Monday, 20 April 2026

கோவையின் இலக்கிய முன்னோடி - புவியரசு

 


1985ம் ஆண்டு கல்லூரி மாணவனாக இருந்த சமயத்தில், கவிஞர் பக்தவத்சலம் திருப்பூரிலிருந்து ‘சூத்ரதாரி’ என்ற சிறுபத்திரிக்கையை வெளியிட்டார். தேவாங்கபுரம் பள்ளியின் மரங்கள் சூழ்ந்த அழகான மைதானத்தில் எளிமையாக நடைபெற்ற வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் புவியரசு. வெள்ளை உடுப்பு, பட்டையான விளிம்புகள் கொண்ட கருப்புக் கண்ணாடி, நீண்ட கிருதாவுடனான நரைத்த தலைமுடியுடனான அவரது கம்பீரம் பார்த்தவுடனே கவர்ந்தது. நான் முதன்முதலாக சந்தித்த மூத்த எழுத்தாளர் அவரே.

ஆறுமாதங்களுக்குப் பிறகு மறுபடி அவரைச் சந்திக்க நேர்ந்தது. கல்லூரியில் நண்பர்களுடன் இணைந்து நடத்திய ‘எண்ணங்கள்’ கையெழுத்துப் பத்திரிக்கையின் ஆண்டு விழாவுக்கு புவியரசுவை அழைக்கவென கோவை வந்திருந்தோம். சத்குரு இல்லம், ராமசாமி நகர், கவுண்டம்பாளையம் என்ற முகவரி அப்போதுதான் அறிமுகமானது. மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று பேசினார். அன்று அவர் சொன்ன பல பெயர்களும் விஷயங்களும் எங்களுக்கு சிறிதும் அறிமுகமில்லாதவை. ஆனால், அவர் சொல்வதை ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தோம். வானம்பாடி இதழ்களின் பைண்ட் செய்யப்பட்ட ஒரு தொகுப்பை பொக்கிஷம்போல எடுத்து வந்து காட்டினார். அவரது அறையில் எல்லாவிடத்திலும் புத்தகங்கள். மேசையில் எழுதுமிடம் தவிர்த்து மீதி எல்லா இடத்தையும் ஆக்கிரமித்திருந்தன புத்தகங்கள். அந்தப் புத்தகங்களின் மேல் அவர் காட்டிய ஆசை, ஆர்வம் மிகுந்த வியப்பை ஏற்படுத்தியிருந்தது.

தொண்ணூற்று ஐந்து வயதைக் கடந்தவிட்டபோதும் புத்தகங்களின் மீதான அவரது ஆசையும் பித்தும் சற்றும் தணியவில்லை. கோவையில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கும் நாட்களில் மாலை வேளைகளில் கைநிறைய புத்தகங்களுடன் வளைய வருவது அவருக்குப் பிடித்தமானது. அப்போது அவரது முகத்தில் அப்படியொரு நிறைவு ஒளிர்ந்திருக்கும். புதிய பொம்மைகளை அணைத்தபடி உற்சாகத்துடன் ஓடிவரும் குழந்தைகளின் முகத்தில் பார்க்க நேர்கிற பெருமையையும் மகிழ்ச்சியையும் அவரது முகத்தில் காண முடியும்.

‘எண்ணங்கள்’ ஆண்டுவிழாவில் அவர் ‘வணக்கம்’ என்றொரு நீண்ட கவிதையை வாசித்தார். ‘சே குவேராவுக்கு வணக்கம், ஈழப் போராளிகளின் மெஷின் கன்களுக்கு வணக்கம், பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கும் வணக்கம்’ என்று அந்தக் கவிதை அடுக்கடுக்காக வணக்கம் சொல்லும். சமூக அரசியல் விமர்சனங்களை பகடியாக மாற்றி கவிதையாகச் சொல்லும் புவியரசுவின் கவிதையுலகத்தின் ஒரு பதச்சோறு என்று அந்தக் கவிதையைச் சொல்லலாம்.

ஒருவகையில் அது ‘வானம்பாடி’ இயக்கத்தின் கவிதைப்பாணியிலிருந்து உருவானது. 1970களின் தொடக்கத்தில் கோவையிலிருந்து  வெளியான கவிதை இதழ் ‘வானம்பாடி’. தமிழ் நவீனக் கவிதை வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனை. மரபுக்கவிதைக்கு மாற்றாக புதுக்கவிதையை முன்னிறுத்திய இதழ் அது. சமூகப் பிரச்சினைகளை உரத்த குரலில் சொல்வதை வலுவாக முன்மொழிந்த இயக்கம் வானம்பாடி. அந்த இதழின் உருவாக்கத்துக்கு காரணமானவர்களில் ஒருவர் புவியரசு. அவரது வீட்டு முகவரியில்தான் இதழ் வெளியானது.

பேரூர் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர் புவியரசு. ஒரு தமிழாசிரியராக கோவையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்தவர். ஆனால் ‘வானம்பாடி’ இயக்கத்தையும் அதைச் சார்ந்த கவிஞர்களையும் கடுமையாக விமர்சித்தவர்கள் தமிழ் ஆசிரியர்களே. ம.பொ.சியின் ‘தமிழரசு கழக’த்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர்.

தமிழ் இலக்கியங்களோடு நின்றுவிடாமல் சமணம், பௌத்தம் உள்ளிட்ட தத்துவங்களையும் அதன் பின் மார்க்ஸியத்தையும் கற்றுத் தேர்ந்தவர். நெருக்கடிநிலையின்போது இந்திரா காந்தியை ஆதரித்து ‘இந்திரா-இந்தியா’ என்ற நூலை தமிழ்நாடனுடன் இணைந்து எழுதிபோதிலும், அந்த நடவடிக்கை தவறு என்று உணர்ந்தவுடன் சிறிதும் தயக்கமின்றி தம் நிலைபாட்டை மாற்றிக்கொண்டார்.

புவியரசுவின் கையெழுத்து அழகானது. நன்றாக ஓவியம் வரையக்கூடியவர். அவர் எழுதுவதே ஓவியம் வரைவது போலத்தான் இருக்கும். அவரது தந்தையார் சுப்பையாவிடமிருந்து பெற்ற கொடை அது. கோவையின் புகழ்பெற்ற ‘புரூக் பாண்ட்’ தேயிலை நிறுவனத்தில் ஓவியராக வேலைபார்த்தவர். அதன் லட்சினை ஓவியமான ‘ஒரு மொட்டும் இரு இலைகளும்’ ஓவியத்தை வரைந்தவர். புராணிக ஓவிய மரபு தெரிந்தவர்.

புவியரசு ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே குற்றங்கள், புலனாய்வு, கதை, கவிதைகள் கலந்தவொரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய அனுபவம் உண்டு. தந்தையின் ஓவியங்களுடன் வெட்டி ஒட்டிய வண்ணப் படங்களுடன் புதுமையான பத்திரிக்கையாக அதை வடிவமைத்திருந்தார். அந்த அனுபவம்தான் பின்னாட்களில் ‘வானம்பாடி’, ‘காற்று’ என்று பல சிற்றிதழ்களையும் நடத்த உதவின.

பத்திரிக்கைகளின் மீதும் எழுத்தின் மீதும் புவியரசுவின் ஆர்வத்துக்கு மேலும் உரமூட்டியவர் என்று பகடாலு நரசிம்மலு நாயுடுவைச் சொல்லலாம். கோவையில் முதன்முதலாக அச்சகத்தை நிறுவி அச்சுப் பத்திரிக்கையை கொண்டுவந்தவர் நரசிம்மலு நாயுடு. தமிழில் முதல் பயண இலக்கியத்தை எழுதியவர். அவர் மீது பெரும் பற்று கொண்ட புவியரசு தன்னை அவரது வாரிசு என்று பெருமையுடன் சொல்வார். 110 புத்தகங்களை எழுதியிருக்கும் நரசிம்மலு நாயுடுவுக்கு, இதுவரை 107 புத்தகங்களை எழுதியிருக்கும் புவியரசு தகுதியான வாரிசுதான் என்பதில் சந்தேகமில்லை.

‘கையொப்பம்’ கவிதைத் தொகுப்புக்காக 2009ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார். காஜி நஸ்ருல் இஸ்லாம் எழுதிய ‘தி ரெவல்யூஸனரி’யின் மொழியாக்கத்துக்காக 2007ம் ஆண்டிலும் சாகித்ய அகாதமியின் மொழியாக்க விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஆறு கவிதைத் தொகுப்புகளையும், மிர்தாத்தின் புத்தகம், கரம்சோவ் சகோதரர்கள் உள்ளிட்ட நூல்களையும், ஷேக்ஸ்பியர், ஓஷோ, தாகூர், கலில் கிப்ரான், உமர் கயாம் ஆகியோரின் புத்தகங்கள் உள்ளிட்ட எண்ணற்ற மொழிபெயர்ப்புகளையும் செய்திருந்தபோதும் அவருக்கு பிடித்த இலக்கிய வடிவம் நாவல். எல்லா மொழி நாவல்களையும் விரும்பிப் படிப்பவர். நாவலின் மீதிருந்த ஈர்ப்பினால்தான் 88 வயதில் ‘கண்மணி சோபியா’ என்ற நாவலை எழுதினார்.   

புவியரசு நவீன நாடகங்களிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ‘காற்று’ என்ற நாடக இதழையும் நடத்தினார். சில நாடகங்களை இயக்கியிருக்கிறார்.  ‘மனிதன்’, ‘மூன்றாம் பிறை’ ஆகிய நாடகங்கள் வெளியாகியுள்ளன.

தந்தையிடமிருந்து புவியரசு அவர்களுக்குக் கிடைத்த இன்னொரு நற்கொடை தத்துவங்களின் மீதான ஆர்வம். இதுவே பின்னாட்களில் அவரை மொழிபெயர்ப்புகளை நோக்கி இட்டுச் சென்றது. சென்னையில் வசித்த நாட்களில் கண்ணதாசன் பதிப்பகத்துக்காக ஓஷோவின் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்தார். அதே காலகட்டத்தில் உமர் கய்யாம், கலீல் கிப்ரான், தாகூர் ஆகியோரின் படைப்புகளை மொழியாக்கம் செய்தார். ஐம்பதுக்கும் அதிகமான புத்தகங்களை அவர் மொழிபெயர்த்திருந்தபோதும் அவரது மொழியாக்கத்தில் வெளியான இரண்டு நூல்களை தமிழுக்குக் கிடைத்த பெரும் கொடையாகச் சொல்லலாம்.

ஒன்று, மிகைல் நைமி எழுதிய மிர்தாதின் புத்தகம். மிகைல் நைமி லெபனானைச் சேர்ந்த கவிஞர். கலீல் கிப்ரானின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். அவரது மிக நெருக்கமான நண்பர். கிப்ரானின் ‘the prophet’யைப் போன்றவொரு அல்லது அதைவிட அபாரமான ஒரு படைப்பை எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியதுதான் ‘the book of Mirdad’, ஓஷோ தனக்குப் பிடித்த புத்தகங்களில் ஒன்றாக இதைக் குறிப்பிட்டிருந்தபோதும், தமிழில் இதை புவியரசு மொழிபெயர்க்கும் வரையிலும் அறியப்படாத ஒரு புத்தகமாகவே இருந்தது.

தமிழில் மிக அதிகமான விற்ற ஒரு மொழிபெயர்ப்புப் புத்தகம் மிர்தாதின் புத்தகமாகத்தான் இருக்கவேண்டும். அதைப் படித்துவிட்டு புவியரசுதான் மிர்தாத் என்று தேடி வந்தவர்கள் இருக்கிறார்கள். காரணம், அந்த நூலை புவியரசு மொழிபெயர்த்திருக்கும் விதம். நேரடியாக தமிழில் எழுதப்பட்ட ஒன்று என நினைக்கும்படியாக எளிமையாகவும் இயல்பாகவும் செறிவாகவும் மொழிபெயர்த்திருக்கிறார் புவியரசு.

தமிழுக்கு புவியரசு மொழிபெயர்ப்பின் வழியாகக் கொடுத்த கொடை என தஸ்தவஸ்கியின் ‘கரம்சோவ் சகோதரர்கள்’ நூலைக் குறிப்பிடலாம். உண்மையில் அதுவொரு அசுர சாதனை. ஆயிரத்துக்கு மேலான பக்கங்களைக் கொண்ட இந்த நாவலின் ஆறு வெவ்வேறு ஆங்கிலப் பிரதிகளை ஒப்பிட்டு மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளன. இந்த நாவலை மொழிபெயர்க்கும்போது புவியரசுவின் வயது எழுபதை நெருங்கிவிட்டது. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இதை எழுதி முடிக்கும் சமயத்தில் அவர் கை வீங்கி பேனாவைப் பிடிக்கவே முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த வயதில் உடலை வருத்திக்கொண்டு ஏன் இப்படி இதை மொழிபெயர்க்கவேண்டும்? பணம் கிடைக்கும் என்றா? தமிழ்ச் சூழலை நன்கறிந்தவர்கள் அப்படி நம்பமாட்டார்கள்.

‘தஸ்தாவஸ்கியைப் படித்து மொழிபெயர்த்த பிறகு வாழ்க்கையில் எல்லா சங்கடங்களும் சாதாரணமாகிவிடுகின்றன. எவ்வளவு அவமானங்களும் துயரங்களும் வந்தாலும் கவலையே படவேண்டாம் என்பதுதான் தஸ்தாவஸ்கி தரும் ஞானம்’ என்று புவியரசு குறிப்பிடுகிறார். அந்த ஞானத்தை அவர் அடைந்தது மட்டுமன்றி நம் எல்லோருக்கும் அந்த ஞானத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கம்தான் அவரை அத்தனை சிரமப்பட்டு மொழிபெயர்க்கச் செய்திருக்கிறது.

தல்ஸ்தோயின் மூன்று துறவிகள்


 

“எளிமையானது உன் அன்பு

நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர்போல”

சுகுமாரனின் ஒரு கவிதை இப்படி முடியும். பொதுவாக, எளிமையை நாம் சற்று குறைவாகவோ அல்லது தவறாகவோதான் எடைபோடுகிறோம். ஒரு மனிதனைக் குறித்து, அவரது ஆளுமையை மதிப்பிட, குறைந்தபட்ச ஒப்பனைகள் தேவைப்படுகின்றன. அரசியல், ஆன்மிகம், வியாபாரம், கல்வி, மருத்துவம் என்று எந்தவொருத் துறையிலும் எளிமை அல்லாது பகட்டும் விளம்பரமுமே கவனமும் வெற்றியும் பெறுகிறது. எனவேதான், இவை அனைத்துமே நிறுவனமயமாகின்றன. மக்களைக் கவரவும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் இது அவசியம்.

மூன்று மாதத்துக்கு முன்பே முன் பதிவு செய்து, குறித்த நேரத்தில் வரிசையில் நின்று காத்திருந்து, பொறுமையாய் நகர்ந்து, ‘ஜருகண்டி, ஜருகண்டி’ என்ற குரல்களுக்கு இடையே நொடிநேர தரிசனத்தையே சாத்தியப்படுத்தும் திருப்பதி ஏழுமலையானுக்கு இருக்கும் ‘டிமாண்ட்’, தெருமுனையில் அரசமரத்தடியில் வெள்ளை ஈரிழைத் துண்டும் எறும்பு வரிசையுமாக உட்கார்ந்திருக்கும் பிள்ளையருக்கு இருப்பதில்லை.

உதகை நாராயண குருகுலத்தில் இருந்த தம்பான் சுவாமிகள் மிகவும் எளிமையானவர். கணுக்காலுக்கு மேலே ஏறிய முரட்டு வேட்டியும் அதே துணியாலான மேல்சட்டையுமாய் குருகுல வளாகத்தில் எங்குமிருப்பவர். எல்லா வேலைகளையும் செய்பவர். ஒருமுறை குருகுலத்தில் தங்கியருந்தபோது மதிய சாப்பாட்டில் ஏதோவொன்று நாஞ்சில்நாடனுக்கு ஒத்துக்கொள்ளாமல் இரவில் நான்கைந்து முறை கழிப்பறைக்குச் செல்ல நேர்ந்தது. விடிகாலையில் தம்பான் சாமிகளைப் பார்த்து விபரத்தைச் சொன்னபோது சிறிய பொட்டலத்தை எடுத்து வந்து நாஞ்சில்நாடனிடம் தந்தார் “வாயிலிட்டு சப்பிக்கோ. அரமணிக்கூறு எதும் வேணாம். சரியாகும்.” நாஞ்சில் அதை எச்சிலில் ஊறவைத்துச் சப்பி விழுங்கினார். அடுத்த அரைமணி நேரத்தில் உபாதை சரியானது. தம்பான் சாமியிடம் நன்றி சொல்லிவிட்டு என்ன மருந்து அது என்று நாஞ்சில்நாடன் வினவினார். “அது ஒண்ணில்ல. மாம்பழக் கொட்டைக்குள்ள ஒரு விதை இருக்கும். அதோட பவுடர்தான்.” மாங்கொட்டை பவுடரை மருந்தாகத் தந்த தம்பான் சாமி, முறையாகப் பயின்ற ஆங்கில மருத்துவர். அவரைப் போலவே அவர் தந்த, சொன்ன மருந்துகளும் மிக எளிமையானவை, எளிதில் கிடைப்பவை.

நகரவாசிகளான நாம் பொதுவாக வனத்துள் வாழும் பழங்குடிகளை, சந்தடியற்ற தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களைக் குறித்து குறைவாகவே எடைபோடுகிறோம். எப்போதும் அவர்களுக்கு எதையேனும் கற்றுத் தரவே முனைகிறோம். அவர்களைக் காட்டிலும் நாம் மேலே இருக்கிறோம் என்ற மிதப்பு நம்மிடம் உண்டு. நம்முடைய கருணையை, தயவை எதிர்பார்த்து அவர்கள் வாழ்கிறார்கள் என்ற எண்ணத்துடனே அவர்களை அணுகுகிறோம். உண்மையில், அவர்களின் அனுபவ அறிவு நமது ஏட்டுக் கல்வி அறிவைவிட பல மடங்கு வலுவானது, அன்றாடத்திலிருந்து உருவானது.

துறவிகள் வசிக்கும் தீவுக்கு படகிலேறி வரும் பாதிரியாருக்கு ( பிஷப் ) அந்த எண்ணம்தான் மேலோங்கியுள்ளது. தோற்றத்தையும் அணிந்திருக்கும் உடையையும்கொண்டு தவறாகக் கணித்து, முறையாக பிரார்த்தனை செய்யத் தெரியவில்லை என்று அந்த மூவருக்கும் கற்றுத் தருகிறார்.   

ஆனால், இந்தக் கதையின் தொடக்கத்தில் தரப்பட்டுள்ள மத்தேயுவின் வசனமே இக்கதையின் சுருக்கத்தை உணர்த்திவிடுகிறது.

தனியே, ஆளற்றத் தீவில் வசிக்கும் அந்த மூன்று துறவிகளுக்கும், இறைவனைப் பிரார்த்திப்பது என்பது வாழ்வின் ஒரு பகுதியல்ல. அவர்களுடைய வாழ்க்கை முறையே இறைவனைப் பிரார்த்தனை செய்வதுதான். கப்பலில் செல்பவர்கள், புகழ்பெற்ற சொலோவ்த்ஸ் துறவியர் மடத்துக்கு புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள். வியாபாரிகள், மீனவர்கள் ஆகியோருடன் பிஷப்பும் ஆண்டவரைத் தேடி, ரஷ்யாவின் புகழ்பெற்ற பழமையான மடத்துக்குச் செல்கிறார்கள். ஆனால், துறவிகளுக்கு இறைவன் வேறெங்குமில்லை. அல்லது எங்குமிருக்கிறான். இருக்குமிடத்திலிருந்து பிரார்த்தனை செய்வதுதான் அவர்களுக்குத் தெரிந்தது. மற்றபடி எப்போதாவது ஏதேனும் படகு ஒதுங்க நேர்ந்தால் அவர்களுக்கு உதவி செய்வார்கள். அந்தத் தீவில் முறையான தேவாலயம் கிடையாது. ஆர்ப்பாட்டமோ ஆடம்பரமோ இல்லை. நுட்பமாக கதையில் அமைந்திருக்கும் இந்த முரண் பல ஆழங்களுக்கு இட்டுச் செல்லக்கூடியது.

கதையெங்கும் பிஷப்பின் ஆதிக்கத்தைப் பார்க்க முடியும். மீனவர்கள் பலமுறை சுட்டிக் காட்டியும் பிஷப் தன் கண்ணுக்கு தீவு தெரியவில்லை என்றே சொல்கிறார். எளியோருக்கும் அதிகாரத்துக்குமான இடைவெளி இப்பேர்ப்பட்டதுதான். அதிகாரமே எளியோர்க்கு எதையும் எடுத்துக் காட்டமுடியும், சொல்லமுடியும், கொடுக்க முடியும்.

மேலும், பிஷப் அந்தத் தீவுக்கு செல்வதன் நோக்கம், ‘அவர்கள் மூவரும் ஆன்ம முக்திக்காக வசிக்கிறார்கள்’ என்று மீனவர்கள் சொல்லும்போது உள்ளூற அவர் சீண்டப்படுவதால்தான். ‘தேவாலயம் என்கிற பிரமாண்டமான அமைப்பும் பிஷப் என்கிற அதிகாரமும் இல்லாமல் எப்படி ஒருவர் ஆன்ம முக்தி பெறுவது சாத்தியம்? அப்படி யாரும் சொல்வதையோ, நினைப்பதையோகூட எப்படி அனுமதிக்க முடியும்?’ என்பதுதான் அவரை அங்கு செல்லத் தூண்டுகிறது.

உண்மையில் அவருடைய நோக்கம், தீவுக்கு சென்று அந்த மூவரிடமும் ‘சர்ச்’எனும் அமைப்பின் அதிகாரத்தை, ‘பிஷப்’ என்கிற தன் ஆளுமையை நிறுவுவதுதான். அதன்படியே அனைத்தும் அவருக்கு சாதகமாகவும் நடக்கிறது. முறையாக பிரார்த்தனை செய்யத் தெரியாத அவர்களுக்கு, எளிதில் கற்றுக்கொள்ள முடியாமல் திணறுபவர்களிடம், நாள் முழுக்க செலவிட்டு மீண்டும் மீண்டும் அந்த வழிமுறையைச் சொல்லிய பிறகு மிகுந்த நிறைவுடன் கப்பலுக்குத் திரும்புகிறார். மூன்று பேர்தானே என்று அவர் அந்த சந்தர்ப்பத்தை விட பிஷப் என்கிற பதவியும், அது அளித்திருக்கும் அதிகாரமும் அனுமதிப்பதில்லை. மதத்துக்கும் தான் வகிக்கும் பதவிக்கும் உரிய கடமையைச் செய்த மகிழ்ச்சியுடன் திரும்பி வருகிறார்.

கடைசியில், துறவிகள் மூவரும் கப்பலைப் பின்தொடர்ந்து வரும் விதத்தைப் பார்க்கும்போதுதான் தான் செய்த தவறு அவருக்கு உறைக்கிறது. மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறார்.

இந்தக் கதையை டால்ஸ்டாய் இப்படி முடிக்கும்போது, இதற்கு முன்பு கதையில் படித்துக் கடந்த சில விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அல்லது வேறு அடர்த்தியான பொருளுடன் இருப்பதைத் துலக்கமாகப் பார்க்க முடியும்.

தாங்கள் அறிந்தவகையில், தங்களது பிரார்த்தனையை இத்தனை ஆண்டுகள் மேற்கொண்டிருக்கும் அவர்களுக்கு பிஷப் முறையான பிரார்த்தனையைக் கற்றுக்கொடுக்கிறார். இதன் மூலம், தேவாலயத்தின் அதிகாரத்தை நிறுவுகிறார். புனித தேவாலயத்தில் உள்ள குருமார்கள் உபதேசிக்கும் வழிமுறையில்தான் ஆண்டவனை வழிபடவேண்டும் என்று அனைவரையும் கட்டுப்படுத்துகிறார்கள். ஆண்டவனை அடைவதற்கான பாதையில், பிரார்த்தனைக்கான வழிமுறையில், ஆண்டவனுக்கும் விசுவாசிக்கும் இடையில் அதிகார அமைப்புகளான தேவாலயமும் குருமார்களும் உண்டு என்பது நிறுவப்படுகிறது.

துறவிகள் மூவரைக் குறித்தும் மீனவர் விளக்கும் பத்தியை கவனிக்கலாம்.

முதுகு வளைந்து குள்ளமாக இருக்கும், நூறு வயது மதிக்கத்தக்கவர் பாதிரிகளின் உடை அணிந்திருக்கிறார். கனிவும் புன்னகையுமாயிருக்கிறார். இரண்டாமவர், உழவர்களின் கிழிந்த உடையை அணிந்தவர், திடகாத்திரமானவர், நடுத்தர வயதுடையவர். அன்பும் மகிழ்ச்சியும் நிரம்பியவர். மூன்றாமவரோ, உயரமானவர். அவருடைய முழங்கால் வரைக்கும் வெண்தாடி நீண்டிருக்கிறது. புருவங்கள் அடர்ந்து தொங்குகின்றன. பாய் பின்னலை அணிந்திருக்கும் அவர் கண்டிப்பானவர்.

‘கடவுள் எப்படி தன்னைத் திருவெளிப்பாடு செய்துகொண்டார் என்பதை பிஷப் விளக்குகிறார். கடவுளாகிய தந்தை, கடவுளாகிய தேவகுமாரன் மற்றும் கடவுளாகிய புனித ஆவி ஆகியோரைப் பற்றியும் சொல்கிறார்’ என்ற பத்தியும் மேலே உள்ள உருவங்களையும் பொருத்திப் பார்க்கும்போதுதான், பிஷப் ஏன் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார் என்பது புரியும்.

தந்தையும் தேவகுமாரனும் புனித ஆவியுமே மூன்று துறவிகளாக வெளிப்பட்டார்கள் என்று இந்தக் கதைக்கு ஒரு விளக்கமும் உண்டு. கவனித்துப் பார்த்தால் மிகப் பொருத்தமான விளக்கமும்கூட.

150 ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்டாய் எழுதிய இக்கதையை ஒரு குறியீட்டுக் கதையாகவும் வாசிக்க முடியும். கிறித்துவ மதம் உலகெங்கும் பரவ வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நடந்துவரும் முயற்சிகளை அறிவோம். இந்தியாவில், குறிப்பாக கடற்கரையோர மீனவர்களிடம் கிறித்துவம் மேற்கொண்ட முயற்சிகளும் அதன் தாக்கங்களும் வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றுள்ளவை. கிறித்துவ மத அமைப்பு உலகெங்கும் தன் அதிகாரத்தை உருவாக்க மேற்கொண்ட, திட்டமிட்ட வழிமுறைகளை இக்கதை உணர்த்துவதையும் கவனிக்கலாம்.

வரலாற்றில் தொடர்ந்து மனிதனின் மீதான அதிகாரத்தை செலுத்தும் வலுவான அமைப்பு மதம். உலகின் எல்லா நாடுகளிலும் மக்களிடத்தும் பல்வேறு மதங்களின் ஆதிக்கத்தை அறிவோம். அரசியல், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படைகளை மதங்களே தீர்மானிக்கின்றன, நிர்வகிக்கின்றன. மனிதனின் பலவீனமான உணர்வுகளை, விசுவாசத்தை, ஆன்மீகத்தின் பெயரில் ஆட்கொண்டு பயன்படுத்தி வெகு சுலபமாக மதங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

தல்ஸ்தோயின் மத நம்பிக்கை அவரது காலத்தில் பொதுவில் நிலவிய நம்பிக்கைகளுக்கு முற்றிலும் மாறானதும் எதிரானதுமாகும். இறைமறுப்பிலிருந்து, நாத்திகவாதத்திலிருந்து தன் பார்வையை பெற்றுக்கொண்டவர் தல்ஸ்தோய். மத குருமார்களும் அரசுமே புனித உண்மையை மக்களுக்கு போதிக்க முடியும், உணர்த்த முடியும், அதற்கான தகுதியும் உரிமையும் அவர்களுக்கே உண்டு என்பதை உறுதியாக மறுத்தவர். இந்த அமைப்புகளும் அரசுமில்லாமல் மக்கள் தங்கள் எளிமையிலும் அர்ப்பணிப்பிலும் இறைவனையும் உண்மையையும் கண்டறிய முடியும் என்பதை வலியுறுத்தினார்.

தல்ஸ்தோயின் மரணத்துக்குப் பிறகு ‘தல்ஸ்தோயின் பைபிள்’ பதிப்பிக்கப்பட்டது. தல்ஸ்தோயின் எழுத்துகளிலிருந்து அவரது கொள்கைகளை வெளிப்படுத்தும் பத்திகளும் சொற்றொடர்களும் தொகுக்கப்பட்டு இடம்பெற்றன. மார்டின் லூதர் கிங், காந்தி, தோரோ ஆகியோருடனான தொடர்பில் அவருக்குள் உருவாகியிருந்த எண்ணங்களையும் எழுத்துகளையும் தொகுத்து தரப்பட்டிருந்தன. மதம் தொடர்பான டால்ஸ்டாயின் கருத்துகளை, எண்ணங்களை குறிப்புணர்த்துவதாக இக்கதை அமைந்திருக்கிறது.

0

டால்ஸ்டாய் 1985இல் எழுதிய இந்தச் சிறுகதை NIVA வார இதழில் 1886ஆம் ஆண்டு தொடராக வெளிவந்தது. ’23 Tales’ என்ற தொகுப்பில் இடம்பெற்றது. இதன் ஆங்கில மொழியாக்கம் 1907ஆம் ஆண்டு வெளியானது. பூ.சோமசுந்தரம், ஆர்.சிவகுமார் ஆகியோர் இதைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.

0      

சொல்வனம் இதழில் வெளியான இந்தச் சிறுகதைக்கான இணைப்பு. நன்றி - சொல்வனம்

https://solvanam.com/2016/04/27/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

Wednesday, 1 April 2026

கடுந்தேனீருக்காக நடந்துபோதல் - கவிதையும் ஞானமும் 10


 

நடந்துகொண்டிருப்பது மூன்றாம் உலகப் போர்தானா என்ற விவாதங்களுக்கும் ‘எனர்ஜி லாக் டவுன்’ அறிவிக்கப்படுமோ என்ற ஊகங்களுக்கும் இன்றைக்கு தோசை கிடைக்குமா என்ற அடிப்படைக் கேள்விகளுக்கும் இடம் தந்து நீண்டுகொண்டிருக்கிறது வளைகுடா போர். எறிகணைகளும் ஏவுகணைகளும் பறக்கும் தட்டுகளும் வெடித்துச் சிதற வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. எண்ணெய் வளம், அதிகாரப் போட்டி, ஆயுத பலம் என்று இதற்கான காரணங்களை பிரித்து ஆராய முடியும். ஆனால், அடிப்படையில் இவற்றுக்கு பலியாகும், பாதிக்கப்படும் அப்பாவி பொது மக்கள், குழந்தைகள், பெண்களின் துயரங்களுக்கு யார், எது பொறுப்பேற்கும்? ஒவ்வொரு நாளும் உயிர்கள் பலியாகின்றன. எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. அடுப்பெரிக்க எரிவாயு கிடைக்குமா, வாகனங்களுக்கு எரி எண்ணெய் போதுமா, உணவகங்களில் கேட்டது கிடைக்குமா என்ற அளவில் நம் கவலை நமக்கு. வீட்டுக் கடனை அடைக்கவும் தேவைக்கு பொருள் ஈட்டவும் என திரைகடல் தாண்டி திரவியம் தேடச் சென்றோர் வீட்டில் உயிர்பிழைத்து வந்தால் போதும் என்ற பிரார்த்தனைகள்.

எல்லாவற்றுக்கும் அடிப்படையில் வேர்விட்டு ஆழமாக ஊடுருவியிருப்பது ஆதிக்க வன்முறை. ஆயுத பலத்தைக் கொண்டு அடிபணியச் செய்யும் அதிகாரத் திமிர். கச்சா எண்ணெயை சுமந்து மிதக்கும் கப்பல்கள் கடந்து செல்லும் நீரிணையை மூடிவிட்டால் உலகின் பல நாடுகளிலும் தட்டுப்பாடு தலையெடுக்கும். பதற்றம் விளையும். அடுத்து என்ன வழி என்று யோசிக்கும். உலக நாடுகளின் நலம் பேணும் அமைப்புகள் கையறு நிலையில் தலைகுனிந்திருக்க நீண்டுகொண்டிருக்கிறது போர்க் காலம்.

கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது வழக்கு. உதாரணங்களும் பல. பலிகொள்ளும் கத்தியை ஆயுதமாகக் கொண்டால் அது ரத்தம் பார்த்து ஓயாது என்பதை அறிந்துதான் அகிம்சையை கையிலெடுத்தார் காந்தி. பேசித் தீர்க்க முடியாது என்று உலகில் எந்தவொன்றும் இல்லை என்பதை பலமுறை மெய்ப்பித்துக் காட்டினார். உலக அமைதிக்கு அகிம்சையே வழி, ஆயுதங்கள் இல்லை என்று அறிவுறுத்தினார். மண்டேலா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அகிம்சையை வலியுறுத்தினார்கள். ஆனால், இன்று அணு ஆயுதங்களை சக்திக்கேற்ப திரட்டி வைத்துக்கொண்டு நாடுகள் பலவும் தயார் நிலையில் இருப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆதி மனிதன் கல்லை ஆயுதமாகக் கொண்டான். மிருகங்களிடமிருந்து பாதுகாக்கவும் வேட்டையாடிப் புசிக்கவும் அவனுக்கு அது தேவையாக இருந்தது. இரும்பைக் கண்ட பிறகு கூரிய கத்திகளும் வேல்களும் ஈட்டிகளும் உருவாயின. அனைத்துமே வேட்டைக் கருவிகள்தான். வயிற்றுப் பசிக்கான வேட்டை நாடு பிடிக்கும் அதிகார வேட்கைக்கானதாய் மாறியபோது வேட்டைக் கருவிகள் அனைத்தும் படைக் கருவிகள் ஆயின. பகுத்தறிந்து அணுவைப் பிளந்து அதை அழிக்கும் சக்தியாக்கியதன் விளைவை இன்னும் உலகம் மறந்திருக்காதுதான். ஆனாலும், கையிலெடுத்த ஆயுதத்தை கீழே போடும் துணிச்சல் இல்லை எவருக்கும். அவரவர் கை மறைவில் ஆயுதங்களைத் தாங்கி படங்களில் சிரித்துக் கொண்டே அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்கள்.  

ஒருவேளை, உலக நாடுகளில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் அணு ஆயுதங்கள் அனைத்தையும் ஆக்கத்தின் ஆற்றலாக மாற்ற முடியுமானால் எவையெல்லாம் சாத்தியம் என்பதை அறிந்தவர்கள் விஞ்ஞானிகள். ஏதேனும் ஒரு அற்புதம் நடந்து ஆயுத வியாபாரிகள் மனந்திருந்தி அமைதித் தூதுவர்களாகலாம். அதிகாரமல்ல, அன்பே நிரந்தரம் என்பதையும் உணர்ந்து திருந்தலாம். மானுடம் செழித்து இப்புவி இன்னும் காலங்கள் தாண்டி நிலைத்திருக்கலாம்.

கவிஞனும் கவிதையும் இப்படியொரு கனவைக் காண முடியும். கவிஞனின் சொல் பலிக்கும் என்பது நம்பிக்கை. அப்படியொரு நம்பிக்கையை, கனவைச் சொல்கிறது சபரிநாதனின் கவிதை.

அண்மைகாலத்தில் நமது திரை நாயகர்கள் பலரும் ‘பொருளி’ன்றி உலா வருவதில்லை. ஆயுதந்தாங்கி சமூகத்தின் அறம் பேணுகிறார்கள். எளியோரின் அவலங்களைத் துடைக்க ஆயுதங்களேந்தி அவதாரமெடுக்கிறார்கள். திரையில் காட்சியாகும் ‘பொருட்’கள் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கையில் வந்து சேர்கின்றன. மின்சார ரயில் நிலையங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் அவற்றின் கூர் திறனை சோதித்துப் பார்க்கிறார்கள். அறிவே ஆயுதம் என்பதை மறுக்க பிம்பங்கள் போதும் போலும். உயிருக்கு மதிப்பில்லாத கொடுங்காலத்தில் எந்தவொரு அற்ப காரணத்துக்காகவும் உயிரை எடுக்க தயங்குவதில்லை. திருட்டு, பிறழ் உறவுகள், சொத்துத் தகராறு, குலத் தூய்மையை பாதுகாப்பது என்று எல்லா காரணங்களுக்காகவும் உயிர்கள் பலியிடப்படுகின்றன. வன்முறையை கையிலெடுக்க சற்றும் யோசிக்காத நாட்கள் இவை. திரைப்படங்களும் சமூக ஊடகங்களும் வன்முறை வரம்பை அபாய அளவுக்கும் மேலெடுத்துச் சென்றிருக்கும் நிலையில் அவற்றின் உடனடி தாக்கங்களை அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இவற்றை முறைப்படுத்துவதற்கென்று அமைக்கப்பட்டுள்ள தணிக்கைக் குழு தன் அதிகார வரம்புகளையும் விதிமுறைகளையும் மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது.

உலகில் அநீதி தலைதூக்கும்போது தர்மத்தை நிலைநிறுத்த அவதரிப்பதாகப் படித்திருக்கிறோம். அவ்வாறான நம்பிக்கையை கவிதையும் எழுத்துமே விதைக்கின்றன. இப்போதும் அவ்வாறான ஆழமான நம்பிக்கையை கவிதையின் மூலம்தான் தரமுடியும்.

கத்திகளை பழம் வெட்ட மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு காலத்தில், கடுந்தேனீருக்காக மழை ஓய்ந்த மாலைப் பொழுதுகளில் நடந்து செல்லும் காவி உடுத்திய சாதுவாக வன்முறையை நிச்சயமாகப் பார்க்க முடியும்.

 

விழிப்படைந்த கத்தி

0

நாளிதழில் பொதித்து எடுத்துச் செல்லப்பட்ட கத்தி

தவறி விழுந்தபோது சுயநினைவிற்குத் திரும்பியது

இப்போது அது ஒரு பசித்த புலி, யாராலும் தொடமுடியாது.

 

இனி அதற்கு எதுவும் தேவை இல்லை.

தனக்கு வேண்டிய பழங்களை தானே நறுக்கிக் கொள்ளும்

குளிர்பருவத்தில் உறையுள் குனிந்து சென்று உறங்கும்.

 

சட்டென உற்ற விழிப்பு, திடுமென நுரைத்த கருணை,

பளிச்சிடலைக் கைவிளக்காக ஏந்தியபடி

சுற்றுச்சுவரற்ற தன் இருண்ட கிணற்றைப் பாதுகாக்க வேண்டும் ராமுழுதும்.

 

நெருப்பிலும் கல்லிலும் உரசி நலம்பேணும் அது

மழை ஓய்ந்த கருஞ்சம்பல் மாலைகளில் நடந்துசெல்லக் காணலாம்

காவி உடுத்திய சாதுவென கடுந்தேனீருக்காக.


( ஆவநாழி ஏப்ரல் 26 இதழில் வெளியானது )



இடம் பிடிக்கும் கலை - கவிதையும் ஞானமும் 9

 


0

வாய்ப்புகளும் வரிசைகளும் இருந்தால் அங்கே நிச்சயம் ‘இடம் பிடித்து வைக்கும்’ பண்பையும் தவறாமல் பார்க்க முடியும். வரிசையில் நின்றே பிழைத்துக் கிடக்க விதிக்கப்பட்டவர்களுக்கு வேறு பாடுகளும் இருக்கும் அல்லவா? எந்த நேரமும் வரிசையிலேயே நின்று கொண்டிருக்கும் ஆடம்பர வாழ்க்கை அவர்களுக்கு வாய்க்கவில்லை. எனவே, ஒவ்வொரு வரிசையிலும் தங்கள் இடத்தை உறுதிசெய்து கொள்ள இடம் பிடித்து வைக்கவேண்டும். வரிசைக்குத் தக்கவென பொருட்களும் கைவசம் இருக்கும். கோடை காலங்களில் தண்ணீருக்காக குழாயடி வரிசைக்கு கதவிலக்கம் எழுதப்பட்ட பிளாஸ்டிக் குடங்கள், ரேஷன் கடைகளில் மண்ணெண்ணை கலன்கள், பேருந்துகளிலும் ரயில்களிலும் கட்டைப் பைகள் என்று வரிசையில் இடம் பிடிப்பதற்கென தகுதிபெற்ற பொருட்கள் இன்னும் சில உண்டு.

எழுபதுகளில் டூரிங் டாக்கீஸ்களில் தரை டிக்கெட்டுகள் மணலில் உட்கார்ந்தே படம் பார்க்கவேண்டும். தாமதமாக வரும் நண்பனுக்காக தனக்கருகில் மணலைக் குவித்து வைத்து இடம் பிடித்திருப்பார்கள். தியேட்டர்களில் இருக்கை எண்ணுடன் முன்பதிவு செய்யும் வசதி வருவதற்கு முன்பு, ‘முந்திக் கொள்வருக்கே முதலிடம்’ என்பதுதான் அடிப்படை. நியூஸ் ரீல்களும் விளம்பரங்களும் முடிகிற நேரம் சரியாக வந்து சேர்பவருக்காக இருக்கையைப் பிடித்து வைத்தவர், கேட்பவர்களிடமெல்லாம் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார் ‘ஆள் வராங்க’ என்று. நவீன கைபேசி செயலிகளின் வழியாக முன்பதிவு செய்யும் இன்றைய காலத்தில் மிச்சமிருக்கும் இருக்கையைப் பார்த்து வசதியானவற்றை நாமே தேர்வு செய்துகொள்ள முடிகிறது. ஒருவகையில் இதுவும் இடம்பிடிப்பதுதான். இங்கும் முதலில் வருவோர்க்கே முன்னுரிமை.

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோயமுத்தூருக்கு நிமிடத்துக்கு ஒரு பேருந்து புறப்பட்டுப் போகும். காலை ஏழரை மணியிலிருந்து எட்டே கால் மணிக்குள் புறப்பட்டுச் செல்லும் பேருந்துகளில் மூன்று தனியார் பேருந்துகள். கோவையில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லும் இளைஞர் கூட்டத்தினருக்கென எழுதி வைக்கப்பட்டவை இந்த மூன்று பேருந்துகளும். குறிப்பிட்ட நேரத்துக்கு பத்து நிமிடம் முன்பே வந்தாலும், புறப்பட்டுப் போகும் பேருந்துகளில் இவர்கள் ஏறமாட்டார்கள். வந்தவுடன் தங்களது வழக்கமான பேருந்தில் ஏறி நோட்டுப் புத்தகங்களை வரிசையாக இருக்கைகளில் போட்டுவிடுவார்கள். முதல் சில வரிசைகளில் கைகுட்டைகளும் இடம் பிடிக்கும். குறிப்பிட்ட நேரத்தில் புறப்படும்போது ஏறும் பிற பயணிகள் யாரும் காலியாக உள்ள இடத்தில் போய் உட்கார்ந்துவிட முடியாது. ஏற்கெனவே அங்கங்கே நின்று கொண்டிருக்கும் மாணவர்களில் ஒருவர் உங்களை நோக்கிச் சொல்லுவார் ‘அங்க ஆள் வருதுங்கண்ணா. நீங்க பின்னாடி போயிடுங்க.’ கடைசியில் உள்ள மூன்று அல்லது நான்கு வரிசைகளில்தான் உட்கார முடியும். சரியான நேரத்தில் வண்ணங்களும் வாசனையுமாய் வந்து சேரும் மாணவிகள், பிடித்து வைத்திருக்கும் இருக்கைகளில் உட்கார்ந்து நெற்றி வேர்வையைத் துடைத்துக் கொண்டு தலைகோதி முடித்தவுடன், இடம்பிடித்து வைத்த மாணவர்களில் யாரையேனும் பார்த்து ஒரு புன்னகையை செலவிடுவார்கள். நோட்டுப் புத்தகத்தைக் கொண்டு இடம் பிடித்து வைத்த அந்த இளைஞர்களுக்கு அந்த நாள் அக்கணம் பெரும் பேறாகி நிறையும். ஓட்டுநர் ஒலிப்பேழையிலிருந்து இனிய பாடல்களை ஒலிக்கச் செய்வார். பேருந்து இப்போது இளைஞர்களுக்கான ரதமாகியிருக்கும். பேருந்து புறப்பட்டு வெளியில் வரும்போதும் பிடித்து வைத்த இருக்கைகளில் பாதிதான் நிரம்பியிருக்கும். ஆள்தான் யாருமில்லையே என்று யாரும் காலி இருக்கைகளில் அமர்ந்துவிட முடியாது. அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஏற இருக்கும் மாணவிகளின் பட்டியலை சரிபார்த்தபடி படிகளில் ஒய்யாரமாக நின்றிருக்கும் இளைஞர்கள் உங்களை அனுமதிக்கமாட்டார்கள். பெருமாநல்லூர் சாலையில் ஊர்ந்து புஷ்பா தியேட்டர் நிறுத்தம் வரும்போது அநேகமாக இருக்கை எதுவும் மிஞ்சியிருக்காது. நிற்கவும் இடமிருக்காது. அப்போதும்கூட ஓரிரு இருக்கைகள் அடுத்தடுத்த நிறுத்தங்களில் வந்து சேரும் தேவதைகளுக்காகக் காத்திருக்கும். யாரும் உரிமையாய் கேட்டுவிட முடியாது. கல்லூரி மாணவர்கள் பலரின் கையிலிருக்கும் நோட்டுப் புத்தகங்கள் இப்படி பேருந்தில் இடம் பிடிக்க மட்டுந்தான் என்கிற ரகசியம் வெகுநாட்கள் கழித்தே தெரிய வந்தது. இப்படி இடம் பிடிக்கும் மாணவச் செல்வங்கள் கடைசி வரையில் எந்த இருக்கையிலும் அமரமாட்டார்கள். பயணம் முழுக்க நின்றகோலந்தான். இன்னும் சிலர் நண்பர்களின் மடிகளில். நடத்துனருக்கு ஓய்வுகொடுத்து தற்காலிக நடத்துனராக பொறுப்பேற்கும் நல்ல மனம் கொண்ட மாணவர்களும் உண்டு. இவை அத்தனையும் அன்றாடம் அதே பேருந்தில் பயணம் செய்யும் மாணவிகளின் மனத்தில் இடம் பிடிக்கச் செய்யும் முயற்சிகள்தான். அந்த அறுபது அல்லது எழுபது நிமிட பயணமே அன்றைய நாளை அர்த்தப்படுத்தும். கோவையை அடைந்து அந்தந்த நிறுத்தத்தில் மாணவிகள் இறங்கிப் போன பின் பேருந்து மொத்தமும் வெறிச்சோடும்.

பேருந்தில் இருவர் அமரும் இருக்கைகளில் ஒன்றில் முதலில் அமர்பவர்களில் பலரும் அடுத்த இருக்கையை எதற்கும் இருக்கட்டும் என்று பிடித்து வைத்திருப்பதுண்டு. தன்னைவிட பருமனான ஒருவரை பயண நேரம் முழுவதும் தோளில் சுமக்க முடியாது. பேருந்து புறப்பட்டவுடன், டிக்கெட்கூட வாங்காமல் கண்ணசந்து, தலைசொக்கி தோளில் சாயும் பாக்கியவான்களைத் தாலாட்டியபடி போகவும் முடியாது. இதுபோன்ற காரண காரியங்களை உத்தேசித்து, இந்த இம்சைகளைத் தர மாட்டார் என்று நம்பும் ஒருவர் உள்ளே ஏறி வரும்போது அவருக்கு அந்த இருக்கையை அனுமதிப்பார்கள். இத்தனை எச்சரிக்கையையும் மீறி எதிர்பார்த்த அசம்பாவிதங்கள் நடந்தால் வேறொன்றும் செய்ய முடியாது.

இடம் பிடிப்பதென்றாலே சண்டைகள்தானே? சண்டையில்லாமல் பிடிக்கும் இடத்தில் அத்தனை சுவாரஸ்யமும் இருக்காது. இடத்துக்கான சண்டைதான் வாழ்க்கை மொத்தமும். யாரேனும் ஒருவரின் மனத்தில், எண்ணத்தில், அபிப்ராயத்தில் ஏதேனும் ஒரு காரியத்தை உத்தேசித்து இடம் பிடிக்கும் வித்தையைத்தான் வாழ்க்கை முழுவதும் அன்றாடம் பயின்றுகொண்டிருக்கிறோம். வகுப்பறை முதல் அரசியல் வரை இடத்துக்கான போராட்டங்கள் ஓய்வதேயில்லை. மாணவனாக இருக்கும் வரையிலும் மதிப்பெண்ணில் இடம்பிடிக்க வேண்டும். இளைஞனாகிவிட்டால் விரும்பிய பெண்ணின் இதயத்தில் இடம் பிடிக்கவேண்டும். மணமான பெண்ணுக்கு கணவனின், மாமியாரின் மனதில் இடம் பிடிக்கவேண்டும். ஊழியனுக்கு அதிகாரியின் மனதிலும் அதிகாரிக்கு முதலாளியின் மனதிலும் முதலாளிக்கு ஆட்சியாளரின் மனதிலும் ஆட்சியாளர்களுக்கு மக்களின் மனதிலும் இடம்பிடிக்கும் அவசியமும் அவஸ்தைகளும்.

இடம் பிடிக்க முடியாதவர்களை சமூகமும் சக மனிதனுமே மதிப்பதில்லை. ‘இதுகூட முடியலையா?’ என்ற ஏளனத்துக்கு பல்வேறு முகங்கள், பல்வேறு குரல்கள். வாழத் தகுதியற்றவர்கள் என விலக்கி வைக்கபடுவார்கள். அடுத்தவன் இடத்தை காலிசெய்வதும் அந்த இடத்துக்கு தான் முண்டுவதுமே காரியக்காரர்களின் சாமர்த்தியம். சற்று பரந்த மனத்துடன் அடுத்தவனுக்கு பாவம் பார்ப்பவர்களுக்கு வேறொரு பெயர் உண்டு, இளிச்சவாயன்கள். காலியாக இருக்கும் அடுத்த இருக்கையில் இன்னொருவன் வந்து உட்காரும்போது கால்களை அகட்டி உடம்பை நகர்த்தி தன் இருப்பை நிறுவிக் கொள்பவனே புத்திசாலி.

இடம் கிடைக்காதவர்கள், முன்பே அடுத்தவர்களுக்காக இடம் பிடித்தவர்களைப் பார்த்து ஆத்திரத்துடன் கேட்பதுண்டு ‘யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை. எல்லாருக்கும் அதே ஆறடி மண்ணுதான்.’ இல்லையென்றால் ‘போகும்போது யார் என்னத்த கொண்டுபோக முடியும்?’. எல்லாவற்றிலும் இடம் பிடிக்க முயல்பவர்கள், அவசரப்படுபவர்கள் இடுகாட்டிலும் சுடுகாட்டிலும் இடம்பிடிப்பதைப் பற்றி யோசிப்பதுகூட இல்லை. எண்சாண் உடம்பை நொடிப்பொழுதில் தீக்கு இரையாக்கும் இன்றைய மின் மயானங்களின் வருகைக்குப் பிறகு மேற்சொன்ன சொற்கள் அனைத்தும் பொருள் இழந்துவிட்டன. யாரும் எங்கும் எந்த இடத்தையும் பிடிக்க முடியாது. சாம்பலாகி நீரில் கரைவதும் காற்றில் காணாமல் போவதுமே நடைமுறை.

மதாரின் ‘அமர்விடம்’ கவிதையில் இடம் போடுவது அழகியலாக வெளிப்பட்டிருக்கிறது. இடம் போடும் அல்லது இடம் பிடிக்கும் போட்டிகள் மன அவஸ்தைகளை கூட்டும்போது இதுபோன்ற அழகியல் கோணங்கள் சற்றே ஆசுவாசம் அளிக்கின்றன. கத்தரிப் பூவையும் மழைத்துளியையும் காக்கை எச்சத்தையும் கடற்கரை மணல்வீட்டையும் இடம் பிடிக்கும் உத்திகளாகக் காணும் கவிஞனும் இந்தக் கவிதையும் வாசகனின் மனத்தில் இடம் பிடித்துவிடுவதில் வியப்பேதுமில்லை.

அமர்விடம்

0

நான் அமரச்சென்ற

நாற்காலியில்

ஒரு கத்தரி நிறப் பூ.

 

இந்த மண்டபத்தில்

பூ போட்டு

சீட் பிடித்தவர்

யார்?

 

நான் அமரச் சென்ற

பேருந்து இருக்கையில்

மழையின் சில துளி.

 

யாராக இருக்கும்?

நான் ஓய்வெனத்

திரும்பிய

மைதான மதிலெங்கும்

காக்கை எச்சம்.

 

ஏன் இந்த

வேண்டாத வேலை?

 

கரையிலோ

சிறுமி

கட்டிய வீடு.

 

வெற்றுத் தரையில்

மணலைப் போட்டு

மலை.


( ஆவநாழி ஏப்ரல் 26இல் வெளியானது )

விட்டல்ராவ் எனும் வியத்தகு மனிதர்

 


0


கோவையில் ‘அருவி’ என்றொரு அமைப்பு செயல்பட்டு வந்தது. சீனிவாசன், சூரி, சுரேஷ் குமார் ஆகிய மூன்று நண்பர்கள் ஒருங்கிணைத்தனர். இரண்டு மாதங்களுக்கு ஒரு நிகழ்ச்சி. இலக்கியம் மட்டுமல்லாமல் பிற கலை, அறிவுத்துறை சார்ந்த முக்கியமான ஆளுமைகள் கலந்துகொண்டனர். அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில்தான் விட்டல்ராவை முதன்முதலாக சந்தித்தேன். ‘தமிழகக் கோட்டைகள்’ குறித்த உரை. விட்டல்ராவ் எடுத்த புகைப்படங்களுடனான காணொளியுடன் கூடிய நிகழ்ச்சி. முன்பே அவருடைய நாவல்கள் ‘போக்கிடம்’, ‘வண்ண முகங்கள்’ இரண்டையும் வாசித்திருந்தேன். ஆனால் அன்றைய நிகழ்ச்சியில் அவருடைய இன்னொரு பக்கத்தையும் அறிய முடிந்தது. தமிழகத்திலுள்ள பல்வேறு கோட்டைகளுக்குச் சென்று அவற்றைக் குறித்து எழுதிய அவரது ஆர்வமும் தகவல்களை சொன்ன விதமும் அவரை நெருங்கச் செய்தது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரது பிற நாவல்கள், சிறுகதைகளைத் தேடியெடுத்து வாசித்தேன்.

சில வருடங்களுக்கு முன்பு, இதே அரங்கில் நடைபெற்ற ‘பாவண்ணனைக் கொண்டாடுவோம்’ நிகழ்ச்சியின்போது மீண்டும் அவரைச் சந்திக்க வாய்த்தது. ஒரே அறையில் தங்க நேர்ந்தது. நிறைய உரையாடுவதற்கான சந்தர்ப்பம். எழுத்தைத் தவிர பிற துறைகளில் அவரது ஆர்வம் குறித்து நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது.

அவர் எழுத்தாளர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. 10 நாவல்கள், 5 தொகுதிகளாக 140 சிறுகதைகள், வெவ்வேறு துறை சார்ந்த 12 கட்டுரை நூல்கள் என்று கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக அழுத்தமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்.

 

விட்டல்ராவ் ஒரு ஓவியர். சென்னை கவின் கலைக் கல்லூரியில் முறையாகப் பயின்றவர். அவரது ஓவியங்கள் பல்வேறு கண்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன. எனவே, தனது புனைவுகள் கட்டுரைகள் என சந்தர்ப்பம் வாய்க்கும் இடங்களிலெல்லாம் ஓவியங்களைக் குறித்து அவர் குறிப்பிடத் தவறுவதில்லை.

அண்மையில் சென்னை கோட்டை அருங்காட்சியகத்துக்கு சென்றேன். பிரிட்டிஷ் ஆட்சியின்போது இங்கிலாந்திலிருந்து வந்து இந்தியாவை ஓவியமாக வரைந்தவர்களில் முக்கியமானவர்கள் தாமஸ் டேனியலும் வில்லியம் டேனியலும். தமிழகத்திலுள்ள பல முக்கிய இடங்களை அவர்கள் ஓவியமாக வரைந்துள்ளனர். சென்னை கோட்டை, திருச்சி மலைக்கோட்டை, தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம், ராயக்கோட்டை, சேலம் சங்ககிரி கோட்டைகள், மதுரை நாயக்கர் மகால் என்று பல இடங்களுக்கு சென்று ஓவியங்களை வரைந்துள்ளனர். அந்த ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் உள்ளன. இவர்களைப் பற்றியும் இவர்கள் தங்கள் படங்களை அச்சிடப் பயன்படுத்திய நுட்பம் பற்றியும் ‘தமிழகக் கோட்டைகள்’ நூலில் மிக விரிவாக எழுதியிருக்கிறார்.

அதேபோல சேலத்தைச் சேர்ந்த நவீன ஓவியரான கே.எம்.கோபால் வரைந்த ‘அர்த்தகணேஸ்வரி’ என்ற தாந்திரீக உலோகப் புடைப்பு படைப்பை குறித்து எழுதியுள்ள குறிப்பு மிக முக்கியமானது.

ஒருமுறை, சென்னை அண்ணா சாலையில், அப்போது மவுண்ட் ரோடு, அலங்கார் தியேட்டருக்கு அருகில் நடைபாதையில் இருந்த பழைய புத்தகக் கடையில் வழக்கம்போல பேரம் பேசிக்கொண்டிருக்கிறார். புத்தகக் கடை வைத்திருந்த வாய் பேச முடியாதவர் ஆவேசமாகக் கைகளை அசைத்து தியேட்டர் பக்கமாய் பார்க்கும்படி சொல்கிறார். தியேட்டர் வாசலில் கமலஹாசனின் பெரிய கட் அவுட். கீழே பிரமாண்டமான பேனர். இந்த இரண்டையும் பார்த்து ஓவியர் ஒருவர் தன் குறிப்பேட்டில் என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறார். வரைகிறார. நடைபாதை ஓரத்தில் உள்ள சிமெண்ட் ஜாலியில் சாய்ந்தபடி வரைவதும் எழுதுவதுமாக இருக்கிறார். அடர்ந்த நரைமுடி, தாடி மீசை, இறுக்கமான ஜீன்ஸ். பகல் பனினொன்றரை மணிக்கு சாலை பரபரப்பாக இருக்க இவர் எதையும் யாரையும் கண்டுகொள்ளாமல் காரியத்திலே கண்ணாக இருக்கிறார். அவரையும் வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர் தன் வேலையை முடிக்கும் வரை அருகில் சென்று கவனிக்கிறார் விட்டல்ராவ். வேலை முடிந்தவுடன் பேச்சு கொடுக்கிறார் “மிஸ்டர் ஹூசைன்?” அவர் நிமிர்ந்து பார்த்து “ஆமாம். நான்தான். என்னை உங்களுக்குத் தெரியுமா?” உற்சாகத்துடன் பேச்சு நீள்கிறது. வேறு தியேட்டர்களுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்கிறார். அங்குள்ள பேனர்களைப் பார்த்து குறிப்பேட்டில் வரைந்து கொள்கிறார். பிறகு ஒரு ரிக்ஷாவில் ஏறி விடைபெறுகிறார். இந்தியாவின் புகழ்பெற்ற எம்.எஃப்.ஹூசைன் சென்னை மவுண்ட் ரோடில் ஓவியம் வரைந்த நாள் அது.

ஓவியம் குறித்து பேசும்போது இன்னொரு செய்தியையும் அறிய முடிந்தது. கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஒரு ஓவியரும்கூட. தான் வரைந்த நீர்வண்ண ஓவியங்களை பொங்கல் பண்டிகையின்போது தன் வீட்டில் அவர் காட்சியாக வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. அத்தோடு அவர் வீணை வாசிப்பதிலும் தேர்ச்சி மிக்கவர் என்றொரு செய்தியும் உண்டு.

‘ஓவியக் கலை உலகில்’ என்ற அவரது புத்தகம் மிக முக்கியமானது, சிறப்பானதும்கூட. தமிழில் நவீன ஓவியங்கள் குறித்து எழுதப்பட்ட முதல் நூலாக இருக்கவேண்டும். இத்தாலிய மறுமலர்ச்சி காலம் தொடங்கி ஜென் புத்திச காலம் வரைக்குமான உலக அளவில் குறிப்பிடத்தக்க ஓவியர்கள், ஓவியங்களை அறிமுகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது இந்தப் புத்தகம். 1979இல் வெளியான இந்த நூலில் லியோனார்டா டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ, ரஃபேல், ரெம்ப்ரேண்ட், வெர்மிர் உள்ளிட்டோரைப் பற்றியும் அவர்களது முக்கியமான ஓவியங்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.

 

அவர் ஒரு புகைப்படக் கலைஞரும் கூட. இப்போதும் தோளில் கேமராவுடன்தான் பயணம் செல்கிறார். பழைய எஸ்.எல்.ஆர் கேமராவைக் கொண்டு எடுத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களை ஆல்பமாக தொகுத்து வைத்திருக்கிறார். பிறகு டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட படங்களையும் கோப்புகளில் சேமித்திருக்கிறார். அவரது கட்டுரைகளுக்கும் நூல்களுக்கும் இந்தப் படங்களே ஆதாரமாக அமைந்துள்ளன.

 

அத்துடன் விட்டல்ராவ் சினிமா ஆர்வலர். 75 வருட காலமாக சினிமா பார்த்து வருபவர். தமிழ், இந்திய, உலக சினிமாவைக் குறித்து அவருக்கு ஆழமான அனுபவமும் அறிவும் உண்டு. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் தொடக்க காலம் முதல் இன்று வரையிலான பயணம் என்றே கூறலாம். சேலம் மாடர்ன் தியேட்டர் உருவான காலத்திலிருந்து இன்று வரை சினிமாவுடனே அவரது காலமும் தொடர்கிறது. தன்னுடைய நான்கு வயதில், புகலூரில் துணிக் கூடாரத்தில் (டென்ட்) ‘கண்ணகி’ படத்தை பார்ப்பதில் தொடங்கியுள்ளது அவரது சினிமா அனுபவம். கூடாரம், ஓலைக் கொட்டாய், பழைய பாணி தியேட்டர்கள், நவீன ரக தியேட்டர்கள். திரைப்படச் சங்கங்கள், அயலக தூதரக திரை விழாக்கள், ஃபிலிம் பெஸ்டிவல்கள் என்று திரைப்படங்களைக் காணும் சாத்தியங்கள் உள்ள எல்லா வழிகளிலும் அவர் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறார்.  அன்று தியேட்டர்களில் பார்க்கக் கிடைத்த அமெரிக்க, ஐரோப்பிய படங்களும் அவற்றைக் குறித்து வெளிநாட்டு இதழ்களில் வாசிக்க நேர்ந்த கட்டுரைகளும் புத்தகங்களும் அயல்நாட்டு சினிமா குறித்த அவரது பார்வைக்குக் காரணங்களாய் அமைந்துள்ளன.

அதேபோல, இந்திய சினிமாவையும் அவர் தொடர்ந்து கவனித்திருக்கிறார். மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, பெங்காலி படங்களைக் குறித்தும் அவ்வப்போது எழுதியிருக்கிறார். நடிகர்கள் மட்டுமல்லாது தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார்.

கன்னட சினிமாவைக் குறித்து அவர் எழுதிய நூல் ‘நவீன கன்னட சினிமா’. கன்னட திரையுலகில் புதிய அலையை உருவாக்கிய எட்டு இயக்குநர்களைப் பற்றிய நூல். கிரீஷ் கர்னாட், எம்.எஸ்.சத்யு, ஜி.வி.ஐயர், நாக் சகோதரர்கள், பி.வி.காரந்த், பட்டாபி ராம ரெட்டி, புட்டண்ண கனகல், கிரீஷ் காசரவள்ளி ஆகியோரது படங்கள் கன்னடத் திரையுலகில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தின என்று விரிவாக அலசிய நூல். கன்னட சினிமா குறித்து எழுதப்பட்ட முதல் புத்தகமும் அதுவே.  அண்மையில் நல்லதம்பி அவர்களால் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

‘சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும்’, ‘தமிழ் சினிமாவின் பரிணாமங்கள்’, ‘நவீன கன்னட சினிமா’, ‘பயாஸ்கோப்காரன்’ ( புக் டே இதழில் வெளியான தொடர் ) ஆகிய சினிமா குறித்த பிற புத்தகங்களும் முக்கியமானவை.

சினிமா நூல்களில் இவர் கதையையோ, சுருக்கத்தையோ மட்டும் எழுதுவதில்லை. சினிமா தொழில்நுட்பங்கள், இசை, ஒலிப்பதிவு, கேமரா கோணங்கள் என்று எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துக்கொண்டே அதன் சிறப்புகளை எழுதுகிறார்.

இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு, ஓவியத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு, இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆங்கில சினிமாக்கள் என்று பல கோணங்களிலும் திரைக் கலையை அவர் அணுகியுள்ளார்.

 

வரலாறு அவருக்கு பிடித்த இன்னொரு துறை. ஓவியம், கட்டடங்கள், கோயில்கள், சினிமா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் அவர் வரலாற்றுடன் தொடர்பு படுத்தியே பார்க்கிறார். ஆகவே, இயல்பாகவே வரலாறு குறித்த ஆர்வத்தையும் ஆழக் கற்கும் நோக்கையும் காண முடிகிறது. அவரது புனைவுகள், புனைவு அல்லாத எழுத்துகளிலிருந்து வரலாற்றை பிரிக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு அவரது எல்லா எழுத்துகளிலும் வரலாறு தவிர்க்க முடியாத செல்வாக்கை செலுத்திருயிருக்கிறது.  

‘தமிழகக் கோட்டைகள்’ தமிழில் வெளிவந்துள்ள முக்கியமான ஒரு நூல். நாமக்கல் தொட.ங்கி கிருஷ்ணகிரி, சங்ககிரி, ஒசூர், செஞ்சி என நகர்ந்து இறுதியில் சீரங்கப்பட்டணத்தில் முடிகிறது. சிறு வயதில் தொடங்கி வாழ்வின் பல்வேறு பருவங்களில் காண வாய்த்த கோட்டைகளையும் அவற்றை பார்த்த அனுபவங்களையும் மிகச் சுவையாக சித்தரித்திருக்கிறது. தொல்பொருள் துறை, ஆவணக் காப்பகம் போன்ற பல்வேறு இடங்களிலிருந்து பெற்ற தகவல்களை மட்டும் சொல்வதல்ல இது. ஒவ்வொரு கோட்டையுடனும் தொடர்பான அத்தனை சம்பவங்களையும் செவி வழிக் கதைகளையும் கட்டுமானத் தொழிற்நுட்பங்களையும் இணைத்து சொல்லியிருக்கும் விதம் மிக முக்கியமானது. இந்த நூலை நாம் ஒரு புனைவு இலக்கியத்தைப் படிக்கும் ஆர்வத்துடனும் சுவையுடனுமே வாசிக்க முடியும். இந்த வகையில் தமிழில் இதுபோல இன்னொரு நூல் இல்லை.

 

இதற்கு இணையான இன்னொரு நூல் ‘வாழ்வில் சில உன்னதங்கள்’. சென்னையில் மூர் மார்கெட் என்ற இடம் இருந்தது என்பதே இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. அப்பா அம்மாவைத் தவிர எல்லாவற்றையும் வாங்க முடியும் என்று சொல்லுவார்கள். 1900ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு 1985ஆம் ஆண்டு தீக்கிரையானது. இந்தோசார்சனிக் பாணியில் கட்டப்பட்ட மூர் மார்கெட் பழைய புத்தகங்கள், இசைத்தட்டுகள், பழம்பொருட்கள் ஆகியனவற்றை கொண்ட முக்கியமான ‘குஜிலி’ அங்காடியாக விளங்கியுள்ளது. அங்கிருந்த பழைய புத்தகக் கடைகளைப் பற்றி, முருகேசன், நாய்க்கர், ஐரே போன்ற வியாபாரிகளைப் பற்றியும் வியாபார நடவடிக்கைகள் குறித்தும் விட்டல் ராவ் எழுதியுள்ள குறிப்புகள் பெருமதி மிக்கவை.  

சென்னையில் மூர் மார்கெட்டிலும் பிற இடங்களிலும் இருந்த பழைய புத்தகக் கடைக்காரர்களைப் பற்றிய குறிப்புகள் சுவாரஸ்யம் மிகுந்தவை. ஒவ்வொருவரும் துல்லியமான கதாபாத்திரங்கள். மயிலாப்பூர் ஆழ்வார், மவுண்ட் ரோடு தர்கா அருகிலிருந்த அப்துல் கரீம் பாய், முர்ரேஸ் கேட் சாலை மூர்த்தி, மயிலாப்பூர் லஸ் மூலை முருகேசன், பாரத் இன்சூரன்ஸ் கட்டடம் நடைபதை ஊமையன் என்று ஒவ்வொருவருடனும் விட்டல்ராவுக்கு ஆழமான நட்பு இருந்துள்ளது.  

பழைய புத்தகக் கடைகளில் அவர் சேகரித்திருக்கும் பல்வேறு அயல்நாட்டு இதழ்களின் பட்டியல் மலைக்க வைக்கிறது. தேடித் தேடி சேகரித்திருக்கிறார். சேகரித்தது மட்டுமல்ல, ஒவ்வொரு இதழையும் கரைத்துக் குடித்திருக்கிறார்.

தமிழின் முன்னணி இதழ்களுக்கு மாதிரியாய் அமைந்த அமெரிக்க வார இதழ் கோலியர்ஸ், ( ஒரு பக்க கதைகள் ) த சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்,  டைம், லைஃப், ஸ்பேன், பிளேபாய், இல்லஸ்ட்ரேட் வீக்லி, சோவியத் லிட்டரேச்சர், ஏரியல் ( இஸ்ரேல் ), ஓப்சர் ( பல்கேரியா ), என்கவுண்டர் ( லண்டன் ), இம்பிரிண்ட் ஆகிய இதழ்களை தேடித் தேடி சேகரித்துப் பாதுகாத்த கதைகளை இன்றைக்கு வாசிக்கும்போது வியப்பாக உள்ளது. தொலைப்பேசி நிறுவனத்தில் வேலை என்பது ஒரு சாக்குதான். மற்றபடி இவர் இப்படி நடைபாதைகளிலும் பழைய புத்தகக் கடைகளிலுமே திரிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. 

குறிப்பிட்ட சில புத்தகங்களை, இதழ்களை கடைகளில் தேடி அலைந்த கதைகளை சுவைபடச் சொல்லியிருக்கிறார்.

ஸ்டான்லி ஓல்பிரெட் என்பவர் எழுதிய நாவல் ‘இராமனுக்கு ஒன்பது மணி நேரம்’ ( Nine hours to Rama ). காந்தியை கொல்வதற்கு முன்பு நாதுராம் கோட்ஸே மனதளவில் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் ஒன்பது மணி நேரமே இதன் களம். மார்க் ராப்சன் என்பவர் இதை திரைப்படமாக்கினார். பிளிட்ஸ் பத்திரிக்கையில் கே.ஏ.அப்பாஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதியதைத் தொடர்ந்து படமும் நாவலும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. இந்த நாவலை மூர் மார்கெட் நாயக்கர் கடையில் தற்செயலாகப் பார்க்கிறார். மிகுந்த ஆர்வத்துடன் ஒரு ரூபாய்க்கு வாங்கி பரபரப்புடன் படிக்கிறார். நாவல் அவரை கவரவில்லை. இதற்குப் போய் இத்தனை ஆர்ப்பாட்டமா என்று ஏமாற்றம். அவரது அலமாரியில் ஒதுங்குகிறது நாவல். அதே சமயத்தில் காந்தியின் மீது சினிமாக்காரர்களின் கவனம் குவிகிறது. பத்திரிகையாளர் நண்பர் ஒருவர் கட்டுரை எழுதுவதற்காக இவரிடமிருந்து இரண்டு காந்தி புத்தகங்களை இரவல் வாங்கிச் செல்கிறார். அதன் பிறகு காணாமல் போய்விடுகிறார். இரண்டில் ஒரு புத்தகம் மட்டுமே சிறிது காலம் கழித்து திரும்பி வருகிறது. தடைசெய்யப்பட்ட நாவல் ‘ராமனுக்கு ஒன்பது மணி நேரம்’ அத்துடன் கையைவிட்டுப் போய்விட்டது.

இந்த குறிப்புகளுக்கு நடுவே அழகான சிறு கதைகள் சில உண்டு. உதாரணமாக, பழைய புத்தகக் கடை பாய் திடீரென இறந்துவிட, அவருக்குத் தரவேண்டிய 25 ரூபாயை கொடுப்பதற்கென்று நண்பருடன் அவருடைய வீட்டைத் தேடிச் செல்கிறார். குடும்பத்தினரைச் சந்திக்கிறார். விடைபெறும்போது மூத்த மகனிடம் நூறு ரூபாயை எடுத்துத் தருகிறார்.

1900ஆம் ஆண்டில் கட்டப்பட்டு, 85 ஆண்டுகள் இருந்த மூர் மார்கெட் எரிந்து முடிந்த மறுநாள். ஒரு பழம் புத்தகக் கருவூலம், புத்தக அருங்காட்சியகம் தீக்கிரையானது. அதன் அடையாளமாக நின்ற சிவப்பு இந்தோசார்சானிக் கட்டடம் முழுக்க எரிந்துவிட்டது. வெளியே நின்று வேடிக்கை பார்த்தபடி விசாரிக்கிறார். புத்தகக் கடைகள் எதுவும் மிஞ்சவில்லை, எரிந்து நாசமாகிவிட்டன என்று சொல்கிறார்கள். முதலியார், ஐரே என்று ஒவ்வொரு கடையைப் பற்றியும் திரும்பத் திரும்பக் கேட்கிறார். பிறகு நாயக்கரைப் பற்றி விசாரிக்கிறார். ‘அவரு ஒரு மாதிரி ஆயிட்டாராம்.’ ‘ஒரு மாதிரி மென்டலாயிட்டாரு.’ நண்பர் கிருஷ்ணன் நாயக்கர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோயில் குளத்தை அடுத்துள்ள ஒரு தெருவில் வீடு. உள்ளே சாவு வீடு போல பேரமைதி. நாயக்கர் நாற்காலி ஒன்றில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். “வணக்கம்” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து திருதிருவென்று விழிக்கிறார். பிறகு பழையபடி எங்கோ வெற்றிடத்தை வெறிக்கிறார். “என்னைத் தெரியுதா?” கேட்கிறார். எந்த அசைவுமில்லை. தன் பெயரை இரண்டு முறை சொல்லிப் பார்க்கிறார். எந்த சலனமும் இல்லை. “எங்களையே அவருக்குத் தெரியலீங்க…” என்கிறார் அவரது மனைவி. அவர் இன்னும் வெறித்துப் பார்த்தபடியே தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறார்.   

எம்.கே.தியாகராஜ பாகவதரின் இறுதி நாட்கள். சேலத்தைச் சேர்ந்த எம்.ஏ.வி பிக்சர்ஸ் நிறுவனம் ‘சிவகாமி’ எனும் படத்தை தயாரிக்கிறது. எம்.கே.தியாகராஜ பாகவதர் கதாநாயகன். அதுவே அவரது இறுதித் திரைப்படமும். அப்போதே அவருக்கு கண்பார்வை போய்விட்டது. கருப்புக் கண்ணாடி அணிந்து சமாளித்திருக்கிறார். நிற்கவும் நடக்கவும் முடியாமல் தடியூன்றியிருக்கிறார். படத்திலும் அதே போன்று ஒரு கதாபாத்திரம். முன்புபோல அவரால் பாட முடியவில்லை. எனவே, பழைய இசைக் கோப்புகளிலிருந்து பாடல்களை எடுத்துச் சேர்த்துக் கொண்டனர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் எங்காவது அமர்ந்து எதையாவது பாடிக் கொண்டிருப்பார். ஒரு நாள், ஓடையின் மீது போடப்பட்ட சிறு மோரி மீது, தாடியும் மீசையும் கருப்புக் கண்ணாடியுமாய் ஜிப்பா வேட்டியில் மெலிந்த பெரியவர் ஒருவர் மங்கிய குரலில் பாடிக் கொண்டிருக்கிறார். ஆட்கள் சிலர் நின்று வேடிக்கைப் பார்த்தபடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யார் என்று கேட்கும்போது அவர்களில் ஒருவர் சொல்கிறார் “பாகவதர்.”

இந்த சம்பவங்களையெல்லாம் விட்டல்ராவ் சில வரிகளில்தான் சொல்லியிருக்கிறார். ஆனால், வலுவான சிறுகதைகளுக்கான ஆழத்தையும் உணர்ச்சி மோதல்களையும் கொண்டுள்ளன.

அண்மையில் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சி 48வது கண்காட்சி. 47 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி அது தொடங்கியது என்பது மிக சுவாரஸ்யமானது. முதல் சென்னை புத்தகக் கண்காட்சி. 1977 டிசம்பரில் தமிழ்நாடு வெள்ள நிவாரணத்துக்காக சென்னை புத்தகக் கண்காட்சி, காயிதே மில்லத் கலைக் கல்லூரியில் நடத்தப்பட்டது. கல்லூரியின் வகுப்பறைகளில் புத்தகங்கள் காட்சிப் படுத்தப்பட்டன. இரண்டு மூன்று வகுப்பறைகள், பழைய புத்தகங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் தான் வாங்கிய புத்தகங்களை பட்டியலிட்டிருக்கிறார்.

 

அத்துடன், விட்டல்ராவ் ஒரு சினிமா பின்னணிப் பாடகரும்கூட. ஆமாம், சினிமாவில் ஒரு பாடலில் அவரது குரல் ஒலித்திருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘மகேஸ்வரி’ படத்தில் ஏ.எம்.ராஜா, ஜிக்கி ஆகியோருடன் பாடியிருக்கிறார். ஜி.ராமநாதன் இசையமைத்த இந்தப் படத்தில் விட்டல்ராவின் இசை ஆசிரியரான மரி ஜோசப் சேர்ந்திசை பாடச் சென்றிருக்கிறார். அப்போது இன்னொரு குரலும் தேவைப்பட, அப்போது பள்ளியில் பாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பிடித்து பரிசு பெறுகிற விட்டல்ராவையும் அழைத்துச் சென்றிருக்கிறார். பாடலில் அவரது குரலும் பதிவாகியுள்ளது. அதற்கு சம்பளமாய் ஐந்து ரூபாயும் மட்டன் பிரியாணியும் கிடைத்திருக்கிறது-

 

‘தொலைபேசி நாட்கள்’ என்ற நூல்ல் சென்னையில் தொலைபேசி உருவான வரலாறு, அத்துறையில் பணியில் சந்தித்த மனிதர்களின் சித்திரங்கள் ஆகியனவற்றை சுவைபட எழுதியுள்ளார்.        

 

‘பேசும் புதிய சக்தி’ மாத இதழில் எழுதிய ‘கலையும் காலமும்’ மிக விரிவான முக்கியமான ஒன்று. குகை ஓவியங்கள் தொடங்கி நவீன கட்டடக் கலை வரையிலுமான பரிணாம வளர்ச்சியைப் பற்றியது. சுவரோவியம், சுடுமண் சிற்பம், கற்றளிகள், குகைக் கோயில்கள், சுதைச் சிற்பங்கள் ஆகியவை உருவாகி வளர்ந்த விதத்தை ஹம்பி, மாமல்லபுரம் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் எழுதியிருக்கிறார்.

‘கலை இலக்கிய சங்கதிகள்’ கட்டுரைத் தொகுப்பில் சென்னையில் இருந்த நாட்களில் தான் சந்தித்த முக்கியமான ஆளுமைகளுடனான அனுபவங்களை விவரித்திருக்கிறார். அந்த காலத்தில் ஆனந்த விகடன் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் ‘நடைபாதை’. அதை எழுதியவர் இதயன். பிழைப்புக்காக பம்பாய் சென்று அங்கு நடைபாதை கடை நடத்தியிருக்கிறார். பின்பு அது ஒரு கலவரத்தின்போது சூறையாடப்பட்டிருக்கிறது. அந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது அந்த நாவல். பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியை குறித்த ‘கிராண்ட்  ரோடு’ எனும் இன்னொரு நாவலும் உண்டு. திருமணம் செய்து கொள்ளாத அவர் இசை ரசிகராகவும் இருந்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் தன் எழுத்தை யாருமே அங்கீகரிக்கவில்லை என்று பிளேடால் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறார்.

 

விட்டல் ராவ் அவர்களின் பெங்களூர் வீட்டில் இன்றும் ஒரு பழைய சைக்கிளை வைத்திருக்கிறார். தொலைபேசி இலாகாவில் சேர்ந்த சமயத்தில், சைக்கிளுக்கென தரப்பட்ட கடன் தொகையைக் கொண்டு அதே இலாகாவில் வேலை செய்த ஒருவரிடமிருந்து பழைய சைக்கிளை விலைக்கு வாங்கியிருக்கிறார். நாட்டிங்ஹாமில் உருவாக்கப்பட்ட ராலி சைக்கிள். கியர்கள் கொண்டது. ஆனால், அதற்கான உதிரிப் பாகங்கள் சென்னையில் கிடைக்காது. அது தெரிந்துதான் அதை விற்றிருக்கிறார். ஆனால், விட்டல்ராவ் அந்த சைக்கிளைக் கடைசி வரையிலும் விடாமல், பணி ஓய்வு பெற்று பெங்களூர் செல்லும்போதுகூட அதை தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கிறார். பெங்களூரில் சில நாட்கள் ஓட்ட முயன்று முடியாமல், இருக்கட்டும் என்று அப்படியே வைத்திருக்கிறார். அவரது சென்னை வாழ்க்கையின் குறியீடு, நினைவுச் சின்னம் என்று அதை வைத்துக் கொள்ளலாம். நாட்டிங்ஹாமில் தயாரிக்கப்பட்ட அந்த சைக்கிளுக்கு ஒரு ‘ஆண்டிக்’ தன்மை உண்டு. விலைமதிக்க முடியாத பழமையைக் கொண்டது. விட்டல்ராவ் அவர்கள் சேகரித்து வைத்திருக்கிற நினைவுகளும் தகவல்களும் சம்பவங்களும் அத்தகைய பொருண்மையும் பழமையும் மிக்கவை. சைக்கிளைத் தூக்கிப் போட முடியாதது போலவே அவரால் தன் நினைவுகளையும் தூக்கிப் போட முடியாது. அதே சமயம் அந்த சைக்கிள்தான் அவருக்கு உற்சாகமூட்டும் ஊக்கியாகவும் நின்றுகொண்டிருக்கிறது.

 

1942ஆம் ஆண்டு பிறந்தவர். 1967ஆம் ஆண்டு அவரது முதல் சிறுகதை வெளியாகிறது. அறுபது ஆண்டு கால இலக்கிய வாழ்க்கை. இன்னும் அவர் ஓய்ந்துவிடவில்லை. எழுதிக் கொண்டிருக்கிறார். எழுத்துடன் நுண்கலைகள் சார்ந்த அவரது அக்கறை பிற எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான அம்சம். வேறொரு எழுத்தாளர் இத்தனைத் துறைகளில் பங்களிக்கவில்லை.

அவரை நெருங்குந்தோறும் எனக்கு இப்போதும் வியப்பைத் தருவது, ஒரு மனிதரால் எப்படி இத்தனை காரியங்களிலும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் ஈடுபட முடியும்? அவர் எடுத்துக்கொண்ட எல்லா வேலைகளிலும் தீவிர ஈடுபாட்டை காணமுடியும். கேட்கிறார்களே என்று எந்த வேலையையும் சாதாரணமாக செய்வதில்லை. ஒரு சிறுவனின் வற்றாத ஆற்றலும் ஆர்வமும் உற்சாகமும் ஈடுபாடும் அவரிடம் எப்போதும் உண்டு. அதுவே அவரை சலிப்பில்லாமல் கசப்பில்லாமல் தொடர்ந்து செயல்படச் செய்கிறது.

அண்மையில் பாவண்ணனுக்கு அளித்த பேட்டி ஒன்றில், முப்பது சிறுகதைகளுக்கான குறிப்புகள், மூன்று நாவல்கள் எழுதும் திட்டமும் உள்ளது என்று கூறியிருந்தார்.

அங்கீகாரங்கள், விருதுகள், பரிசுகள் பற்றிய எதிர்பார்ப்போ ஆசையோ கவலையோ இல்லாமல், எனவே பொறாமையும் வயிற்றெரிச்சலும் இல்லாமல் ஆரோக்கியமாக தன் காரியங்களில் ஈடுபட முடிகிறது. அவரிடம் நான் கற்றுக் கொள்வதும் பெற்றுக் கொள்வதும் இந்த வற்றாத ஆர்வத்தையும் எதையும் எதிர்பார்க்காது செயலூக்கத்தை தக்கவைத்துக் கொள்வதையும்தான். அந்த வகையில் என்னுடைய ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.

 

ஓசூரில் கெனில்வர்த் கேசில் என்றொரு மாளிகை 1864ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள கெனில்வர்த் கேசில் அமைப்பிலேயே அது பெங்களூர் சாலையில் கட்டப்பட்டது. இதைக் கட்ட ஏற்பாடு செய்தவர் அப்போது சேலம் மாவட்டத்தின் கலெக்டராக இருந்த பிரெட்.. இங்கிலாந்தில் அவர் திருமணம் செய்ய நிச்சயித்திருந்த பெண், இந்தியாவில் கெனில்வர்த் கேசில் போன்ற மாளிகை இருந்தால் தான் வருவேன் என்று சொன்னதை நிறைவேற்றும் பொருட்டு தன் சேமிப்புப் பணத்தையும் போட்டு கட்டினார். கதவு ஜன்னல்களுக்கு பர்மா தேக்கும், தரையில் பீங்கான் ஓடுகளும் பதிக்கப்பட்டன. ஆனால், பிரெட்டின் துரதிர்ஷ்டம் நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண் இன்னொருவனின் மேல் மையல் கொண்டு இவரை நிராகரித்துவிட்டாள். இதையறிந்த பிரெட் மனமுடைந்து துப்பாக்கியில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அதே மாளிகையில் அவரை புதைத்து சமாதி எழுப்பப்பட்டது.

தனது 53வது வயதில் மீண்டும் ஓசூருக்குப் போகிறார் விட்டல்ராவ். ஊர் முழுக்கவே மாறிப் போயிருக்கிறது. பஸ் நிலையத்தில் ஒரு பழக்கடையில் விசாரிக்கிறார் ‘கெனில்வர்த் கேசிலுக்கு எப்படிப் போகவேண்டும்?’

அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

அருகில் இருந்த தபால் ஆபிசுக்குப் போய் விசாரிக்கிறார். அவர்கள் கதவு எண், எந்த தெரு, என்ன அடையாளம், பின்கோடு என்ன என்று கேள்வி கேட்கிறார்கள்.

“ஜூஜூவாடி ஏரிக் கரையில, கோட்டை பக்கத்துல…” என்று அடையாளம் சொல்ல முயல, அங்கிருந்த பெண் கூறுகிறாள் “ஜூஜூவாடி ஏரியே இப்ப இல்ல. அதுமேல தான் இப்ப தொழிற்பேட்டையே நிக்குது. கோட்டையல்லாம் இப்ப கெடையாது.”

வெளியே வரும்போது ஊழியர்கள் பேசிக்கொள்கிறார்கள் “பாவம், எதையோ நெனச்சிட்டு, எதையோ தேடிட்டு, இந்த வயசுல பைத்தியக்காரத்தனமா…”

வேறு வழியில்லாமல் காவல் நிலையத்துக்குள் போகிறார். கோட்டையைப் பற்றியும் மாளிகையைப் பற்றியும் கேட்கிறார்.

அங்கிருந்த காவலர் கேட்கிறார் “என்னவாச்சும் காணாம போயிருச்சா?”

“இல்லீங்க. அது வெள்ளைக்கார மாளிகை.”

“அய்யா, இது போலீஸ் ஸ்டேஷன். கம்ப்ளெய்ண்ட் எதாவது குடுக்கணுமா?”

“இல்ல அந்த மாளிகையைப் பாக்கணும்?”

“எந்த மாளிகை?”

“கெனில்வர்த்”

“யாராவது வெள்ளைக் கார துரையா?”

“இல்லை. துரை கட்டின மாளிகை.”

“அதெல்லாம் தெரியாது. வேற யாருகிட்டயாவது கேளுங்க.”

ஒரு வழியாக முட்டிமோதி கோட்டையை அடைகிறார். பாழடைந்த கோட்டை. அகழிகள் பெரும் பள்ளங்களாக மட்டும் எஞ்சியிருக்கின்றன. கோட்டையின் எஞ்சிய பகுதிகளையும் ஒரு புல்டோசர் இடித்துத் தள்ளுகிறது. எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. ஒரு காலத்தில் ஒசூரின் அடையாளமாக இருந்த கோட்டையும் கெனில்வர்த் மாளிகையும் ஜுஜுவாடி ஏரியும் இப்போது காணாமல் போயிருந்தது.

ஒரு காலத்தில் ஓசூரின் அடையாளமாக விளங்கிய கோட்டை, மாளிகையைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

மாநில அரசின் அருங்காட்சியகங்களில் உடைந்த சிற்பங்களும் நடுகற்களுமே உள்ளன. பாராமஹால் கோட்டைகள், மாளிகைகள் குறித்த குறிப்புகளோ புகைப்படமோ எங்கும் இல்லை. விசாரித்தாலும் பயனில்லை. யாருக்கும் எதுவும் தெரிவதில்லை.

வரலாறு, வரலாற்றுச் சின்னங்களின் மீது நாம் காட்டுகிற அக்கறையின்மைக்கும் அலட்சியத்துக்கும் உதாரணம் இது.

 

இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டிப் பார்க்கும்போது அவர் தன் எழுத்தின் வழியாக சேகரித்து வைத்திருக்கும் தகவல்கள் பெருமதிப்புமிக்கவை. சமூக நோக்கிலும் இலக்கிய நோக்கிலும், இத்தகவல்கள் ஒவ்வொன்றும் நமக்கும் அடுத்த தலைமுறைக்கும் மிக அவசியமானவை. வேறு எந்த ஆவணங்களின் வழியாகவும் இவற்றை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட ‘டிஸ்டிரிக்ட் மானுவல்’ என்ற தகவல் தொகுப்பு முறை இப்போது பயன்பாட்டில் இல்லை. யாருக்கும் அதைப் பற்றிய அக்கறை இல்லை. நிலம், மக்கள், பண்பாடு, பழக்கவழக்கம், வாழ்க்கை முறை சார்ந்த இத்தகவல்களே மானுட வரலாற்றின் ஆதாரங்கள். காலப்போக்கில் இவை பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பத்தினாலும், உலகமயமாக்கலின் காரணமாகவும் நம் அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கணிசமானவை. மிக வேகமானவையும்கூட. ஒவ்வொரு நாளும் புதிய மாற்றங்கள் தொடர்ந்து வெகு வேகமாக நிகழ்கின்றன. திரும்பிப் பார்க்கும்போது பல விஷயங்கள் காணாமல் போயிருப்பதையும் மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதையும் உணரலாம். சென்னை, சேலம் ஆகிய நகரங்களை குறித்த அடிப்படைத் தகவல்களை யாரும் பெற வேண்டுமெனில் விட்டல்ராவின் நூல்களே உதவ முடியும். கூடவே, சென்னை பெருநகரம் சார்ந்த பல அவசியமான முக்கியமான தகவல்களும் அவரது நாவல்களிலும் நூல்களிலுமே இடம் பெற்றுள்ளன.

டானியல்களின் ஓவியங்களின் பாதையில் இவர் கோட்டைகளுக்கு பயணம் செய்ததுபோல விட்டல்ராவின் நூல்களிலுள்ள குறிப்புகளை வைத்துக் கொண்டு யாரேனும் சென்னையிலும் சேலம், நாமக்கல், ஓசூர் பகுதிகளிலும் பயணம் செய்வார்கள் என்றால் அவருக்கு பெரும் அனுபவங்கள் காத்திருக்கின்றன.

ஒரு தனி மனிதராக தன் வாழ்நாள் முழுக்க பெருமதிமிக்க வரலாற்றுத் தகவல்களை, குறிப்புகளை, சம்பவங்களை சேகரித்து தனது எழுத்துகளில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் விட்டல்ராவ். வேறு எந்த நோக்கமும் இல்லாமல் தனது ஆர்வத்தின் காரணமாக மட்டும், சொந்தப் பணத்தை செலவு செய்து இந்த அரும்பணியை செய்திருக்கிறார்.

விட்டல்ராவ் போன்ற அபூர்வமான இந்த மனிதர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்பது பெரிய கேள்விக்குறி. இன்று இங்கு வழங்கப்பட்டுள்ள ‘விளக்கு’ விருதின் மூலமாக அவர்மீதும் அவரது அளப்பரிய பங்களிப்புகளின் மீதும் வெளிச்சம் விழுமாயின் அதுவே அந்த நன்றிக்கடனின் சிறு பகுதியாக இருக்கும் என்று நம்புகிறேன்.  

0

( சென்னையில் 18,01,2025 சனிக்கிழமை மாலை கவிக்கோ அரங்கில் நிகழ்ந்த விளக்கு விருது விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் )

 

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...