Tuesday, 12 November 2024

காருண்யத்தின் பிரதி – யூமா வாசுகியின் கவிதைகள்

 



நவீன தமிழ்க் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒவ்வொருவரிடத்திலும் தங்களுக்குப் பிடித்தமான கவிதைகளின் பட்டியலும் கவிஞர்களின் வரிசையும் கட்டாயம் இருக்கும். எனக்குப் பிடித்தக் கவிஞர்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் இருவர் யூமா வாசுகியும் பிரான்சிஸ் கிருபாவும்.

1980 களில் திருப்பூரில் யூமாவாசுகியைச் சந்தித்த நாளிலிருந்து அவரது கவிதைகளை நான் அறிவேன். அவரது நண்பர்கள் நால்வர் மாஸ் கிரியேஷன்ஸ் என்ற ஓவியக் கூடத்தை திருப்பூரில் நடத்தி வந்த காலம் அது. ஸ்கீரின் பிரிண்டிங் தொழில்நுட்பம் திருப்பூரில் கொடிகட்டிப் பறந்திருந்த சமயம். யூமா வாசுகி அப்போது கணையாழியில் உதவி ஆசிரியராக, ஓவியராக பணியாற்றியிருந்தார். அவ்வப்போது திருப்பூர் வருவதுண்டு. ‘குதிரை வீரன் பயணம்’ என்ற சிறுபத்திரிக்கையைத் தொடங்கியிருந்தார். அந்த இதழுக்கான சிறு விளம்பரம் கணையாழியில் வெளியானது. அதிலிருந்த திருப்பூர் முகவரியைத் தேடிக்கொண்டு ஒருமாலை வேளையில் சென்றேன். படிகளில் ஏறிய சமயம் மேலிருந்து கீழே வந்த சிறுவனிடம் விசாரித்தபோது ‘அண்ணெ ஒசக்க இருக்காங்க’ என்று உரக்கச் சொல்லிவிட்டு ஓடினான். படிகளில் ஏறி ‘ஒசக்க’ போனேன். மொட்டைமாடியில் வேயப்பட்ட கீற்றுக்கொட்டகையின் ஒரு மூலையில் நாற்காலியில் கால்களை மடித்துப்போட்டபடி தாடிவைத்த உருவம் ஒன்று யோசனையாக அமர்ந்திருந்தது. உயரமான இன்னொரு இளைஞர் உற்சாகமான சிரிப்புடன் வரவேற்றார். யூமா வாசுகியைச் சந்திக்கவேண்டும் என்று சொன்னதும் அந்த இளைஞர் ‘இதா உக்காந்துருக்காரு’ என்று தாடிக்காரரை கைகாட்டினார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது அவர் முகத்தில் சலனமில்லை. இன்னும் யோசனையில் ஆழ்ந்திருந்தார். இளைஞர் தன்னை ‘அறிவுச்செல்வன்’ என அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடத் தொடங்கினார். அன்றைய சந்திப்பில் நானும் யூமாவும் பேசிக்கொள்ளவே இல்லை.

ஆனால் அதைத் தொடர்ந்த சந்திப்புகளில் ‘குதிரை வீரன் பயணம்’ இதழைப் பற்றியும் நவீன கவிதைகளைப் பற்றியும் நிறைய பேசியிருக்கிறோம். அவரது முதல் தொகுதி ‘உனக்கும் உங்களுக்கும்’ திருப்பூரிலிருந்துதான் வெளியானது. அந்த காலகட்டத்தில் தமிழ் சிறுபத்திரிக்கைகளைச் சார்ந்த பலரும் ‘மாஸ் கிரியேஷன்ஸ்’ அறைகளில் வந்து தங்கியதுண்டு. இரண்டாவதாக ‘தோழமை இருள்’ கவிதைத் தொகுப்பும் திருப்பூரில் இருந்த நாட்களில்தான் வெளியானது.

இரண்டுத் தொகுப்புகளிலும் உள்ள கவிதைகள் பலவற்றையும் யூமாவின் அழகிய கையெழுத்தில் வாசித்திருக்கிறேன். ‘மாஸ் கிரியேஷன்ஸ்’ மூடப்பட்ட பிறகு அவர் சென்னை சென்றடைந்தார். அதன் பின்பு புதிய கவிதைகளுடன் முந்தைய இரண்டு தொகுப்புகளின் கவிதைகளையும் உள்ளடக்கி தமிழினி வெளியீடாக ‘இரவுகளின் நிழற்படம்’ தொகுப்பு வெளியானது. அதன் பிறகு காதல் கவிதைகள் மட்டும் அடங்கிய ‘அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ வெளிவந்தது. சில வருடங்களுக்குப் பின்பு நியூ செஞ்சரி வெளியீடாக ‘என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்’ தொகுப்பு வந்தது.

இன்று இவை அனைத்தும் அடங்கிய பெருந்தொகை நூலாக ‘கசங்கல் பிரதி’யைப் பார்க்கும்போது சின்னஞ்சிறிய பச்சை இலைகள் காற்றில் அசைய பூமியைக் கண்ட உற்சாகத்துடன் வெயிலின் மின்னி நின்ற செடியென நான் கண்ட அவரது கவிதை இன்று பெருமரமாய் வளர்ந்து நிற்பதை உணரமுடிகிறது.. வலுவான வேர்களுடன் கனத்த கிளைகளுடன் மணக்கும் மலர்களுடன் குளிர்ந்த நிழலுடன் எல்லோருக்குமான கனிகளுடனும் நிற்கும் அந்த மரத்தின் கீழே நின்று அண்ணாந்து பார்க்கிறேன் தோளுயரம் வளர்ந்துவிட்ட மகனைக் காணும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும்.

இன்று இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை மறுபடி வாசித்தபோது இரண்டு விஷயங்களைக் கவனிக்க முடிகிறது. ஒன்று, யூமாவின் கவிதை உலகில் அமைந்துள்ள நான்கு தளங்கள். இரண்டாவது, யூமா வாசுகி என்ற கவிஞன் அந்த நான்கு தளங்களில் வழியாக பயணித்து எங்ஙணம் மகாகவிஞனாகி இருக்கிறான் என்பது.

யூமா வாசுகியின் தொடக்க நிலைக் கவிதைகள் பசிக் கலைஞன் ஒருவனின் உலகத்தைச் சொல்பவையாக அமைந்துள்ளன. கவிதை எழுதத் தொடங்கும்போது பொதுவாக டைரி குறிப்புகளின் வழியாகவே தொடங்க நேரும். யூமாவின் ஆரம்பகாலக் கவிதைகளில் ஒரு சில அப்படியான சுய அனுபவக் குறிப்புகளாக அமைந்திருந்தபோதும் வெகு சீக்கிரத்திலேயே அந்நிலையைக் கடந்து பிற மனிதனின் பசியைப் பற்றிக் கவலைப்படாத யதார்த்த உலகுக்குள் வந்துவிடுகிறார்.

இரவின் குளம்புகள்

வெற்றுக்குடல் மிதிக்கும்.

குப்பைத்தொட்டி பச்சிளம் சிசுவைக்

குதறும் நாயாகிறது பசி.

0

அன்றைக்கு அம்மா தன் கணவனை மறுபடியும்

தெருவிலிருந்து மீட்டுக்கொண்டாள்

கண்டுப்பிடித்துக் கொடுத்த சகோதரி

துணிப்பூக்களை எடுத்துக்கொண்டாள்

குடி மயக்கிய தகப்பனின் பையிலிருந்து

சில்லறைக் காசுகளைத் திருடினான் தமையன்

அப்பா குடித்துக் காலியாக்கிய சாராயப் புட்டியைக்

கைப்பற்றினேன் நான்.

0

இந்த உலகம் சரியில்லை. இங்கு வாழும் மனிதர்கள் யாரும் ஒழுங்கில்லை என்று குறைசொல்லியபடி பசித்திருக்கும் ஒருவனுக்கு புகார் சொல்லவும் குறைசொல்லவும் நிறைய இருக்கும். இத்தன்மை சகமனிதர்களின் மீதான வெறுப்பாகவும் பொறாமையாகவும் சகிப்பின்மையாகவுமே சென்று முடியும். வாழ்வின் மேல் பிடிப்பில்லாது அவநம்பிக்கையுடன் அலையச் செய்யும். இதுவே இயல்பில் நடப்பது. இவ்வாறான உலகியல்தன்மைக்கு நேர்மாறாக அமைகிறது யூமாவின் கவிதை உலகம். அதனாலேயே அவர் எழுதவந்த காலத்தின் பிற கவிஞர்களிடமிருந்து அவர் தனித்துவம் மிக்கவராக உருவாக முடிந்திருக்கிறது. லௌகீகத் தளத்தில் தான் தோற்றுப் போனதாய் நினைத்து சுயவெறுப்போ அவநம்பிக்கையோ அடைந்து அவர் புலம்பவில்லை.

நான் வாளற்றவன் காப்பற்றவன்

உடையும் உதிரமும் அற்றவன் – விதியே

உன்னைப் புதைக்கவேண்டிய

இடத்தைத் தெரிவு செய்து

சமருக்குத் தயாராகி வா.

தன் பசிக்கு உணவு கிடைக்கவில்லை என்பதால் உலகத்தின் மேலும் சகமனிதர்கள் மீதும் அவர் வன்மம் கொள்ளவில்லை. மாறாக பெரும் கருணையும் பேரன்புமே அவரிடத்தில் ஊற்றெடுத்திருக்கிறது.

என் முதல் வார்த்தை முடிவதற்குள்

அதன் அவசியமின்மையை

உணர்த்திவிடுகிறீர்கள்

என் செயல்களிலிருந்து

உங்களுக்கேதுவான அர்த்தம் உரிப்பது

இலகுவிற்கூடிற்று உங்களுக்கு

உங்கள் பாவனை

எனக்குப் புரிவதுபோல

என்னுடையதும் ஆகுமென்ற

காத்திருப்பை நிராகரிப்பதில்

இறுதிவரை உங்களுக்கு வெற்றி

உங்கள்

உபாயங்களுக்குள் செலுத்தப்பட்டு

என் திசையழிந்து போயிற்று

என்னை ஒப்புக்கொடுக்கும் முன்பு

இதைச் சொல்ல அனுமதியுங்கள்

உங்களையும்

நான் நேசிக்கிறேன்.

0

யூமாவின் கவிதைகள் அமைந்துள்ள அடுத்த தளம் பெருநகரத்தின் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கவிஞனின் உலகம்.

பெருநகரின் பரபரப்பிற்கும் சுயநல அவசரத்திற்கும் நடுவில் கலைஞன் விரும்பி தேடியலையும் தனிமையின் உக்கிரத்தையும் பசி கொண்டுசேர்க்கும் தோழமையின் ஈரத்தையும் சொல்கின்றன இக் கவிதைகள்.

நண்பர்கள் சந்திக்கையில்

வணக்கம் சொல்லிக்கொள்வதற்கு பதிலாக

இது எத்தனையாவது நாள் பட்டினியென்று

பரஸ்பரம் கேட்கிறோம்.

…

அனைவரும் தேநீர் பருகுமளவிற்கு பணம் வைத்திருக்கிற

யாராவது ஒருவர் வந்தாகவேண்டியிருக்கிறது.

எல்லோருடைய கடைசிச் சில்லறைகளையும் திரட்டி

பசி தாங்கவியலாத அல்சர்கார நண்பனுக்கு

சிற்றுண்டி வாங்கிவர ஆளனுப்புகிறோம்.

ஒண்டிக்கொள்ள ஒரு சிறு பொந்து, டிக்கெட்டில்லா ரயில் பயணங்கள், பசியைத் தணிக்க புகையும் சிகரெட்டுகள் என துயரமும் துயரம் சார்ந்த கவிதைகளுமாய் நிறைந்துள்ளன.

‘பசியின் ஒவ்வொரு வருகையும்

முதல் முறை வீட்டிற்கு வரும் நெருங்கிய விருந்தினனைப்போல்

பூரண உபசரிப்பை எதிர்பார்க்கிறது.

வெறும் சிகரெட் புகையால்

மூழ்கடிக்கப்பட்ட அது

சேகரித்த குரோதம் முற்றி பழி தீர்க்க

குடலில் துளைகளிடும் என்றேனும் ஒரு நாள்.’

0

கொடும் பசியும் நகரத்து நெருக்கடிகள் தந்த துயரமும் சார்ந்த இரண்டு தளங்களில் அமைந்த கவிதைகளுக்கு முற்றிலும் வேறானவை மூன்றாவது வகை கவிதைகள்.

காதல் கவிதைகள் என இவற்றை எளிமையாக அடையாளப்படுத்தலாம். ஆனால் இவை வழக்கமான காதல் கவிதைகள் அல்ல.

பெண்ணின் அழகையும் காதலின் பித்தையும் பேருவகையுடன் கொண்டாடும் கவிதைகள். அபூர்வமான சொல் இணைவுகளுடனும் பீறிட்டெழும் உணர்வெழுச்சிகளுடனும் அமைந்த அபூர்வமான கவிதைகள்.

‘அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ என்ற தலைப்பே இக்கவிதைகளின் பெருமதிப்பைச் சொல்லும்.

நீ கல்லினுள் நீர்க்கிலுக்கம் – பாற்கடல் திரை அரவம்

விநோதாதீதம் – மேதமையுதயம்

அந்தரச் சுரப்பிகள் ஈன்ற பரிமளம் – மழைத்துளிப் பழம்

அழகு ஆர்ப்பரிக்கும் மந்தாரம்

என் துறையடைந்த சுடர்க்கூட்டம்

ஆகமத் தாமரைகள் ததும்பும் என் திருமுழுக்குத் தடாகம்

அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு.

0

தான் மயங்கித் தீராத காதல்

இரவுக் கருவாழைப் பட்டையுரித்து நுகரும்.

மனமேறியமர்ந்த கண்கள்

பஞ்சம் பிழைக்கப் பாய்கின்றன.

என் மூளைச் சாறருந்தி தெருவோடு போகிற

அய்யோ என் பெருந்திருப்பெண்ணே…

உன் வதம் திருப்பியொரு படையலிடு

போதமுற்றி உன் நிழலோடு

புரண்டு போகிறதென் சித்தம்

சுருதிக் கட்டைகளின் துன்

பருவங்கூம்பிக் கட்டவிழும் யௌவனத் துளியொன்று

சொட்டியதிர்கிற ஓசையில்

மிரண்டொடுங்குகின்றன ஊழியலைகள்

…

0

யூமா வாசுகியின் நான்காம் வகை கவிதைகள் கனிவும் குதூகலமும் தூய்மையும் துலங்கும் குழந்தைகளின் உலகிலிருந்து ஒளியுடனும் பரிபூரணத்துடனும் மிளிர்பவை. பொதுவாக பசியும் வேலையின்மையும் கைகூடாத காதலும் இளைஞர்களை கவிஞர்களை கொண்டுசேர்க்கும் இடம் இருண்டது. துயரமும் தோல்வியும் அவநம்பிக்கையும் ஒன்றிணைந்த அதிலிருந்து அவர்கள் அடைவது வெறுப்பையும் மூர்க்கத்தையுமே. ஆனால் யூமாவின் கவிதைகள் இதற்கு நேர்மாறாக எதிர்பாராத இடத்தைச் சென்று பேரும்போதுதான் கவிஞன் என்கிற இடத்திலிருந்து மாபெரும் கவிஞன் என்ற இடத்தை அடைகிறார்.

குழந்தைகளுக்கான சிறுவர்களுக்கான மாய உலகை கவிதையில் எழுதிக் காட்டியவர்கள் வெகு சிலரே. யூமா வாசுகி அவர்களுள் முதன்மையானவர்.

‘உடைந்த நடைவண்டி’யில் தடுமாறி நகரும் கவிஞனின் வாழ்வை பொருள்மிக்கதாயும் உரம்கொண்டதாயும் உருமாற்றித் தரும் தேவதைகளாக குழந்தைகள் அமைகின்றனர்.

பொருளியல் உலகில் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாத ஒரு கலைஞனை பசியும் ஆதரவின்மையும் நிராகரிக்கும் ஒரு கவிஞனை உயிர்ப்புடனும் நம்பிக்கையுடனும் அடுத்த நாளுக்கு நகர்த்திச் செல்லும் அருமருந்தாக குழந்தைகளின் நட்பும் பிரியமும் வாய்க்கின்றது.

முதுகில் புத்தகப்பையைச் சுமக்கும் பள்ளிச் சிறுவர்களை குருவிக் குஞ்சுகளெனக் காண்பதில் தொடங்கி,

பேருந்து நெரிசலில் சில நிமிடங்களே மடிவந்தமரும் யாருடைய குழந்தையையோ சீராட்டும்போது பேருவகை கொள்வதாக விரிகிறது குழந்தைகளின் மேலான அவரது அளப்பரிய பிரியம்.

பக்கத்து வீட்டுச் சிறுமிக்காக முயலாக தன்னை உருமாற்றிக் கொள்ளும் கவிஞன் சாத்தனாக தன்னைக் காண்பதும் அவ்வாறான ஒரு குழந்தையின் முன்பே.

மதுக்கடையில் வேலை செய்யும் சிறுவர்களின் பையிலிருந்து உருளும் கோலிக் குண்டுகளையும், உணவகத்தில் உழைக்கும் சிறுவர்களின் சிறு ஓய்வு நேர மகிழ்ச்சியையும், பக்கத்து வீட்டில் வேலைபார்க்கும் சிறுமியின் உலகையும் யூமாவின் கவிதைகள் தாளாமையுடன் காண்கின்றன.

சிறுவர்களின் மீதான பேரன்பும் அவர்களின் உலகத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ளும் முனைப்புமே யூமாவின் தனித்துவம்.

0

இந்த நான்கு வகை கவிதைகளிலிருந்து யூமா வந்தடையும் ஐந்தாவது வகையே அவரை கவிஞன் என்ற நிலையிலிருந்து மகா கவிஞன் என்கிற உயரத்துக்கு நகர்த்துகிறது.

இத்தனை காலமும் இந்த வாழ்வு கவிஞனுக்கு அளித்தது பசியும் துயரமும் கசப்பையுமே. நியாயமாக அவன் கூடுதலான வன்மத்தையும் கசப்பையுமே சென்றடைந்திருக்க வேண்டும். மாறாக கவிஞனுக்குள் இயல்பாக சுரக்கும் காருண்யம் மேலும் தீவிரத்துடன் ஊற்றெடுக்கிறது. அன்பும் கருணையும் பொங்கி நிறைகிறது. கசப்பைத் தரும் வாழ்வுக்கு களிப்பைத் தரவே விளைகிறார்.

உலகின் அனைத்து மதங்களும் போதித்து நிற்பது கருணையை, சக மனிதர்களின் மீதான அன்பை. யோகிகளும் ஞானிகளும் காலம்காலமாக உபதேசித்து வலியுறுத்துவது உயிர்களின் மீதான கருணையை மட்டுமே. யூமா வாசுகியின் கவிதைகள் கொண்டிருப்பதும் அவ்வாறான கருணையின் ஈரத்தையே. சக மனிதனின் மேலான அளப்பரிய நிபந்தனையற்ற அன்பின் நிழலையே.

‘நேசமெனும் ஒன்றைத் தவிர வேற்றுமொழி அறியாதவன்’ என்று அவரது கவிமனம் கனிகிறது.

‘உலகில் உள்ள எல்லோரையும் அணைத்து மகிழ உலகளாவிய கரங்கள் வேண்டும் எனக்கு’ என்று விசாலமான உள்ளம் விரும்புகிறது.

அவரது கவிதையிலகின் உச்சமாக அமையும் இக்கவிதையே அவரை மகாகவிஞனாக்குகிறது.

உலகளாவிய கரங்கள் வேண்டும் எனக்கு

எல்லோரையும் அணைத்து மகிழ

எல்லாப் பறவைகளின் சிறகுகளிலும்

என் கண்கள் இருக்கவேண்டும் அனைவரையும்

ஒருசேரக் காண்பதற்கு

போகுமிடமெல்லாம் காற்றென்

குரலையும் கொண்டுபோனால்

எல்லோருக்காகவும் பாடுவேன்

உலகத்து மண் முழுதும்

என் ஊன் கலந்து உரமாகி

பயிர் வளர்ந்து மரம் வளர்ந்து மலருண்டாகி

உங்களுக்கென்றாக வேண்டும்

உங்கள் கவலை மீன்களையெல்லாம் நீந்தவிட

பெருங்கடலாய் என் மனதிருக்கவேண்டும்

வளைந்த முதுகென்றாலும்

வலுவானதாய் வேண்டும்

உஉங்கள் சுமைகளைத் தாங்க

உங்கள் பாவங்களுக்கான

ஒட்டுமொத்தச் சம்பளம் நானே பெறவேண்டும்

உங்கள் கதவுகளைத் தட்டும்

தோல்விகளுக்கும் துயரங்களுக்கும்

என்னைச் சுட்டிவிட்டு

விடுபட்ட மான்கள்போல நீங்கள்

துள்ளியோட வேண்டும்.

அதற்கு நிகராய் என் நெஞ்சில்

மலைத்தொடர்போல திடம் வளரவேண்டும்

விளக்காகக் குடைந்த என் கபாலத்தில்

உதிரந்தோய்ந்த நாளங்களைத்

திரியாக்கிச் சுடாராகி உங்கள்

வழிக்கு விளக்காகும்

பேறு பெறவேண்டும்.

 

‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று உயிர்களின் மேல் வள்ளலார் காட்டிய பரிவையும் ‘உன் துக்கத்தையெல்லாம் என்னிடம்இறக்கி வையுங்கள். உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று கர்த்தர் அளித்த ஆறுதலையும் ஒருசேர தருபவை யூமாவின் கவிதைகள். அதுவே அவரை மகாகவிஞனாக்குகிறது.

0

இத்தொகுப்பின் தலைப்பு ‘கசங்கல் பிரதி’ என்று இருக்கலாம். பிரான்சிஸ் கிருபாவுக்காக எழுதிய கவிதையின் தலைப்பு இது. ஆனால் இக்கவிதைகளிலுள்ள பரிவும் கருணையும் நிகரற்றது. கசடற்றது. எதன் பொருட்டும் வற்றாதது.

உண்மையில் இது ‘கசங்கல் பிரதி’ அல்ல. ‘காருண்யத்தின் பிரதி’.

0

( யூமா வாசுகிக்கு மா.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டபோது அவருடைய கவிதைகள் குறித்து ஆற்றிய உரை )

 

 

 

Monday, 11 November 2024

க.சீ.சிவகுமார் - காற்றாடைக் கலைஞன்


எப்படி, எப்போதென்று சரியாக நினைவில்லை. 1997ஆம் ஆண்டின் பிற்பகுதி. அப்போது நான் ஈரோட்டில் இருந்தேன். ஒருநாள் பின்மதியத்தில், பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள என் அலுவலகத்துக்கு வந்தார். அவரை முன்பின் எனக்குத் தெரியாது. அநேகமாக என்.ஸ்ரீராம் சொல்லியிருக்கவேண்டும். அலுவலகத்தைப் பொறுத்தவரை நான் ஒரு அலுவலர். என் இலக்கிய முகம் யாருக்கும் தெரியாது. காட்டிக்கொள்வதுமில்லை.

நெடிய, மெலிந்த உடல்வாகு. அம்மைத் தளும்புகள் துலக்கமாகத் தெரியும் முகம். சிறிதுநேரம்கூட முகத்திலிருந்து சிரிப்பை விலக்கி வைக்கவோ, மறைக்கவோ முடியாத தன்மை. தேடி வந்த என்னைக் கண்டுகொண்டதும் அந்த முகத்தில் அப்படியொரு மலர்ச்சி. பலநாள் பழகியதுபோலொரு மகிழ்ச்சி. அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்தியா டுடேயில் முதல் பரிசு பெற்ற அவரது கதையை நான் வாசித்திருந்தேன். பேச்சைவிட சிரிப்புதான் இயல்பாகவே முந்திக்கொண்டு நின்றது. அவரது கண்கள் அலைபாய்ந்தன. அலுவலகத்தில் உள்ள எல்லோரையும் தொட்டுப் பார்த்தன. குறிப்பாக பெண்களை. தேநீருக்காகக் கீழே அழைத்துச் சென்றேன். பேருந்து ஒன்றில் தற்காலிக நடத்துனர் பணி என்று சொன்னார். யாரேனும் விடுப்பில் செல்லும்போது அழைப்பார்கள் என்றும். அந்தச் சந்திப்பின்போது இலக்கியம் குறித்து பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. அதைப் பற்றி அவர் அதிக ஆர்வமும் காட்டிக்கொள்ளவில்லை. காண்பன, கேட்பன அனைத்துமே அவருக்கு வேடிக்கைதான், கொண்டாட்டம்தான். எல்லாவற்றையுமே ரசிக்கும் தன்மை.

தொடர்ந்து அவ்வப்போது தனது பணி முடிந்த வேளைகளில் அலுவலகம் வந்தார். வந்தவுடனே அவரது கண்கள் பரபரப்புடன் பெண்களைத் தேடும். யாரேனும் ஒருவர் கண்ணில் தட்டுப்படாதபோது வெகு இயல்பாக ‘அந்த அம்மிணியைக் காணோம்’ என்று சிரித்தபடியே கேட்பார். ஒருமுறை, அவர் என் எதிரில் இருக்கும்போது சக பெண் அலுவலர் ஒருவர் என்னிடம் ஏதோ சந்தேகம் கேட்க வந்தபோது நான் ‘அப்பறம் பாத்துக்கலாம்’ என்று அனுப்பிவிட்டேன். க.சீ ‘இப்பவே பாத்துருக்கலாமே பாஸ்’ என்று சிரித்தார்.

சிவகுமாரின் இயல்பு அது. அவரது வரி ஒன்றுண்டு ‘பெண்கள் என்றாலே அழகுதான். அதென்ன அழகிய பெண் என்று சொல்லவேண்டியிருக்கிறது?’

0

தமிழினி பதிப்பகம் தொடங்கப்பட்டு புதிய எழுத்தாளர்களின் நாவல்களும் சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்த காலகட்டம் அது. வசந்தகுமாருக்கு க.சீயின் கதைகள் பிடித்திருந்தன. இரண்டு காரணங்கள். முதலாவது, பழந்தமிழ் கவிதை வரிகளும் பகடியும் இணைந்து உருவான ஒரு மொழி. இரண்டாவது, சிறுபத்திரிகைகளுக்கேயுரிய இறுக்கமான மொழியும் பாவனையும் இல்லாத இயல்பான வெளிப்படையான கூறுமுறை. க.சீ யின் கதைளை ஒவ்வொன்றாக சொல்லி வியந்திருக்கிறார். அவரது கதை வரிகள் பலவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். ‘மின்னலெனவோ, வானவில்லெனவோ வந்துபோகாது அவளில் நிரந்தர வானமாய்த் தங்கிவிட்ட யௌவனம் – துர்க்கனவுகளின் பெருங்கூடாரம். நள்ளெண் யாமங்களில் கந்தர்வரும், கிங்கரரும் கனவுகளில் ஏங்கிய சஞ்சலம். பூக்களுடன் அவள் பகிர்ந்த வேதனையை வண்டுகள் ரீங்கரித்து அலைந்தன. வீண்மீன்களை எண்ணிக்கையிடத் தலைப்பட்டாள். உடுக்குழுமத்தில் தோற்றப்பிறழ்ச்சி. தோன்றாதிருக்கும்படி பகல் ஒரு வினாடியாய்க் குறுகிவிட்டிருந்தது அவளுக்கு. அவளைத் தொட்டால் நேர்கிற அனுபவம் மரணமோ என இளைஞர்கள் பயந்தனர். தேவதை ஏறிய பெண். மங்காத் தங்கம் கொண்டு தீர்த்த வீணை. விரைவு கொண்ட எந்தத் தந்தியிலும் ஒரே சந்தம். யௌவனம். மாறாத சௌந்தர்யம். அதி ஆழத்தின் இழைகளென வடிவுகொண்ட கூந்தற்தொகையில் ஒரு நரை கண்டுவிடாதா என ஏங்கினாள்.’ (தீண்டாநாயகி)

தமிழ் புனைவுலகில் இப்படியொரு எழுத்தாளன் வருவான் என்று யோசித்ததேயில்லை என்று வியந்ததுண்டு. ‘கன்னிவாடி’ தொகுப்பு உருவான காலத்தில் க.சீ ராயப்பேட்டை அலுவலகத்தில்தான் குடியிருந்தார் என்று சொல்லவேண்டும். தேநீரும் புகையும் சிரிப்புமாகக் களைகட்டியிருந்தது தமிழினி அலுவலகம்.

நாவலோ சிறுகதையோ வசந்தகுமாருக்கு அதற்குரிய களத்தை, மனிதர்களை பார்க்கவேண்டும். கன்னிவாடிக்கும் சென்றார், யூமா வாசுகியுடன். இரண்டு நாட்கள் தங்கி சிவகுமாரின் கதைக் களங்களை, மனிதர்களைப் பார்த்து ரசித்தார். நிறைய படங்கள் எடுக்கப்பட்டன. யூமா வாசுகி ஓவியங்களை வரைந்தார். ஒரு சிறுகதைத் தொகுப்பு, இவ்வாறு படங்களுடனும் ஓவியங்களுடனும் தயாரானது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. க.சீ அப்போது அறிமுக எழுத்தாளர். அவரது முதல் தொகுப்பு. தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரும் தமிழினியில் தொகுப்பு வெளியிட ஆசைப்பட்டிருந்தபோது, க.சீக்கு வசந்தகுமார் அப்படியொரு பெருமையைச் சேர்த்தார். அவர்மீது பெரிய நம்பிக்கை இருந்தது.

தொகுப்பு தயாரானதும் அதை அவரது கிராமத்திலேயே வெளியிடுவது என்று முடிவானது. அதுவொரு எளிய கிராமம். எந்த வசதிகளும் கிடையாது. ஊர் மந்தையில் புத்தக வெளியீடு நடந்தது. பதினைந்துக்கும் மேற்பட்ட நண்பர்கள். என்ன நடக்கிறது என்பதே அங்கிருந்த பலருக்கும் புரியவில்லை. கூட்டம் முடிவதற்கு முன்பே கடைசி பஸ் போய்விட்டது. எங்கே என்றாலும் காலையில்தான் போகமுடியும். விடிய விடிய அதே ஊர் மந்தையில் அரசமரத்தடியில் பேசிக் களித்தனர் நண்பர்கள். அப்படியொரு புத்தக வெளியீடு நடக்குமா என்பது சந்தேகம்தான்.

0

எழுத்தாளனுக்கு கன்னிவாடியில் என்ன வேலை? க.சீ சென்னைக்குப் போனார். அவரது இயல்புக்கு நண்பர்கள் சுலபமாக வாய்த்தனர். பாஸ்கர் சக்தி ஏற்கெனவே விகடனில் இருந்தார். க.சீயின் இயல்புக்கு சென்னை மிகவும் பிடித்திருந்தது. கவிஞர்கள் எழுத்தாளர்களின் கூடுகைகள், இரவுக் கொண்டாட்டங்கள் அவரை வசீகரித்தன. அவ்வப்போது கதைகளும் எழுதினார். ஒரு சில பத்திரிகைகளில் வேலையும் பார்த்தார்.

0

சென்னையில் ஒரு நெருக்கமான நண்பர். முப்பதாண்டு கால நட்பு. அப்போது அவர் சென்னையில் தனியாக வசித்தார். அவரது வீட்டுக்கு யாரும் எப்போது வேண்டுமானாலும் போகலாம். பூட்டியிருந்தாலும் கவலையில்லை. சிரமமில்லாமல் சாவியை எடுத்துத் திறந்து கொள்ளலாம். ஓய்வெடுக்கலாம். பிறகு முகம் கழுவியோ குளித்தோ புத்துணர்வுடன் ஒப்பனை செய்துகொண்டு வெளியேறலாம். இரவு நேரங்களில் வேறெங்கும் போக வழியில்லை என்றால் அங்கேயே தங்கலாம். வீட்டின் சமையலறையில் நல்ல காப்பி பொடியும் பாலும்கூட இருக்கும்.

அந்த நண்பரும் க.சீக்கு பழக்கமானார். அடிக்கடி வந்து போகத் தொடங்கினார். ஒரு நாள் இரவில் தங்கியிருக்கிறார். விடிந்ததும் குளித்துவிட்டு புறப்படும்போது தனது சட்டையை எடுக்கிறார். அருகில், ஹேங்கரில் இன்னொரு புதிய சட்டை. அவருக்குப் பிடித்திருக்கிறது. ‘இந்த சட்டை எனக்கு நல்லா இருக்குமில்ல’ என்று சொல்லிக்கொண்டே அணிகிறார். கண்ணாடியில் பார்த்து ரசிக்கிறார். ‘பாஸ், நல்லா இருக்கா?’ என்று நண்பரிடம் கேட்டுச் சிரிக்கிறார். நண்பருக்கு இதுவொன்றும் புதிய விஷயமில்லை. அறை வந்து தங்கும் பலரும் இதுபோன்று அவருக்குச் சொந்தமான பல பொருட்களை உரிமையோடு எடுத்துச் சென்றதுண்டு. அவரும் சிரித்தபடியே ‘நல்லா இருக்கு’ என்று சொன்னதும் விடைபெற்றுச் சென்றுவிட்டார். அந்த சட்டையை முதல்நாள்தான் நண்பர் வாங்கி வந்திருந்தார். ஒரு முறைகூட போட்டிருக்கவில்லை.

க.சீக்கு எல்லாமே பொதுவுடமைதான். தனிமனிதனுக்கென்று இந்த உலகில் எதுவும் சொந்தமில்லை.

0

சென்னை மல்லிகா விடுதியில் நானும் மோகனும் தங்கியிருந்தோம். திரைப்படச் சங்கங்களின் கூட்டமைப்புக்கான தேர்தலில் வாக்களிப்பதுதான் பணி. மதியமே வேலை முடிந்துவிட்டது. மாலையில் வசந்தகுமார், யூமா வாசுகி உள்ளிட்ட சில நண்பர்கள் அறையில் கூடினார்கள். பேச்சும் சிரிப்புமாய் அறை கலகலத்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு க.சீ வந்து சேர்ந்தார். தோற்றம் பற்றியோ உடை குறித்தோ பெரிய கவனமில்லாமல் குதூகலமான சிரிப்போடு உள்ளே வந்தவரை அறையின் சௌந்தர்ய கோலம் மேலும் உற்சாகப்படுத்தியது.

நாற்காலியின் மீது கிடந்த துவாலையைக் கட்டிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தார். சோப்பு மணக்க தலைதுவட்டிக்கொண்டு வந்தார். அலங்கார மேசையின் மீதிருந்த நண்பரின் வாசனை திரவியத்தை ஆசையுடன் பீச்சிக்கொண்டார். எப்போதும்போல முகம் முழுக்கச் சிரிப்பு. உதட்டில் எளிய பரவசம்.

“இதுமாதிரி வாரத்துக்கு ஒருக்கா அமைஞ்சிட்டா சொர்க்கந்தான் கவிஞரே” ஆசையுடன் தம்ளரை எடுத்து கொஞ்சுவதுபோல முத்தமிட்டார்.

அடுக்கடுக்காக கதைகள் பொங்கின. பத்திரிகை அலுவலகங்களில், சினிமா கதை விவாதங்களில், பிரபலமான நடிகரின் வீட்டில், விடுதியொன்றின் மதுக்கூடத்தில் நடந்தவைகளை அவருக்கேயுரிய பாணியில் விவரித்தார். அச்சகம் ஒன்றில் காண நேர்ந்த அழகியொருத்தியுடனான தற்காலிக காதல் தருணங்களை கண்சிமிட்டியபடியே உவகையுடன் நினைவுகூர்ந்தார். அம்மாவைப் பார்த்து நாளாயிற்று, போயிட்டு வரணும் என்று இரண்டொரு முறை சொன்னார்.

நானும் மோகனும் அன்றிரவே ஊர் திரும்பும் திட்டத்தில் இருந்தோம். அறையைக் காலி செய்யவேண்டும்.

“பாசு… இன்னிக்கு ராத்திரி இங்க தங்கிக்கலாமா?”

“காலையில எடுத்த ரூம்தான். இருக்கலாம்.”

“ஒண்ணில்ல பாசு. காலையில ஒரு கதை எழுதித் தரணும். இன்னும் ஒரு வரி எழுதல. ராத்திரி இங்க தங்கி எழுதிர்லான்னு பாக்கறேன்.”

இரவு பத்துமணிக்கு கீழே வந்து அவருக்கு விடை கொடுத்தபோது அருகில் இருந்த கடையிலிருந்து ஒரு குயர் தாளையும் வாங்கிக்கொண்டார்.

“எழுதிக் குடுத்தா ரெண்டாயிரம் கெடைக்குமில்ல சிவா?”

“ஆமா பாசு. ஆனா இந்தக் கதைக்கு பணத்தை அட்வான்ஸா வாங்கிட்டேன். செலவுமாயிருச்சு. இத நாளைக்கு குடுத்துட்டு அடுத்த கதைக்கு அட்வான்ஸ் வாங்கிர்லாம் பாசு.”

ஒரு பாக்கெட் சிகரெட், தீப்பெட்டி, வெள்ளைத்தாள் சகிதம் அறைக்கு அவர் திரும்பிப் போனார்.

சில நாட்களுக்குப் பிறகு சந்தித்தபோது அந்தக் கதையைப் பற்றி விசாரித்தபோது பதில் சொல்லாமல் சிகரெட்டைப் பற்றவைத்தபடி சிரித்தார். அன்றிரவும் அவர் அந்தக் கதையை எழுதவில்லை.

0

சென்னை அவருக்குப் பிடித்திருந்தது என்பதைவிட சென்னை அவரைப் பிடித்திருந்தது. நண்பர்கள், கொண்டாட்டம் என்று சில வருடங்கள் கழிந்தன. உருப்படியாக எதையும் எழுதவில்லை. சில தொடர்கள், ஒரு தொடர்கதை என்று சமாளித்தார். செலவுக்கு காசு கிடைத்தது. வேண்டும்போது ஒரு கதையை எழுதிக் கொடுத்தார். தேவைக்கு மட்டுமே எழுதினார்.

எழுதுவது அவருக்கு இயல்பாக வாய்த்திருந்தது. சிரமமில்லாமல் எழுதிவிட முடியும். தனிச்சிறப்பு மிக்க மொழியும் தமிழில் அரிதாகவே காணக் கிடைக்கும் பகடியும் அவருக்கு வாய்த்திருந்தன. தனி முத்திரைக்காக அவர் மெனக்கெட வேண்டியிருக்கவில்லை.

‘பத்தரை மணி பஸ்ஸூக்கு வீடு திரும்பிவிட உத்தேசம். பெருவிரல் ரேகை மடிப்பில் தாலியைக் கோர்த்துக்கொண்டு நீதிகேட்க மனைவி நல்லாள் யாருக்கும் இன்னும் நான் வாழ்க்கைப் படவில்லை.’ (மீதியுள்ள ராத்திரி)

‘ஜன்னலோர இருக்கையிலோ, நான் பயணிக்க ஏறும் பஸ்ஸிலோ அவள் காணக் கிடைப்பாள். வர்ணம் மங்கியதோர் ஓவியம்போல. ஆராதனை மறுக்கப்பட் மூளிச்சிற்பம்போல. கண்கள் ஒளிமங்கி இடுங்கியிருக்கும். தூக்கம் துறந்து விண்மீன்களில் ராகவனைத் தேடுகிறாளோ என்னவோ? சொல்லொணா வேதனைகள் என்னுள் வந்துபோகும். என்ன ஒரு வசியம் அவளிடம். கரந்துறை படலத்தில் வாழ்கிற மகாராணியைப் போன்ற வசீகரம். தாராபுரத்திற்கும் கரந்துறைப் படலத்திற்கும் சம்பந்தமுண்டென்று பாரதம் பகர்கிறது.’ (வெளிச்ச நர்த்தனம்)

‘காலத்தாற் குன்றாது கருவறை அடைகாத்த வெப்பம்’, ‘குழநதையாயிருந்த காலம் கோதி விளையாடிய நெஞ்சை குத்தி அழக் கொடுப்பினையின்றி ஊரில் மருகியிருந்தாள் அம்மா.’ (சொல் பொருள் பின் வரும்)

‘ஆடு கறக்கவும் பூனை நக்கவுமான வாழ்க்கையில் வாயையும் வயிற்றையும் கட்டிச் சேர்த்த சேமிப்புகளும் பேதாமல் கடைசியில் வேலமரங்களைச் சாய்த்துத்தான் மகளுக்கு மாங்கல்யம் கழுத்தேற்றினார்.’ (நினைவுதிர் கால மரங்கள்)

‘பொளிதலின்போது நான் கிட்டே இருந்தால் எனது ‘இனிஷியலை’ பொறிக்கச் செய்வேன். பாலர் காலக் கல்வெட்டு’ (கால வகை)

‘பாவு பிணைத்தலினூடே அவள் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறாள். அவளது பூங்கனா படுத்திருக்கிறது. ‘கொங்கு மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. கண்ணே… உன்னை கவர்மென்ட் ஸ்கூலிலாவது சேர்க்கமாட்டேனா?’ (காலம் உடன் வரும்)

ஆனால், தன் எழுத்தின் வலிமையை தனிச் சிறப்பை அவர் உணரவில்லை. அல்லது உணர்ந்தும்கூட அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆகவேதான், அதை வெறும் தேவைக்கான கருவியாக கையாண்டார்.

உண்மையில் அவரது இயல்புதான் அது. எதையுமே கொண்டாட்டமாக, அந்த நொடிக்கான அம்சமாகக் காணும் பார்வையின் வெளிப்பாடு. எதையும் ஆழமாக அணுகும் போக்குக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருந்தார். வாழ்க்கை ஒரு கொண்டாட்டம், ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்கவேண்டும் என்ற மனநிலை. வெகு எளிமையான ஒரு மனிதனின் போக்கு இதுதான். இன்னும் கூர்ந்து பார்க்கப் போனால் ஒரு சித்தனின் மனநிலை. அவரது பால்ய காலமும் விடலைப் பருவமும் கிராமத்தில் கழிந்தவை. வானம் பார்த்த பூமி. நிரந்தரமற்ற விவசாயம். முயற்சிகள்தான் உண்டே ஒழிய திருவினைகள் வாய்த்ததேயில்லை. பெற்றோர், உறவினர், அண்டை அயலாரின் கைக்கும் வாய்க்கும் எட்டாத வாழ்க்கை அவருக்கு உவப்பில்லாத பல அனுபவங்களைத் தந்திருக்கிறது. அண்டாமாநதியைப் போலவே எக்காலத்திலும் அந்த வாழ்க்கையில் நீர்வரத்து இருந்ததில்லை. அன்றாடத்தின் துயரை, கசப்பை பேணிக்கொண்டிருந்தால் அது காலைச் சுற்றும் நாயைப் போல நம்மிடமிருந்து விலகிப் போகாது என்பதால் அவற்றை அவர் அண்டவிடாது விரட்டிக்கொண்டே இருந்தார். அதற்கு கருவியாக அவர் கையில் இருந்தவை பகடியையும் சுயஎள்ளலும்.

எழுத்து அந்த மண்ணிலிருந்து வெளியேற உதவியது. மீட்சியின் பாதையாக அல்லாமல் தப்பித்தலின் அவசர வழியாகவே அதைக் கையாண்டதுதான் துரதிர்ஷ்டம். எழுத்தின் வழியாக எதையும் சாதிக்கவோ அடையவோ அவர் உத்தேசிக்கவேயில்லை. அன்றாடங்களின் தேவைக்கான ஒரு கருவியாகவே எழுத்தை அவர் பயன்படுத்தினார்.

நண்பர்கள் பலரும் அவருக்கு உதவினார்கள். அவரது சிறப்பை உணர்ந்தவர்கள் இப்படி வீணடிக்காதே என்று ஆலோசனை கொடுத்தார்கள். ஆனால், அவர் தன் இயல்புக்கு ஏற்பவே வாழ்ந்தார். எழுதினார்.

முதல் தொகுப்பான ‘கன்னிவாடி’யில் உள்ள பல கதைகளும் அழுத்தமானவை. உத்தரவாதமற்ற விவசாய வாழ்வின் அவலங்களைச் சொல்லின ‘நாத்து’, ‘காவு’, ‘குரங்குப் பணியாரம்’, ‘அண்டமா நதிக்கரையில் ஒரு வீடு’ போன்ற கதைகள். வேலையற்ற இளைஞனின் பாடுகளைச் சொன்னவை ‘ஊதல் இசைபட வாழ்தல்’, ‘மீதியுள்ள ராத்திரி’ உள்ளிட்ட கதைகள். ‘மேகங்கள் தீர்ப்பதில்லை’, ‘சண்முக சித்தாறு’ போன்ற கதைகளின் வரியாக அபாரமான மனிதர்களை அவர் காட்டியிருக்கிறார். ‘வெளிச்ச நர்த்தனம்’, ‘பெருந்திணையும் ஓர் அணையும்’ போன்ற காதல் கதைகளும் உண்டு.

க.சீ இன்னொரு வகைக் கதைகளையும் எழுதிப் பார்த்திருக்கிறார். உரையாடல்கள் இல்லாத, நுட்பங்கள் கூடிய சித்தரிப்புடன் தீவிரமான மொழியில் கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்டவை. ‘நிணநீர்ச்சுவடி’, ‘காற்றின் கானகம்’, ‘தீண்டாநாயகி’ ஆகியன.

அவர் நாவல் எழுத முயன்றாரா என்பது தெரியவில்லை. ஆனால், தொடர் கதைகள் எழுதினார். ‘ஆதி மங்கலத்து விசேஷங்கள்’ ஜூனியர் விகடனில் வெளியானது. சுவாரஸ்யமான குணச்சித்திரங்களைக் கொண்ட ‘குண சித்தர்கள்’ தொகுப்பில் பிரமாதமான பல கதைகள் உண்டு. இந்தக் கதைமாந்தர்களை, கண்டும் கேட்டும் அறிந்த சம்பவங்களை அவர் இப்படி நட்சத்திரங்களைப்போல இறைத்துவிட்டார். அவை கண்ணைப் பறிக்கின்றன, மினுமினுக்கின்றன. ஒளிவிடுகின்றன. அண்ணாந்து பார்க்கும்போது வசீகரிக்கின்றன. ஆனால், அவை நட்சத்திரங்களாக மட்டுமே நின்றுவிடுகின்றன அல்லது உதிர்ந்துவிடுகின்றன.

நிலவை எழுத முடிந்த ஒரு கலைஞன் நட்சத்திரங்களில் மட்டுமே நிறைவடைந்துவிடுவதாய் எப்படிப் புரிந்துகொள்வது?

0

 

 


புதிய தலைமுறை பெண்களின் சவால்கள் - லாவண்யா சுந்தரராஜனின் கதைகள்

 


அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பரின் சொந்த ஊர் திருச்சிக்குச் செல்லும் நெடுஞ்சாலையை அடுத்திருக்கும் ஒரு கிராமம். மனைவியும் அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு கிராமத்தைச் சேர்ந்தவர். இருவரும் பட்டதாரிகள். ஒருநாள் மாலை புதிதாக வாங்கிய உடைகளை என் மனைவியிடம் காட்டிக்கொண்டிருந்த நண்பரின் மனைவி சிரித்தபடியே சொன்னார் “சுடிதார், நைட்டியெல்லாம் இங்கதான். ஊருக்குப் போனா ஸாரி மட்டுந்தான் கட்டமுடியும்.” கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மென்பொருள் நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் நண்பரின் மகள் தோளைக் குலுக்கியபடியே சிரித்தாள் “ஊருக்குன்னு தனி டிரெஸ் கோட் இருக்கு ஆண்டி. நான் மட்டும் சுடிதார் போட்டுக்கலாம். கோயில், கல்யாணம்னா தாவணிதான்.”

கோயமுத்தூருக்கும் அவர்களின் ஊருக்குமான தொலைவு நூறு கிலோ மீட்டர். இரண்டு இடங்களிலும் பெண்கள் வெவ்வேறு விதமாய், தங்கள் விருப்பத்துக்கும் வசதிக்கும் மாறாக, தங்களை தகவமைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம். கல்வியும் வேலைவாய்ப்பும் உலகின் தொலைவுகள் பலவற்றை கடந்து செல்லும் வாய்ப்புகளை நல்கியுள்ளன. பொருளாதார தற்சார்பு பல தடைகளை உடைத்திருக்கிறது. உடை, உணவு, திருமணம் தொடர்பான தேர்வுகளை விருப்பத்துக்கேற்ப தெரிந்தெடுக்கும் உரிமையயை அளித்துள்ளது. புறவயமான இந்த மாற்றங்களுக்கு அப்பால் நேரடியாக புலப்படாத நுட்பமான  சிக்கல்களையும் அவர்கள் சந்திக்க நேர்கிறது. மரபுக்கும் புதுமைக்குமான இடைவெளியைக் கடக்குந்தோறும் சந்திக்க நேரும் தடுமாற்றம்.

நவீனமயமான வாழ்க்கைச் சூழலில் இன்றைய பெண்கள் சந்திக்க நேரும் உளவியல் தடுமாற்றங்களை களமாகக் கொண்டவை லாவண்யாவின் சிறுகதைகள். மூன்று தலைமுறைப் பெண்களின் எதிரும் புதிருமான மனநிலைகளை உள்ளடக்கியுள்ளன. மரபான குடும்ப அமைப்பைச் சேர்ந்தது முதல் தலைமுறை, மரபையும் மீறலையும் ஒன்றாக கடைபிடிப்பது இரண்டாம் தலைமுறை, இவ்விரண்டுக்கும் தொடர்பில்லாதது புதிய மூன்றாவது தலைமுறை.

இரண்டாம் தலைமுறைப் பெண்கள் தங்களது ஆளுமையை நிறுவிக்கொள்ள முடியாமல் எதிர்கொள்ளும் முதல் சவால், தன்னிலிருந்தே தன்னை முற்றிலுமாய் விடுவித்துக்கொள்ள முடியாதது. இதனால் கடுமையான தடுமாற்றங்களிலும் முடிவெடுக்க முடியாத ஊசலாட்டத்திலும் உழல நேர்கிறது. மரபிலிருந்து தம்மை முற்றிலும் துண்டித்துக்கொள்ளவும் தயக்கம். நவீனத்தை முற்றிலுமாய் ஏற்றுக்கொள்ளவும் தயக்கம். சமையல், திருமணம், பிள்ளைப்பேறு, வீட்டுப் பராமரிப்பு போன்ற மரபார்ந்த குடும்பக் கடமைகளை நிறைவேற்றியபடியே அலுவலகத்தில் அணித் தலைவராய், முடிவெடுக்கும் நிர்வாகிகளாய், இலக்கை எட்டுவதற்காக கடுமையாக உழைப்பவர்களாய் இன்னொரு ஆளுமையாகவும் தம்மை நிறுவிக்கொள்ள முயல்கிறார்கள். கல்வி, சிந்தனை, விசாலமான உலகியல் பார்வை என்று பல்வேறு காரணிகள் இருந்தபோதும் புதிய சூழலில் தன்னை நிலைநிறுத்தவும் நிரூபிக்கவும் முடியுமா என்ற இயல்பான சந்தேகமும் அச்சமும் தலையெடுக்கின்றன. பின் மெல்ல மெல்ல அவற்றிலிருந்து விடுபடும் முயற்சியில் வெற்றிபெற முடிகிறது. ‘சப்தபர்ணி மலர்கள்’ கதையின் நாயகி ஆண்களை தன் வசம் ஈர்க்க முடிவதை அப்படியொரு நடவடிக்கையாகவே அணுகுவதும் அவ்வாறான ஒரு முயற்சிதான். ‘பயணங்கள்’ கதையில் அர்ச்சனாவுக்குத் தோன்றும் விபரீதமான விநோதமான கற்பனைகள் அனைத்துமே அவளது ஆழ்மனக் கோலங்களே.

இரண்டாவது சவால், முந்தைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் இடையிலான குழப்பமான கண்ணியாக இருக்க நேர்வது. மகள் சமையல் வேலைகளைக் கற்றுக் கொள்வதுடன் வீட்டிலும் வெளியிலும் உடல் சார்ந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்ற கவலை அம்மாக்களுக்குப் பொதுவானது. வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் அவர்களின் சின்னஞ்சிறு செயல்களின் மேலும் ஆத்திரப்பட்டு கத்தவும் திட்டவும் நேரிடுகிறது. இருவருக்கும் நடுவிலான இடைவெளியை ஏற்படுத்துகிறது. உறவுக்காரர்களிலோ நண்பர்களிலோ நடந்திருக்கும் ஏதோவொரு மீறல் மகளைக் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. கணவனை இழந்த ஒரு பெண் தனக்கான துணையைத் தேடிக்கொள்ளும் விருப்பத்தை அங்கீகரிக்கும் மனப்பான்மை, சொந்த மகள் அப்படியொரு முடிவை எடுத்துவிடக்கூடும் எனும் நிலையில் தலைகீழாகிறது. ‘முற்றத்து அணில்’ கதையில் அண்ணியின் போக்குடன் மகளின் நடவடிக்கைகளை அச்சத்துடன் அணுகும் அம்மாவின் உளநிலையும் இவ்வாறானதுதான்.

மூன்றாவது சவால், சக பெண்களுடனான உளவியல் மோதல்கள், சீண்டல்கள். ‘தான்’ எனும் அகமே ஆளுமையை உருவாக்குகிறது. பிறரிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறது. பல்வேறு விதமான உறவுச் சிக்கல்களையும் பணியிட நெருக்கடிகளையும் விளைவித்தபோதும் இந்த அகத்தை எந்தநிலையிலும் விட்டுக்கொடுக்க முடியாது. ஒரு பொது நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படியாக ஒரு பெண் வளையவரும்போது, அங்கிருக்கும் மற்ற பெண்களை உள்ளூர அவர் சீண்டுகிறார். குறிப்பிடும்படியாக எந்தக் காரணமும் இருக்கத் தேவையில்லை. எளிமையான தோற்றமும் திருத்தமான நடவடிக்கைகளுமேகூட அந்தப் பெண்ணின் மீது அனைவரின் கவனத்தையும் குவிக்கப் போதுமானது. மற்றவர்களின் இந்த கவனக் குவிப்பு இன்னொரு பெண்ணிடம் பொறாமையை போட்டியை கிளர்த்துகிறது. அவரை எந்தவிதத்திலாவது மீறிக் காட்டவேண்டும் என்ற வேகத்தை ஏற்படுத்துகிறது. பெண்களின் மனத்துள் நடக்கும் இந்த விளையாட்டை நுட்பமாக அணுகியிருக்கிறது ‘பூ மரம்’ கதை.

பணியிடங்களில் இவ்விதமான நிழல் யுத்தங்களை அன்றாடம் சந்திக்க நேரிடும். உயர்பதவியிலிருக்கும் பெண்களின் நடுவே மட்டுமல்ல, பணியடுக்கின் கடைசி படிநிலையில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களின் இடையிலும் இத்தகைய போட்டிகள் நிலவுவதுண்டு என்பதைச் சுட்டுகிறது ‘ஜொலிக்கும் கண்ணீர்’. அலுவலக ஊழியர்களிடம் நல்ல பெயர் எடுப்பது, இன்னொரு பணியாளரின் மீது அவதூறுகளைக் கிளப்புவது, பாராட்டும்படியான காரியங்களுக்கு தானே காரணம் என்றும் தவறுகளுக்கு அடுத்தவர்தான் பொறுப்பு என்றும் முன்னிறுத்துவது என்று பல்வேறு வகைமாதிரிகள். அலுவலகப் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றாமல், அதே சமயத்தில் அதிகாரிகளுக்கான சொந்த வேலைகளையும் தேவைகளையும் கச்சிதமாக கவனிப்பதன் மூலம் முக்கியத்துவம் பெறுவதுண்டு. இதில் சின்னதும் பெரியதுமான தவறுகள் அனைத்தும் இன்னொரு பணியாளரின் மீதே சுமத்தப்படும். அம்மா மகளானாலும்கூட இத்தகைய அகமோதல்களுக்கு விதிவிலக்கில்லை என்பதை உணர்த்துகிறது ‘விடுபூக்கள்’.

இந்த மூன்று சவால்களுக்கு அடுத்து பெண்கள் சந்திக்க நேரும் நான்காவது சவால்தான் ஆண்கள். குடும்பம், உறவுகள், பணியிடம், பொதுச்சூழல் என எல்லா இடங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் பெயர்களில் ஆண்களுடன் புழங்க வேண்டியுள்ளது. உடன் பிறந்த சகோதரர்களானாலும், அப்பாவானாலும் கணவன் என்றாலும் பெற்ற பிள்ளையானாலும் முதலில் அவர்கள் ஆண்கள். பிறகுதான் உறவும் தொடர்பும். லாவண்யாவின் பல கதைகளில் ஆண்களுடனான முரண்நிலை விவாதிக்கப்பட்டுள்ளது. ‘அப்பா’ கதையில் ஒலிக்கும் மகளின் மனக்குறைகளில் பலவும் பொதுவானவை. ‘சப்தபர்ணி மலர்கள்’ உள்ளிட்ட சில கதைகள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான சிறிதும் பெரிதுமான முரண்களையும் சமரசங்களையும் உள்ளடக்கியுள்ளன.

குடும்பத்திலும் உறவுகளிலும் பல நேரங்களில் இந்த மோதல்களையும் போட்டிகளையும் கைவிட்டுவிட்டு சமரசம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலைகள் உண்டு. ஆனால், பணியிடச் சூழலில் ஏற்படும் பாலின மோதல்கள் அத்தனை எளிதில் தீர்ந்துபோவதில்லை. நீறு பூத்த நெறுப்பாக எப்போதும் உள்ளுக்குள் கனன்றபடியேதான் இருக்கும். சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கும். ‘தீர்வு’, ‘உடன்பாட்டறிக்கை’, ‘புகை’, முரட்டுப் பச்சை’ , ‘திமிங்கிலம்’, ‘பறக்கும் மாயக்கம்பளம்’ ஆகிய கதைகள் மிகக் கச்சிதமாக இந்த முரண்உறவுவை விவரித்திருக்கின்றன.

வாழ்க்கைச் சூழலும், பணியிடச் சூழலும் மேலும் சில சவால்களை முன்னிறுத்துகின்றன. வேலையின் பொருட்டு புதிய நகரங்களுக்கும் புதிய நாடுகளுக்கும் இடம்பெயர நேர்கிறது. அந்தந்த இடத்தின் சூழலுக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளவும் வேண்டியுள்ளது. மூத்த தலைமுறையைச் சார்ந்த பெண்கள் இத்தகைய சூழலுக்கு அந்நியமாகிவிடும்போது இரண்டாம் தலைமுறையினருக்கு அவர்கள் பெரும் சுமையாகி விடுகின்றனர்.  அடுக்கங்களின் பால்கனியில் அடையும் புறாக்களைக் கொண்டு இரண்டு தலைமுறை பெண்களின் மனநிலையை அணுகும் கதை ‘புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை’. புறாக்களை ஒரு பிரச்சினையாக அணுகும் இன்றைய சூழலில் ‘அதுபாட்டுக்கு இருந்துட்டு போட்டுமே, உன்னை அது என்ன பண்ணுது?’ என்று புறாக்களுக்கான இடத்தை அங்கீகரிக்கும் அம்மாக்கள் பொருந்தாமல் போவதில் வியப்பேதுமில்லை.

ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் அலுவலகச் சூழல் பெரும் மன அழுத்தத்தையும் உடல் உபாதைகளுக்கான முக்கியமான காரணியாகவும் அமைகிறது. கர்ப்பிணியானாலும், குழந்தை ஈன்று மாரில் பால்கட்டியிருக்கும் இளம்தாயானாலும் அலுவலகம் எதிர்பார்ப்பது குறித்த நேரத்துக்குள் குறித்த வேலைகளை முடிக்கிறார்களா என்பதைத்தான். கழிப்பறைக்குச் செல்வதையும் தண்ணீர் குடிப்பதையும்கூட காலவிரயம் என்று சுட்டிக்காட்டும் இயந்திரநுட்பத்துக்கு நடுவில்தான் திறன்களை நிருபிக்கவேண்டியிருக்கும் நிலையை விவரிக்கும் ‘தீர்வு’ கதையை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

0

லாவண்யாவின் புதிய தலைமுறைக் கதாபாத்திரங்கள் இயல்பானவர்களாய் இருப்பதைக் குறிப்பிடவேண்டும். திறன்மிக்கவர்கள், வீட்டையும் அலுவலகத்தையும் ஒருசேர நிர்வகிப்பவர்கள், முனைப்புடன் முன்னேற உழைப்பவர்கள் என்றபோதும் அவர்களுக்கான பலவீனங்களை வெளிப்படுத்த தயங்குவதில்லை. திசை தெரியாத புதிய நாட்டில், தங்குமிடத்துக்கு எதிரிலேயே இருந்தும் திகைத்து அழுகிறார்கள். குடும்பத்தைப் பிரிந்து வெளியே செல்ல நேரும்போது எல்லாவற்றையும் அஞ்சுகிறார்கள், எல்லோரையும் சந்தேகப்படுகிறார்கள். சுயலாபத்துக்காக ஆண்களை வசீகரிக்கும்போதும் எல்லையறிந்து விலகுகிறார்கள். அதிகாரிகள் மதிக்காதபோதும் அவர்களின் சிக்கல்களின்போது உதவுகிறார்கள். தமிழ்ப் புனைவுலகுக்கு இவர்கள் புதியவர்கள். லாவண்யாவின் கதைகள் தமிழ்ப் புனைவுலகில் ஏற்கெனவே உள்ள பெண் கதாபாத்திரங்களின் குணாம்சங்களில் புதிய பரிமாணங்களைச் சேர்த்துள்ளன.

0

கணினி அறிவியல், மென்பொருள் துறைகளின் புழங்குமொழி பெரும்பாலும் ஆங்கிலம். இத்துறைகளைக் களமாகக் கொண்டு கதைகளை எழுதும்போது துறைசார்ந்த பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் தமிழில் உருவாக்க வேண்டியுள்ளது. புதிய கலைச் சொற்களைக் கண்டடைய வேண்டியுள்ளது. ஏற்கெனவே உருவாக்கப்பட்டு புழக்கத்தில் இருக்கும் சொற்களை ( உடல் கூராய்வு, குடியேற்றப் பிரிவு, பயனாளர்கள், பணியமர்வு ஆணை )பயன்படுத்தியிருக்கும் லாவண்யா சுந்தரராஜன், தேவைப்படும் இடங்களில் புதிய சொற்களையும் உருவாக்கியிருக்கிறார். அவற்றுள் சில மிகப் பொருத்தமானதாக அமைந்துள்ளன. மதிப்பாய்வு பலகை ( Evaluation Board ), பரிசோதனைக் களம், செயலியின் உள்ளீடு மென்பொருள், மின்னணுத் தகடுகள், உற்பத்திச் சங்கிலி, மின்னணு நுண் சில்லு என்று நிறைய உதாரணங்கள். அதே சமயம் இன்னும் சில சொற்களை (ஸ்டேன்ட் அப் மீட்டிங், டார்கெட், ஸிஃப்டில், மிஸ்ட் கால்) அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். இன்னும் சில இடங்களில் தமிழ்ப்படுத்தியிருக்கும் சொற்கள் ஒலியமைதியின்றி உள்ளன. இருக்கையின் கவ்வி (Seat Belt), அச்சுச் சுவடுகள் (Print out), சிற்றுந்தின் சேமிப்பறை ( Car Boot space ), நெருக்கு நாட்கள் (Release date). இவற்றை இன்னும் கவனத்துடன் சீரமைக்கலாம். புதிய ஒரு அறிவியல் துறை புனைவுலகில் களமாக வரும்போது இதுபோன்ற முனைப்புகளின் வழியாகவே தேவையான கலைச் சொற்கள் உருவாக முடியும்.

0

லாவண்யா தன் புனைவுலகில் சிறு உயிர்களுக்கும் மலர்களுக்கும் தாவரங்களுக்குமான இடத்தை வலிந்தே உருவாக்கியிருப்பதை இக்கதைகளில் கவனிக்க முடிகிறது. அலுவலகம் செல்லும் பரபரப்பிலும் சாலையோர மரங்களையும் மலர்களையும் விவரிக்கிறார். அப்பாவின் மீதான கடுமையான மனத்தாங்கலுடன் பயணம் செய்யும்போதும் பாதையோர செடிகளையும் பூக்களையும் ரசிக்கிறார். நொய்டா, பெங்களூரூ, ஸ்டாக்ஹோம், டெல்லி என பல்வேறு நிலப்பிரதேசங்களின் செடிகொடிகளை பூக்களை அவற்றின் மணத்தை சித்தரிக்கிறார். குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைக்குள் இயங்கும் கதைக் களத்தின் வெறுமையை புறவுலகின் இயற்கை வளங்களைக் கொண்டு ஈடுசெய்கிறார். ‘தீர்வு’ கதைக்கான விடையை அவர் பூங்காவில் பின்னி நிற்கும் மரத்தைக் கண்டவுடன் அடைவதாகச் சொல்லியிருப்பதைக் குறிப்பிட முடியும்.

பெண்களின் புறம்பேசும் குரல்கள் பல கதைகளில் ஒலிக்கின்றன. கூடவே சமையல், வீடு, தூய்மை, பிள்ளைகளின் மேலான கரிசனம் போன்ற வழக்கமான அடையாளங்களும் கதைகளில் நிறைந்துள்ளன. சமையலறையில் தொடங்கி சமையலறையிலேயே முடியும் ‘முற்றத்து அணில்’ கதை நெடுக பதார்த்தங்கள் தயாராவது சித்தரிக்கப்படுகிறது. சமையலின் மணமும் சத்தங்களும் கதை முழுக்க நிறைந்துள்ளன.

புனைவுக்காக லாவண்யா தேர்ந்தெடுக்கும் களங்களும் கதாபாத்திரங்களும் வலுவாக அமைந்துள்ள அளவுக்கு அவரது கதைமொழி, சித்தரிப்பு, உரையாடல்கள் ஆகியவை அமையவில்லை. நுட்பங்கள் மேலும் செறிவுற வேண்டியிருக்கிறது. கதையினூடே நிகழும் சிறு அசைவுகளே கதாபாத்திரங்களை நினைவில் நிறுத்தும். மற்றபடி அவை வெறும் பெயர்களாகவே நின்றுவிடும் அபாயம் உள்ளது.

கதைமாந்தர்களை இலக்கிய ஆர்வமுள்ளவர்களாகவோ எழுத்தாளர்களாகவோ காட்டுவதில் தவறேதுமில்லை. அதற்கான தேவை அந்தக் கதையில் இருக்கவேண்டும். ‘திமிங்கிலம்’ கதையின் நாயகி ‘குழந்தையைக் கொஞ்ச வேண்டிய நேரத்தில்தான் கவிதை எழுதினேன்’ என்று சொல்வது கதைநாயகி சந்திக்கும் நெருக்கடிக்கு பொருந்திப் போகவில்லை.

0

மென்பொருள் துறையைக் களமாகக் கொண்டு புனைவுகள் கணிசமாக எழுதப்படுகின்றன. கணினி, தகவல் தொழில்நுட்பத் துறை பணி சார்ந்து பொதுபுத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் சித்திரத்துக்கு மாறான அசலான நிலவரங்களை சுட்டிக்காட்ட அவை முனைகின்றன. எல்லாத் துறைகளிலும் நீக்கமற ஊடுருவியிருக்கும் பால், இனம், மொழி, படிநிலை அரசியல் இந்தத் துறைகளிலும் ஆழமாகப் பரவியிருப்பதை உறுதிசெய்கின்றன. இந்தத் துறைகளில் பெண்கள் சந்திக்க நேரும் அழுத்தங்களை, இடர்ப்பாடுகளை வெளிப்படுத்துவதன் காரணமாக லாவண்யா சுந்தரராஜனின் இக்கதைகள் கவனம் பெறுகின்றன.

0

(‘முரட்டுப் பச்சை’ சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரை.)

புனைவின் புதிய சாத்தியங்கள் . (விஜயராவணனின் ‘இரட்டை இயேசு’ முன்னுரை)

 



0

தமிழில் இன்று எழுத வரும் இளைஞர்களின் முன்னால் இருக்கும் சவால், பன்னெடுங்காலமாய் இங்கு புனைவின் அனைத்து வகைமைகளிலும் முன்னோடிகளால் ஏற்கெனவே நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதனைகளே. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என எந்தத் துறையில் எழுத முனைந்தாலும் குறைந்தபட்சம் நூறாண்டுகளாக எழுதி நிறுவப்பட்ட படைப்புகளை கடந்து வந்தாக வேண்டும். இந்த ஆக்கங்களில் சிலவற்றையேனும் வாசித்து அவை தரும் வியப்பையும் மலைப்பையும் தாண்டி எனக்கும் சொல்ல இருக்கிறது என்று ஒரு இளைஞன் துணிவது இத்தகைய வலுவான பெரு மரபின் ஒரு கண்ணியாகும் சாத்தியம் தரக்கூடிய வசீகரம்தான்.

இந்த சவாலை சந்திக்கும்போது, ஏற்கெனவே வலுவான படைப்புகளுடன் வீற்றுள்ள புனைவின் எல்லைகளை விரிவாக்கும் முனைப்புடன் எழுதவேண்டிய தேவையுள்ளது. தமிழில் முன்பே எழுதப்பட்ட நன்கறிந்த உலகையும் வாழ்வையும் எழுதாது புதிய வகையான, இதுவரை அறிமுகமாகாத புதிய களங்களை எழுதிக் காட்டுகிறார்கள். உலகின் பல்வேறு தேசங்களை பின்புலமாகக்கொண்டு அவற்றின் கலாச்சார அம்சங்களை இணைத்து கதைகளை உருவாக்குகிறார்கள். இன்றைய புதிய தகவல் தொழில்நுட்பம் அமைத்துத் தந்திருக்கும் வசதி வாய்ப்புகளின் காரணமாக உலகெங்கும் பயணம் செய்து தாங்கள் காணும் அந்நிய நிலத்தையும் வாழ்க்கையையும் நம்பகத்தன்மையுடன் இணைக்கிறார்கள். இன்றைய இளைஞர்களின் இவ்வகையான எழுத்துகள் தமிழ் புனைவுலகுக்கு புதிய வண்ணங்களைச் சேர்க்கின்றன.

விஜயராவணனின் இத்தொகுப்பிலுள்ள கதைகள் தமிழில் எழுதப்பட்டவை என்றாலும் தமிழ் கதைகளல்ல. தமிழ் நிலத்தையோ தமிழ் வாழ்க்கையையோ இவை சொல்லவில்லை. நாம் அதிகமும் அறியாத வேறு நிலங்களில் நிகழும் வெவ்வேறு வாழ்க்கையைச் சொல்ல முனைகின்றன. அறிவியல், போர், பெருந்தொற்று, அதிகாரம் ஆகியவற்றால் உலகளாவிய மனித சமூகம் சந்திக்க நேரும் பாதிப்புகளில் இக்கதைகள் மையம் கொள்வதால் இவை தமிழில் எழுதப்பட்ட உலகக் கதைகள் என்று அடையாளப்படுத்தலாம். களங்களின் அந்நியத்தன்மையோடு இவற்றின் கதைமொழியும் இணைந்து மொழிபெயர்ப்பு கதைகளோ இவை என்ற மயக்கத்தைத் தருவதையும் கவனிக்க முடியும்.

மனித குலத்தின் நினைவடுக்குகளில் மறையாத வடுக்களை ஏற்படுத்தும் போரின் விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட இரு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. போர் காரணமாக நிறங்களை இழந்து அனைத்தையும் கருப்பு வெள்ளையாகக் காண்பவன் உலகெங்குமுள்ள லட்சக்கணக்கானவர்களில் ஒருவனே. போரால் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டவர்கள் எந்த தேசத்தில் எப்படிப்பட்ட நிலையிலிருந்தாலும் ‘அகதி’ என்ற அடையாளத்தை உதிர்த்துவிட முடியாது. யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒரு விதத்தில் அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டேதான் இருப்பார்கள்.

துப்பாக்கிகளுடன் எதிரெதிர் முனைகளில் நின்றபோதும் ஒரே தொட்டியிலிருந்த இரு தங்க மீன்கள் அவ்விருவரையும் இணைக்கின்றன. பாதையும் கொள்கைகளும் வேறாயினும் தொலைத்த அவரவர் பால்யத்தை அவரவர் நிலத்தில் தேடும் அவர்களது வேட்கை ஒன்றே.

நோய்த் தொற்று காலத்தில் அனைவருமே கைவிடப்பட்ட, அடுத்தவரை அஞ்சிய நிலையின் அபத்தத்தை இன்று உலகம் கடந்து வந்திருக்கிறது. ஆனால், அந்தக் கொடுங்காலம் ஏற்படுத்திய வலுவான உளச்சிக்கல்களிலிருந்து பலர் இன்னும் மீளவில்லை. அது விதைத்த அச்சம் சிலுவையின் மறுபக்கத்தில் அறையப்பட்ட இன்னொருவனைப் போல எப்போதும் தலைமீது அசைந்துகொண்டே இருக்கிறது.

துரிதமாகவும் பிசகில்லாமலும் காரியங்களை செய்துகொடுக்கும் செக்குமாட்டுத் தனத்திலிருந்து மனித எந்திரங்களை விடுவித்து அடுத்த படிநிலைக்கு அவற்றைக் கொண்டுசெல்லும் செயற்கை நுண்ணறிவைக் குறித்த விவாதங்கள் வலுபெற்றுள்ளன. துறைசார்ந்த சொல்லாடல்களுடன் தொழில்நுட்ப விபரங்களுடன் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை வாசிப்பதன் வழியாக அடையும் தெளிவை விட அறிவியல் புனைகதை ஒன்றை படிப்பதன் மூலம் இன்னும் எளிதாகப் புரிந்துகொள்வது சாத்தியம். இத்தொகுப்பிலுள்ள ‘என்றூழ்’ அத்தகைய ஒரு முக்கியமான கதை. மனிதனின் அன்றாட வாழ்விலும் அவனது அக உலகிலும் அந்தரங்கத்திலும் இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் எவ்விதமான செல்வாக்கை செலுத்த முடியும் என்பதை சொல்கிறது இக்கதை. அறிவியலையும் புராணத்தையும் இணைக்கிறது என்ற விதத்திலும் கவனிக்கத்தக்கது. தமிழில் இப்போது கவனம் பெறும் அறிவியல் புனைகதைகளின் பட்டியலில் உறுதியாக இடம்பெறும் தகுதியைக் கொண்டுள்ளது.

முற்றதிகாரம் ஒருபோதும் வரலாற்றையும் நினைவுகளையும் சகித்துக் கொள்ளாது. அவற்றை அழித்தொழிக்கவே தீர்மானிக்கும். அதிகாரத்தை எப்போதுமே கேள்வி கேட்கிறது என்பதால் கலையை அது அஞ்சுகிறது. வரலாற்றையும் நினைவுகளையும் அவற்றை மனிதனுக்குத் தொடர்ந்து நினைவூட்டும் கலைகளையும் அழித்த பிறகு எஞ்சுவது என்ன? வலுவான இந்தக் கேள்வியை எழுப்பும் ‘அகாலம்’ சிறுகதை அந்தக் கேள்விக்கு சாத்தியமான விடைகளை யோசிக்கவும் தூண்டுகிறது.

விஜயராவணனின் இக்கதைகள் யாவும் அந்நிய நிலத்தில் நிகழ்பவை. இவை முன்வைக்கும் கதைக்களங்களும் அதிகமும் நமக்குப் பரிச்சயமில்லாதவை. ஆனால், தன் நேர்த்தியான சித்தரிப்பின் மூலமாக இவற்றை நமக்கு நெருக்கமான கதைகளாக அவரால் மாற்றிவிட முடிந்திருக்கிறது.

‘இன்னொருவன்’, ‘தங்கமீன்கள்’ ஆகிய இரண்டு கதைகள் மாய யதார்த்த கதைப் பாணியில் எழுதப்பட்டவை. இவ்வகையான கதைகளில் உள்ள சவால் வாசகனிடத்தில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதுதான். தங்க மீன்களை பிரசவிக்கும் அழகியை ஒரு போர்ச் சூழலில் மிகுந்த நம்பகத்தன்மையுடன் இணைக்க முடிந்திருக்கிறது. ஆனால், ‘இன்னொருவன்’ கதையில் அந்த நம்பகத்தன்மை அமைந்து வரவில்லை என்ற சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாகவே கதையின் இறுதிப் பகுதியில் அவற்றை தொடுக்க முயன்றிருக்கிறார்.

‘ஆரஞர் உற்றன கண்’, ‘என்றூழ்’ போன்ற மரபான தமிழ்ச் சொற்றொடர்களை தலைப்பாக இட்டிருப்பது, அந்நியமான கதைகளையும் களங்களையும் தமிழ்க் கதைகளாக உணர்த்துவதற்கான முனைப்போ என யோசிக்கச் செய்கிறது.

விஜயராவணனின் முதல் தொகுப்பான ‘நிழற்காடு’ அளித்த அனுபவத்தையும் நம்பிக்கையும் மேலும் உறுதிப்படுத்துவதாக இந்த இரண்டாவது தொகுப்பிலுள்ள கதைகளுமே அமைந்துள்ளன. அதுவே ஒரு புனைகதையாளராக அவர் அடைய நினைக்கும் இலக்கை நோக்கிய அவரது பயணத்தை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

0

நீரம்

 


1975

சிம்னி விளக்கின் ஒளியில் படித்துக்கொண்டிருந்தான் ராதாகிருஷ்ணன் “காற்று, வெயில், நீர் இவை யாவும் இயற்கையாக நமக்குக் கிடைப்பவை. இதற்கென விலை எதுவும் இல்லையானாலும் இவை விலைமதிப்பற்றவை.”

“படிச்சது போதும். பக்கத்து வீட்ல தண்ணி சேந்தப் போறாங்க. கூடப் போயி ரெண்டு கொடம் கொண்டு வா” இருட்டிலிருந்து அம்மாவின் குரல் விரட்டியது.

லாந்தரின் மஞ்சள் வெளிச்சம் பாதையைக் காட்ட விறகுக் கடையின் ஒற்றையடி பாதையில் நடந்தார்கள். பிளந்து கிடக்கும் விறகின் ஈர வாசனை காற்றில் அலைந்திருந்தது. கிணற்றின் சேந்துருளைச் சத்தம் கேட்டது. இரவு பகலாக கேட்கும் சத்தம்தான். விறகுகளை எடைபோட நிறுத்தியிருக்கும் தராசுக்கு சற்று தள்ளி கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தார் ரங்கசாமி. வாயிலிருந்த சுருட்டின் நுனியில் நெருப்புக் கங்கு. தோளில் பச்சை போர்வை.

மாலாமணி கயிற்றில் தோண்டியைக் கட்டி உள்ளிறக்கினாள். “அம்மிணிகளா. இந்த நேரத்துல வந்திருக்கீங்க. ஆம்பளைங்க யாரையாச்சும் கூட கூட்டிட்டு வந்திருக்கலாமில்ல” ரங்கசாமியின் கரகரத்த குரல் கேட்டதும் வசந்தி ராக்கியின் தலையில் தட்டியபடி சொன்னாள் “அதான் இவன் வந்திருக்கான்ல தாத்தா.” இருமியபடி அவர் சிரித்தார். சேந்து கயிற்றை வேகமாக மேலிழுத்தான் ராக்கி.

“ரோஷம் வந்துருச்சா உனக்கு. மெதுவா இழுடா ராக்கி” மாலாமணி தோளில் இடித்தாள்.

இடதுபுறம் கள்ளிவேலிக்கப்பால் சோளத் தோட்டம். வலதுபக்கம் பாவுணத்தும் கட்டாந்தரைகளின் நடுவிலிருந்த பாதை நிலா வெளிச்சத்தில் தனித்து நீண்டது. தலையிலும் இடுப்பிலுமாக குடங்களுடன் கொலுசொலிக்க நடந்தவர்களுடன் தோளில் ஒரேயொரு குடத்தை இருத்தியபடி நடந்தான்.

நெசவாளர் காலனி, கண்ணகி நகர், திருவள்ளுவர் நகர், திருமலை நகர் அனைத்துக்குமான தண்ணீர் தேவையைத் தீர்க்கவென இருந்தது இந்த விறகுக் கடை கிணறு மட்டுமே. காலனி இரண்டாவது வீதியிலிருந்த செண்பகா அமாவாசை ராத்திரியொன்றில் குதித்து செத்துப் போன பின்பு ஆரம்ப பள்ளிக்குப் பின்னால் இருந்த சேந்து கிணற்றுத் தண்ணீரை யாரும் பயன்படுத்துவதில்லை. கோடை காலங்களில் சொரப்புரடையுடன் ஒரேயொரு முறை நீச்சல் பழக முயன்றிருக்கிறான்.

விறகுக் கடை கிணற்றுக்கு மாற்றாக இருந்த கிணறு பிச்சம்பாளையம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அரச மரத்தையொட்டி இருந்தது. அவ்வளவு சுலபத்தில் அங்கே போய் தண்ணீர் சேந்தி எடுத்து வந்துவிட முடியாது. பிச்சம்பாளையத்தில் இருந்த ஊர் பெண்கள் அனுமதித்தால் மட்டுமே ஒற்றையடிப் பாதையிலேயே கால்வைக்க முடியும்.

குரங்குபெடலில் சைக்கிள் ஓட்டி பழகிய பின்பு மாரியம்மன் கோயில் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்திருக்கிறான் ராக்கி. பனை மரங்களூடே வளைந்து நெளிந்தோடும் இட்டேரி பாதையில் உற்சாகத்துடன் சைக்கிளை செலுத்தி கோயிலுக்கு கொஞ்சம் முன்பு ஓடையில் சரிந்திறங்கி அதே வேகத்தில் மேலேறுவது சாகசமானது.

பிச்சம்பாளையத்தின் மேற்கு கோடியில் அங்கேரிபாளையம் சாலையில் சந்திரா கொட்டாய் இருந்த வரைக்கும் சினிமாவுக்கு போய்விட்டு வரும்போது இதே பாதையில் வருவதுண்டு. ஆனால் மாரியம்மன் கோயில் கிணற்றின் சுற்றுச்சுவர் மிகவும் பழையது. அங்கங்கே இடிந்து பிளந்திருக்கும். ஆழமும் கூடுதல். உதிர்ந்த அரசிலைகள் மிதக்கும் நீர் பரப்பில் சூரியக் கதிர்கள் விழுந்து நெளியும்.

1977

ஆழ்துளை கிணறு என்ற ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டிராத நிலையில் நெசவாளர் காலனி ஆரம்ப பள்ளிக்கு வடக்குப் பக்கத்தில் நிலத்தடி நீரோட்டம் இருப்பதைக் கண்டு ஆழ்துளை கிணறு தோண்ட அரசு உத்தரவு பிறப்பித்த விபரங்கள் யாருக்கும் தெரியாது. ஒருவேளை காலனி சுப்பராவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

காலை பதினோரு மணிக்கு ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கான ராட்சத இயந்திரம் பொருத்தப்பட்ட மஞ்சள் வாகனம் கொழுஞ்சியும் தும்பைகளும் ஊமத்தைகளும் அடர்ந்த அந்த வெட்டார பரப்பில் வந்து நின்றதை காலனி வடக்கு வீதியின் முகப்பில் உள்ள ஜி.செல்வராஜ்தான் ஓடிவந்து சொன்னான். ‘நெலத்துல சொரங்கம் தோண்டி தண்ணி எடுக்கப் போறாங்களாண்டா. லாரி வந்துருக்கு.’

இறுக்கிச் சுற்றிய நூல் பந்தில் கட்டாந்தரையில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த ராக்கி எல்லோருடனும் சேர்நது ஓடினான்.

ராட்சத இயந்திரம் இயங்கத் தொடங்கியதும் புழுதி கிளம்பியது. பலத்த ஓசையுடன் கிடுகிடுவென உள்ளிறங்கியது துளைப்பான். விலகி நின்று வேடிக்கை பார்த்தது பெருங்கூட்டம். லாரியிலிருந்து குழாய்கள் இறக்கப்பட்டன. தும்பைச் செடிகள் கால்களில் நசுங்கும் வாசனை. இரண்டு மணிக்கு இயந்திரம் நிறுத்தப்பட்டபோது வலது பக்கத்தில் மண் மேடாகி நின்றது.

“சாப்ட போறாங்கடா. நாமளும் போய் சாப்ட்டுட்டு வந்தர்லாம்” எல்லோரும் கால்புழுதியுடன் வீடுகளை நோக்கி ஓடினார்கள்.

நான்கு மணிவாக்கில் மண்ணில் ஈரம் தென்பட்டதும் ஆர்ப்பரித்தார்கள். “தண்ணி வரப்போகுது… இன்னும் பத்து பதினஞ்சு அடிதான்.” எல்லா பக்கத்திலிருந்தும் குரல்கள். கூட்டம் பெருத்திருந்தது.

மேற்கு வானில் மஞ்சள் சூரியன். கூடு திரும்பும் பறவைகளின் வரிசை. யாரும் எதையும் பார்க்கவில்லை. அனைவரின் கண்களும் துளைப்பானின் மேல் குவிந்திருந்தன. சுழன்று நிலம் துளைத்த இரும்புத் துண்டு ஒரு கணம் திணறியது. இன்னும் ஆற்றலுடன் மோதி இறங்கிய நொடியில் திடுக்கென அதிரும் ஓசை. துளைப்பானை இயக்கி நின்றவன் அருகில் நின்றவர்களைப் பார்த்து நிறைவுடன் சிரித்தான். சுற்றிலும் நின்றவர்களைப் பார்த்து கூவினான். அதே கணத்தில் பீறிட்டு தெறித்தன நீர்த் துளிகள்.

பிள்ளையார் கோயில் பூசாரி தேங்காய் உடைத்து பூசை செய்த பின்பு முதல் குடம் தண்ணீர் பிள்ளையாருக்கு வார்க்கப்பட்டது.

தண்ணீர் பீறிட்டு மேலேழுந்த பிறகும் இன்னும் இன்னும் என துளைத்து நின்றது இயந்திரம். சாம்பலும் மண்ணும் கலந்த நீர் பெருகியோட சிறுவர்கள் உடல் நனைய உருண்டு விளையாடினார்கள். காட்டன் மில் வரை சென்று திரும்பும் பத்தாம் நம்பர் டவுன் பஸ்ஸிலிருந்து பலரும் இறங்கி வேடிக்கை பார்த்தனர்.

“இதுக்கு மேல எறக்க முடியலை. போதும்” என்று இயந்திரம் விலகியபோது இருட்டியிருந்தது.

அடி பம்பு பொருத்தப்பட்ட பின்பு மூன்றாம் நாள் காலையில் மீண்டும் பூசை. முந்தின நாளே ஊர்க் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஊர் முழுக்க அறிவிக்கப்பட்டிருந்தது. தண்ணீர் அடிக்க வரிசை வைக்கப்படும். நெசவாளர் காலனிக்கு இரண்டு வரிசை. கண்ணகி நகருக்கும் திருமலை நகருக்கும் தனித்தனி வரிசை. ஒரு நபர் ஒரு முறையில் இரண்டு குடங்கள் மட்டுமே அடித்துக் கொள்ளலாம். இதை மேற்பார்வை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இரண்டாம் வீதியைச் சேர்ந்த வெங்கடேச முதலியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அன்று ஒலிக்கத் தொடங்கிய அடிப்பம்பின் சத்தம் இரவும் பகலுமாய் தொடர்ந்து ஒலித்திருந்தது. வண்ணக் குடங்களின் வரிசைகள் நீண்டு காத்திருக்க வெங்கடேச முதலியார் கட்டிலை போட்டுக்கொண்டு அங்கேயே காவல் காக்க வேண்டியதாயிற்று.

வரிசையில் வைத்த குடங்கள் காணாமல் போகவும் உடைந்த வாளிகளும் ஒடுங்கிய தோண்டிகளும் வரிசையில் இடம் பிடித்தன. முதலியாரின் கவனம் சிதறிய சந்தர்ப்பங்களில் மூன்றாவது குடத்தையும் சமயத்தில் ஐந்தாவது குடத்தையும்கூட நிரப்பிக் கொண்டார்கள் சாமர்த்தியசாலிகள்.

மோட்டார் பொருத்துவதென முடிவு செய்யப்பட்டபோது குடத்துக்கு ஒரு பைசா வசூலிப்பதென ஊர்க் கூட்டத்தில் தீர்மானித்தனர்.

இண்டோலியத்தில் செய்யப்பட்ட காசு பெட்டியில் முதலியார் சில்லறைகளை எண்ணிப் போட்டார். சில்லறைகள் நோட்டாகி நோட்டுகள் தொகையாகி நிறைந்தபோது மோட்டாரைப் பொருத்தி பெரிய இரும்பு தொட்டியில் நீர் நிறைக்கப்பட்டது. பக்கத்துக்கு நான்காக தொட்டியின் நாலாபக்கமும் குழாய்கள் நீரைக் கொட்டின.

எந்நேரமும் ஒலிக்கும் அடிப்பம்பின் ஓசை மறைந்தது. குடங்களின் வரிசைகள் காணாமல் போயின. முதலியாரின் கட்டிலுக்கும் இண்டோலிய காசுப் பெட்டிக்கும் வேலையில்லை. இப்போது காலையில் ஐந்து மணிக்கு தோளில் சுற்றிய போர்வையுடன் கைவிளக்குடன் மெதுவாக நடக்கிறார்.  தண்ணீர் தொட்டிக்கு வடபுறத்தில் அமைக்கப்பட்ட மோட்டார் பெட்டியைத் திறந்து ஸ்விட்சை போடுகிறார். சிறிது நேரத்தில் தண்ணீர் திடுதிடுவென தொட்டிக்குள் கொட்டுகிறது. பத்துமணி வரைக்கும் யாரும் வரலாம். எத்தனை குடம் வேண்டுமானால் பிடிக்கலாம். சரியாக பத்து மணிக்கு மீண்டும் பெட்டிக்கு வந்து ஸ்விட்சை அணைத்துவிடுவார். மறுபடி மாலை நான்கு மணிக்குத்தான். இரவு ஒன்பது மணிவரைக்கும் தண்ணீர் கொட்டி நிறைந்தவுடன் மீண்டும் அணைக்கப்படும்.

விறகுக் கடை கிணற்றின் சேந்துருளை துருப்பிடித்திருந்தது. ரங்கசாமி கட்டிலை எடுத்து கடைக்கு வெளியே போட்டுக்கொண்டார். இரண்டு பக்கமும் குடங்களை சுமந்துகொண்டு போய்வரும் சைக்கிள்களை வேடிக்கை பார்த்தபடியே கண்ணாடியைத் துடைத்துக்கொள்கிறார்.

சைக்கிள் கேரியரின் இருபுறமும் பக்கத்துக்கு ஒன்றாக கழுத்தில் இறுகிய குடங்களுடன் தண்ணீர் சுமப்பது இப்போது ராக்கிக்கு சுலபமாக இருந்தது. பத்து குடம் தண்ணீர் இருந்தால் புழக்கத்துக்குப் போதும் என்ற நிலை மாறி அம்மா இன்னும் தாராளமாக புழங்கினாள். குளிப்பதும் துவைப்பதும் தினம் சாத்தியமாயிற்று.

0

1983

பச்சைப் போர்வையை இழுத்துப் போர்த்திக் கிடந்த ராக்கியை அம்மா உலுக்கி எழுப்பினாள்.

“சைக்கிள் பெல் சத்தம் கேக்கலையா… அன்பழகனாட்ட இருக்கு.”

கண்களைத் தேய்த்துக்கொண்டு திண்ணையிலிருந்து இறங்கினான். கருக்கிருட்டில் எதுவும் புலனாகவில்லை. விடிகாலையில் குளிர்காற்று முகத்தில் மோத கொட்டாவி விட்டபடி வாசலுக்கு வந்தான்.

“எத்தன நேரமாடா கூப்பிடறது. நல்லதண்ணி வந்து ரொம்ப நேரமாயிருச்சுடா. சீக்கிரம் வாடா. ரெண்டு நடையாச்சும் எடுத்தர்லாம்” அன்பழகன் பரபரத்து நின்றான்.

பிளாஸ்டிக் குடங்களில் கழுத்து வாப்பாட்டில் கயிற்றை இறுக்கி கேரியரில் மடித்துப் போட்ட அரிசி சாக்கின் இருபுறமும் மாட்டினான். சக்கரங்களில் காற்றின் அளவை அழுத்திப் பார்த்துவிட்டு உந்தித் தள்ளினான்.

“கருணா மூணாவது நடைக்கு வர்றான் பாரு…” அன்பழகன் சொன்ன அதே நேரத்தில் கிணு கிணுவென மணி ஒலித்தபடி கருணா ஒட்டிக்கொண்டு வந்தான்.

“இப்பிடித் தூங்குனா குடிக்கறக்கு நல்ல தண்ணிக்கு எங்கடா போறது?” விறுவிறுவென்று பெடலை அழுத்தியபடியே சிரித்தான்.

ஸ்பேரோ நிட்டிங் அருகே பன்னீர் பூக்களின் வாசனை. உயர்ந்து நின்ற மரங்களில் விண்மீன்களென மின்னின., சுடுகாட்டு மேட்டில் சைக்கிளை ஏறி மிதிக்கும்போது கிழக்குவானில் மஞ்சள் வெளிச்சம். ‘முந்தானை முடிச்சு’ போஸ்டரில் பாக்யராஜ் குழந்தையை ஏந்தி நின்றிருந்தார்.  மேட்டுப்பாளையம் பிள்ளையார் கோயில் வீதியில் திரும்பியபோது தலையிலும் இடுப்பிலும் குடங்களுடன் மூன்று பெண்கள் எதிரில் வந்தனர். அசோக மரங்கள் உயர்ந்து நின்ற சுற்றுச்சுவர் அருகே பன்றிகள் உறுமித் திரிந்தன. நீலக்கதவுள்ள வீட்டின் வாசலில் சைக்கிள்களை நிறுத்தினார்கள். மூன்று குடங்கள் வரிசையில் காத்திருந்தன. சுண்ணாம்பு கரையுடன் சாணமிட்டு மெழுகப்பட்ட திண்ணையிலும் வாசலிலும் சிறு கோலங்கள். கோடாலி முடிச்சிட்ட கூந்தலுடன் படியில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தவள் ஏறிட்டுப் பார்த்தாள்.

மூவரும் தண்ணீரைப் பிடித்து சைக்கிளில் ஏற்றியதும் கருணா திரும்பி நின்று சத்தமாக சொன்னான் “இன்னொரு நடைக்கு வருவோங்க்கா…”

தெருமுனையில் திரும்பியதும் அன்பழகனிடம் கேட்டான் ராக்கி “இவங்களுக்கெல்லாம் நம்மகிட்ட பேசினா எதாச்சும் ஒட்டிக்குமாடா?”

“நா பேசறேன்லடா…” கருணா முதுகை வளைத்து குனிந்திருந்தான். சுடுகாட்டு மேட்டு இறக்கத்தில் சைக்கிளை அழுத்தவேண்டாம். ஆனால் வேகத்தில் கட்டுப்பாடு இல்லாமல் போனால் குடத்து நீர் வீணாகிப்போகும்.

“நீதான்டா அக்கா அக்கான்னு கொஞ்சறே. அவ மொகத்தைக்கூட திரும்பிப் பாக்கறதில்லை.”

“அவ பாத்தா என்ன பாக்காட்டி நமக்கென்னடா. நாலு கொடம் தண்ணி புடிக்கறதுக்கு விடுதில்ல… அதே போதும்.” அன்பழகன் சொன்னபோது எதிரில் பத்தாம் நம்பர் பஸ் படியில் தொங்கும் கூட்டத்துடன் மெதுவே ஊர்ந்து வந்தது.

பளீரென்ற சூரிய வெளிச்சத்தில் பி.என் ரோடும் காலனி பேருந்து நிறுத்தமும் சுறுசுறுப்படைந்திருந்தன. ராமசாமி கடை பெஞ்சுகளில் உருமாலை சுற்றிய ஆட்கள் கூட்டம். கல்லடுப்பில் ஏற்றப்பட்டிருந்த இட்லி பானையில் ஆவி பறந்தது.

வீட்டில் அம்மா தவலையையும் அண்டாக்கள் இரண்டையும் கழுவி வைத்திருந்தாள்.

“என்னம்மா… இன்னும் ரெண்டு நடைக்கு போணுமா?” சிணுங்கியபடியே லுங்கியை ஏற்றிக் கட்டினான்.

“வீட்ல குடிக்கறதுக்கு பொட்டுத் தண்ணி இல்ல. இதெல்லாத்தையும் நெறச்சு வெச்சாத்தான் ஒரு வாரத்துக்கு தாங்கும். இன்னும் நேரமிருக்கில்ல. கௌம்பு” அம்மா விரட்டினாள்.

“நேரத்துலயே வந்திருச்சாம். சீக்கிரம் நின்னுரும்டா. நாயம் பேசிட்டே லேட் பண்ணாதீங்க.” அவளது குரல் ராக்கியைத் தொடர்ந்தது.

காலனி முனையில் கருணாவும் அன்பழகனும் சேர்ந்துகொண்டனர். பள்ளிக்கூடத்துக்கு முன்னாலிருந்து பொது குழாய் அருகே நசுங்கிய பானைகளும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளும் வரிசையில் கிடந்தன.

“சாயங்காலம் இந்தப் பக்கமே வரமுடியாதுடா… தண்ணி வந்திருச்சுன்னா குடுமிப்புடி சண்டையா கெடக்கும்.”

பி.என் ரோடில் பனியன் கம்பெனிகளுக்கு செல்லும் சைக்கிள்களின் எண்ணிக்கை கூடியிருந்தது.

மூன்றாவது நடையின்போது சட்டை முழுக்க வேர்வையில் நனைந்திருக்க பையிலிருந்து காசை எடுத்து எண்ணினான். நான்கு நடைக்கு எட்டு குடங்கள். குடத்துக்கு இருபத்தி ஐந்து பைசா கணக்கில் இரண்டு ரூபாயை எடுத்து திண்ணையின் மேல் வைத்தான்.

கருணா மீண்டும் சத்தமாகச் சொன்னான் “காசு வெச்சுட்டோம்க்கா…”

வாசலின் வடகோடியில் செம்பருத்திச் செடிக்கு பக்கத்திலிருந்த அம்மியில் அரைத்திருந்தவள் நிமிர்ந்து பார்க்காமலே தலையாட்டினாள்.

சாந்தி தியேட்டர் அருகே ஆட்டோவிலிருந்து ஒலிபெருக்கி அலறியது.

“நாளை மாலை பின்னி காம்பவுண்டில் நடைபெறவுள்ள விழாவில் நமது முதல்வர் மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன்மனச்செம்மல் எம்ஜியார் அவர்கள் கலந்துகொண்டு இரண்டாவது குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். நமது பகுதியின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் இந்த நன்னாளில் நீங்கள் அனைவரும் பெருந்திரளென பங்கேற்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.”

“எத்தன வருஷமா சொல்லிட்டிருக்காங்க. திட்டம் போட்டு கொழாயப் போட்டு தண்ணி வர்றதுக்குள்ள நமக்கெல்லாம் கல்யாணம் ஆயி குழந்தையே பெத்துருவோம்டா.” கருணா சலிப்புடன் சிரித்தான்.

“அதோட போச்சுன்னா பரவால்லே. நம்ம பசங்களையும் இதுமாதிரியே சைக்கிள்ல தண்ணி எடுக்க வெக்கமாம இருந்தா சரி” அன்பு நெற்றி வேர்வையைத் துடைத்தான்.

0

1998

வீட்டு வாசலில் வேப்பமரத்தடியில் அமைத்திருந்த குடிநீர் குழாயில் இணைக்கப்பட்ட பச்சை பிளாஸ்டிக் குழாய் நீண்டு கிடந்தது. ஈரத்துடன் பளபளத்தது காரை வாசல். குளியலறை தொட்டி நிறைந்தவுடன் குழாயை எடுத்து ஜாதிமல்லி செடிக்கடியில் போட்டாள் அம்மா. செம்மண்ணில் சீறிப் புரண்டோடியது தண்ணீர்.

துணிகளை அலசிப் பிழிந்து கொடியில் போட்டுவிட்டு திரும்பிய கோகிலா முகத்தைத் துடைத்தபடியே சொன்னாள் “நேத்து நம்ம ஜீவா வூட்டுக்கு பொண்ணு பாக்க வந்தாங்க இல்ல… என்னாச்சு?”

கழுவி உலர்த்திய பாத்திரங்களை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தவளின் கனத்த மூக்குத்தி வெயிலில் மின்னியது. “அந்த எடம் வேணாங்கற இவ.”

“மாப்ள தாராபுரந்தானே?”

“அதான். அங்க தண்ணி கஷ்டமாம். என்னால இடுப்பொடிய கொடமெல்லாம் சொமக்க முடியாது. வேற எடம் பாருங்கன்னு சொல்லிட்டா.”

வாளி நீரை வேப்பமரத்தடியில் கொட்டிவிட்டு நிமிர்ந்த கோகிலா சிரித்தபடியே சொன்னாள் “எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருந்தப்ப ‘போயும் போயும் திருப்பூர் மாப்ள பாத்துருக்காங்களே. தண்ணி இல்லாத காடு அது. எப்பிடி போயி காலந்தள்ளப் போறமோ’ன்னு நானுந்தான் வெசனப்பட்டேன்.”

அம்மா தண்ணீரை அள்ளி முகத்தை கழுவினாள் “இந்த கொமுரிகளுக்கு இடுப்புல கொடம் வெக்கவே தெரியாது. எல்லா பக்கமும் கொழா போட்டு வெச்சிருக்கு. திருப்பி வுட்டுட்டு நிக்கிதுங்க. தண்ணிக்கு நாம பட்ட கஷ்டத்தை சொன்னா ‘உங்க தல விதி அப்பிடி’ன்னு பழமை பேசுதுங்க.”

“அது செரிதாங்க்கா… அவங்களாவது நல்லா இருக்கட்டும்.” கோகிலா இடுப்புச் சேலையை அள்ளிச் செருகியபடி நகர்ந்தாள்.

ஜாதிமல்லி செடியருகே செம்மண் கலந்த தண்ணீர் புரண்டோடியது.

களைப்புடன் ஆட்டோவிலிருந்து இறங்கினான் ராக்கி. காசு கொடுத்துவிட்டு திரும்பியபோது ஆட்டோகாரர் குரல்கொடுத்தார் “தம்பி, காசு குடுத்து வாங்கின தண்ணி பாட்டிலை விட்டுட்டு போறீங்க. எடுத்துக்குங்க.”

0

மதுமிதா தொகுத்த ‘தண்ணீர்’ கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றது.

 

 

Monday, 4 November 2024

நிலமும் துயரமும் மனிதர்களும் – அரவிந் குமாரின் கதைகள்

 



வல்லினம் நவம்பர் 2024 இதழில் வெளியான கட்டுரை

0

புதியவர்கள் எழுதும் கதைகளைப் படிக்கும்போது நாமறிந்த, வாசித்த புனைவுலகில் சில புதிய அனுபவங்களும் தருணங்களும் சேர்ந்துகொள்கின்றன என்பதால் புதிய எழுத்தாளர்களை வாசிப்பதில் ஆர்வமுண்டு. அந்த எழுத்தாளர் யார் என்ற எந்த அறிமுகமுமின்றி நேரடியாக கதைகளை அணுகி வாசிக்கும் வாய்ப்பை இணைய இதழ்கள் அளிக்கின்றன. புதிய பல இளம் எழுத்தாளர்களை இணைய இதழ்களின் வழியாகத்தான் அறிய முடிகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் எழுதுபவர்களையும் வாசிக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கின்றன. ‘வல்லினம்’ இதழ் வழியாக அப்படி அறிமுகமானவர் அரவிந் குமார். புதியவர்களின் கதைகளைக் கொண்டிருந்த இதழ் ஒன்றில் அவரது ‘அணைத்தல்’ என்ற சிறுகதை வெளியாகியிருந்தது.

இந்த முதல் தொகுப்பில் பத்து கதைகள் இடம் பெற்றுள்ளன.

இந்தக் கதைகளில் உள்ள மனிதர்கள் – சிறுவர்கள், பெண்கள், இளையோர், முதியவர்கள்- அனைவருமே நொந்துபோனவர்கள். அன்றாடப் பாடுகளின் சுமைகளால் கவலைகளால் மனம் சோர்ந்து சலித்துப்போனவர்கள். மகிழ்ச்சி, குதூகலம், கொண்டாட்டம் ஆகியவற்றை அறியாதவர்கள். அப்படியேதும் தருணங்களை அவர்கள் தம் வாழ்வில் சந்திக்க நேர்ந்ததில்லை. மற்றவர்களைப் போல தாமும் வாழவே ஆசைப்படுகிறார்கள். அந்த நோக்கத்துடன்தான் உழைக்கிறார்கள். கிடைத்த வேலைகளை செய்கிறார்கள். ஆனால், அவர்களால் வாழ முடிவதில்லை, பிழைத்துக் கிடைக்கத்தான் வாய்த்திருக்கிறது. எல்லா நேரத்திலும் துயரைச் சுமந்தபடி சலிப்புற்ற வாழ்வில் ஒரு சிறு ஆசுவாசத்தைத் தேடித் திரியும் பாவப்பட்டவர்கள்.

வெவ்வேறு மனிதர்களைப் பற்றிய தனித்தனிக் கதைகளாக அமைந்தபோதிலும் இந்தக் கதைகளை ஒட்டுமொத்தமாக யோசிக்கும்போது ஒரு வாழ்க்கையின் வெவ்வேறு பக்கங்களைக் காட்டுபவையாகவே உள்ளன. பிழைப்புக்காக மண்ணையும் உறவுகளையும் விட்டு அந்நிய நிலத்தில் காலூன்ற இயலாத பதற்றமும் துயரமும் சலிப்பும் இவர்கள் அனைவரையும் இணைக்கும் பொதுக்காரணிகளாக உள்ளன.

மறுநாள் எப்படி விடியப்போகிறது என்று எந்த உத்தரவாதமும் இல்லாத மனிதர்களுக்கு இடையிலான உறவுகளும் நிலைக்காது போவதில் எந்த வியப்பும் இல்லை. இருப்பதைவிட மேலான ஒன்று வாய்க்கும்போது அதை நாடிச் செல்வது இயல்பே. ஒப்புக் கொள்வதைத் தவிர வழியில்லை. இந்த மனிதர்களும் அவ்வாறே அதை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கும் வேறு உறவுகள் வாய்க்காமலில்லை.

அல்லலுற்ற வாழ்விலும் உறவுகள் அமைகின்றன. சக மனிதர்களுடனே ஒவ்வொரு நாளையும் கழிக்கவேண்டிய சூழல். திருமணம், குழந்தைகள், குடும்பச் சண்டை, மனக் கசப்பு, சிறு பூசல்கள், சமரசங்கள் என்று எல்லாமே உண்டு. வீட்டுக்கு வெளியிலும் போட்டி, பொறாமை, வெறுப்பு, அரவணைப்பு, ஏமாற்றம், அணுசரணை என பலவிதமான அனுபவங்கள். விதிக்கப்பட்ட வாழ்வின் கண்ணிகள் இவை. பட்டும் திருந்தியும் அழுதும் சலிப்புற்றும் வெறுத்தும் வேண்டாமலும் இவற்றைக் கடந்தே கரைசேர இயலும். இத்தனைக்கும் நடுவில் ஒருசில சந்தர்ப்பங்களும் ஒருசில மனிதர்களும் ஏற்படுத்தித் தரும் எளிய, சிறிய சந்தோசங்களும் ஆறுதல்களுமே நம்பிக்கை அளிப்பவையாக உள்ளன.

இந்தக் கதைகள் வெளிச்சக் கீற்றுகளே எட்டிப் பார்க்காத இருண்ட உலகத்தில் நிகழ்பவை. அந்த இருட்டு தரும் பயத்தையும் தடுமாற்றத்தையும் போக்கவென நிவாரணிகளாக அமைகின்றன சில நம்பிக்கைகள், ரோக்கியா தடவிக் கொள்ளும் தைலத்தைப்போல. கைவிடப்பட்டவர்களுக்கான ஆறுதலை அளிக்கின்றன அத்தகைய நம்பிக்கைகள். மாந்திரீக நடவடிக்கைகள், அமானுஷ்யமான நிகழ்வுகள் போன்றவை தற்காலிகமான தப்பித்தல்களை சாத்தியப்படுத்துகின்றன. அன்றாடத்தின் புற அழுத்தங்களால் நொந்து நொடிந்துபோன மனம் திசைதெரியாமல் தடுமாறி, சிதைவுற்று அலையும்போது தர்க்கங்களையும் பகுத்தறிவையும்கொண்டு அதனை சீர்படுத்த முடியாது. மனம் எதிர்பார்ப்பது விளக்கங்களை அல்ல, ஆறுதலை அல்லது திசைதிருப்பலை அல்லது போதமற்ற தூக்கத்தை. கடும் உழைப்பாளியான தாத்தாவுக்கு நிலத்தின் மீதிருந்த பற்று தன் மீது இல்லை என்கிறபோது பாட்டிக்கு வடிகாலாக அமைவது அடர்த்தியாக மஞ்சளைப் பூசிக்கொண்டு சாமியாடுவது. விலகலும் வெறுப்பும் கூடுந்தோறும் குளியலறைக் கல்லில் தேய்க்கும் மஞ்சளும் அடர்த்திகொள்கிறது.

செம்பனைக் குலைகளை வெட்ட வரும் அவாங்குக்கு சிண்டாய் பாடலின் மீதிருக்கும் ஈர்ப்பும் அது அவன் மனத்தில் உருவாக்கும் கற்பனைகளும் உள ஆழத்தின் வெளிப்பாடுகளே. தொடர்ந்து ஏற்படும் விபத்தும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் அந்த வெளிப்பாடுகளின் தொடர்ச்சியே. அவாங்கின் காதில் ஒலிக்கும் அந்தப் பாடல் கதையின் இறுதியில் கதைசொல்லியான அவன் மனைவிக்கும் கேட்கிறது. அவள் அவனை அணைத்தபடியே தன் வாயைப் பொத்திக்கொள்கிறாள். சிண்டாய் பாடலைப் பாடும் பெண் குரல் எனும் மன உணர்வு அவனிடமிருந்து இப்போது அவளிடம் தாவுகிறது.

பணி அழுத்தமும் காதலனைப் பிரிந்த மன அழுத்தமும் சேர்ந்து பெலிசியாவுக்குள் உருவாக்கும் எலித் தொல்லைக்கு நேரடியான நிவாரணமோ சிகிச்சையோ வாய்ப்பில்லை. மாந்திரீக வழியான தீர்வே உகந்ததாக இருக்கும் என்று தீர்மானிக்கிறாள். முள்ளை முள்ளால் எடுக்கும் யுக்தி.

முயற்சிகளில் தோல்விகளை எட்டியபோதும் தொடர்ந்து தன் கனவை உறுதியாகப் பற்றியிருக்கும் ஒருவனின் நடவடிக்கைகளை பிறரால் புரிந்துகொள்வது கடினம். அவனது உறுதி, உளப்பிறழ்வாகவே தென்படும். ஒரு வேளை உணவுக்காக அல்லது பணத்துக்காக அவனிடும் வேடமோ என்ற சந்தேகத்தையும் விதைப்பது இயல்புதான். ஆனால், அவ்வாறில்லை என்று அறிய நேரும்போது அவனை புரிந்து கொள்ள முடியாதவர்களின் மனநிலையையே சந்தேகிக்கத் தோன்றுகிறது.    

அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அனுபவமும் நமக்கு சில பாடங்களைத் தருவதுண்டு. அப்போது நமக்குள் சில தீர்மானங்களும் உருவாகும். ஆனால், அப்படியொரு சந்தர்ப்பத்தை நாம் நேரில் சந்திக்கும்போது நாம் என்ன செய்கிறோம் என்பதை அந்தக் குறிப்பிட்ட தருணமே முடிவு செய்யும். அதில் சரி தவறுகளுக்கு பெரிய அளவில் இடமில்லை. அப்பாவின் பேராசைக்காக கடன் வாங்கித் திருப்பித் தர முடியாமல் மிரட்டலுக்கு உள்ளாகி மந்திரவாதியின் சாபத்துக்கு பயந்து ஓடி ஒளியும் ‘அணைத்தல்’ கதையின் இறுதியில் கிழவியின் நிலையைக் கண்டபின் ஏற்படும் சிறு தடுமாற்றம்தான் யதார்த்த வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நகர்த்திச் செல்கிறது. சரி, தவறுகள் இடம் மாறும் இத்தகைய தருணங்கள் பல கதைகளிலும் உள்ளன.

உழைக்கும் மனிதர்களின் அன்றாடத்தின் துயரைச் சொல்லும் இந்தக் கதைகள் உள்ளபடியே சலிப்பான ஒரு விலகலை உருவாக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளன. ஆனால், அரவிந்தின் கதைகளை அந்த சாத்தியத்திலிருந்து விடுவிக்கக் கூடியவர்களாக அமைந்திருப்பவர்கள் அக் கதைகளில் உலவும் சிறுவர்கள். சிறுவர்களும் அவர்களின் உலகமும் உலகியல் சார்ந்த அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவை. எனவே, எளிமையான அவர்களின் அணுகுமுறை சந்தர்ப்பங்களின் அழுத்தங்களை லேசாக்கிவிடுகிறது.

சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமான இரு வேறு அனுபவ உலகங்களையும் இணைத்து உருவாக்கும்போது ‘கேளாத ஒலி’ போன்ற ஒரு புனைகதை சாத்தியமாகிறது. அது முற்றிலும் நேரடியான அனுபவ உலகைச் சார்ந்திருக்கும் அதே நேரத்தில் அனுபவத்துக்கு அப்பாலான ஒரு மெய்நிகர் வெளியையும் சார்ந்திருக்கிறது. மனித மூளையின் ஆற்றலை நிகர் செய்யும் அறிவியல் முயற்சிகளின்போது அடைய நேரும் வியப்பைவிட சந்திக்க நேரும் திகைப்பும் அச்சமுமே கூடுதலாக உள்ளது என்பதைச் சுட்டுகிறது இந்தக் கதை.

நவீன மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் காரணமாக ஆயுட்காலம் கூடியிருக்கிறது. மூத்தோர்களின் மக்கள்தொகையும் அதிகரித்திருக்கிறது. அவர்களின் பராமரிப்புக்கான இல்லங்கள் இன்று புதிய வணிக வாய்ப்புகளாக மாறியுள்ளன. பிள்ளைகள் இருந்தும் தள்ளாத வயதில் தனிமையில் விடப்பட்டிருக்கும் மூத்தோர்களின் மனநிலையை கூர்ந்து அணுகவேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறையினருக்கு உள்ளது. பெரிதும் அமைதியில் ஆழ்ந்து தமக்கான உலகில் உலவிக்கொண்டிருக்கும் அவர்களின் மனநிலையை குலைக்கவும் தடுமாறச் செய்யவும் புறஉலகின் சிறு சந்தர்ப்பமோ, சொல்லோகூட போதும். அதன் பின் அவர்களை மீட்பது கடினம். மரணம் மட்டுமே அதிலிருந்து தீர்வாகி முடியும்.

0

மனிதர்களையும் இந்த வாழ்வையும் ஒரு புனைவாசிரியர் கூர்ந்து அணுகுகிறார் என்பதைப் பொறுத்தே அவரைப் பற்றிய மதிப்பீடுகள் அமையும். சுய அனுபவம் சார்ந்து மட்டுமே எழுதுவதற்கு ஒரு எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் அவரால் திடமாகவும் நம்பகத்தன்மையுடனும் அனைத்தையும் துல்லியமாக சித்தரித்துவிட முடியும். ஆனால், வசதியான அந்த எல்லையைத் தாண்டி தனது சுய அனுபவத்துக்கு புறத்தில் உள்ள வாழ்வையும் மனிதர்களையும் அணுக முற்படும்போதுதான் அவரது புனைவுத்திறனுக்கான சவால்களை அறிய முடியும். கற்பனையின் துணைகொண்டு மட்டுமே அவற்றை சந்திக்க முடியும்.

இக் கதைகளில் வெளிப்படுபவை அரவிந்தின் சுய அனுபவ உலகம் அல்ல. வெவ்வேறு மனிதர்களின் சித்திரங்களை அவர் கண்டும் கேட்டும் தனது புனைவின் வழியாக உருவாக்கிக் காட்டியிருக்கிறார். அவர்களை நேரடியாக நம்மால் சந்திக்க முடிகிறது. அவர்களைக் கேட்க முடிகிறது. அவர்களின் பாடுகளையும் துயரங்களையும் உணர வாய்க்கிறது. வெறும் கோட்டுச் சித்திரங்களாக அல்லாமல் அவை ஒவ்வொன்றும் உயிர்ப்புடன் அசைந்து நடமாடுகின்றன. முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள், பாவப்பட்டவர்கள் என்று ஒவ்வொரு தரப்பினருக்குமான உணர்வுநிலைகளை அவரால் துல்லியமாக உணர்த்த முடிகிறது. ஒரு புனைவாசிரியனாக அவர் தேர்ந்தெடுக்கும் புலங்களும் மனிதர்களும் அவரது நோக்கையும் திறனையும் உறுதிப்படுத்துவனவாக உள்ளன.

கதைகளை எப்போதும் முழுமையாக சொல்லவிடவேண்டிய அவசியம் இல்லை என்பதை அறிந்திருக்கிறார் அரவிந். முடிந்த பின்னும் தன்னுள் விடுவிக்கப்படாத ஒரு முடிச்சைக் கொண்டிருக்கும் கதைகள் வாசகனுக்குள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கும். அடித்தூர், சிண்டாய், எலி, தைலம், கேளாத ஒலி போன்ற கதைகளில் இத்தன்மையைக் காண முடிகிறது.

ஐந்து ஆண்டுகளில் பத்து கதைகள் என்று அவரது முன்னுரையில் காண முடிந்தது. கதைகள் உருவாகி வருவதற்கு காத்திருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். எதை கதையாகச் சொல்லவேண்டும் என்று தீர்மானிக்கவும் கதையை அழுத்தமாக வெளிப்படுத்தவும் இந்தக் காத்திருப்பு நிச்சயம் உதவும்.  ஆனால், தொடர்ந்து நிறைய எழுதுவது தனக்கான கதைமொழியை கண்டுபிடிக்க உதவும். எழுதுவது அனைத்தையும் வெளியிட, பதிப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கதைக்காக அவர் தேர்ந்தெடுக்கும் களங்களும் தருணங்களும் அழுத்தமாகவும் நம்பிக்கையளிப்பவையாகவும் அமைந்துள்ளன என்பதை இத்தொகுப்பிலுள்ள கதைகள் உறுதிப்படுத்துகின்றன. அரவிந் நிறைவான நல்ல கதைகளை எழுத வாய்ப்பிருக்கிறது.

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...