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கியது 1960ம் ஆண்டு.  விலங்குகளை வேட்டையாட காட்டுக்குள் புகுந்த பெருமாளை துப்பாக்கியை கீழேப் போட்டுவிட்டு கேமராக்களை சுமக்கும் புகைப்படக் கலைஞராக மாற்றியவர் இந்திய கானுயிர் புகைப்படக் கலையின் தந்தை என்று போற்றப்படும் ஓ சி எட்வர்டஸ்.

 

வெகுநாள் வரையில் சொந்தமாக கேமரா ஒன்றை வைத்துக்கொள்ள முடியாத பொருளாதார சூழலிலிருந்த பெருமாளின் வாழ்வில் இன்னொரு திருப்புமுனை,  கர்நாடகாவிலுள்ள சந்தூர் சமஸ்தானத்தின் இளையராஜா எம் ஒய் கோட்பொடேவுடன் ஏற்பட்ட நட்பாகும். கர்நாடகாவில் தேவராஜ் அர்ஸ் தலைமையிலான  காங்கிரஸ்             அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் எம் ஒய் கோட்பொடே.  இந்திய அளவில் குறிப்பிடத்தக்க கானுயிர் புகைப்பட நிபுணர். அவருடைய  வேண்டுகோளின்  பேரில், நட்புரீதியாக அவருடன் இணைந்து புகைப்படக் கலை சார்ந்த பணிகளில் ஈடுபட்ட  பெருமாள்  25  ஆண்டுகள்  தொடர்ந்து தன்னை அப்பணியில் அர்பணித்துக்கொண்டிருந்தார்.

 

சரணாலயங்கள் என்கிற அரசமைப்பு உருவாக்கப்படாத காலகட்டத்தில், விலங்குகள் சர்வசாதாரணமாக சுதந்திரமாக காடுகளில் சுற்றித் திரிந்த காலகட்டங்களில் இந்தியாவின் காடுகள்தோறும் திரிந்து அலைந்து புகைப்படங்கள் எடுத்தவர் பெருமாள். இந்திய கானுயிர் புகைப்படக்கலையின் கருப்பு வெள்ளை சகாப்தத்தில் டி.என்.ஏ பெருமாள் ஒரு மாபெரும் புகைப்பட மேதை. புகைப்படங்களை எடுப்பதில் மட்டுமல்லாமல் அவற்றை முறையாகவும் நுட்பமாகவும் அச்சிடுவதில் பல புதிய முறைகளுக்கு வித்திட்டவர் அவர். ஆந்தைகளை படமெடுக்க அவர் மேற்கொண்ட பரிசோதனைகளும், கையாண்ட முறைமைகளும் இன்றளவும் பேசப்படுபவை. பல சர்வதேச அங்கீகாரங்களையும் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கும் டி.என்.ஏ பெருமாள் தமிழகத்தில் கானுயிர் சார்ந்த ஒரு குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே அறியப்பட்டிருந்தவர்.

 

உலக அளவிலும் இந்திய அளவிலும் கானுயிர் புகைப்படக்கலையின்  முன்னோடி சாதனையாளர்களில் ஒருவராய் விளங்கிய  டி என் ஏ பெருமாளின் பலம் அவரது நேர்மையும் எளிமையுமே. எடுத்துக் கொண்ட பணியை சீர்பட செய்வது, எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாமை, தான் அறிந்ததை பிறரும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதில் காட்டும் ஈடுபாடு,  தன்னை மட்டுமே பெரிதாக முன்னிறுத்திக் கொள்ளாமை என்று அவருடைய நற்குணங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகமுடியும்.

 

”ஒரு உயிரினத்தை படமெடுக்கும்போது படத்தின் அளவில் அதிகபட்சம் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே அதன் உருவம் அமையவேண்டும். மிச்சமுள்ள பகுதி அதன் இருப்பிடத்தைக் காட்டவேண்டும். குறிப்பிட்ட அந்த உயிருக்கும் சூழலுக்குமான உறவை அறிய இது உதவும்” என்பது அவரது அளவுகோல். பின்னணி முழுவதும் மங்கியிருக்க ஒற்றைக் கிளையின் மேல் அமர்ந்திருக்கும் பறவையின் படம் என்பது உண்மையான ஒன்றல்ல என்பது அவர் எண்ணம். எடுக்கப்போகும் படத்தைவிட அது இலக்காக்கும் உயிரினத்தைத் தொந்தரவு செய்யாதிருப்பது மிக முக்கியமானது என்பது அவரது கொள்கை. படமெடுக்க முனையும்போது  நாம் அங்கிருப்பது அதற்கு இடைஞ்சலாக உள்ளதென்பதை அதன் உடலசைவுகளிலிருந்தே கணிக்கமுடியும்.  எனவே, இலக்குக்கும் நமக்குமிடையே கௌரவமான இடைவெளியை எப்போதும் பேணவேண்டும் என்றே வலியுறுத்துவார்.

 


இன்றைய போட்டிச் சூழலில் நேர்மை என்பதும் அரிதான ஒன்றுதான். தன்னுடைய வாழ்நாளையே கானுயிர் புகைப்படக் கலைக்காக அர்ப்பணித்திருந்த அவர் அதன் மூலம் எந்தவொரு பெரிய வருமானத்தையும் ஈட்டியிருக்கவில்லை. எத்தகைய சூழலிலும் தான் நம்பிய உண்மையை நேர்மையை அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை.

 

டி என் ஏ பெருமாளின் நண்பரும் புரவலருமான கோர்போடேவால் எடுக்கப்பட்ட மழையில் நனையும் யானையின் கருப்பு வெள்ளைப் படம் மிகவும் பிரசித்திபெற்றது. பெருமாளும் இவரும் காட்டுக்குள் சென்றிருந்த சமயம் இவர்களது வாகனத்தின் டயர் பழுதுபட்டுள்ளது. அதை சீராக்குவதற்காக காத்திருந்த சந்தர்ப்பத்தில் அந்த யானை எதிரில் வந்துள்ளது. இருவரின் கையிலுமே கேமராக்கள். இருவருமே தொடர்ந்து படமெடுக்கிறார்கள். பெய்யும் மழையில் அசைந்து வரும் யானை. கோர்போடே எடுத்த யானையின் படம் பிரசுரம் பெற்று பாராட்டுகளையும் பல பரிசுகளையும் பெற்றது. அதேசமயத்தில் தான் எடுத்த படத்தை பெருமாள் எங்குமே பயன்படுத்தவில்லை. கோர்போடே எடுத்த படம் ஏற்கெனவே பாராட்டப் பெற்று கொண்டாடப்படும்போது அதே சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட அதே யானையின் இன்னொரு படத்தை நான் எடுத்தேன் என்று வெளியிடுவது முறையல்ல என்று விளக்கம் கொடுத்தார்.

 

கானுயிர் குறித்த புத்தகங்களை மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டிருந்தவர் டி என் ஏ பெருமாள். யூமா வாசுகியின் ரத்த உறவு நாவல் அவரை மிகவும் தொந்தரவு செய்த ஒன்றாக குறிப்பிட்டிருக்கிறார். அவரிடமிருந்த பல அரிய நூல்களை நண்பர்கள் பலருக்கு அன்பளிப்பாகவே வழங்கியிருக்கிறார். காலமாவதற்கு இரண்டு நாட்கள் முன்புகூட தனது சீடரும் நண்பருமான நுண்ணுயிர் புகைப்படக் கலைஞர் ஜெயராமிடம் ஜோனாத்தன் ஸ்காட்டின் THE BIG CAT MAN புத்தகத்தைப் பற்றி வெகுநேரம் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்.

 

டி என் ஏ பெருமாளின் சாதனைகளை சர்வதேச புகைப்பட உலகம் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு அவரை அங்கீகரித்தது. The International Federation of Photographic Art என்கிற அமைப்பின் AFIAP - Associate என்ற அங்கீகாரத்தையும் அதற்கடுத்து Fellowship அங்கீகாரத்தையும் Master FIAP என்ற உயரிய அங்கீகாரத்தை பெற்றவர் டி.என்.ஏ பெருமாள்.

 

இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற Royal Photographic Societyயினுடைய Associateship 1977ல் வழங்கப்பட்டது.          அடுத்த ஆண்டிலேயே, 1978, அதே அமைப்பினுடைய Fellowship தகுதியையும் பெற்றார்.

 

கர்நாடக அரசு இவரது பணியை அங்கீகரிக்கும்முகமாக 1995ம் ஆண்டு லலித்கலா அகாதமி விருதை வழங்கி கெளரவித்தது.

 

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் 250க்கும் மேற்பட்ட விருதுகளையும் அங்கீகாரங்களையும்  பெற்றிருக்கும்             இவருடைய புகைப்படங்கள் சர்வதேச அளவில் நடைபெற்ற 1500க்கும் மேற்பட்ட கண்காட்சிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டு  அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

 

உலக அளவில் நடைபெற்ற பல்வேறு கானுயிர் புகைப்படக் கண்காட்சிகளில்  நடுவராக பணியாற்றியுள்ளார்.

 

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை Federation of International Photographers அமைப்பால் நடத்தப்படும் கானுயிர்       புகைப்படங்களுக்கான உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற அணியில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இடம் பெற்றிருக்கிறார். தொடர்ச்சியாக நான்கு முறையும் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது.

 

தனது நண்பர்களுக்காக கானுயிர் புகைப்படங்கள் அடங்கிய பல புத்தகங்களை பதிப்பித்து தந்தவர் டி என் ஏ பெருமாள். Photographing Wildlife in India என்ற புத்தகத்தின் ஆசிரியராக விளங்கினார். Some South Indian Butterflies, Encounters in the Forest ( An anthology of Best Wild life photographes of Karnataka ) ஆகிய புத்தகங்களின் இணை ஆசிரியர். எம்.கிருஷ்ணனின் புகைப்படங்கள் தொகுப்பான Eye of the Jungle நூலின் பதிப்பாசிரியர். இத்தனை கானுயிர் நூல்களை பதிப்பித்திருந்தபோதும் தான் எடுத்த புகைப்படங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை அவரால் இங்கே பதிப்பிக்க முடியாமல்போனது  அவலம்.  சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் “Reminiscences of a Wildlife Photographer” என்ற அவரது நூலைப் பதிப்பித்தது. இந்தியாவில் அது விற்பனைக்கு இல்லை.

 

சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் அங்கீகாரங்களைப் பெற்றிருந்த டி.என்.ஏ பெருமாள் நமது அண்டை மாநிலங்களான கேரளாவிலும் கர்நாடகத்திலும் பிரபலமான முகம். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சில நூறு பேர்களுக்கு மட்டுமே அறிமுகமானவர்.  இருந்தவரைக்கும் தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதில் எந்தவித முனைப்பும் காட்டாமல் எப்போதும்போல அடக்கமாகவே இருந்தார். தனது சாதனைகள் குறித்து சொல்லும்போதுகூட மெத்த பணிவுடனே குறிப்பிட்டிருக்கிறார்.

 

மரணம் நமக்கு புதிதல்ல. ஆனாலும் பெருமரங்கள் வீழும்போது அவை விட்டுச்செல்லும் வெறுமையையும் துக்கத்தையும் கடந்துபோவது சுலபமாய் இல்லை. டி என் ஏ பெருமாள் காலமாகிவிட்டார். பிரதிபலன்களைப் பற்றிய எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி தனது சுயதிருப்திகாகவே அவர் காட்டில் அலைந்தார். கானுயிர்களை படமெடுத்தார். ஆனால் இன்று அவை விலைமதிப்பற்ற ஆவணங்கள். வரும் தலைமுறைகளுக்கான கலைக் களஞ்சியங்கள். நமக்கு அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் நிறையவே இருந்தன. அவரும் இத்தனை காலமும் பொறுமையுடன் காத்திருக்கவே செய்தார். நாம்தான் எப்போதும்போல அவரைப் பொருட்படுத்த தவறிவிட்டோம்.


( காலச்சுவடு பிப்ரவரி 2017இல் வெளியான கட்டுரை )



Tuesday, 16 December 2025

பழனிச்சாமிகளின் கதை - சு வெங்குட்டுவனின் ‘வெறுங்கால் நடை’ சிறுகதைத் தொகுப்பு


 மணல் வீடு இதழைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ‘ரிஷப் பந்தின் ஆட்டம்’ என்ற கதையின் தலைப்பு உடனடியாக கவனத்தைக் கவர்ந்தது. எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். முன்பின் அறிமுகமில்லாத பெயர். ஆனால், ரிஷப் பந்த் எனக்குப் பிடித்த இளம் கிரிக்கெட் வீரர். எனவே அந்தக் கதையை வாசிக்கத் தொடங்கினேன். ரிஷப் பந்தின் முக்கியமான ஒரு ஆட்டத்தை, மிக முக்கியமான தருணத்தில் அவரை கைவிட்டுப் போன அதிர்ஷ்டத்தையும், சரியான ஒரு தருணத்தில் அதிர்ஷ்டத்தை கைபிடிக்க மறுத்த ஒருவனின் வாழ்வையும் இணைத்து மிகக் கச்சிதமாக எழுதப்பட்டிருந்த கதை. அந்தக் கதையின் இன்னொரு சிறப்பம்சம் கொங்கு கிராமத்தின் வாழ்வியல் கூறுகளை மிக இயல்பாகவும் நுட்பமாகவும் சொல்லியிருந்தது. குறிப்பாக திருப்பூர் எனும் பெரும் தொழில் நகரத்தை ஒட்டியும் அடுத்துமுள்ள சிற்றூர்கள், கிராமங்களில் உள்ள வாழ்வின் பல்வேறு அம்சங்கள் நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருந்தன.

கொங்கு வட்டார வாழ்வியல் என்று சொல்லும்போதே க.சீ.சிவகுமார், என்.ஸ்ரீராம் ஆகியோரின் பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வரும். காங்கயம், வெள்ளகோயில் வட்டாரத்தை தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தியவர்கள். கொங்கு வட்டார மொழியை புனைவு இலக்கியத்துக்குள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கச் செய்பவர்கள். சு.வெங்குட்டுவனை அவர்களது தொடர்ச்சியாக குறிப்பிட முடியும்.

மணல்வீடு வெளியிட்டுள்ள அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘வெறுங்கால் நடை’. தொகுப்பில் பதிமூன்று கதைகள் உள்ளன. இந்த பதிமூன்று கதைகளும் குறிப்பிட்ட கொங்குப் பகுதியில் தொழில்களிலும் மக்களின் வாழ்க்கைப் போக்கிலும் ஏற்பட்ட சமூக மாற்றங்களை மிகத் துல்லியமாகக் காட்டுகின்றன.

கதைக்களன் திருப்பூரையொட்டி தென்கிழக்கில் அமைந்துள்ள மேட்டாங்காட்டு பகுதிகள். மானாவாரி விவசாய நிலங்கள். அதிகமும் கிணற்றுப் பாசனத்தை நம்பியிருப்பவை. வெங்கச்சாங்கற்களும் வெள்ளை வேலா மரங்களுமாய் காய்ந்திருக்கும் பூமி. திருப்பூர் பெரும் தொழில் நகரமாக மாறுவதற்கு முந்திய காலத்தில் கிராமங்களும் அங்கிருந்த மனிதர்களும் பூமியை நம்பியிருந்தனர். வலுவான கிணற்றுப் பாசனத்தால் தென்னந்தோப்புகளும் விவசாயமும் சாத்தியமாயின. பருவமழையை நம்பியிருக்க முடியாத நிலையில் கிணறுகள் தோண்டப்படும். இருபதடி கிணற்றில் ஊறும் தண்ணீர் வெள்ளாமைக்குப் போதாதென்று கிணற்றை இன்னும் இருபதடி ஆழப்படுத்த விவசாய வங்கியில் கடன். அந்தக் கடனைத் திட்டமிட்டு அடைப்பதற்குள் ஏராளமான இடைஞ்சல்கள். எதிர்பார்த்த விலைக்கு விளைபொருளை விற்க முடியாது. ஒரு போகத்தில் அமைந்ததுபோல அடுத்தடுத்த போகத்தில் பயிர் விளையாது. கடனும் வட்டியும் பெருகியபடியே இருக்க ஆழ்குழாய் கிணறு தோண்ட அடுத்த கடன். முன்னூறு அடியில் தொடங்கி எண்ணூறு அடி வரை நிலத்தைத் துளைத்து குழாய்கள் இறங்கும். பூமியெங்கும் சாம்பல் மேடுகள் குவியும். நீர் கொடுத்த குழாய்களும் பொய்த்துப் போகும். வங்கிக் கடனை அடைக்க பொன்னும் பொருளும் போய் கடைசியில் பூமியை விற்க நேரிடும்.

பூமியை நம்பியிருந்தவன் அடுத்த வேளைப் பிழைப்புக்கு மாற்று வழியைத் தேடித்தான் ஆகவேண்டும். திருப்பூர் பனியன் தயாரிப்புக் கூடங்கள் சுற்றுவட்ட கிராமங்களிலிருந்து உழைக்கும் கரங்களை உற்சாகத்துடன் வேண்டின. நிலத்தில் உழைத்தவர்களும் விவசாயத்தை கைவிட்ட நில உடமையாளர்களும் திருப்பூரை நோக்கிச் சென்றனர். குறிப்பிட்ட வேலை நேரம், சனிக்கிழமையானால் சம்பளம், சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று அனைவருக்குமான சமாதானங்களை உறுதி செய்த தொழில். இடுப்பு வேட்டியுடன் வேர்வை சிந்தி நிலத்தில் உழைத்தவனுக்கு போட்ட உடுப்பு மடிப்பு கலையாமல் நிழலில் வேலை செய்யும் சுகமும் கிடைத்த கூலியும் பெரிய ஆசுவாசமாக அமைந்தது. சீட்டு பிடித்தார்கள், டிவிஎஸ் 50யில் சீறியபடி போனார்கள், கன்னங்கள் மினுமினுக்க சிகரெட்டும் வார இறுதியில் மதுவுமாய் வாழ்க்கையை அனுபவித்தார்கள். இன்னும் சிறிது ‘வேக்கானத்து’டன் இருந்தவர்கள் சிறிய அளவில் உபதொழில்களில் இறங்கி வளம் பெருக்கினார்கள்.

பனியன் தொழிலுக்கு மாற்றாக, உள்ளூரிலேயே பிழைப்பதற்கான வழியாக அமைந்தது பவர்லூம் கூடங்கள். யாரிடமும் கைகட்டி நிற்க வேண்டாத சொந்தத் தொழில்.  இரவும் பகலுமாய் தறியோட்டினால் சம்பாதித்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை. இரண்டு நாலாகி நாலு எட்டாகி கூடங்கள் பெருத்து கூலிக்கு ஆட்களை வைக்கும்போது கூலி உயர்வு, போராட்டம், கொடி பிடித்தல் என்று பிரச்சனைகளும் வரத்தானே செய்யும். காதை அடைக்கும் தறிச் சத்தத்தில் பாடுபட்டவர்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியாய் பெண்கள் அருகிருக்கும் பனியன் தொழிற்கூடங்களில் வேலை பார்ப்பது இயல்பாகவே பிடித்திருந்தது. தறிக்கூடங்களை நீங்கி பனியன் கூடங்களுக்கு தடம் மாறினார்கள்.

பனியன் கூடங்களுக்கோ தறிக் கூடங்களுக்கோ சென்று உழைக்க முடியாதவர்கள், விரும்பாதவர்கள் வேறு சில எளிய தொழில்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஜோசியம், ஜாதகம் பார்ப்பது, வாஸ்து ஆலோசனைகள், நியூமராலஜி, நேமாலஜி என்று பல தினுசுகளைக் கொண்டது அவ்வாறான ஒரு தொழில். சரிவும் தோல்வியும் வரும்போது துவண்டு போகும் மனிதர்களுக்கு யாரேனும் ஒருவர் ஆறுதல் சொல்லவும் மீட்சிக்கான பாதையைக் காட்டவும் தேவைப்படுகிறார்கள். பலிக்கிறதோ இல்லையோ அந்த நேரத்துக்கு அவ்வாறான வார்த்தைகள் தேவைப்படுகிறது. அந்தத் தெம்பில்தான் அடுத்த அடியை எடுத்து வைக்கிறார்கள்.

உழைக்கும் பூமியிலிருந்து வெளியேறும் பழனிச்சாமிகள் வெங்குட்டுவனின் கதைகளில் கட்டிங் மாஸ்டர்களாக, பேட்லாக் டெய்ல்ர்களாக, பவர்லூம் தறிக்காரர்களாக, லைனில் பணம் வசூலிக்கும் பைனான்சியர்களாக, ஜோசியர்களாக வெவ்வேறு தோற்றங்களுடன் உலவுகிறார்கள். அந்தந்த நேரத்துக்கு அமையும் வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்தப் பழனிச்சாமிகள் சந்திக்க நேரும் ஆகப்பெரிய சிக்கல் உரிய நேரத்தில் வாழ்க்கைத் துணைநலம் வாய்க்காததுதான். ஏக்கரா கணக்கில் பூமி, உக்காந்து தின்னாலே ஏழு தலைமுறைக்கு தாட்டும் அளவுக்கு சொத்துபத்து, சுத்துபட்டு கிராமங்களில் செல்வாக்கு என்றெல்லாம் இருந்தும் இளைஞர்கள் மணம் முடிக்க பெண்கள் கிடைப்பதில்லை. பழனிச்சாமிகளுக்கு பெண் கிடைக்காமல் போனதற்கு காரணம், எண்பதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரையிலும் வயிற்றில் இருக்கும் சிசுக்கள் ஆணா பெண்ணா என்றறியும் ஸ்கேன் முறை புழக்கத்தில் வந்து பெண் குழந்தைகளை சிசுவிலேயே அதிக அளவில் அழித்ததுதான் என்கிறார் வெங்குட்டுவன். உரிய வயதில் பெண் கிடைக்காமல், புரோக்கர்களையும் திருமண தகவல் மையங்களையும் ஜோசியம், பரிகாரங்கள், பூசைகளையும் நம்பிக்கையுடன் அணுகி, விதவை விவாகரத்து ஆனவர் என்று யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று எல்லா சமரசங்களுக்கும் தயாராக, பரிதாபமான நிலையில் இருக்கும் பழனிச்சாமிகள் இரண்டாம் ஜாமத்தில் சித்தர் குகையில் பொட்டுத்துணியில்லாமல் விரதமிருக்கவும், எருமைக் கடாக்களை வளர்த்து மேய்க்கவும்கூட தயாராக இருக்கிறார்கள்.

பெண் கிடைக்காத பழனிச்சாமிகளின் கதை இப்படியிருக்க, கட்டிக்கொள்ள வாய்த்த அதிர்ஷ்டசாலி பழனிச்சாமிகளுக்கோ அதை ஆண்டு அனுபவிக்க முடியாதது அடுத்த சிக்கல். கட்டிக் கொண்டவனை நிராகரிக்க பெண்களுக்கு காரணங்கள் பல உண்டு. அவற்றில் சில விநோதமானவையும்கூட. பெரிய மச்சானைப் போல புல்லட் ஓட்டத் தெரியவில்லை என்பது ஒரு காரணம். இன்னும் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு தன்னை நிராகரிக்கிறான் என்பது இன்னொரு காரணம்.

கிட்டியவர்களும் கிட்டாதவர்களும் மனச் சரிவை நேர் செய்வதற்குத்தானே ஊரெங்கும் திறக்கப்பட்டுள்ளன டாஸ்மாக்குகள். நிலத்தை இழந்தவனும் கல்யாணம் அமையாதவனும் அமைந்து வாழ முடியாதவனும் போதையில் ஆழ்ந்து துயரை மறக்கிறார்கள் என்றால் உழைத்துக் களைத்தவனும் அன்றாடத்தின் ஒரு பகுதியாக குடித்துப் பழகியவனும்கூட அதே போதையைத்தான் கொண்டாடுகிறார்கள். டாஸ்மாக்குகள் இன்று பண்பாட்டின் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக, அன்றாட வாழ்வின் முக்கிய காரணியாக அமைந்திருக்கும் சித்திரத்தை இக்கதைகள் நெடுக காணமுடிகிறது.   

வெங்குட்டுவன் காட்டும் கதை மாந்தர்கள் யதார்த்தமானவர்கள். பாசாங்கற்றவர்கள். அவர்களின் தோற்றத்தை அவர் பெரிதாக விவரிக்காதபோதும்கூட கதைகளில் அவர்களது நடமாட்டத்தை நம்மால் உயிர்ப்புடன் உணரமுடிகிறது. சூழலையும் சம்பவத்தையும் சொல்லும்போதே ஆரெக்ஸ் பழனிச்சாமி, மிஸ்டிக் சுப்ரமணி, ரங்கமணி, சாமிநாதன், சிந்தாமணி, முத்துக்குட்டி போன்ற கதாபாத்திரங்கள் கச்சிதமான உருவத்துடன் உடல்மொழியுடன் திரண்டு வருகின்றன.  

கொங்கு பிரதேசத்தின் நிலவளத்தையும் சூழலையும் வெகுசில சொற்களில் உருவாக்கிக் காட்டும் லாவகத்தையும் இக் கதைகளில் காணமுடிகிறது. ‘இப்போது வெயில் கொஞ்சம் இளகியிருந்தது. செம்மறிகள் மரத்தடிவிட்டு விலகி மேயத் துவங்கியிருந்தன. கரிக்குருவியொன்று பெட்டையாட்டின் மூத்திர வாடையைக் காற்றுவெளியில் மோப்பம்பிடித்து நின்றுகொண்டிருந்த செம்மறிக்கிடாயின் பிடரி மேலமரந்து அதன் காது உண்ணியைக் கொத்த முயற்சித்துக் கொண்டிருந்தது. மாடுகளின் காலடிகளில் இப்போது கொக்குகள் தென்பட்டன.’ ‘துத்திச் செடிகளின் மஞ்சள் பூக்கள் கருப்பணசாமி சிலைக்கு வைத்திருக்கும் சந்தனப் பொட்டுகளை நினைவூட்டின.’, ‘தென்புறம் கிழமேலாக நீண்டு கிடந்த கிளுவை வேலிக்கு அப்பாலிருந்த கொறங்காட்டு மரங்களுக்குள்ளிருந்து செம்போத்துகளும் கொன்னவாய்க் குருவிகளும் உற்சாகக் குரலெழுப்பியபடியிருந்தன. காரைப் புதர்களடர்ந்த பள்ளத்துக்குள்ளிருந்து மயில்கள் அகவுவதும் கேட்டது. வேலி வேப்பனிலிருந்து இறங்கிய அணிற்பிள்ளை சட்டெனத் திரும்பி வாய்க்காலுக்குள் இறங்கி ஏறி மறுபுறமிருந்த கிளுவை வேலிக்குள் புகுந்து மறைந்தது.’

இக்கதைகளை மேலும் நெருக்கமாக உணர்த்தும் கொங்கு பிரதேச மொழி வெங்குட்டுவனின் இன்னொரு சிறப்பு. உரையாடல்களிலும் சித்தரிப்பிலும் வெகு இயல்பாக பொருந்தி கதைகளுக்கு சுவையையும் அழுத்தத்தையும் சேர்க்கின்றன. முக்கியமாக சித்தரிப்பின் வழியாக அல்லாமல் உரையாடல் வழியாக கதைகளை நகர்த்தும்போது இவ்வகையான மொழித்திறன் பலமாக கைகொடுக்கிறது.

தொகுப்பிலுள்ள இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம் கதைகளுக்கு வெங்குட்டுவன் இட்டிருக்கும் தலைப்புகள். ‘கடன் மீண்டார் நெஞ்சம்’, ‘ஈஷோபதேசம்’, ‘ஆரெக்ஸ்’, ‘சிறு கையளாவிய வாழ்வு’, ‘எருமை நாயகம்’, ‘ஆபரேசன் சிந்தாமணி’ என சூட்டப்பட்டிருக்கும் தலைப்புகளில் உணரமுடிகிற மெல்லிய நகையுணர்வை சித்தரிப்புகளிலும் உரையாடல்களிலும்கூட காணமுடிகிறது.  இழப்புகளைத் தொடர்ந்து துயரங்களைச் சுமந்து அன்றாடங்களைக் கடத்தும் எளியோர்களின் கதைகள் என்றாலும் துக்கத்தின் பாரத்தை உணராமல் புன்னகைத்தபடியே வாசித்துக் கடக்கச் செய்யும்படி இந்த நகையுணர்வை கையாண்டிருப்பதில் வெங்குட்டுவனின் புனைவுத் திறன் மேலோங்கியுள்ளது.

0

வெறுங்கால் நடை – மணல்வீடு வெளியீடு – பிப்ரவரி 2022

 

 

   

Monday, 1 December 2025

கவிதையும் ஞானமும் 6 - தனிமையின் அர்த்தம்



 



0

திக்கற்றோர்க்கு

----------------------

யாராவது யாருடனாவது

இருக்கத்தான் வேண்டும்

அப்படித்தான்

எலும்பில் எழுதப்பட்டிருக்கிறது

 

அவன் இவளோடும்

அவள் இவனோடும்

அவன் இவனோடும்

அவள் இவளோடும்

அவர்கள் இவர்களோடும்

அவர்கள் அவர்களோடும்

 

தோள் தேடுவதும்

மடி சாய்வதும்

உயிரின் அனிச்சை

ஆகவே

தழுவலின் நகக்கீறல் சகித்து

யாராவது யாரோடாவது

இருக்கத்தான் வேண்டும்

 

பூமியில் ஒருவரது பாத்தியதை

அழிக்கமுடியாதது

என்றாலும் நேர்கிறது

யாரோ ஒருவர்க்கு

யாருமே இல்லாமல் போய்விடுவதும்

 

நாம்

தனிமை பழகத்தான் வேண்டும்

கைவிடப்பட்ட

காட்டுக்கோவிலில்

வீற்றிருக்கும்

சிறுதெய்வத்தைப் போல

0

குணா கந்தசாமியின் இந்தக் கவிதை உமா மகேஸ்வரியின் நாவல் தலைப்பை நினைவுபடுத்துகிறது ‘யாரும் யாருடனும் இல்லை’. உண்மையில் யாரும் யாருடனும் இல்லைதான். ஆதியிலும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். ஆதாமும் ஏவாளும் ஒருவரையொருவர் காணும்வரையிலும் தனித்தனியாகத்தான் இருந்திருப்பார்கள். பின் ஆதியிச்சையின் விளைவாக உயிர்கள் பெருகி ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் நிலை உண்டாகியிருக்கும். உயிர்காத்தல், உணவு, உறைவிடம், உடைமை காத்தல் என்று சுயநலம் சார்ந்த தேவைகளுக்காய் உருவான இந்த ஏற்பாடு குடும்பம், குழு, கூட்டம் என அமைப்புகள் உருவாக வழிவகுத்தது.

மற்றபடி விதிவிலக்கின்றி அனைவரும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அனுபவிக்க வேண்டிய ஒன்று தனிமை. அனுபவிப்பது என்றாலே சுகம், துக்கம், வாதை, வலி, இம்சை என்று எல்லாமும் இருக்கும். தனிமையை கொண்டாடுவோரும் உண்டு. தாளமுடியாதது என்று அஞ்சுவோரும் உண்டு.

தனிமையை மிக எளிமையாக புரிந்துகொண்டிருக்கிறோம். யாரும் இல்லாமல் தனியாக இருப்பதுதான் தனிமை. மனிதர்கள் யாரும் உடனில்லாமல் இருந்துவிட்டால் தனிமை வாய்த்துவிடுமா?

என்றால், தனித்திருக்கும்போது தனிமையில் இருக்கிறோமா என்ற கேள்வி எழும். பயணம் செய்யும் அதே பெட்டியில் அடுத்தடுத்த இருக்கையில் முன்பின் தெரியாதவர்கள் பலரும் இருக்கும்போதும் நாம் தனியாகத்தானே இருக்கிறோம். அதை தனிமை என்று வகைப்படுத்த முடியுமா? தனித்திருப்பது வேறு, தனிமை வேறு. 

‘இளையராஜாவின் இசையும் சுவையான காபியும் என் தனிமையை அழகு செய்கின்றன’ என்று எழுதுவதைப் படித்திருக்கிறோம் அல்லவா?

தனிமை எத்தகையது? ஓசையற்றதா, நிறமற்றதா, ஒளியற்றதா, எதற்கும் வசப்படாததா, வரையறைகளற்றதா? ஒலியையும் ஒளியையும் நிறத்தையும் மணத்தையும் நீக்கிவிட்ட வெளிதான் தனிமையா? நீரும் நிலமும் காற்றும் நெருப்பும் கலந்து ஒன்றாகிப்போன அந்தரவெளியா அது?

தனிமையை, தூய தனிமையை நேரடியாக சமாளிப்பதும் அனுபவிப்பதும் அத்தனை எளிதல்ல. பொதுவாக தனிமையில் இசை கேட்க விரும்புவார்கள். வாசிக்க முனைவார்கள். எழுதவும் சிந்திக்கவும் தனிமை தேவை.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்வதுண்டு. நாங்கள் அண்ணன் தம்பிகள் நால்வர், நால்வரின் மனைவியர், பிள்ளைகள் எண்மர் என்று பதினாறு பேர். கூடவே உறவினர்கள், குடும்ப நண்பர்களில் எவரேனும் சிலர் சேர்ந்து கொள்வார்கள். ஒருமுறை அவ்வாறான ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டபோது ‘மனைமாட்சி’ நாவலின் இறுதிக்கட்ட வேலையில் இருந்தேன். வேலையை ஒத்திப்போட முடியாத நெருக்கடி. எனவே, போகவேண்டாம் என்று தீர்மானித்தேன். மனைவியும் பிள்ளைகளும் புறப்பட்டுப் போனார்கள். திரும்பி வர நான்கு நாட்களாகும். அவர்கள் ஊருக்குப் போயிருக்கும் நேரத்தில் தொந்தரவு இருக்காது, நாவல் வேலைகளை முடித்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், வீட்டில் தனியாக இருந்த அந்த நாட்களில் எழுத மனம் குவியவேயில்லை. அந்த நேரங்களில் என்னைப் பெரிதும் தொந்தரவு செய்தது வீட்டின் ஓசையின்மை. குடும்பத்தினர் வீட்டுக்குள் நடமாடும் ஓசையும் சேர்ந்ததுதான் வீடு. சமையலறையில் பாத்திரங்களின் ஓசை, மிக்ஸி அரைக்கும் சத்தம், குழந்தைகளின் சிரிப்பு, சண்டை, சிணுங்கல் எதுவுமில்லாமல் வீடு வெறும் கட்டடமாக மாறிப் போகிறது. அந்த சத்தமின்மை பெரும் தொந்தரவாயிற்று. கவனத்துடன் வேலையில் ஈடுபட இயலவில்லை. வீட்டின் சத்தங்களின் நடுவே உள்ள ‘தனிமை’யே எனக்கு உகந்தது என்று அறிந்துகொண்டேன்.      

குணா கந்தசாமி இந்தக் கவிதையில் தனிமையை வேறொன்றாக வரையறுக்கிறார். உறவுகளற்றுப் போகும் நிலையை அவர் தனிமை என்கிறார். அவை உவப்பான உறவுகளாய் இல்லாமல் இருக்கலாம். கூடிக் களித்து மகிழ்ந்திருந்தபோதும் சில வேளைகளில் போட்டியோ பொறாமையோ சிறு சண்டையோ வாக்குவாதமோ ஏற்பட்டிருக்கலாம். கணவன் மனைவி, நட்பும் சுற்றமும், அண்டை அயலார் என எல்லா உறவிலும் இணக்கமும் பிணக்கும் இருக்கத்தான் செய்யும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒட்டி உறவாடிய ஒன்று இல்லாதபோது வாய்த்துவிடுவது தனிமை என்கிறார். அவ்வாறான ஓர் தனிமை தவிர்க்க முடியாதது. என்றேனும் ஓர் நாள் எல்லோரும் சந்திக்கத்தான் வேண்டும். அதைப் பழகத்தான் வேண்டும்.

இப்படி ஓர் வரையறைக்குப் பிறகு ஒரு வரியை எழுதி முடிக்கிறார் குணா கந்தசாமி.

தனிமை பழகத்தான் வேண்டும்

கைவிடப்பட்ட

காட்டுக்கோவிலில்

வீற்றிருக்கும்

சிறுதெய்வத்தைப் போல

 

இந்த இறுதி வரியின் ஒவ்வொரு சொல்லும் தனிமையின் வீரியத்தை தீவிரத்தை சுட்டுகின்றன. கைவிடப்பட்ட ஒரு கோவில் என்று நில்லாமல் ‘காட்டுக் கோவில்’ என்று துல்லியப்படுத்தும்போது அழுத்தம் கூடுகிறது. அங்கிருப்பது ஒரு தெய்வம் என்று நிறுத்தவில்லை. அதுவொரு ‘சிறுதெய்வம்’ என்று உருப்பெருக்கியால் இன்னும் நெருக்கமாகக் காட்டுகிறார். கைவிடப்பட்ட காட்டுக்கோவிலில் வழிபாடும் இல்லை, ‘வீற்றிருக்கு’ம் சிறுதெய்வத்துக்கு படையலும் இல்லை. கோவிலும் சிறுதெய்வமும் தனிமை பழகிக் காத்திருக்கத்தான் வேண்டும்.

எனக்கென்னவோ தனிமை காற்சங்கிலியிட்டு கற்தூணில் கட்டப்பட்ட களிறென்றே எண்ணத் தோன்றுகிறது.

அவரவர் தனிமைக்கு ஆயிரம் அர்த்தங்கள்.

0

நன்றி - குணா கந்தசாமி

கவிதையும் ஞானமும் 5 - வழிப்பறிச் சம்பவம்



 




உண்பதும் உடுப்பதும் துயில்வதும் எழுவதுமான அன்றாடத்தின் சலிப்புகளுக்கு நடுவே சில விசயங்கள் மட்டும் அலுப்பூட்டாதவை. கவிதைகளிலும் ஒருசில பாடுபொருட்கள் மட்டும் ஒவ்வொரு கவிதையிலும் மெருகிழக்காமல் புதிய அனுபவங்களைத் தர வல்லவை. சூரியோதயத்தைக் குறித்து ஓரிரு வரிகளேனும் எழுதாத கவிஞர்களே இல்லை.  ‘நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி, சூரியனைக் காணோம்’ என்று பசுவய்யாவும், ‘மலை விளிம்பில் சூரியனுக்குப் புராதன மனிதனின் புன்னகை’ என்று சுகுமாரனும், ‘பூமித் தோலில் அழகுத் தேமல்’ என்று பிரமிளும் உதயத்தைக் கண்டிருக்கிறார்கள்.

வெகு நீளமான கிழக்கு கடற்கரையின் வெவ்வேறு கரைகளில் ஒவ்வொரு நாளும் உதயசூரியனைக் காணவேண்டி எண்ணற்றோர் காத்திருக்கின்றனர். வானும் வெளியும் நீரும் ஒன்றுகலந்த கருநீல எல்லையை கிழித்து சாம்பல் வெளிச்சம் கசிவதில் தொடங்குகிறது அந்நாளின் அபூர்வத் தருணம். அடிவானம் முழுதும் மஞ்சள் பூசும். கொஞ்சம் குங்குமச் சிவப்பும் கூடும். மேகத் திட்டுக்களில் தீப்பிடிக்கும். பொன்மகுடத்தின் உச்சி ஒளிர எழுகதிர் தலைகாட்டும். செக்கச் சிவந்ததொரு ஒளிப்புள்ளி காணுந்தோறும் வளர்ந்து வட்டத்தட்டின் விளிம்பாக திரண்டெழும். கடலும் வானும் பித்துற்று பரவச நிறங்களை இறைக்கும். சுடரும் வளைகோடு இருபுறமும் இறங்கிச் சேர்ந்திடும். செவ்வட்டம் முழுமையுற்று சுழலும். ஏந்திய கடலின் கையிலிருந்து வானின் விரிகரங்களுக்கு தாவிய நொடியில் அந்தக் காட்சி முடிவுறும். சூரியோதயம் பார்த்தாயிற்று. உலகு மொத்தமும் அன்றாடத்துக்குத் திரும்பும். மீண்டும் மறுநாள் அதே கரைகளில் வேறு பலரும் அதே காட்சியைக் காணக் காத்திருப்பார்கள்.

காலைப் பொழுதின் அழகையும் மனத்துக்கு தரும் நிறைவையும் வாய்க்காதபோது அது ஏற்படுத்தும் ஏமாற்றத்தையும் கவிதையில் எழுதுவது வழக்கமானதுதான். நம்பிக்கை, மீட்சி, ஏமாற்றம் என்று பல்வேறு உணர்வுகளையும் சுட்டும் படிமமாக அமைந்துவிடுகிறது. ஆனால் அதுவே கண்ணையும் மனத்தையும் கொள்ளைகொள்ளும் இக்காட்சியை ஒரு வழிப்பறிச் சம்பவமாக எழுதிக் காட்டும்போது கவிதையின் சாத்தியங்களைக் குறித்த ‘அட!’ என்ற வியப்பு கூடிவிடுகிறது. 

வழிபறிக்கு வந்தவனின் முகம் தெரியாதபடி இருட்டாக இருக்கும். அல்லது முகத்தை மூடியிருப்பான். அவன் கையிலிருக்கும் அந்தக் கத்திக்கு அத்தனை வலிமை. உயிர்ப் பயம். ஒரு சிறு கீறலும் எட்டிப் பார்க்கும் துளி ரத்தமும் போதும் நம் ஆயுளுக்கும் நடுக்கம் கொடுக்க. அது நடந்துவிடுமோ என்ற பயத்தில் இருப்பவற்றை நடுங்கியபடியே எடுத்துக் கொடுத்துவிடுமோம். ‘காசு போச்சுன்னா பரவால்ல, சம்பாதிச்சுக்கலாம். உசிரு போனா வருமா?’ என்ற எளிய சமாதானமே வழிப்பறிக்காரர்களின் தேவ வாக்கு. 

வழிப்பறியின்போது அந்த நேரத்தில் நம்மிடம் உள்ள அனைத்தையும் இழக்க நேரும். பையிலிருக்கும் பணம், சங்கிலி, மோதிரம், வளையல், தோடு, கடிகாரம் என்று எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். அந்த இழப்பை அத்தனை சீக்கிரம் நம்மால் மறந்துவிட முடியாது. 

ஆனால், இந்தக் கவிதையில் ஜெ.ரோஸலின் சித்தரிப்பது போன்ற ஒரு வழிப்பறி நிகழுமானால் நாம் எல்லோருமே நம்மிடம் உள்ளதனைத்தையும் சிறிதும் பயமின்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொடுத்துவிடுவோம். கேள்விப்படுவோர் அனைவரும் தமக்கும் இவ்வாறு நடக்கவேண்டும் என்று விரும்புவார்கள். விரைவில் அது கைகூடவேண்டும் என்று இஷ்டதெய்வங்களை வேண்டுவார்கள். அன்றாடம் அப்படியொரு வழிப்பறி நிகழவேண்டும் என கடற்கரையெங்கும் அதிகாலையில் ஆட்கூட்டம் கூடிவிடும்.

கவிஞர் ஜெ.ரோஸலின் முகநூலில் கவிதைகளை எழுதுபவர். இது அவருடைய உண்மையான பெயரா, கற்பனையா என்பது தெரியாது. ஆனால், தொடர்ந்து அருமையான கவிதைகளை எழுதி வருகிறார். பெயரோ முகமோ தெரியாமலிருப்பதால் நல்ல கவிதைகளை ரசிக்காமல் இருக்க முடியாதல்லவா?

 

ஜெ.ரோஸலின், தான் வழிப்பறிக்கு ஆளான அந்தப் பாதையை நம் எல்லோருக்கும் காட்டட்டும். அந்த வழிப்பறிக்காரன் கேட்பது போல அனைத்தையும் வெளியே எடுத்துக் கொடுத்துவிடுவோம். அப்படியொரு அற்புதத்தை சாத்தியப்படுத்தியதற்காக அனைவரும் அவருக்கு காலத்துக்கும் நன்றியுடையவராக இருப்போம்.

ஆனால், பாவம் அந்த வழிப்பறிக்காரன். அத்தனை வருத்தங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வான் அவன்?

0

ஒரு வழிப்பறி சம்பவம்

 

தூரத்து மலையும் பக்கத்திலிருந்த வயல்வெளியும்

என் இரு கரங்களையும் மடக்கிப்பிடித்துக்கொண்டன.

பின்னர் ஒரு தங்கக் கத்தி வந்தது.

கைப்பிடிக்கு அந்தப்பக்கம் யாருமில்லை

ஆனால் நீலம்.

"உன் வருத்தத்தையெல்லாம் வெளியே எடு.

என்ன பார்க்கிறாய்

சீக்கிரம்..."

0

நன்றி - ஜெ.ரோஸலின்

Tuesday, 4 November 2025

மாற்றங்களும் மாறாததும் - ப.சிவகாமியின் முதல் இரு நாவல்கள்

 


ஒரு நாவலின் பணி குறிப்பிட்ட காலகட்டத்தின் வாழ்க்கையை காட்டுவதல்ல. அத்துடன் நின்றுவிடுமானால் அது ஆவணமாக மட்டுமே எஞ்சும். காலப்போக்கில் காணாமலாகும். இன்றைய வாழ்வின் கூறுகளை எடைபோடவும் ஒப்பிடவுமான விரிவான சாத்தியத்தைக் கொண்டிருக்க வேண்டும். இப்போது அடைந்துள்ள தொலைவையும் ஆழத்தையும் வகுத்துக் காட்டும் வலுவான தொடக்கப் புள்ளிகள் இடம் பெற்றிருப்பது அவசியம்.

சிவகாமியின் ‘பழையன கழிதலும்’ (டிசம்பர் 1989), ‘ஆனந்தாயி (நவம்பர் 1992)’ ஆகிய இரண்டு நாவல்களும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியானவை. இரண்டுமே அறுபது ஆண்டுகளுக்கும் முந்தைய காலகட்டத்தின் வாழ்க்கையை சித்தரிப்பவை. இந்த இரண்டு நாவல்களை இன்று புதிதாக வாசிக்கும் ஒருவருக்கு எப்படி புரிந்துகொள்வது, எதைப் பெற்றுக்கொள்வது என்ற கேள்விகள் எழும். 

இந்த இரண்டு நாவல்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் நிலமும் இந்த அறுபது ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதை மிகத் தெளிவாக பார்க்கவும் உணரவும் முடியும். நாவலின் காலத்துக்குள்ளாகவே அந்த மாற்றங்கள் சுட்டப்பட்டுள்ளன. அதிலுள்ள வேகத்தைவிடவும் பல மடங்கு வேகத்தில் மாற்றங்கள் நடந்துள்ளன. சாலைகள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், கட்டடங்கள், வாகனங்கள், உணவு, உடை என்று வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் மிக நவீனமாகவும் வேகமாகவும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

பொதுவாகவே சுலபமாகவும் விரைவாகவும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளைத் தேடுவது மனித இயல்பு. நிலைத்த வருமானத்துக்கு உத்தரவாதமில்லாத, அதே சமயம் கடினமான உழைப்பைக் கோரும் தொழில்களைச் செய்பவர்கள் தமது அடுத்த தலைமுறையினரை அத்தொழிலில் ஈடுபடுத்த விரும்புவதில்லை. தாம் பட்ட சிரமங்களை தம் பிள்ளைகள் படக்கூடாது என்னும் கரிசனம். விவசாயம், கைத்தறி நெசவு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை கவனித்தால் புரியும். இத்தகைய மாற்றத்துக்கு முக்கியமான கருவியாக விளங்குவது கல்வி. கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்திலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் நிகழ்ந்துள்ள பெரும் பொருளாதார, சமூக மாற்றங்களுக்கு கல்வியே முதன்மையான காரணம். கல்வியால் சாத்தியமான பொருளாதார மேம்பாடு வாழ்க்கைத் தரத்தில் கணிசமான மேம்பாடுகளை உறுதிப்படுத்தின. குறிப்பாக கணினி, தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் கிராமப்புற பட்டதாரி இளைஞர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

நிலத்திலும் புற வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நிகழ்ந்துள்ள இத்தகைய மாற்றங்களின் இன்னொரு பக்கத்தில் இதுகாறும் பேணப்பட்டு வரும் மதிப்பீடுகள், வரையறைகள், அணுகுமுறைகளிலும் கணிசமான மாற்றங்கள் அதிவிரைவாக ஏற்பட்டு வந்துள்ளன. முக்கியமாக பெண்களின் புரிதல்களும் அவ்வாறான புரிதல்களின் வழியாக எழும் கேள்விகளும் அழுத்தமான மாற்றங்களை வலியுறுத்துகின்றன. கல்வியும் பொருளாதார விடுதலையும் அவர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ள நம்பிக்கையும் எவரையும் சார்ந்து நிற்கத் தேவையில்லாத துணிச்சலும் அவர்களை சுயமான முடிவுகளை எடுக்கச் செய்கின்றன. கடந்த பதினைந்து ஆண்டுகளில் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமண உறவு ஆகியனவற்றில் நேர்ந்துள்ள மாற்றங்களையும் அவற்றின் விளைவுகளையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

இந்த இரு நாவல்களில் சித்தரிக்கப்பட்டுள்ள கிராமப்புற வாழ்க்கையை இன்றைய அன்றாட வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த முப்பத்தி மூன்று வருடங்களில் எத்தனை தொலைவைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். குடிநீர், கல்வி, மருத்துவம், சாலைகள், தகவல் தொடர்பு என அடிப்படை வசதிகள் இல்லாத கிராமமே இந்த நாவல்களின் களம். படிப்பறிவில்லாத விவசாயத்தைச் சார்ந்திருக்கும் எளிய மக்களின் பாடுகளை சித்தரிக்கும்போக்கில் அந்தக் காலகட்டத்தின் மனப்போக்குகளையும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இடையே எழும் மோதல்களையும் நாவல் நுட்பமாக அணுகியுள்ளது.

இந்த நாவல்களில் உள்ள குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் ஆண்களின் அதிகாரத்தின் பேரில் உருவாக்கப்பட்டவை. பெண்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்றாலும் அந்த அமைப்பில் அவர்களது பங்கு என்பது உழைப்பு மட்டுமே. அமைப்பின் அன்றாடங்களும் நடைமுறைகளும் ஆண்களால் தீர்மானிக்கப்படுபவை. மனைவி, மகள், அம்மா, தமக்கை, தங்கை, உறவினர், அண்டைவீட்டார் என்று பல்வேறு பாத்திரங்களை ஏற்றிருந்தாலும் அனைவருமே கடைபிடிப்பது ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பின் நடைமுறைகளையே.  

வெள்ளையம்மாளுக்கும் ஆனந்தாயிக்கும் உள்ள இடைவெளி என்பது சம்பிரதாயமான மாமியார் மருமகளுக்கு இடையில் ஏற்படும் ஒன்று. மாமியாருக்கான குணாம்சங்களை மருமகளான ஆனந்தாயி, விமர்சனங்கள் இருப்பினும், ஏற்றுக் கொள்கிறாள். அனுசரணையுடன் கூடிய புரிதல் அது. மருமகளை குறைசொல்லிக் கொண்டே இருப்பினும் அவளது பாடுகளையும் துயரங்களையும் அறிந்த வெள்ளையம்மாள் ஒரு பெண் என்ற நிலையிலிருந்து ஆனந்தாயிக்காக வருந்துகிறாள். இருவருமே தங்களுக்கு வாய்த்ததை விதியே என்று ஏற்றுக் கொள்கிறார்கள். தங்களது வலிகளை பொருட்படுத்தாமல் குடும்பத்துக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறார்கள்.

‘பழையன கழிதலும்’ கனகவல்லியும் நாகமணியும் பிழைப்பதற்கு வேறு வழியின்றி, தலைவிதியே என்று காத்தமுத்துவின் மனைவியர் என்ற அடையாளத்துடன் ஒரே வீட்டில் அனுசரித்து வாழ்பவர்கள். மூன்றாவதாக தங்கம் பங்குக்கு வரும்போதும் ஒப்புக்கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருப்பதில்லை. செல்வாக்கு மிக்க காத்தமுத்துவை பொறுத்துப் போவதால் உத்தரவாதமாகக் கிட்டும் வசதி வாய்ப்புகளுக்கு முன்னால் பிற எதுவும் முக்கியமாகத் தெரிவதில்லை.

இந்த இரண்டு தலைமுறை பெண்களும் ஆணாதிக்கத்தை அதன் மூர்க்கத்தையும் வன்முறையையும் எதிர்க்கவோ கேள்விகேட்கவோ முடியாத சூழ்நிலை. வறுமையும் கல்வியறிவின்மையும் அவர்களை முடக்கிப் போடுகிறது. எதிர்த்து சண்டைபோட்டு கேள்வி கேட்பதைவிட, பிள்ளைகளுக்காக வீட்டிலும் காட்டிலும் கடுமையாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றுவதே முக்கியமான கடமையாகிறது.

ஆனால், மூன்றாவது தலைமுறையான தனத்துக்கும் கௌரிக்கும் இவற்றை எதிர்த்து கேள்வி கேட்கிறார்கள். அப்பாக்களின் பெண்ணாசையை, அதற்காக எந்த எல்லைக்கும் போவார்கள் என்கிற மூர்க்கத்தை அறிந்தவர்கள். அதேயளவுக்கு அடியும் உதையும் வசைகளும் ஏற்றுக்கொண்டு குடும்பத்துக்காக பிள்ளைகளுக்காக அனைத்தையும் பொறுத்துப்போகும் அம்மாக்களையும் தெரிந்தவர்கள். தலைவிதி என்று ஏற்றுக்கொள்கிற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அல்ல. அப்பாவையும் அம்மாவையும் எதிர்க்கத் துணிகிறார்கள். கொடுமைகளை அநியாயங்களை சகித்துக் கொள்ளாமல் கேள்வி கேட்கிறார்கள். கல்வி அவர்களுக்கு தந்த தெளிவு, நம்பிக்கை. வெள்ளையம்மாவும் ஆனந்தாயியும் சந்திக்க நேரும் குடும்ப நெருக்கடிகளை தனமுமே பின்னர் அனுபவிக்க நேர்கிறது என்றாலும் அவளால் துணிந்து பிறந்தகத்துக்கு பிள்ளையுடன் வரும் துணிச்சல் இருக்கிறது. இது ஒரு தொடக்கம்தான். ஆனந்தாயி எடுக்கத் தயங்கிய ஒரு முடிவை தனத்தால் எடுக்க முடிகிறது. கேள்வி கேட்க முடிகிறது.

இதே தெளிவையும் நம்பிக்கையை ‘பழைய கழிதலும்’ நாவலின் கௌரியிடமும் சேகரனிடமும் பார்க்க முடியும். கணவனாகவும் தகப்பனாகவும் ஒரு ஆண் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான உதாரணமாய் தங்களது தந்தையை அவர்கள் இருவரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.    

கல்வியின் மூலமாக அறிதலையும் புரிதலையும் எட்டும் மூன்றாவது தலைமுறையே ஆணாதிக்கத்தின் கொடுமைகளையும் அதிகாரத்தையும் எதிர்த்து நிற்கிறது. அவ்வாறான எதிர்ப்பின் பலன்களை உடனடியாக அவர்கள் அனுபவிக்க முடியவில்லை என்றாலும் இந்த மூன்றாம் தலைமுறை இட்ட விதைதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உரிமைகளைப் பெறவும் வலியுறுத்தவுமான துணிவையும் நம்பிக்கையையும் தந்துள்ளது.  

பெரியண்ணனின் பெண்பித்து நாவலில் முக்கியமான ஒரு பேசுபொருளாக அமைந்துள்ளது. ஆனந்தாயியை மணமுடிக்கும் முன்பிருந்தே அவனுக்கு நிறைய பெண்களுக்கு தொடர்பு உண்டு. ஐந்தாவது பிரசவத்தின்போது பனிக்குடம் உடைந்து அவள் துடித்துக் கொண்டிருக்கும்போதே மச்சுக்கு வேறொருத்தியை அழைத்து வருமளவுக்கு துணிச்சல். மிகவும் ஆசைப்பட்டு சேர்த்துக்கொண்ட லட்சுமியை எதன்பொருட்டும் இழக்கத் துணியாதது அவன் மோகம். தப்பிச் செல்ல முடியாதபடி அடைத்து வைத்து வேறுவழியின்றி அவள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கான அடக்குமுறை நிறைந்த காமம். இதே அளவுக்கு பெண்களை பயன்படுத்திக்கொள்ளும் இன்னொரு கதாபாத்திரம் கங்காணியின் மூன்றாவது மகன் மாணிக்கம். ‘பழையன கழிதலும்’ காத்தமுத்து அபயம் தேடிவந்த தங்கத்தை தன்னுடன் சேர்த்துக் கொண்டபோதும் ஒப்பீட்டளவில்  பெரியண்ணன் அளவுக்கு அவன் பெண்பித்து கொண்டவனல்ல.

பெண்களின் மீதான ஆண்களின் தீரா காமத்தை மிக அழுத்தமாக சித்தரித்திருக்கும் இந்த நாவல்களில் பெண்களின் வரைமீறல்கள் போகிறபோக்கில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கங்காணியின் கொழுந்தி வேணி கதாபாத்திரம் ஒரு உதாரணம். லட்சுமி, வேணி ஆகிய இரு கதாபாத்திரங்களைத் தவிர இத்தகைய வரைமீறல்கள் கிராமத்தில் அவ்வப்போது நடப்பதை ‘குச்சி’ வைக்கும் வஹிதாவின் உதவியை நாடும் பெண்களின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ‘ஏதோ பண்டிகை தேர்னு வந்தா மொறமைக்காரிவளோட சிரிச்சி செளையாடுவாங்க. கண்டுங்காணாம காடோ கரையோன்னு பூடும்’ என்ற வெள்ளையம்மாள் கிழவியின் புலம்பலும் இத்தகைய வரைமீறல்கள் மிகச் சாதாரணமானவை, எளிதில் கடந்துபோகக் கூடியவை என்றே சித்தரிக்கப்பட்டுள்ளது. காமத்தை ஆண்கள் மிகத் தீவிர நோக்கில் அணுகும்போது பெண்கள் அதையே அவ்வளவு முக்கியத்துவம் தராத ஒன்றாய், வேண்டும்போது விலக்கத்தக்கதாய் கொள்கிறார்கள் என்ற நுட்பம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.

இன்றைய சூழலில் பெருமளவு விவாதிக்கப்படும் ஒன்றான சிறுமிகளின் மீதான ஆண்களின் பாலியல் அத்துமீறல்கள், எல்லாக் காலங்களிலும் இருந்துள்ளன என்பதையும் நாவலின் ஒரு அத்தியாயத்தில் போகிற போக்கில் எழுதப்பட்டுள்ள ஒற்றை வரி உறுதிப்படுத்துகிறது. வீட்டு வேலைக்காரன் சின்னசாமி தனத்தின் முழங்காலிலிருந்த சிறிய கட்டிக்கு அரளிப்பால் வைக்கிறான். அப்போது ‘ஒரு கை அரளிப்பாலைக் கட்டியைச் சுற்றிச் சொட்டு சொட்டாக வைக்க, இன்னொரு கை அவளது தொடையருகே சென்றது’.

சாதி அரசியலை புனைவில் வெளிப்படையாக அல்லாமல் நுட்பமாகவும் கையாள முடியும் என்பதை இந்த இரண்டு நாவல்களிலிருந்தும் புரிந்துகொள்ளலாம். அத்துடன் சாதிய முரண்களிலிருந்து விடுபட கலப்புமணம் ஒரு முக்கியமான வழிமுறையாக இருக்க முடியும் என்பதையும் ‘பழையன கழிதலும்’ சுட்டிக் காட்டியிருக்கிறது.

‘பழையன கழிதலும்’ நாவலில் சாதி சார்ந்த மோதல்களும் சண்டைகளும் வெளிப்படையாக இருக்குமளவு ‘ஆனந்தாயி’ நாவலில் இடம் பெறவில்லை. முதல் நாவலில் சாதியினருக்கிடையேயான மோதல்களை அரசியலை அதை ஆதாயமாக்கும் நபர்களை மையம் கொண்டிருந்தது. கல்வியும் விழிப்புணர்வும் புதியன புகும்போது இவற்றை எதிர்த்து குரல் எழுப்புகிறார்கள். அதுவரையிலான ஆதிக்க சக்திகளின் ஓங்கிய கைகளை எதிர்த்து நிற்கும் திறன் எழுகிறது. ஆனந்தாயி அவ்வாறன்றி ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை, ஒரு சிற்றூரின் வாழ்க்கையை சித்தரிக்கும் போக்கில் குறிப்பிட்ட காலகட்டத்தின் சமூக நடப்புகளையும் மனிதர்களின் போக்குகளையும் நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளன. முதல் நாவலில் உள்ளதைப் போல சமூக அவலங்களை சாதி சார்ந்த விமர்சனங்களை இது வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவ்வாறான கருத்துகளை கதாபாத்திரங்களின் வழியாக அன்றாட சம்பவங்களின் மூலமாக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளது.

வெளிப்படையான நேரடியான அரசியல் சித்தரிப்புகளின் காரணமாக ‘பழையன கழிதலும்’ முழுமையான புனைவாக உருவாகவில்லை. ஒருவகையில் அது அனுபவங்களையும் கருத்துகளையும் இணைத்து புனைவாக்கும் முயற்சி. ஆனால் இதற்கு மாறாக ‘ஆனந்தாயி’ முழுமையான ஒரு புனைவாக அமைந்திருக்கிறது. முதல் நாவலில் உரக்கச் சொல்லப்பட்டவை இரண்டாவது நாவலில் நுட்பமாக உணர்த்தப்பட்டுள்ளன.

அன்றைய கிராமங்களில் சாதி ஒரு சமூகக் கூறு. மேலடுக்கில் உள்ளவர்கள் சாதியினால் கிடைக்கும் அதிகாரத்தை தம் உரிமையாக எடுத்துக்கொள்வதும் கீழடுக்கில் உள்ளோர் அடங்கிப்போவதும் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே அமைந்திருந்தது. இந்த இரண்டு நாவல்களும் கிராமங்களில் நிலவிய சாதியப் பிரச்சனையை கையாண்டுள்ளன. ஆனால், இடைநிலை சாதியினருக்கும் கீழடுக்கில் உள்ள சாதியினருக்குமான மோதல்களையே இந்த நாவல்கள் மையப்படுத்தியுள்ளன. மேல் சாதியினரின் சாதிய அதிகாரம், அடக்குமுறை குறித்து பேசவில்லை. நாவல்கள் கையாண்டிருக்கும் களத்தின் எல்லைக்குள் அதற்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு என்பது காரணமாக இருக்கலாம். காலவோட்டத்தில் ஏற்பட்டுள்ள பல ஆரோக்கியமான மாற்றங்களை கணக்கிலெடுத்துப் பார்க்கும்போது சமூக அமைப்பில் சாதி குறித்த புரிதலிலும் அணுகுமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படும். ஆனால் அதற்கு மாறாக சாதியின் தீவிரமும் தீமைகளும் இன்று மேலும் ஆழமாகவும் வலுவாகவும் ஊடுருவியுள்ளன. சமூக வாழ்வின் பல்வேறு நிலைகளிலும், குறிப்பாக பள்ளி கல்லூரிகளிலும் அதன் தாக்கம் மேலோங்கியிருப்பது சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பொருளாதாரத்திலும் வாழ்வின் புற அம்சங்களிலும் ஆரோக்கியமான, வளர்ச்சிக்கான மாற்றங்களை ஏற்படுத்த உதவிய முக்கியமான கருவியாக விளங்கியது கல்வி. இடைநிலை, கீழ்நிலை சாதியினரின் வளர்ச்சியில் அதன் பங்கு முதன்மையானது. அப்படிப்பட்ட வலுவான கருவியான கல்வி, சாதியின் பெயரால் உள்முகமாக ஒன்றுதிரள்வதில் உள்ள பாதகங்களையும் அதனால் விளையும் தீங்குகளையும் புரிந்துகொள்ள உதவாத அளவுக்கு பலவீனமானதா? அரசியல் ஆதாயங்களுக்காகவே சாதிகளும் அவற்றுக்கிடையிலான பேதங்களும் பேணப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வகைசெய்ய முடியாத அளவுக்கு ஆற்றலற்றதா? கல்வியறிவை மீறிய ஒரு சக்தியாக சாதியை ஓங்கியிருக்கச் செய்யும் அரசியலுக்கு எது மாற்றாக இருக்க முடியும்? சமூகத்தின் புறவயமான வளர்ச்சிக்கு எதிர் திசையில் இவ்வாறான சாதி ஆற்றல் செயல்படுவதை எப்படித் தடுப்பது? இந்த கேள்விகளுக்கான விடைகளை சிவகாமி ஒரு நாவலாசிரியராக மட்டுமல்லாமல் அரசியலின் மூலமாகவே கண்டறிய முயன்று களச் செயல்பாடுகளில் இறங்கியுள்ளவர். கட்சி அரசியலின் வழியாக சமூக மாற்றத்தைக் கொண்டு வர முயல்பவர். அந்த வகையில் சிவகாமி ஒரு எழுத்தாளர் என்ற நிலையிலிருந்து அரசியல்வாதி, சமூகப் போராளி என்ற நிலைக்கு தன்னை நகர்த்திக் கொண்டவர்.   

ஒரு நாவலின் முதல் வரி மிக முக்கியமானது, நாவலின் போக்கை தீர்மானிப்பது என்பது இலக்கிய கோட்பாட்டில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருவது. ‘ஆனந்தாயி’, ‘பழையன கழிதலும்’ நாவல்களின் முதல் வரிகள் மட்டுமல்ல முதல் அத்தியாயங்களுமே நாவல்களின் ஒட்டுமொத்த போக்கையும் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளன.

மனைவி ஐந்தாவது பிரசவத்துக்குத் துடித்துக் கொண்டிருக்கும்போது கணவன் இன்னொரு பெண்ணுடன், தன் தாயாரும் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தும், அதே வீட்டில் கூடிக்களிக்கிறான் என்பதாக அமைந்திருக்கும் ‘ஆனந்தாயி’யின் முதல் அத்தியாயம் நாவலின் மையக் கதாபாத்திரங்கள் அனைத்தின் குணாம்சங்களையும் அவற்றுக்கிடையிலான சமரசங்கள், மோதல்கள், பிணக்குகள் என எல்லாவற்றையும் மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது. ‘பழையன கழிதலும்’ நாவலின் முதல் அத்தியாயமுமே ஒட்டு மொத்த நாவலின் மையத்தை செறிவாக உணர்த்துவதாகவே அமைந்துள்ளது. இந்த இரு நாவல்களிலும் இடம் பெற்றுள்ள பெரிதும் சிறிதுமான எல்லாப் பாத்திரங்களுமே அழுத்தமாகவும் துல்லியமாகவும் நாவலின் அடர்த்திக்குப் பங்களித்துள்ளன. ஒரு மனிதனின் கதை, ஒரு குடும்பத்தின் கதை என்ற அளவில் தோற்றமளித்தபோதும் இதுவொரு காலகட்டத்தின், சமூக நிலையின் கதை என்ற விரிவையும் கொண்டிருக்கிறது. மனிதன் தான் இருக்கும் நிலையிலிருந்து அடுத்த நிலையை எட்ட தொடர்ந்து போராடிவரும் பொதுப் போக்கையும் அதே நேரத்தில் தனக்குள் உள்ள அடிப்படை குணாம்சங்களைப் புரிந்து கொள்ளவோ அவற்றை மேம்படுத்துவதைப் பற்றிய உணர்வு இல்லாதவர்களாக இருக்கும் நிலையையும் அருகருகே நிறுத்தி இவ்விரண்டுக்கும் உள்ள முரண்களை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

மாற்றங்களினூடாக அதிவேகமாக புறவயமான வளர்ச்சிகளை எட்டிக் கொண்டிருந்தபோதும் மனிதனின் அடிப்படையான குணாம்சங்கள் மாற்றமே இல்லாமல் இன்னும் இறுக்கமாக மூர்க்கமாகத் தொடர்வதன் ரகசியத்தைப் பற்றிய அச்சுறுத்தும் கேள்விகளை இந்த இரு நாவல்களுமே வலுவாக எழுப்புகின்றன.  முப்பதாண்டுகளுக்குப் பின்னும் இந்த நாவல்கள் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு வேறு காரணங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை.

0

(‘நீலி’ இணைய இதழ் - நவம்பர் 2025இல் வெளியான கட்டுரை )

Wednesday, 1 October 2025

கவிதையும் ஞானமும் - 4 • எடிசன் புன்னகைக்கிறார்

 


அற்புத விளக்கு

பெரு விஷ்ணுகுமார்

0

நள்ளென் யாமத்தில் உறக்கம்கலைந்து தட்டுத்தடுமாறி
சுவரில் கைவைத்துத் தடவியபடி
அறையின் விளக்கை எரியவைக்க முயற்சிப்பவனிடம்
அந்தரத்தில் தொங்கும் ஒளிக்கூடையானது
அந்த நேரத்தில்போய்
சரி தவறு என்றெல்லாம் கணக்கு பார்ப்பதில்லை
இதுபோலான இக்கட்டான சூழ்நிலையிலெல்லாம்
போனால் போகட்டுமென
தவறான சுவிட்ச்சுக்கும் ஒளிர்ந்துவிடும்
அதுதான்
தாட்சண்யம் மிக்கதோர் விளக்கு

0

பள்ளி நாட்களில் ஏதேனும் ஒரு தேர்வுத் தாளில், பாஸ் மார்க்கான முப்பத்தி ஐந்துக்கு அரை மதிப்பெண்ணோ ஒரு மதிப்பெண்ணோ குறையும்போது தாளைத் தூக்கிக்கொண்டு ஆசிரியருக்கு முன்னால் கெஞ்சி நின்ற அனுபவம் பெரும்பாலோருக்கு வாய்த்திருக்கும். சிவப்பு மையால் உழுதத் தாளை வாங்கி புரட்டும்போது இஷ்ட தெய்வங்களை வேண்டி நின்றிருப்போம். அந்த குறை மதிப்பெண்ணை நிவர்த்தி செய்ய தோதான ஏதேனும் ஒரு சொல்லை, பதிலைக் கண்டுபிடித்து ‘டிக்’ அடித்து இட்டிருக்கும் மதிப்பெண்ணை ஒட்டி அரை மதிப்பெண்ணை அல்லது ஒரு மதிப்பெண்ணை சேர்த்த பின் முதல் பக்கத்தில் உள்ள மொத்த மதிப்பெண்ணை அடித்துத் திருத்தி முப்பத்தி ஐந்தாக்கும் அத்தருணத்தில் அந்த ஆசிரியருக்கு மனதார ‘நல்லாசிரியர்’ விருதளித்திருப்போம். கெஞ்சி நிற்கும் மாணவனுக்கு இந்த அரை மதிப்பெண்ணை சேர்த்து ‘பாஸ்’ பண்ண வைக்கும் பெரிய மனசு எல்லோருக்கும், எப்போதும் வாய்த்துவிடுவதில்லை.   எப்போதேனும் எவரிடத்திலேனும் வாய்க்கும் இந்த பெரிய மனுசுதான், பரிவுதான், தாட்சண்யம்தான் இவ்வுலகை இன்னும் சராசரிகளுக்கும் நடுத்தரங்களுக்கும் விபரம் போதாதவர்களுக்கும் பிழைக்கத் தெரியாதவர்களுக்குமான சின்னஞ்சிறிய இடத்தை காப்பாற்றி வருகிறது.

ஒருவழிப்பாதை என்று தெரிந்தும் விசுக்கென நொடிப்பொழுதில் தீர்மானித்து எதிரில் வரும் சரியானவற்றை திடுக்கிடச் செய்து கடந்து போகிற ஒரு இளம் புல்லட்டை நொடிப்பொழுதி நிறுத்தி பின் அதே கணத்தில் அனுமதித்து நகர்வார் போக்குவரத்து காவலர். அப்போது அவர் முகத்தில் தோன்றி மறையும் சிறு புன்னகை. அதுவரையிலான இறுக்கமான அவரது கடமை முகத்துக்கு, அடடா எங்கிருந்தோ வந்து சேரும்  அபாரமான அழகு.

முறையான ஆராய்ச்சிகளால் சோதனைக்கூடங்களில் பலகட்டங்களுக்குப் பிறகு எட்டப்பட்ட கண்டுபிடிப்புகளும் உண்டு. பூனைகள் தாவி மேசையைக் குலைத்து பொருட்களைக் கலைத்து ஏற்படும் சிறுவிபத்துகளில் விளைந்த நன்மைகள்தான் எத்தனை! திட்டமிட்டு அடைந்த குறிக்கோளுக்கும் தற்செயலால் அடைந்த ஒன்றுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு சுவாரஸ்யம். அந்தரத்தில் விளைந்த கனியைக் கண்டு ஏற்படும் குதூகலம். இன்னொரு முறை முயன்றாலும் நிகழாத அற்புதம். 

சரியானவற்றை வேறுபடுத்தி சரியாகக் காட்ட தவறுகள் தேவைப்படுகின்றன, வெண்மையை துலக்கித் தர உதவும் சிறு கரும்புள்ளிபோல. துக்கிரிக் கண்களிலிருந்து அழகையும் தூய்மையையும் காப்பாற்றும் திருஷ்டி பொட்டுகள் அவை.

வலுத்ததே வாழும் என்பது விதியானாலும் ‘இருந்துட்டு போகட்டும் விடு’ என்று கரிசனம் காட்டும் தாட்சண்யத்தால்தான் உய்கிறது இவ்வுலகம்.

‘தயவு தாட்சண்யமெல்லாம் பாத்தா பொழைக்க முடியாது’ என்று சொல்வார்கள். அப்படி பார்ப்பவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் புறம்பேசக்கூடும். என்ன செய்ய முடியும்? சிலர் மட்டும் வாழ்ந்திருக்கும்போது இன்ன பிற அனைத்தும் பிழைத்துக்கிடக்கத்தானே வாய்த்திருக்கிறது.

தாட்சண்யம் என்பது பித்துக்குளித்தனத்தின் ஒரு கீற்றுதான். பித்துக்குளித்தனங்களால்தானே கலையும் கவிதையும் வனப்புறுகின்றன. அந்தரத்தில் தொங்கும் ஒளிக்கூடை தவறான ‘ஸ்விட்சு’க்கு ஒளிரும் பித்துக்குளித்தனத்தினால்தான் இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து யாரும் பிழைக்க முடிகிறது. அப்படி ஒளிரும்போது எடிசன் புன்னகைக்கிறார் என்றால் அவரும் ஒரு தவறான ஸ்விட்சை அழுத்தியபோதுதான் அந்த அற்புத விளக்கைக் கண்டறிந்திருக்கக் கூடும்.

பித்துக்குளித்தனங்களால் நிறையட்டும் இவ்வுலகு. தவறான ஸ்விட்சுக்கு எங்கும் ஒளிரட்டும் தாட்சண்யத்தின் ஒளிக்கூடை.

0

அக்டோபர் 2025 ஆவநாழி 32ஆம் இதழில் வெளியானது

கவிதையும் ஞானமும் - 3 * யானை ரயில் கடல் - ஆனந்த் குமார்

 



3

யானை ரயில் கடல்

ஆனந்த் குமார்

 0

அப்பா திடீரென

ஒரு யானை வாங்கி வந்தார்

நான் அதை

வாசலில் கட்டி வைத்தேன்

நடைக்கு அழைத்துச் சென்று

நண்பர்களிடம் காட்டினேன்

ஆனாலும் என் தீராத ஆசையால்

மீண்டும் அழுதேன்

 

அவர் ஒரு ரயிலை

கொண்டு வந்தார்

அதில் ஊரெங்கும் சுற்றினேன்

முன்னும் பின்னும் அதை செலுத்தினேன்

மீண்டும்

போதாது போதாது என

சிணுங்கத் தொடங்கவும்

 

இந்தக் கடலை எனக்குத் தந்தார்

அதன் கரைகள் எங்கும்

வீடுகள் கட்டினேன்

அலைகள் எண்ணி எண்ணித் தீர்ந்து

நான் அடம்பிடிக்கத் தொடங்குகையில்

அப்பா காணாமல் போயிருந்தார்

 

தினம் தினம் மாலை

இங்கு வருகிறேன்

அன்றைய சூரியனை

இந்தக் கடலுக்குள் இட்டு

காத்திருக்கிறேன்

இந்த உண்டியல் நிரம்பும்போது

அதைக் கொடுத்து

ஒரு யானை வாங்குவேன்.

0

ஆனந்தகுமாரின் இந்தக் கவிதை என் குழந்தைப் பருவத்தைப் பற்றி யோசிக்க வைத்தது. என்னுடைய அப்பா எனக்காக பொம்மைகள் எதுவும் வாங்கித் தந்தாரா? இத்தனை விதமான பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் சந்தைக்கு வராத காலம் என்றாலும் அவர் எனக்கென பொம்மைகள் எதுவும் வாங்கி வந்ததில்லை. கைத்தறிச் சேலைகளை வியாபாரியிடம் கொடுத்து கூலிப் பணத்தைப் பெற்றுத் திரும்பும் நாட்களின் இரவு நேரங்களில் காத்திருந்து நான் தூங்கிப் போயிருப்பேன். மறுநாள் காலையில் எழும்போது தலையணைக்கு அருகில் கோன் வடிவத்தில் க்ரீம் நிரப்பிய குழல் கேக்குடன் ஒரு பொட்டலம் இருக்கும். திருப்பூர் மேட்டுப்பாளையம் வீனஸ் பேக்கரியின் புகழ்பெற்ற கேக். சில நாட்களில் தேங்காய் பன். இதைத் தவிர விளையாட்டு பொம்மைகள் எதையும் அவர் வாங்கித் தந்ததுமில்லை. வேண்டுமென்று நான் கேட்டதுமில்லை.

இரண்டு வருடத்துக்கு ஒரு முறை பண்டரி பஜனை கோஷ்டியினர் பதினைந்து நாள், இருபது நாள் தென்னிந்திய கோயில்களுக்கு யாத்திரை செல்வது வழக்கம். பஜனை கோஷ்டியில் மிருதங்கம் வாசிப்பவர் என்பதால் அப்பாவும் அவருடன் அம்மாவும் யாத்திரைக்குச் செல்வது, பொருளாதார தடங்கல்களையும் மீறி எப்படியோ நடந்துவிடும். பஜனை கோஷ்டி ஊருக்குத் திரும்பி வரும் நாளை எல்லோருமே எதிர்பார்த்திருப்பார்கள். நானும். அப்போதுகூட பொம்மைகள் எதுவும் வாங்கி வந்தது இல்லை. அதிசயமாய் ஒரு முறை சோலாப்பூரிலிருந்து இரண்டு போர்வைகள் வாங்கி வந்தனர்.  அதேபோல மூன்றாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் பள்ளிக்கூடத்துக்கு கொண்டு போகவென ஒரு அழகிய பையை வாங்கி வந்தார். அடர் பழுப்பு வண்ணத்தில் தங்க நிற வளையங்கள் இட்ட ரெக்சின் பை அது. இரண்டு பக்கங்களிலும் கிளிப்புகளைக் கொண்டு மூடும்படியானது. பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களும் அக்கம்பக்கத்தினரும் அதிசயமாய் பார்த்து வியந்த ஒன்று. காதறுந்த மஞ்சப் பையோ காக்கிப் பையோதான் அனைவரும் கொண்டு வரும் புத்தகப் பைகளாக இருந்தபோது நவீனமான அப்படியொரு பையை அனைவரும் அப்படி வியந்து வாய் பிளந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. நான்காம் வகுப்பு வரை அந்தப் பையைத்தான் பயன்படுத்தினேன். ஆனால், ஐந்தாம் வகுப்புக்கு போன சமயத்தில் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு நானும் ஒரு காக்கிப் பையில் புத்தகங்களை எடுத்துச் சென்றேன். பொன்னிற வளையங்கள் மங்கி விளிம்பில் அட்டை தெரிய விரிசலடைந்த அந்த ரெக்சின் பை வெகுநாட்கள் வரை அட்டாரியில் கிடந்தது. அம்மா எப்போது அதைத் தூக்கி எறிந்தார் என்று நினைவில்லை.

குழந்தைகளின் உலகை கவிதைக்குள் கொண்டு வருவது பெரும் சவால். எல்லோருமே பொன்னான அந்த நாட்களைக் கடந்து வந்திருப்போம் என்றாலும் கவிதையாக மாற்றுவது சாத்தியமில்லை. தூயதும் களங்கமற்றதும் இயல்பானதுமான அப்பருவத்தின் ஒவ்வொரு கணமும் விசை குறையாத ஆற்றலையும் தெவிட்டா குதூகலத்தையும் ஒருங்கே கொண்டவை. அவ்வுலகின் கணங்களை மொழியில் வடிப்பதில் சிக்கல்கள் உண்டு. குழந்தைகளின் உலகில் பயின்றுவரும் மொழிக்கு இலக்கணங்கள் இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனக்கென ஒரு தனி மொழியைக் கண்டடைகிறது. தனக்கான மொழியை அது புற உலகின் மொழியிலிருந்தே உருவாக்குகிறது என்றாலும் அப்படி தனித்து உருவாக்கிய பின்பு மூலத்திலிருந்து அவற்றை முற்றிலும் விலக்கி விடுகின்றன. சிறப்பான இத்தன்மையை கண்டறிந்து கவிதைக்குள் கொண்டு வர முடிந்தால் அவன் கவிஞன்.

கேட்டதை வாங்கித் தரும் அப்பாக்களிடம் குழந்தைகள் எப்போதும் பெரிதினும் பெரிது கேட்பதே வழக்கம். ஒரு பொருள் கடை அலமாரியில் இருக்கும்போது அதன் மீதுள்ள மயக்கமும் ஆசையும் கைக்கு வந்தவுடன் காணாமல் போகும் மாயத்தை பகுத்தறிவது கடினம். கிட்டிய பொருளை கையில் இடுக்கியவுடனே அந்த மயக்கத்தையும் ஆசையையும் வேறொரு பொம்மையின் மீது மடைமாற்றுவதற்கு முன்பே கடையிலிருந்து அகலத் தெரிந்த அப்பாக்கள் இவ்வுலகில் உண்டா என்ன? 

வெளியூர் போய்விட்டு திரும்பும்போது குழந்தைகளுக்கு பொம்மை வாங்கி வரும் பழக்கத்தை யார் ஆரம்பித்து வைத்தார்கள் என்று தெரியாது. ஆனால், அந்தப் பழக்கத்தைத் தெரிந்தோ தெரியாமலோ கடைபிடிக்கத் தொடங்கிவிட்டால் பிறகு நிறுத்துவது கடினம்.

அப்பாவுக்கும் பிள்ளைக்குமான உறவை இந்த பொம்மைகள்தான் நிர்ணயிக்கின்றனவா? வாங்கி வராமல் போனால் பாசமில்லாமல் போகுமா? குழந்தைகள் நிச்சயம் அழும். அடம்பிடிக்கும். ஆனால், அதற்காக அப்பாவை வெறுத்துவிடாது. ஒருநாள், சில நிமிடங்கள் அந்த ஏமாற்றம். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு குழந்தை மறந்துவிடும். ஆனால், அப்பா அதை மறக்கமாட்டார். அடுத்த முறை இந்தத் தவறை செய்யக்கூடாது என்று முடிவெடுப்பார்.

‘யானையின் சாவு’ என்றாரு கதை. சார்வாகன் எழுதியது. யானை பொம்மை வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைக்கு அதை வாங்கித் தருகிறார் அப்பா. அதனுடன் விளையாடி மகிழும் குழந்தை எல்லா நேரத்திலுமே யானையுடனே இருப்பதைக் கண்டு எரிச்சல் அடையும் அப்பா ஒரு நாள் ‘அதுக்கு உயிரில்ல குட்டி’ என்று சொல்லவும் குழந்தை மனம் கோணுகிறது. அப்பாவிடம் பேச மறுக்கிறது. பிறகு, சமாதானப்படுத்தவென அப்பாவும் யானையுடன் விளையாடத் தொடங்குகிறார். இப்போது அப்பாவும் குழந்தையும் யானையுடன் புதிய விளையாட்டுகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அலுவலக வேலையாய் சில நாட்கள் வெளியூர் போய்விட்டுத் திரும்புகையில் யானையுடன் விளையாட புதிய திட்டங்களுடன்  வீடு திரும்புகிறார் அப்பா. வீட்டில் குழந்தையின் கையில் யானை இல்லை. அப்பா திகைக்கிறார். ஆனால், வேலைகளுக்கு நடுவே அதை விசாரிக்க மறந்துவிடுகிறார். இரண்டு நாள் கழித்து ஓய்வான ஒரு மாலைப் பொழுதில் யானை எங்கே என்று கேட்க, குழந்தை ‘தெரியல’ என்று சிரத்தையில்லாமல் பதில் சொல்கிறது. ‘அது பாவமில்ல, பசிக்குமில்ல’ என்று அப்பா தவிக்கும்போது குழந்தை எரிச்சலுடன் சொல்கிறது ‘அப்பா, அது பொம்ம. அதுக்கு உயிரில்ல, தெரியாதா?’. அப்பா செய்வதறியாது நிற்கிறார். 

பிள்ளைகளுக்கு அப்பாக்கள் வாங்கி வரும் பொம்மைகள் ஒவ்வொன்றாய் சேர்ந்தபடியே உள்ளன. சிறிதும் பெரிதுமாய் வெவ்வேறு வண்ணங்களில் அவை குவிந்தவண்ணமே உள்ளன.  குழந்தைகள் பிறந்த நாள் முதல் அவை வீட்டுக்குள் இடம் பிடிக்கின்றன. வளருந்தோறும் குழந்தைகளின் விருப்பத்துக்கேற்ப பொம்மைகள் மாறுகின்றன. சிலருக்கு விதவிதமான கலர்கலரான கார்களின் மீது பிரியம். இன்னும் சில குழந்தைகளுக்கு சூப்பர் மேனும் ஸ்பைடர் மேனும். வேறு சிலருக்கு அழகாக உடுத்திய பார்பி பொம்மைகள். புல்டோசரையும் டிராக்டர்களையும் கேட்டு வாங்கும் குழந்தைகளும் உண்டு. பொம்மைகள் இல்லாத வீடுகளை எங்கேனும் உள்ளனவா? வாய்ப்பில்லை.

ஆனந்தகுமாரின் இந்தக் கவிதையைப் படித்தபோது ஒரு கேள்வி முளைத்தது. குழந்தைகள் வளர்ந்த பிறகு இந்த பொம்மைகள் என்னவாகின்றன? வளர்ந்த பிறகு குழந்தைகள் பொம்மைகளை பொருட்படுத்துவதில்லை. பரணில், அட்டைப் பெட்டிகளில், பால்கனி மூலைகளில் அவை கைவிடப்பட்டவைகளாய் கிடக்கின்றன. பொம்மைகளோடு சேர்ந்து காணாமல் போவது குழந்தைப் பருவமும்தான். அவர்கள் இப்போது குழந்தைகள் இல்லை. வளர்ந்தவர்கள். அப்பாக்களிடமிருந்து பொம்மைகளை அவர்கள் எதிர்ப்பார்ப்பதில்லை. எது வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். அவர்களே தேடிப் பார்த்து வாங்கிக் கொள்கிறார்கள். இனி பொம்மைகள் அவர்களுக்குத் தேவையில்லை.

பொம்மைகள் தேவைப்படாதபோது, அவற்றை வாங்கி வரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு காணாமல் போகும்போது, குழந்தைகள் பெரியவர்களாகி நிற்கும்போது அப்பாக்களுக்கும் குழதைகளுக்குமான உறவு நிறைகிறது. அந்த நிறைவில் ஒரு விலகலும் உண்டு. மிகவும் சிக்கலான காலகட்டம். இந்த இடைவெளியை விலகலை சரியாகப் புரிந்துகொள்ளும்போது அப்பாவுக்கும் பிள்ளைக்குமான உறவில் நெருக்கம் அமைகிறதோ இல்லையோ பிரிவு ஏற்படாது.

பிள்ளைகள் வளர்ந்து அப்பாக்கள் ஆவார்கள். ஒருநாள் அவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கான பொம்மைகளை ஆசையுடன் வாங்கியபடி வீடு திரும்புவார்கள். 

செல்லம் கூடிப்போகும்போது யானையும் ரயிலும் கடலும்கூட பொம்மைகளாக்கித்தான் போகும். அவற்றை வாங்கித் தர அப்பாக்களும் இருப்பார்கள். அப்பா வாங்கி வந்த யானையை ரயிலை கடலை வைத்து விளையாடும் பிள்ளைகளும் இருப்பார்கள். ஆனந்தைப் போன்ற கவிஞர்கள் அன்றாடச் சூரியனை கடலில் சேமித்து அந்தச் சேமிப்பைக் கொண்டு ஒரு நாள் யானையையும் வாங்குவார்கள்.

அப்பாக்களும் பிள்ளைகளும் பொம்மைகளுமான உலகில் இதுவொரு தீராத விளையாட்டு.

0

அக்டோபர் 2025 ஆவநாழி 32ஆம் இதழில் வெளியானது.

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...