Tuesday, 25 May 2021

கருப்பு வெள்ளை ஆல்பம் - பாவண்ணனின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள்




கடந்த ஆண்டு நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின்போது எழுதப்பட்ட கதைகள் இவை. அவ்வப்போது இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாயின. காலம் நம் முன்னால் பெரும் திகைப்பையோ அதிர்ச்சியையோ அளித்து நிற்கும்போது இயல்பாகவே மனம் கடந்த காலத்தை நோக்கிச் செல்லும். இளமைக்கால நினைவுகளின் வழியாக நிகழ்காலத்தின் வெறுமையை சலிப்பை ஏமாற்றத்தை ஈடுகட்டவோ அல்லது அவற்றிலிருந்து தப்பிக்கவோ முயல்வதுண்டு. பாவண்ணன் அவ்வாறு தன் இளமைக்கால நினைவுகளுக்குள் சென்றதன் பலனாக இக்கதைகள் உருவாகியுள்ளன.

கதைகள் அனைத்துமே சமகாலத்துக்கு முற்பட்ட காலத்தில் நடப்பவை. ஒருவிதத்தில் நமது பால்யத்தை நினைவுபடுத்துபவை. சிறுவர் பருவத்தின் நினைவுகளின் வழியாக அந்த உலகத்தைத் திரும்பிப் பார்க்கும்போது இன்றைய நம் வாழ்வு எத்தனை பொருண்மையற்றதாக பொருளற்றதாக சலிப்பானதாக அமைந்து போயுள்ளது என்பதை முகத்தில் அறைவதுபோல இக்கதைகள் உணர்த்துகின்றன. வாழ்வின் ஒவ்வொரு கணமும் புத்துணர்வுடன் புதிய அனுபவங்களுடன் திறந்து நின்றிருந்த காலங்கள் அவை. அன்றும் வாழ்வின் பாடுகளும் துயரங்களும் புரியாத சிக்கல்களும் நம்மைச் சுற்றி இருந்தனதான். ஆனால், அவற்றைப் பொருட்படுத்தாத ஒரு களங்கமின்மையுடன் அனைத்தையுமே மிக எளிதாக அணுகும் பால்ய குணத்துடன் இருக்க நேர்ந்த அதிர்ஷ்டத்தையே இக்கதைகள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. வசதிகளற்ற சூழலில் கிடைப்பதைக் கொண்டு பசியாறி இருப்பதைக்கொண்டு திருப்தியுற்ற அந்த நாட்களைக் குறித்து இன்றும்கூட நமக்கு பெரிய புகார்கள் இல்லை. ஏனெனில், நம்மைச் சுற்றிய உலகமும் மனிதர்களும்கூட அப்படித்தான் இருந்தார்கள்.

கிராமத்துக்கு ஆர்மோனியத்துடன் வரும் ஒரு பாடகருடனான சிறுவர்களின் அனுபவங்களும் எதன்பொருட்டும் தன் கொள்கையை மாற்றிக்கொள்ளாத அவரது குணமும் ‘தனிவழி’யின் சிறப்பு. இதில் அந்தத் தனிவழி குறித்த தெளிவோ புரிதலோ அவருடன் விளையாடிய சிறுவர்களுக்கு அன்று இருந்திருக்காது. ஆனால், இப்போது அதைத் திரும்பிப் பார்க்கும்போது எதனால் அவரது வழி தனிவழியாக அமைந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும். அப்படியொரு தெளிவும் புரிதலும் தனிவழியும் இப்போது அமையக்கூடுமென்றால் வாழ்க்கையை இத்தனை சிக்கலாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஜவுளிக்கடை வாசலில் முயல், யானை போன்ற உருவங்களில் நின்று வேடிக்கை காட்டி குழந்தைகளைக் கவரும் நபர்களைக் குறித்து யாரும் கவனிப்பதுகூட கிடையாது. அது ஒரு வியாபாரத் தந்திரம் என்ற எண்ணமே பெரும்பாலும். ஒரு நாள் முழுக்க வாசலிலேயே நின்றபடி புழுங்கித் தவிக்கும் அவர்களது நிலையைக் குறித்து கவலைப்படவோ யோசித்துப்பார்க்கவோ நேரமில்லாத அவசர உலகம். அண்மையில் நாகர்கோவிலில் விளம்பரப் பலகைகளை முதுகில் மாட்டிக்கொண்டு இளைஞர்கள் உலவியக் காட்சியைப் பார்க்க நேர்ந்தது. வேலையின்மையும் பொருளாதாரத் தேவையும் இப்படியொரு நிலைக்குத் தள்ளுகிறது. அவ்வாறான ஒரு இளைஞனின் மனத்தில் எழும் காதலையும் அதன் தவிப்பை, அழகை தொட்டுக் காட்டுகிறது ‘சங்கராபரணி’. அதே கடையின் வாசலில் ஒன்றரை வருடமாக அவன் நிற்கிறான், ஆனால் அவள் அவனைப் பார்த்ததேயில்லை. ஏனெனில் அவர்கள் வேடிக்கை காட்டும் முயல், யானை, கரடி அவ்வளவுதான். நாமும்கூட நமது பக்கத்து வீட்டுக்காரர்களை இப்படித்தான் பலசமயம் முகம் தெரியாத அளவு ‘நெருக்க’த்துடன் அணுகுகிறோம்.

வாழ்வில் நாம் சாதாரணமாக கடந்து செல்ல நேரும் அசாதாரணமான மனிதர்களின் கதைகள் இவை என்பதே இவற்றின் சிறப்பு. பூங்காக்களில் புகைப்படம் எடுப்பவர், கிராம வைத்தியர், சர்க்கஸ்காரர்கள், ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர், இடம் வீடு தொடர்பான தரகர்கள், நெய் காய்ச்சி தரும் தயிர்க்காரம்மா, சாவு வீட்டில் கிளாரிநெட் வாசிப்பவர்கள், சமையல்காரர், வீட்டு நோயாளிகளைப் பராமரிக்கும் செவிலிகள், நாடகக் கலைஞர் என பல்வேறு விதமான மனிதர்களை இந்த வாழ்வில் நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ கடந்து செல்ல நேர்கிறது. அவர்களின் பின்னுள்ள நெருக்கடிகளை சிக்கல்களைக் குறித்து நமக்கு எதுவுமே தெரியாத சூழலில்தான் நாமும் சிக்குண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கைப்பாட்டுக்கு படாத பாடு படவேண்டியுள்ளது. போராடித்தான் வாழ வேண்டிய நிலை. ஆனால், இவர்கள் அனைவரும் தாமிருக்கும் சூழலில் உள்ளவர்களை மிகுந்த அணுசரணையோடு கருணையோடு அன்போடு அணுகுகிறார்கள். தம்மால் இயன்றவரை அவர்களின் துயரை, வலியை, ஏக்கத்தை பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறார்கள். நெருக்கடியான அவர்களது வாழ்நிலை பிற மனிதர்களைக் குறித்த மேலான புரிதலை சாத்தியப்படுத்துகிறது.

இந்தக் கதைகளில் ஒன்றான ‘உத்தமன் கோவில்’ அபாரமான ஒரு தருணத்தைக் கொண்டிருக்கிறது. கதையின் மையக் கதாபாத்திரமான ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் பாண்டிச்சேரி கடலில் பாரதியுடன் நீந்திய நாட்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். நீந்திக் களித்த பின் கரையில் நின்று பாடலைப் பாடியதையும் சொல்கிறார். இந்தச் சம்பவம் புனைவாகக்கூட இருக்கலாம். ஏனெனில் இது வாய்மொழிக் கூற்றாகவே கதையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், பாரதி கடலில் நீந்துவது, ஈரம்சொட்ட கரையில் நின்று பாடுவது என்ற கற்பனையின் உச்சம் வியக்கச் செய்தது.

பாவண்ணனின் கதைசொல்லும் பாணி நேரடியானது. புதிர் வழிகளற்றது. இயல்பான உரையாடல்களையும் மனித உணர்வுகளையும் வெளிப்படுத்துவது. இத் தொகுப்புகளிலுள்ள சில கதைகள் தேவைக்கதிகமான நீளத்தைக் கொண்டுள்ளன. சொல்ல வந்த கதையின் சூழலுக்கு தேவை என்பதால் தெரிந்தேதான் அத்தகைய தகவல்களை கதைகளில் அடுக்கியிருக்கிறார்.

பாரம்பரியம் மிக்க ஒரு பழைய வீட்டின் பூட்டிய அறையிலிருந்து எடுக்கப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு ஆல்பத்தின் அபூர்வமான படங்களே இக்கதைகள். காலவோட்டத்தில் நாம் தொலைத்துவிட்டு பல்வேறு வாழ்வியல் கூறுகளை இப்படங்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றன. இன்று காணாமல்போய்விட்ட அல்லது மங்கிப்போன வண்ணங்களைக் குறித்து யோசிக்கச் செய்கிறது இந்த கருப்பு வெள்ளை ஆல்பம்.

எதிர்மறையான மனநிலையுடன் வெறுப்பையும் பகையையும் வளர்த்தெடுக்கும் வாய்ப்புகளே இன்றைய சூழலில் மிகுந்திருக்கிறது. அதற்கு மாறாக சக மனிதனை முடிந்தவரை அக்கறையுடனும் சகோதரத்துவத்துடனும் அணுக வேண்டிய அவசியம் உள்ளது. இந்தக் கதைகள் அந்த எண்ணத்தையும் நோக்கத்தையுமே வலியுறுத்துகின்றன. கருமை மட்டுமே நிறைந்துள்ள பதாகையில் ஒரு சிறிய வெண்புள்ளி பிரகாசமாகத் தெரிவதுபோல இந்த கதைகளில் உள்ள மனிதர்கள் அனைவருமே வெண்மையாக, களங்கமற்றவர்களாக, அன்புமிக்கவர்களாக இருப்பதும் அக இருள் நிறைந்த இன்றைய சூழலில் சற்றே உறுத்துவதாகத்தான் இருக்கும். உறுத்தவேண்டும் என்பதுதான் முக்கியம். அந்த உறுத்தல்தான் சிறிய அந்த புள்ளியை பெரிதாக்கி கருமையை சிறு புள்ளியாக்கும் காரியத்துக்கான தொடக்கமாக அமையும்.

இக்கதைகள் அனைத்தையும் ‘ஆனந்த நிலையம்’, ‘கனவு மலர்ந்தது’ என இரண்டு தொகுப்புகளாக சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

0 

Saturday, 1 May 2021

எளியவர்களின் அன்றாடங்கள் - ஜான் சுந்தரின் ‘பறப்பன, திரிவன, சிரிப்பன’

 


ஜான் சுந்தரின் ‘நகலிசைக் கலைஞன்’ தொகுப்பு வெளியாகி சில மாதங்கள் கழித்தே வாசிக்க நேர்ந்தது. பிரமாதமான ஒரு நாவலுக்கான தனித்துவமான கதாபாத்திரங்களையும் புனைவுத் தருணங்களையும் கொண்டிருந்தது அந்தக் கட்டுரைத் தொகுப்பு. இசைக் கலைஞர்களின் உல்லாசமும் கொண்டாட்டமுமான குணாம்சங்களை துள்ளலும் துடிப்புமாக சொல்லிய ஜான் சுந்தரின் மொழி அதே வலிமையுடன் அவர்களது வாழ்க்கையின் துயர நாட்களையும் ஆதுரத்துடன் சித்தரித்திருந்தது.

இது ஜான் சுந்தரின் எட்டு சிறுகதைகளைக் கொண்டது இத் தொகுப்பு. இவற்றில் பல கதைகளை வெளியான சந்தர்ப்பங்களிலேயே வாசித்திருக்கிறேன். கொங்கு பிரதேசத்துக்கேயுரிய தனித்துவமான, வக்கணையான மொழியும் சற்றே குசும்புடன் அவற்றை சித்தரிக்கும் சொல்முறையும் இக்கதைகளை வேறுபடுத்திக் காட்டிய அம்சங்கள். இப்போது தொகுப்பாக வாசிக்கும்போது இக் கதைகளின் வேறு சில தன்மைகளை கவனிக்க முடிந்தது.

இவை வாசித்துப் பழகிய, ஏற்கெனவே அறிந்த தளங்களில் எழுதப்பட்ட கதைகள் அல்ல.

சிறுவர் பிராயத்துக் கதைகள் என இவற்றைக் குறிப்பிடலாம். ஒவ்வொருவருக்குள்ளும் சற்றும் வண்ணமிழக்காத சிறார் பருவத்தின் வெவ்வேறு காட்சிகளை இக் கதைகள் மீட்டுத் தருகின்றன. குதூகலமும் கொண்டாட்டமுமான தூய அந்த நாட்களின் பரவசத்தை கூடுதல் குறைவின்றி சொல்லிச் செல்கின்றன. கொங்கு பிரதேசத்துக்கேயுரிய மொழியில் அந்தப் பருவத்தின் விளையாட்டுகள், ‘செல்ல’ப் பெயர்கள், சிறுதீனிகள் என எல்லாவற்றையும் நினைக்கச் செய்கின்றன.

‘செல்ல’ப் பிராணிகளின் கதைகள் என்றும் இவற்றைச் சொல்லலாம். சிறுவர் பருவத்தையும் செல்லப் பிராணிகளையும் பிரிக்க முடியாது. கிளிகள், நாய்கள், பூனைகள், காக்கைகள், அணில்கள், ஆட்டுக்குட்டியோடு பாம்பும் கூட கதைகளுக்கு நடுவே ஓடித் திரிகின்றன.  வீட்டில் திரியும் வளர்ப்புப் பிராணிகளுடனான பிணைப்பை நேர்த்தியாக வார்த்துள்ளன இக்கதைகள்.

சிறுவர் பிராயத்துக் கதைகள் அல்லது செல்லப் பிராணிகளின் கதைகள் என்று இவற்றை வகுத்துக்கொண்டாலும் இவை எளியவர்களின் மிக எளிய வாழ்க்கையையே சித்தரித்துள்ளன என்பதே இவற்றின் சிறப்பு. ஒண்டுக் குடித்தனங்கள், புறம்போக்கு நிலத்தில் அமைந்த குடிசைகள், மில் தொழிலாளர்களின் குடியிருப்புகள் என இக்கதைகள் நிகழும் களங்கள் அன்றாடம் கடந்து செல்பவை. உத்தரவாதம் அற்றவை. ஆனால் இங்குள்ள மனிதர்களுக்கு நடுவேதான் ஆடுகளும் பூனைகளும் நாய்களும் கோழிகளும்கூட உயிர் வாழ்கின்றன. அன்றாடத்தின் நிச்சயமின்மைக்கு நடுவே சின்னச் சின்ன சந்தோஷங்களை இச் சிறு உயிர்களே தருகின்றன. மழையோ வேறு இயற்கைச் சீற்றமோ தாக்கும்போது அவர்களுடன் சேர்ந்து இந்த உயிர்களும் அல்லலுறுகின்றன.

எளியவர்களது வாழ்வின் நிச்சயமற்ற அன்றாடங்களை, பாடுகளை, சிக்கல்களை, துயரம் பிழிய இடைவெளியின்றி கோர்க்கப்பட்ட வாதைகூடிய சொற்களைக் கொண்டுதான் அழுத்தமாகச் சொல்லமுடியும் என்பதில்லை.   கிளிகளும் பூனைகளும் நாய்களும் ஓடியாடி திரிந்திருக்கும் சிறுவர்களின் உலகத்துக்குள் அவர்களுக்கான கோணத்தில் சொல்லும்போது இன்னும் கனம் கூடுகிறது. ‘அந்தோணி’யின் மீதான தெரஸாவின் தாயன்பையும், ‘கிக்கி’ வளர்க்கும் மலரக்காவின் துரோகத்தையும், மில்களில் பாம்பு பிடிக்கும் சசியின் காருண்யத்தையும் வெகு சுலபமாக இக் கதைகளின் பின்னணிகளே உணர்த்துகின்றன.

‘நகலிசைக் கலைஞர்கள்’ தொகுப்பில் கண்ட பல்வேறு கலைஞர்களைப் போலவே இத்தொகுப்பிலும் சாமி, ராணி, ஸ்ரீஜா, பிரிட்டோ சார் போன்ற அபூர்வமான குணச்சித்திரங்களைப் பார்க்க முடிகிறது. இவர்களே நம் அன்றாடத்தின் அரிதார சலிப்பைத் துடைப்பவர்கள்.

இத்தொகுப்பின் இன்னொரு சுவாரஸ்யம், வாசிப்பினிடையே கேட்கக் கிடைக்கும் ‘ஓசை’கள். ஜான் சுந்தர் இசைக் கலைஞர் என்பதால் அன்றாடத்தின் ஓசைகளை தவறவிடாமல் வாக்கியங்களுக்கிடையே கோர்த்துவிடுகிறார். ‘அபூம்சகா’, ‘டிக்கினி டிக்கினி’ என அந்த ஓசைகளுடன் படிக்கும்போது கதையும் அந்த கதாபாத்திரமும் இன்னும் நெருக்கமாகிவிடுகிற்து. அதேபோல, ஜோக்குட்டி, ரேக்குட்டி, கிக்கி, டிப்பி, டிக்கா என்று கதாபாத்திரங்களுக்கு அவர் சூட்டும் பெயர்கள் விசேஷமானவை.

சுவையாகவும் நேர்த்தியாகவும் சொல்லியுள்ள இக்கதைகளில் சில ( பேசாமடந்தை, பித்தளை நாகம்) திருத்தமாக முடிவுகளை எட்டவில்லை. லைன்வீட்டு சந்தில் ஒரு பியானோ எனும் ஒற்றை வரியில் ஆச்சரியத்தை தரும் ‘கின்னரப்பெட்டி’யும் ‘அணில்களுக்கு மட்டுமல்ல காக்கைகளுக்கும் பசிக்கும்’ என்ற மனவெழுச்சியுடன் அமைந்த ‘பறப்பன, திரிவன, சிரிப்பன’வும் அவ்வாறான உச்சத்தை எட்டியுள்ளன.

‘பறப்பன, திரிவன, சிரிப்பன’ என மிகப் பொருத்தமாக பெயர் சூட்டப்பட்டிருக்கும் இத்தொகுப்பு எளிய உயிர்களின் இருப்பினால் மேன்மையுற்றிருக்கும் எளியவர்களின் அன்றாடங்களை சிறார் பருவத்துக்கேயுரிய களங்கமற்ற பார்வையில் நேர்த்தியாகத் தந்திருக்கிறது.

0

பறப்பன, திரிவன, சிரிப்பன ( சிறுகதைகள்)ஜான் சுந்தர்

காலச்சுவடு பதிப்பகம்

Saturday, 24 April 2021

நிழற்காடு – விஜயராவணன்


 

சிறுகதைகளை எழுத முயலும் ஒருவர் தனது பால்யகால அனுபவங்களை எழுத முனைவதே இயல்பு. எழுதத் துவங்கும்போது எழும் பதற்றங்களையும் சந்தேகங்களையும் நம்பிக்கைக் குலைவையும் சமன்படுத்த அது உதவும். சிறார் பருவம் அவரவர்க்கான தனித்த ரகசியங்களையும் கொண்டாட்டங்களையும் பல சமயங்களில் துயரங்களையும்கூட கொண்டிருக்கும். அவ்வாறான மன உலகிலிருந்து வெளிப்படும் எழுத்தில் உணரநேர்கிற களங்கமின்மை அந்தக் கதைகளுக்கு விசேஷமான ஒளியைத் தருகிறது. வியப்பும் சாகசமும் கற்பனையுமாய் கலந்த அந்த உலகம் எளிமையானதும் அழகானதும்கூட. அந்தப் பருவத்தின் நிறங்களையும் வாசனைகளையும் துல்லியமாகவும் சீராகவும் சொல்வது எளிது.

இங்கிருந்து அடுத்த நிலைக்கு நகரும்போது குடும்பம், உறவு சார்ந்த நுட்பமான இழைகளையும் மர்மங்களையும் துலக்கிப் பார்க்க முனையலாம். எந்த அளவுக்கு எதைச் சொல்லலாம் என்ற தெளிவு கூடியிருக்கும். கணிசமான வாசிப்பும் எழுத்துப் பழக்கமும் சேருமென்றால் புனைவு சார்ந்த தெளிவையும் தேர்வையும் இந்த நிலையில் அடைந்துவிட வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே தன் முன்னால் உள்ள புனைவின் வடிவங்களையும் மொழியமைப்பையும் கடந்து புதிதாக எதையேனும் முயலவேண்டும் என்ற சாகச உணர்வு இதன் அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும். புதிய கதைப்புலத்தில் வேறு விதமான உணர்வு நிலைகளைச் சொல்ல முனையக்கூடும். இந்த முயற்சியில் நிச்சயமாக சாதிக்க முடியும் என்பது உறுதியில்லை என்றாலும் அந்த அடியை நோக்கி எட்டுவைக்கும் திறன் கைகூடியிருக்கும் என்பதுதான் இதன் அனுகூலம்.

விஜயராவணனின் ‘நிழற்காடு’ தொகுப்பிலுள்ள கதைகள், அவர் இந்த படிநிலைகளைக் கடந்து வந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்துவனவாய் உள்ளன. அதே சமயத்தில் ஒரே கதையில் இந்த மூன்று படிநிலைகளும் ஒன்று கலந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

‘மொட்டை மாடி’, ‘காகிதக் கப்பல்’, ‘அநாமதேய சயனம்’ ஆகிய மூன்றும் சிறார் பருவத்தின் அனுபவங்களைக் கொண்டவை. ‘மொட்டை மாடி’ தனக்கு சம்பந்தமில்லாத காரணங்களுக்காக தலைமுடியை இழக்கும் சிறுவனின் கதை. வேறு அடுக்குகள் எவையும் இல்லாத நேரடியான, சற்றே புகார்த்தன்மையும் நகைப்பும் கொண்டது. ‘அநாமதேய சயனம்’ தூங்கிக் கொண்டே இருக்க விரும்பும் சிறுவனில் தொடங்கி, தூக்கத்தின் மீதான அத்தகைய ஈடுபாடு அவன் வளருந்தோறும் பெருகி, கட்டாயமாக மறுக்கப்படும் நிலையில் சிதைவுறும் நிலையை எட்டுகிறது. சிறுவர் பருவத்தில் சாத்தியமாகும் எளிய விருப்பம், வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளில் பொறுப்புகளும் சுமைகளும் கூடுந்தோறும் அரிதான ஒன்றாக கைவிட்டுப்போகிறது. மனநிலையிலும் வாழ்நிலையிலும் உருவாகும் மாற்றத்தை ஒன்றிணைக்கும்போது இந்தக் கதை கூடுதல் ஆழத்தை அடைகிறது. ‘காகிதக் கப்பல்’ என்ற தலைப்பே அனைவரையும் சிறுவர் பருவத்துக்கு சட்டென்று இழுத்துச் சென்றுவிடுகிறது. இந்த உடனடி கவன ஈர்ப்பின் விசையில் கதைக்குள் நுழையும்போது நமக்குக் காத்திருப்பது வேறொரு உலகம். கல்கத்தாவில் சின்னஞ்சிறிய உணவகத்தில் வேலை பார்க்கும் ஒரு சிறுவனையும் அவனது கப்பல் கனவையும் அந்த உலகம் காட்டுகிறது. கப்பலைப் பார்க்கவேண்டும் என்ற அவனது கனவை துல்லியமாகச் சொல்லிச் செல்லும் அதே நேரத்தில் சிதைவுற்ற அவனது வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளையும் திறந்து காட்டுகிறது. பால்ய காலத்து காட்சிகளிலிருந்து, எளிய சந்தோஷங்களிலிருந்து நகரும் கதை அடுத்தடுத்து துயரங்களையும் சோதனைகளையும் காட்டும்போதுகூட சிறுவனின் எளிய களங்கமற்ற மனம் அவற்றின் அழுத்தத்தை ஒற்றியெடுத்து கப்பலைக் காணும் அவனது கனவை மட்டுமே துலக்கிக் காட்டும்விதமாக  சொல்லப்பட்டிருப்பதே இந்தக் கதையின் சிறப்பு.

‘சிட்டுக்குருவி’, ‘முகங்கள்’ ஆகிய இரண்டு கதைகளும் குடும்பம், உறவுகள் சார்ந்தவை. இயற்கைக்கும் பிற உயிர்களுக்கும் மனிதனுக்குமிடையேயான பிணைப்பை சொல்லத்தகுந்த கதைகள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் உள்ளன. எதை நாம் இழந்துகொண்டிருக்கிறோமோ அதைக் குறித்து அதிகமும் பேசத்தான் வேண்டும் என்பதுபோல இத்தகைய புனைவுகள் எழுதப்படுகின்றன. சிட்டுக்குருவியின் கூட்டுக்காகவும், குஞ்சுகளுக்காகவும் பரிதவிக்கும் அதே பெற்ற மனம்தான் ‘முகங்கள்’ கதையிலும் இழந்த மகனுக்காகத் தவித்துக் கிடக்கிறது.

சொல்முறையில் புதிதாக எதையேனும் முயலவேண்டும் என்பதன் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளவை ‘சவப்பெட்டி’, ‘நிழற்காடு’ ஆகிய கதைகள். ‘நிழற்காடு’ தொன்மங்கள், கிராமங்களுக்கேயுரிய நம்பிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியுடன் அசாதாரண நிகழ்வுகளைக் கொண்டுள்ளதால் ஒரு புனைகதையாக இது அனுபவமாகிறது. அதே சமயத்தில், நிகழ்கால மோதல்களை லேசான அரசியல் பார்வையுடன் சொல்ல முனைந்துள்ள ‘சவப்பெட்டி’ தன்னளவில் புனைவாக உருமாறுவதில் தடுமாற்றங்கள் உள்ளன.

இந்தத் தொகுப்பில் விஜயராவணனை தனித்துவத்துடன் அடையாளப்படுத்தும் கதைகளாக இரண்டு கதைகளைச் சொல்லலாம். ஒன்று, ‘உதைக்கப்படாத கால்பந்து’. உள்நாட்டுக் கலகமும் உத்தரவாதமற்ற அன்றாடமுமான ஒரு ஆப்பிரிக்க நாட்டில், வேலை நிமித்தமாகச் செல்லும் ஒருவனின் அனுபவம் இந்தக் கதை. அந்த நாட்டின் இளைஞர்களும் சிறுவர்களும் அதிகமும் நேசிப்பது கால்பந்து. அழுக்கான கால்பந்தோடு அன்றாடமும் சந்திக்க நேரும் சிறுவனுக்கு புதிய கால்பந்துகளை வாங்கித் தரும் கதைசொல்லி, அவன் நினைத்தாற்போல கால்பந்தாடும் சிறுவனல்ல என்பதை உணர்வதோடு கதை முடிகிறது. இந்தக் கதையிலும் அரசியல், சமகால நிகழ்வுகள், தனிமனித அவலம் என பல்வேறு இழைகளும் உள்ளடங்கியுள்ளன. ஆனால், இவற்றினூடே கால்பந்தை நேசிக்கும் சிறுவனைக் குறித்த சித்திரமும் அவனை அதிலிருந்து விலக்கும் சூழலும் தெளிவாக மேலெழுந்துள்ளன.

இரண்டாவது கதை, ‘பேசும் தேநீர் கோப்பைகள்’. ஒரு நீள்கவிதையென அழகான படிமங்களும் எளிமையான உரையாடல்களும் அமைந்த சிறுகதை. அடிக்கடி நிறம் மாறும் ஜப்பானின் பியூஜி எரிமலையை வண்ணங்கள் கொண்டு வரைய முயலும் பார்வைத் திறனிழந்த ஓவியர் ஹாருட்டோவும், அவரது தேநீர் கோப்பைகளும், விருந்தினரின் கையிலிருக்கும் பூனையுமாக அபாரமான அனுபவத்தைத் தரும் கதை. கலைஞனின் மனம் கொள்ளும் பித்து, கண்டடையும் நொடியில் அடையும் பரவசம், மேலும் மேலும் என விழையும் துடிப்பு, அனைத்துக்கும் அப்பால் கவியும் மௌனம் என கதை நெடுகிலும் அழகிய தருணங்கள். ஒரு மொழிபெயர்ப்புக்குக் கதை என யோசிக்கச் செய்யுமளவு மிகுந்த கவனத்துடனும் துல்லியத்துடனும் எழுதப்பட்டுள்ளது.

திருகலான மொழியில் சிக்கலான வாக்கிய அமைப்பைக்கொண்டுதான் புதுவகைக் கதைகளை எழுத முடியும் என்ற மனப்போக்கு தேவையற்றது என்பதை வழிமொழிகிறது விஜயராவணனின் இத் தொகுப்பு.

0

சால்ட் வெளியீடு – டிசம்பர் 2020

இசூமியின் நறுமணம் – ரா.செந்தில்குமார்


 

ஜெயமோகனின் தளத்தில் வெளியான ‘மடத்து வீடு’ சிறுகதையே ரா.செந்தில்குமாரை அறிமுகப்படுத்தியது. அந்தக் கதையில் சித்தரிக்கப்பட்டிருந்த சூழலும், மடத்து வீட்டுப் பெண்களின் குணாம்சங்களை விவரித்திருந்த விதமும், உடல் முடங்கிப் போன நிலையிலும் சுடரணையாத காமத்தின் உந்துதலை தவிர்க்க நினையாத அப்பாவின் கதாபாத்திரமும் நல்லதொரு சிறுகதையென அந்தக் கதையை நினைவில் நிற்கச் செய்திருந்தன.

சில வருடங்களுக்குப் பிறகு ‘இசூமியின் நறுமணம்’ வெளியானது. கேளிக்கையான மனநிலையில் காமத்தை ஒரு கொண்டாட்டமாய் வெளிப்படுத்தும் மிதப்பான சூழலில் நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் ஒரு பெண்ணிடம் உணர்ந்த வாசனையை காமத்தைத் தாண்டிய ஒரு அபாரமான அனுபவமாய் முன்வைக்கிற மிக நுட்பமான, ஆழமான சிறுகதை. பெண்களை போகத்துக்குரிய எதிர் பாலினமாக அணுகும் உயிர் இயல்பை ஒவ்வொரு ஆணும் கடந்து வர நேரிடும் தருணங்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் அது வெவ்வேறு சந்தர்ப்பங்களாய் அனுபவங்களாய் அமையும். பொதுமைப்படுத்துவது கடினம். அப்படியொரு தெளிவு மனத்தில் ஏற்படும்போது, சமயங்களில் அது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம், உடலிச்சை அடங்கி தந்தைமை மேலெழுந்து பெண்கள் அனைவரையும் மகள்களாக உணரும் பார்வையைத் தரும். அதுவே இன்னும் மேலான நிலையில் பெற்றவளுக்கு நிகரானவர்களாய் அவர்களை நிறுத்திக் காட்டும். இசூமியின் நறுமணம் கதையில் கோபயாஷி சான் எட்டும் உச்சம் இத்தகையதுதான். உணர்வுநிலையில் ஏற்படும் இந்த மாற்றத்தை எழுத்தில் கொண்டுவருவது சவாலான ஒன்று. ஆனால், காமத்தின் பல்வேறு மனப்பாங்குகளை களிப்பும் கொண்டாட்டமுமான உரையாடல்களின் வழியாக நகர்த்திச் சென்று அதன் எல்லையில் கோபயாஷியின் கண்டுணர்தலாக நிறுத்த முடிந்திருக்கிறது. போனி டெயில் பரிசாரகி இந்தக் கதையின் துணை கதாபாத்திரமாக இருந்தபோதும் இப்படியொரு உச்சத்தை சாத்தியப்படுத்தும் சாட்சியாக சித்தரித்திருப்பது கதையின் அழுத்தத்தை மேலும் கூட்டுகிறது.

‘இசூமியின் நறுமணம்’ போன்றே இன்னும் சில கதைகளில் ஜப்பானின் பின்னணி ஊடுபாவாக அமைந்திருக்கிறது. மனித உறவுகளுக்கேயுரிய குணாம்சங்களான சிடுக்குகள், அக மோதல்கள், காமம், துரோகம் போன்றவை எல்லா நிலங்களுக்கும் பொதுவானவை. அவற்றுடன் அந்தந்த நிலத்தின் கலாச்சார அடையாளங்களையும் நுட்பங்களையும் சேர்க்கும்போது அந்தக் கதைகளுக்கு தனித்துவம் கூடிவிடுவதைத்தான் ‘தானிவத்தாரி’, ‘கனவுகளில் தொடர்பவள்’, ‘மயக்குறு மக்கள்’, ‘சிடியா கிராஸிங்’ ஆகிய கதைகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த அம்சத்தை துலக்கிக் காட்டவென ‘மலரினும் மெல்லிது காமம்’, ‘தானிவத்தாரி’ ஆகிய இரண்டு கதைகளைச் சொல்லலாம். ஆண் பெண் உறவில் எழும் தடுமாற்றமும் விளைவும்தான் இரண்டு கதைகளிலுமே மையம். தமிழகச் சூழலில் சொல்லப்பட்டிருக்கும் ‘மலரினும் மெல்லிது காமம்’ கதையில் ‘தெரிந்த மனிதன் என்ன தீமையை செய்துவிட முடியும்?’ என்ற வாக்கியமே ஜப்பானின் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள ‘தானிவத்தாரி’ கதையில் ‘பள்ளத்தாக்கைக் கடக்க துணைவரும் பாட’லாகச் சொல்லப்பட்டுள்ளது. சக மனிதனின் மீது இன்னொருவன் கொள்ளும் நம்பிக்கை ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் சிதறடிக்கப்படும்போதுகூட முற்றிலும் அவன் நம்பிக்கை இழந்துவிடுவதில்லை; அடுத்தவர் மீது அந்தக் கசப்பைப் பொருத்திப் பார்ப்பதுமில்லை என்பதையே இரண்டு கதைகளும் வெவ்வேறு சொற்களில் வெளிப்படுத்துகின்றன.

‘அனுபவ பாத்தியம்’ கதையில், மன்னார்குடியில் குத்தகை நிலத்தைத் திருப்பித் தர மறுப்பவர்களின் மனநிலையும் ‘நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள்’ கதையில் கிகுச்சி சானின் மீது குற்றம் சாட்டும் ஜீவானந்தத்தின் மனோபாவமும் அடிப்படையில் ஒன்றுதான்.

‘செர்ரி பிளாசம்’, ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ இரண்டும் அபத்தமான புதிர் கணங்களில் மையம் கொண்டவை. திட்டமிடல்கள் அனைத்தையும் நொடியில் ஒன்றுமில்லாமல் செய்கிற வல்லமைகொண்ட மரணமே இரண்டிலும் கையாளப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான பற்றுதலும் உறவுகளும் அர்த்தமற்றவையோ என்று மனம் சோர்வுறும்போது தக்கயாமாவின் உச்சிப்பகுதியில் ஒரு பழைய மரவீட்டின் அருகில் ககி மரத்திலிருந்து கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கும் கிழவரையும், அவர் நிற்கிற ஏணியைப் பிடித்துக்கொண்டிருக்கிற கிழவியையும் காட்டுகிறார் செந்தில்குமார். நல்ல அனுபவத்தை தரும் சிறுகதை இதற்கு மேல் எதையும் சொல்லாது. ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ கதையும் மேலதிகமாக எதையும் சொல்லவில்லை.

காஞ்சி எழுத்துகள், சகுரா மலர்கள், கிமோனா, சாமுராய்கள், சிம்பாசி ரயில் சந்திப்பு, விதவிதமான பானங்கள், உணவுகள் என ஜப்பானுக்கேயுரிய அடையாளங்கள் கதையில் தேவையான அளவுக்கு மிகப் பொருத்தமான இடங்களில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன.

உலகெங்கும் கால்கொண்டிருக்கும் இன்றைய புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலர், தம் அயல்நில வாழ்வின் அனுபவங்களை தமிழ் கதைப்புலத்துக்கு வலுசேர்க்கும் புனைவுகளாக மாற்றித் தருகிறார்கள். அந்த வரிசையில் ரா.செந்தில்குமாரின் ‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பை சிறிதும் தயக்கமின்றி சேர்க்கலாம்.

0

இசூமியின் நறுமணம், ரா.செந்தில்குமார்

யாவரும் பப்ளிஷர்ஸ் - ஜனவரி 2021

Tuesday, 13 April 2021

கவிதையும் கவிஞனும் - ரமாகாந்த் ரத்


0

நீண்ட காலமாய் நான் கவிதை எழுதிக் கொண்டிருந்தாலும்கூட ஒரு கவிதை எப்படி எழுதப்படுகிறது என்பது பற்றி எனக்கு ஏதாவது தெரியுமா என்று சந்தேகமாகவே உள்ளது. ஒரு சில கவிஞர்களே இதை அறிவார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். அவர்களிலும் ஒரு சிலர் கவிதையில் தங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை என்பதில் திருப்தியடைந்திருக்கிறார்கள் என்றாலும்கூட! என்னைப் பொறுத்தவரை தான் எப்போது எப்படி எழுதப்படவேண்டும் என்பதை கவிதையே தீர்மானிக்கிறது என்றே நினைக்கிறேன். கவிஞனை ஒரு கருவியாகவே அது தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. எனவே, தானே கவிதையின் ஆசிரியன் என்கிற மாயையை கவிஞன் உதறித் தள்ளவேண்டும். அவன் செய்ய வேண்டியதெல்லாம் கவிதை இவ்வுலகில் இறங்கி வரும் தருணத்தில் அதைக் கைகொள்ளத் தவறிவிடாத ஒரு ஆயத்த நிலையில் இருப்பதுதான்.

கவிஞன் கவிதையின் ஆசிரியன் இல்லை என்பதை எந்தவொரு நிலையிலும் எளிதில் நிரூபிக்கமுடியும். அவன்தான் ஆசிரியன் என்றால் அவன் விரும்பும்போதெல்லாம் அவனால் கவிதை எழுத முடியவேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. மேலும், ஒரு கவிதையை எழுதி முடித்த பின்பு அந்தக் கவிதை அவன் நினைத்ததிலிருந்து முற்றிலும் வேறானதாகவே இருக்கிறது. ஒரு கலைஞன் என்ற முறையில் அவன் ஒரு குயவனிலிருந்து அல்லது ஒரு தச்சனிலிருந்து வேறுபடுகிறான். தாங்கள் உருவாக்க நினைப்பதை செய்து முடிப்பதில் அவர்களால் எப்போதும் வெற்றி பெற முடிகிறது. தங்களது படைப்புக்கு அவர்களால் நேர்மையுடன் உரிமை கோரமுடிகிறது. ஆனால், கவிஞனின் நிலை அவ்வாறில்லை. முன்னர் அறியாத ஒரு உயிர்துடிப்பான ஒரு தருணத்தின் கருவியாக மட்டுமே அவன் இருந்திருக்கிறான்.

கவிஞன் ஒரு கவிதையைத் தனது சாதனையாக நினைத்து, குதூகலிக்க முடியாமல் போவதற்கு மேலும் ஒரு காரணம் உண்டு. ஒவ்வொரு தொழிலிலும் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகமென்றாலும் தோல்விக்கான சாத்தியங்களும் அதே அளவில் உண்டு. ஆனால், கவிதையைப் பொறுத்தவரை தோல்வி உத்தரவாதமானது. வெற்றி எப்போதாவது வெகு அபூர்வமாய் வாய்க்கலாம். உங்கள் அனுபவங்களை மிக நேர்மையாக அலசிப் பார்ப்பீர்களேயானால் நீங்கள் சொல்ல நினைத்ததில் மிக கொஞ்சமானதையே, பெரும்பாலும் உத்தேசித்த உணர்ச்சியின் சிதைந்த ஒரு பகுதியையே சொல்ல முடிந்திருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் கவிதையில் நீங்கள் விவரிக்க நினைத்த உணர்ச்சியின் பெரும்பகுதி தப்பிப் போயிருக்கும். இது எப்போதும் கவிஞனின் குற்றமாக இருக்காது. கவிஞனின் பல உணர்வு நிலைகளுக்கு மொழியினால் ஈடுகொடுக்க முடியாததால் அவற்றை விவரிக்கச் சொற்களை அவனால் கண்டுபிடிக்க முடிவதில்லை. அவன் கண்டெழுதும் சொற்கள் அவனது உணர்ச்சிகளை முழுமையாகவும் நம்பகத் தன்மையுடனும் வெளிக்கொணர முடிவதில்லை. 

மழை நாள் இரவொன்றில் ஒரு காட்டினூடே நீங்கள் பயணம் செய்வதாய் கற்பனை செய்துகொள்ளுங்கள். காட்டில் மரங்களும் மலைகளும் இருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் தகர்க்க முடியாத அடர்ந்த இருள் அவற்றைத் தழுவியுள்ளது. மழை பெய்யும் ஓசையை நீங்கள் கேட்கிறீர்கள். திசையெங்கும் காட்டின் மரங்களும் இலைகளும் மலைகளும் மண்ணும் மழையில் நனைந்துகொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். இருளும் மழையும் இரண்டறக் கலந்திருக்கின்றன. இப்போது இந்த மழை வெறும் மழையல்ல. இருள் வெறும் இருளல்ல. இவற்றோடு இணைந்து உங்களை நீங்கள் உணர்வது தவிர்க்க முடியாதது. இதை நீங்கள் முழுக்க அனுபவிக்கிறீர்கள். ஆனால் இந்த அனுபவத்தை அதன் எந்தப் பகுதியையும் இழந்துவிடாது முழுமையாக விவரிக்கிற வார்த்தைகளை உங்களால் தேர்வு செய்துவிட முடியுமா?

இவ்வாறு பல அனுபவங்கள் உள்ளன. ஒவ்வொரு விஷயத்திலும் உங்கள் அனுபவங்களுக்கான வார்த்தைகளைத் தெரிவுசெய்ய நீங்கள் தவறிவிடுகிறீர்கள். இப்படியிருக்கும்போது கவிஞனால் தான் வெற்றி அடைந்துவிட்டதாய் எப்படிக் கூறிக் கொள்ள முடியும்? அவன் எழுத நினைத்த கவிதை பெரும்பாலும் எழுதப்படாமலே நின்றுவிடுகிறது.

இது கவிஞனின் விதி. அவன் உண்மையில் கவிஞனென்றால், கர்வமற்றவன் என்றால் அவனது அனுபவம் தோல்வியான ஒன்றாகவே இருக்கும். சில காலங்களுக்குப் பிறகு ஒரு நல்ல கவிதையை எழுதமுடியும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. ஒரு அசலான கவிஞனுக்கு இந்த நம்பிக்கை வறட்சி என்பது தீர்வில்லாத முடிவற்ற ஒரு அனுபவமாகும். அவன் தொடர்ந்து கவிதைகள் எழுதுகிறானென்றால் அதற்குக் காரணம் அவன் தளராத தைரியசாலி என்பதே. ஒருபோதும் வெற்றி கிடைக்காது என்று தெளிவாகத் தெரிந்திருந்தாலும் தோல்வியைக் கண்டு துவளாதவன். இந்த தைரிய குணத்தை துணிச்சலிலிருந்தும் அகந்தையிலிருந்தும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். துணிச்சலும் அகந்தையும்மிக்க ஒரு கவிஞன், தான் தோற்றுப் போவதை அறிவதில்லை. இதற்கு மாறாக அசலான கவிஞனே தன் தோல்வியைப் புரிந்துகொள்கிறான். இருப்பினும் கவிதையை அவனால் விட்டுவிட முடிவதில்லை. அவன் வாழ்வின் மிக முக்கியமான தவிர்க்கமுடியாத ஒன்றாகவே அது ஆகிவிடுகிறது.

கவிஞனுக்கு முன்னுள்ள வாய்ப்புகள் தெளிவானவை. தன் கவிதையின் உள்ளீடற்ற தன்மையையும் சாதாரண தன்மையையும் அறிந்துகொள்ளாது, கவிஞன் என்கிற முகமூடியயை அணிந்துகொண்டு முகமெங்கும் கர்வம் ஒளிர, பிறரிடமிருந்து தான் வித்தியாசமானவன் என்கிற மிதப்போடு தன்னைப்போல பிரபலமடையாத பிற கவிஞர்களிடமிருந்து தான் வேறுமாதிரியானவன் என்ற தலைநிமிர்வோடு உலகை வலம்வருவது ஒன்று. அல்லது நம்பிக்கை வறட்சியோடு முகம் முழுக்க கண்ணீரில் நனைந்து தொடர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருப்பது. அவன் தொடர்ந்து கவிதை எழுதுவது தன் அனுபவ முழுமையை விவரிக்கும் கவிதையொன்றை என்றேனும் ஒரு நாள் எழுத முடியும் என்ற நம்பிக்கையால் அல்ல! தான் பொய்யானவன் இல்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள வேறு வழியேதும் இல்லை என்பதனால்தான். ‘நான் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிடுவேன்’ என்று அவன் சொல்வதில் வெற்றி பெற முடியாமல் இருக்கலாம். ஆனால் அவன் நினைப்பிற்கும் அவனது கவிதைக்கும் உள்ள இடைவெளி என்பது தான் கவிஞனே என்று உறுதியாய் நினைத்துக் கொண்டிருக்கிற மகிழ்ச்சியான ஒரு கவிஞனின் கவிதைக்கும் நினைப்புக்கும் உள்ள இடைவெளி அளவுக்கு பெரிதாய் இருக்காது.

(ரமாகாந்த் ரத், ஒரியக் கவிஞர். நவீன ஒரியக் கவிஞர்களில் முதன்மையானவர். சாகித்ய அகாதமி, சரஸ்வதி சம்மான் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். சாகித்ய அகாதமியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.)

நிழலன்றி ஏதுமற்றவன்


(‘ரசனை’ ஏப்ரல் 2007 இதழில் வெளியான கட்டுரை. இந்த இதழின் முகப்பில் கிருபாவின் படம் இடம் பெற்றிருந்தது. மரபின் மைந்தன் முத்தையாவுக்கு நன்றி.)

கலைந்த தலைமுடி. முகம் மறைத்துப் படர்ந்து கிடக்கும் தாடி. கருத்த உதடுகள். எப்போதும் மேல்நோக்கிச் சஞ்சரித்திருக்கும் இடுங்கிய கண்கள். மெலிந்த உடல். பின்னிரவு வரையிலும் விழித்திருந்த களைப்பும் போதையும் கொண்ட உருவம். நெருங்கும் எவரையும் சற்றே மனம் பதறவைக்கும் பசியின் வாடை.

இந்த அடையாளங்களுடன் சென்னையில் இளைஞர்கள் பலரையும் நீங்கள் சந்தித்திருக்கலாம். அடுத்த வேளை பசிக்கு உணவுண்டா என்று தெரியாது. எத்தனை வேளை பசியை ஒத்திவைத்திருக்கிறார்கள் என்றும் கணக்கில்லை. இதோ, இவனது வாழ்க்கை இன்றோடு விடைபெற்றுவிடக்கூடும் என்றே நம்மை நினைக்க வைக்கும்படியான அவலமான நிலையில் சுற்றிக்கொண்டிருக்கும் இவர்கள் அனைவரையும் வாழ்க்கையோடு பிணைத்து வைத்திருக்கும் மிக மெல்லிய இழை சினிமாக் கனவுதான்.

திசைகள்தோறும் இரும்புக் கதவுகள் கொண்ட சினிமா எனும் கனவு மாளிகையின் எதிரே தவம் கிடக்கிறார்கள். அவமானங்களையும் வலிகளையும் பொருட்படுத்தாமல் தினம்தினம் ஆயிரம் கதவுகளை மோதிப் பார்க்கிறார்கள். வெற்றி லட்சத்தில் ஒருவனுக்கே என்ற யதார்த்தத்தை அறிந்திருந்தபோதும், அந்த ஒருவன் தானே என்ற பலத்த நம்பிக்கையுடன் ஏதோ ஒரு கிராமத்திலிருந்து வந்து காத்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் சினிமாவுக்கான கதைகள் சில புனையப்பட்டிருக்கும். அவற்றை வெகு ரகசியமாய் பொத்திப் பொத்தி வைத்திருப்பார்கள். மிதமிஞ்சிய போதையிலும்கூட அந்த ரகசியக் கதைகளின் முதல் எழுத்தைக்கூட உச்சரித்துவிட மாட்டார்கள். சிலமணி நேரத் தூக்கத்தின்போதும்கூட கதைகளை யாரும் களவாடிவிடக்கூடாது என்று உயிரின் ஆழத்தில் புதைத்து வைத்திருப்பார்கள். வேளாவேளைக்கு கதறியழும் பசியின் குரல் காதுகளுக்கு எட்டாதபடிக்கு இந்த ரகசியக் கதையை திரும்பத் திரும்ப மெருகேற்றி உரம்கூட்டிக் கொண்டிருப்பார்கள்.

கோடம்பாக்கமே கதியென்று கிடக்கும் இத்தகைய லட்சக்கணக்கான இளைஞர்களில் ஜெ.பிரான்சிஸ் கிருபாவும் ஒருவர்.

திருநெல்வேலி நாகர்கோயில் பாதையில் சற்றே விலகி அமைந்துள்ளது பத்தினிப்பாறை எனும் சிறு கிராமம் கிருபாவின் சொந்த ஊர். இரண்டே வகுப்பறைகள் கொண்ட கிராமத்துப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பு. பிறகு பக்கத்திலுள்ள காரங்காடு என்ற ஊரில் எட்டாம் வகுப்புவரை. குடும்பத்தின் கடைசிப் பையன் என்பதால் நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்ற ஆசை அப்பாவுக்கு. ஆனால் படிப்பைத் தொடர முடியாத குடும்பச் சூழ்நிலை.

தனது பதினான்காவது வயதில் பம்பாய்க்கு ரயிலேறுகிறார்.. பம்பாய் அவருக்கு வாழ்வின் இருண்ட தரிசனங்களை பரிசளிக்கிறது. அதற்கு உள்ளிருந்தேதான் கிருபா தன்னைக் கண்டுகொள்கிறார். இரும்புப் பட்டறைகளும் தொழிற்சாலைகளும் நிறைந்த ஒரு தொழில் வளாகத்தில் இருக்கும் டீக்கடை ஒன்றில் டீ சப்ளையராக வேலை. சம்மட்டியின் சத்தங்களும் தீப்பொறிகளும் இரும்புத் துருவின் வாடையுமாயிருந்த அந்த இடத்தில் இருந்த ஒரு லேத் பட்டறையில் டர்னர் வேலை அவருக்குப் பிடித்திருந்தது. ஆனால் சிறுவன் என்பதால் வேலைக்குச் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். பகலில் டீ சப்ளையராகவும் இரவில் லேத் டர்னரின் உதவியாளராகவும் சில மாதங்கள் கழிகின்றன. தனது பதினேழாவது வயதில் கிருபா ஒரு தேர்ந்த டர்னராகிறார். மேலும் சில ஆண்டுகள் உற்சாகமாகத்துடனும் அக்கறையுடனும் தொழில் ஈடுபட்டிருந்தார். இருபத்தி மூன்றாவது வயதில் தானே ஒரு பட்டறையைத் தொடங்கி நடத்துகிறார். ஆ, வாழ்க்கை நமக்கும் வாய்த்துவிட்டது என்று நிமிர்ந்தபோது விதி பாபர் மசூதி சம்பவத்தின் வடிவில் 1992ம் ஆண்டு எதிர்ப்பட்டது. ஒரு வருடம் தொழில் முடங்கிப்போனது. வாங்கிய கடனுக்கான வட்டி, மூடிக்கிடந்த இரும்புப் பட்டறையில் குடியேறிவிட்டது.

வாழ்க்கை கைவிட்டுவிட்டது என்றிருந்த நிலையில் கவிதை கிருபாவுக்கு அடைக்கலம் தந்தது. கொஞ்சம் படிக்கவும் எழுதவும் தொடங்கியிருந்தார். தினமணிக்கதிரின் கடைசிப் பக்கத்தில் கலாப்ரியாவின் ‘உலகெலாம் சூரியன்’ தொகுப்பைக் குறித்த ஒரு குறிப்பு. ‘ஒரு குத்து சுண்டல் கூடக் கிடைக்குமென்று தங்கையை இடுப்பில் சுமந்து போகும் அக்கா’ சிறுமியைப் பற்றிய கவிதை கிருபாவின் பார்வையையே மாற்றியது.

பம்பாய் கைவிட்ட நிலையில் 1998ம் ஆண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார். கொஞ்சம் சினிமாக் கனவும் கவிதைகளுமே அவர் கைவசம் இருந்தன. பம்பாய் நண்பர்கள் சிலரின் உதவியால் ‘காமராசர்’ படத்தில் திரைக்கதையாளராகவும் வசனகர்த்தாகவும் பணியாற்றினார்..

இந்த நாட்களில் கிருபாவின் தோற்றம் எதிர்படுவோரை சற்றே அதிரச் செய்யும்விதமாய் இருந்தது. கலைந்து, காற்றில் அலையும் நீண்ட தலைமுடி, அடர்ந்து முகம் மூடிக்கிடக்கும் தாடி, மஞ்சளோடி இடுங்கிக் கிடக்கும் கண்கள். அவர் தங்கியிருந்த தி.நகர் மேன்ஷன் அறைவாசிகள் பலருக்கு அவரது தோற்றம் முகஞ்சுளிக்க வைப்பதாய் இருந்தது. கடுமையான வகைளும் தூற்றல்களும் அவரைச் சுற்றி விழுந்தவண்ணமிருந்தன. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கிருபாவை அந்த மேன்ஷனில் கண்டுபிடிப்பது வெகு சிரமம். நான்கு அடுக்குகள்கொண்ட அந்த மேன்ஷனில் அவருக்கென்று ஒரு அறை கிடையாது. நண்பர்களின் தயவில் ஏதேனுமொரு அறை மூலையில் சுருண்டு கிடப்பார்.

அவரது சட்டைப்பையில் சுருண்டு கிடந்த கவிதைகளை நண்பர்கள் சிலர் படிக்க நேர்ந்தது. ‘கல் மத்தளம்’ என்ற கவிதை அவருக்கும் யூமா வாசுகிக்கும் இடையில் ஒரு ஆழமான உறவையும் நட்பையும் ஏற்படுத்தித் தந்தது. இருவரையும் நெருக்கமாகப் பிணைத்த இன்னொரு பொது அம்சம், பசி. பலநாள் இரவுகளில் கையிலிருக்கும் சில்லறைகளைக்கொண்டு மூன்று இட்லிகளை வாங்கி இருவரும் பகிர்ந்துண்டு பசியாறியிருக்கிறார்கள். நெடுந்தொலைவு கவிதை பேசி இரவைக் கடத்தி நடந்திருக்கிறார்கள். மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து பழவந்தாங்கலுக்கான கடைசி ரயிலில் யூமாவை ஏற்றிவிட்டு கிருபா திரும்பி நடந்து வரும்போது இருளும் நட்சத்திரங்களும் மட்டுமே அவருக்குத் துணையிருக்கும்.

கிருபா போன்ற இளைஞர்களுக்கு சென்னையில் இரவு வேளையில் உணவு கிடைக்கிறதோ இல்லையோ இரவு மதுவருந்துதல் மட்டும் எப்படியோ அமைந்துவிடுவது இன்றுவரை விளங்கிக்கொள்ள முடியாத விநோதம்.

கிருபா ஆசையாகவும் வெகு உல்லாசமாகவும் குடிப்பதுண்டு. எத்தனை குடித்தாலும் சலம்பல்கள் இருக்காது. அடுத்தவருக்கு தொந்தரவு இருக்காது. போதை அவருக்குள் இறங்குந்தோறும் அவரது இயல்பான அமைதி மேலும் துலக்கம் பெற்று பேரமைதியாகிவிடும். அண்ணாச்சி ராஜமார்த்தாண்டனைப் போல போதையின் மௌனத்தையும் அதன் அளப்பரிய அழகையும் கொண்டாடத் தெரிந்தவர் கிருபா.

ஒரு பாடலாசிரியராக அடையாளப்படுத்திககொள்ள கிருபாவும் அவரது நண்பர்கள் சிலரும் செய்த முயற்சிகள் பலனளிக்காத சூழ்நிலை. பசியும் நிராசையும் இரவில் யார் தயவிலேனும் வாய்க்கும் பெரும் போதையுமாய் கழிந்த நாட்களில் கிருபா பெரும் மனப் பதற்றத்துக்கு ஆளானார். கவிதை மனம் எந்த சந்தர்ப்பத்திலும் பின்னடைநதுவிடவிலல்லை. உடல்நிலை கெட்டுப் போயிருந்தபோது கவிதை மேலும் தீவிரம் கொண்டிருந்தது.

நண்பர் யூமா வாசுகியின் முயற்சியினால் முதல் தொகுப்பாக ‘மெர்சியாவின் காயங்கள்’ தமிழினி வெளியீடாக வெளிவந்தது. தொடர்ந்து தீவிரமாக எழுதினார். உடனடியாகவே ‘வலியோடு முறியும் மின்னல்’, ‘நிழலன்றி ஏதுமற்றவன்’ இரண்டு தொகுப்புகளும் வெளியாயின.

நவீன தமிழ்க் கவிதையின் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கவிதைப் பாணி கிருபாவை தனித்து அடையாளம் காட்டியது. அபாரமான மொழியாளுமை, தனித்துவம் மிக்கப் படிமங்கள் ஆகிய இரண்டும் அவரது கவிதையின் முத்திரைகள். கூறியது கூறலின்றி மொழியின் நுட்பமான திருகல்களின் வழியாக கற்பனையின் வெகு எல்லையில் மட்டுமே கண்டறிய முடிகிற படிமங்கள் தொடர்ந்து அவரது கவிதைகளில் ஆளுமை செலுத்துகின்றன. தமிழ்க் கவிதையை பெரிதும் ஆக்கிரமித்திருக்கும் அறிவுஜீவித்தனம் மிகுந்த, உத்திகளால் ஒளியூட்டப்பட்ட ‘மூளை’க் கவிதைப் போக்குக்கு நேர்மாறானது கிருபாவின் தன்னிச்சையான உணர்வெழுச்சிமிக்கக் கவிதைகள். அவரை நவீனக் கவிதைப் போக்குக்கு தடம் மாற்றியவை கலாப்ரியாவின் கவிதைகள். சு.வில்வரெத்தினம், தேவதேவன் ஆகியோரது கவிதைகளை அவர் விரும்பிப் படிப்பதுண்டு.

ஒரு கவிஞராக அறியப்பட்டிருந்த கிருபா ‘கன்னி’ நாவலின் வழியாக ஒரு நாவலாசிரியராக உருவெடுத்திருக்கிறார். கவிதைத் தொகுப்புகள் தயாரான சந்தர்ப்பங்களில் தமிழினி வசந்தகுமாரோடு நட்பு ஏற்பட்டது. இந்த நாவலுக்கான தொடக்கமும் நிகழ்ந்தது. தொடர்ந்து எழுதப் பணித்ததன் விளைவாக ‘கன்னி’ நாவல் இரண்டாண்டு கால அளவில் உருவானது. கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த அவர் ஒரு பெரும் நாவலின் வழியாக உரைநடைக்கு வந்திருக்கிறார். இதுவரையிலுமான தமிழ் உரைநடையாளர்கள் எவரது பாதிப்பும் இல்லாத ஒரு தனித்துவமான மயக்கமூட்டும் இவரது உரைநடை ஆச்சரியமளிக்கிறது. எல்லைகளோ கட்டுப்பாடுகளோ இல்லாத கற்பனையின் தன்னிச்சையான இயக்கத்தில் உருவாகியிருக்கும் மொழியும் படிமங்களும் கொண்ட இந்த உரைநடை கன்னி நாவலின் பெரும் கவனிப்புக்கு முக்கிய காரணம்.

தமிழ் இலக்கியத்துள் இருக்கும் குழு மனப்பான்மை, இலக்கிய அரசியல், அக்கப்போர் இவற்றிலெல்லாம் கிருபாவுக்கு அக்கறை கிடையாது. வெகுஜனப் பத்திரிகையில் எழுதக்கூடாது என்ற விரதமும் கிடையாது. ஆனால், எதையும் தானாகக் கேட்டுப் பெறலாகாது என்பதில் தீர்மானமாக இருப்பவர். இன்று அவர் சினிமாவில் பாட்டெழுதிக் கொண்டிருக்கலாம். ஆனந்த விகடனில் கவிதை எழுதலாம். இவை எதுவுமே அவர் கேட்டுப் பெற்ற வாய்ப்புகள் இல்லை. சினிமா வாய்ப்புக்காக இல்லாத கதவுகளையெல்லாம் தட்டிக் கொண்டிருப்பவர்களின் மத்தியில் ‘நானாக எதையும் தேடிப் போக மாட்டேன்’ என்றிருப்பது ஆச்சரியமானதுதான். ‘தேடிப் போகத் தொடங்கினால் அலைந்தே செத்துப் போகவேண்டியதுதான்’ என்று அவர் சொல்வது யதார்த்தமானதுதான்.

அவரது அசட்டையான தோற்றம் அவரது இயல்பையும் புத்திகூர்மையையும் மறைத்துவிடக்கூடியது. அபாரமான புத்திசாலி. எந்த புத்தகத்தையும் படிக்கத் தொடங்கிய சில பக்கங்களுக்குள்ளாகவே முழுக்க அவதானித்துவிடக்கூடிய தனித்திறன் அவரிடம் உண்டு. நண்பர்களிடமும் தன் உறவினர்களிடமும் அன்பாகவும் பிரியமாகவும் இருப்பவர் கிருபா. அவரிடம் பொறாமையோ போட்டி மனப்பான்மையோ கிடையாது. இயல்பாக வெளிப்படும் பிரியமே அவரை ஆட்கொண்டிருக்கிறது.

நல்லதை நல்லதென்று மனம் திறந்து பாராட்டும் குணம் உண்டு. அவரது இயல்பின் காரணமாகவே அவருக்கு வாய்க்கும் நண்பர்கள் அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

பெற்றோர்களின் மீதும் பெரும் அன்புகொண்ட கிருபா உறவினர்களையும் குழந்தைகளையும் பார்க்கும்போது குதூகலம் அடைந்துவிடுகிகறார். ஒருமுறை தொலைபேசியில் “இப்போ என்னைச் சுத்தி இருவது மருமக்கமார் இருக்காங்க… உற்சாகமாயிருக்கு” என்று ஊரிலிருந்து சொன்னபோது அவரது குரல் தளுதளுத்தது. சென்னைத் தெருக்களில் பின்னிரவு நேரங்களில் யாரும் உடனில்லாது தனித்து நடந்திருந்த நாட்கள் அப்போது அவருக்கு நினைவில் வந்திருக்கக்கூடும்.

அவருக்கு அண்மையில் கோவையில் ‘தேவமகள்’ அறக்கட்டளை விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிக்கொண்டிருக்கும்போது “இந்தப் பணத்தை அம்மாட்ட கொண்டு கொடுக்கணும். கோயில்ல எனக்காக நேத்திக் கடன் ஒண்ணு பாக்கியிருக்குண்ணு சொன்னாங்க…” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். ஆனந்த விகடனில் வெளியாகும் ‘மல்லிகைக் கிழமைகள்’ கவிதைகளை ஒவ்வொரு வாரமும் அவரது கிராமம் மொத்தமும் ஆவலுடன் வாங்கிப் படித்து ‘நம்ம பையன் எழுதிருக்காண்டா…’ என்று கொண்டாடுகிறது.

காயங்களோடும் வலிகளோடும் நிழலன்றி ஏதுமற்றவனாய் திசைகள்தோறும் திரிந்தபோதும் அவரைச் சுற்றி ஏராளமான அன்பும் அக்கறையும் வாய்த்தபடியேதான் உள்ளன. அவரது மனத்தில் பொங்கிப் பெருகும் அன்பின் சுனையிலிருந்தே அத்தகைய குளுமையும் வாய்த்திருக்கமுடியும். ‘மற்றவர்களுக்கு நீ எதைத் தருகிறாயோ அதையே அவர்களும் உனக்குத் தருவார்கள்’ என்றொரு வாக்கு உண்டு. வாழ்வின் பெரும்பாலான தருணங்களில் பசியோடும் மன அழுத்தத்தோடும் போராடிக் கிடந்த கிருபா பிறருக்கு எப்போதும் அன்பையும் புன்னகையையுமே தந்திருக்கிறார். அதே அன்பையும் புன்னகையையுமே அவரது நண்பர்கள் எப்போதும் அவரிடம் திருப்பித் தந்துகொண்டிருக்கின்றனர்.


Monday, 12 April 2021

தமிழ் இதழியலின் சுவையான சில பக்கங்கள்

 


ஓவியம் : ஜீவா

சம்பவம் ஒன்று

கும்பகோணத்தைச் சேர்ந்த அந்த எழுத்தாளர் தன் மகளின் கல்யாணத்துக்கு பண உதவி கேட்டு பிரபல வாரப் பத்திரிகையின் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுகிறார். பாவம், கஷ்டப்படுகிற எழுத்தாளர் என்ற இரக்கம் ஏற்படுகிறது ஆசிரியருக்கு. அதனால், பத்திரிகையுடன் நெருங்கிய பழக்கமில்லாத எழுத்தாளராக இருந்தும் ஐந்நூறு ரூபாய்க்குச் செக் அனுப்பி வைத்தார்.

ஆனால், இரண்டு நாளில் செக்கைத் திருப்பி அனுப்பிவிட்டார் எழுத்தாளர்,  அது மிகக் குறைந்த தொகை என்பதால் ஏற்கமாட்டேன் என்ற குறிப்புடன். ( ஐந்நூறு ரூபாய் என்பது இந்த நாளில் சிறிய தொகையாகத் தோன்றலாம். இருபது இருப்பத்தைந்து வருடங்களுக்கு முன் அது நால்ல தொகைதான்.)

ஆசிரியருக்குக் கோபம் ஏற்படவில்லை. அனுதாபம்தான் ஏற்பட்டது. ‘என்ன இவர், சுத்த உலகம் தெரியாத மனிதராயிருக்கிறார்! கல்யாணச் செலவு மொத்தத்தையும் நான் ஏற்றுக்கொள்வேன் என்று எதிர்பார்த்தாரா என்ன?’ என்றவர், நிருபரைக் கூப்பிட்டு ‘இவர் இப்படிப் பணத்தைத் திருப்பி அனுப்பியது இவர் மனைவிக்குத் தெரிந்திருக்காது. பணத்தின் அருமை பெண்களுக்குத்தான் புரியும். நீங்கள் அந்த அம்மாவைப் பார்த்துக் கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்லி, ஐந்நூறு ரூபாயை மறுபடியும் ரொக்கமாகவே அனுப்பிவைத்தார். எழுத்தாளரின் மனைவியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

சம்பவம் இரண்டு

சக்தி அதிபர் கொண்டுவரும் புத்தகங்களையெல்லாம் கரைத்துக் குடிப்பார் அந்த எழுத்தாளர். சக்தி இதழில் வரவேண்டிய விஷயங்களைத் தேர்ந்தெடுத்துத் தரும் பொறுப்பில் இருந்தவர் அவர். ஒருமுறை நேரு எழுதி ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ புத்தகத்தை அலுவலகத்தில் இருக்கும்வரை படித்துக் கொண்டிருந்தார். இருட்டிவிட்டது. அது கனமான பெரிய புத்தகம்.

“வீட்டுக்கு எடுத்துப்போய்ப் படியுங்களேன்” என்றான் அவன்.

“நீங்கள் என் ரூமைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார் எழுத்தாளர்.

“இல்லை.”

“அதனால்தான் சொல்கிறீர்கள். இந்தப் புத்தகத்தை என் ரூமுக்கு எடுத்துக்கொண்டு போனால் அதை உள்ளே வைத்துவிட்டு நான் வெளியேதான் படுக்கவேண்டும்” என்று சொல்லி சிரித்தார் எழுத்தாளர். வாயின் ஓரமாக வரும் அந்த மாதிரி சிரப்பை அவன் வேறு எவரிடமும் பார்த்தது கிடையாது. குருவிக் கூடு போன்ற சிறிய அறயில் ஒண்டியிருக்கும் வாழ்க்கையிலும் ஒரு நகைச்சுவையைக் கண்ட யதார்த்தவாதி அந்த எழுத்தாளர்.

0

இந்த இரண்டு சம்பவங்களும் இடம்பெற்றிருப்பது ‘அவன்’ என்ற புத்தகத்தில். கடந்த ஞாயிறு (11.04.2021) கோவையில் நடைபெற்ற சிறுவாணி வாசகர் மையத்தின் ‘நாஞ்சில்நாடன் விருது’ வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பரிசளிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று அது. எழுதியவர் ரா.கி.ரங்கராஜன். என்னுடைய பள்ளிக்காலத்தில் அறிமுகமான பெயர். அவருடைய சிறுகதைகளையும் நாவல்களையும் மொழியாக்கங்களையும் வெவ்வேறு பெயர்களில் எழுதிய பத்திகளையும் தொடர்ந்து படித்திருக்கிறேன்.

இந்த நூலை சுயசரிதைக் குறிப்புகள் என்று சொல்லலாம். எழுத்தாளராக வேண்டும் என்று சிறுவயதிலேயே துளிர்த்திருந்த கனவை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்ட நாட்களில் தொடங்கி, சென்னையில் பல்வேறு இடங்களில் அலைந்து வெவ்வேறு ஆளுமைகளைச் சந்தித்ததையும் வேலை பார்த்ததையும் மிகுந்த சுவாரஸ்யத்துடன் எழுதியுள்ளார் ரா.கி.ரா.

ரா.கி.ரா தனது 23வது வயதில் தொடங்கி அறுபத்தி ஐந்து வயது வரை ( 1950 முதல் 1993 வரை ) நாற்பது ஆண்டு காலம் குமுதத்தில் பணிபுரிந்தார். அதற்கு முந்தைய காலகட்டத்தின் பல சுவையான சம்பவங்களையும் குமுதத்தில் வேலைபார்த்த போது நடந்த சிலவற்றையும் சுருக்கமாகவும் திருத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.

மாலனின் தூண்டுதலால் எழுதப்பட்ட இது ‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்திருக்கிறது.

இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளவை ரா.கி.ராவின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்றாலும் தமிழ் இதழியல் வரலாற்றின் ஒரு பகுதி என்று இதைச் சொல்ல முடிகிற அளவுக்கு, அந்த காலத்தில் வெளியான பத்திரிகைகள், அவற்றின் ஆசிரியர்கள், ஓவியர்கள் குறித்த பல சம்பவங்களும் சித்தரிப்புகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

‘சக்தி’ இதழில் ரா.கி.ரா பணிபுரிந்த இரண்டரை ஆண்டு காலத்தில் ‘சக்தி’ காரியாலயம் ( இப்போதுள்ள மியூசிக் அகாதமி ) வளாகத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

‘கலைமகள்’ கி.வா.ஜ, கல்கி, ‘ரசிகமணி’ டி.கே.சி, வ.ரா, சக்தி வை கோவிந்தன், கண்ணதாசன், ராஜாஜி, ஜி.டி.நாயுடு, பொள்ளாச்சி மகாலிங்கம், பெ.தூரன், அரு.ராமநாதன், பெ.நா.அப்புஸ்வாமி, எஸ்.வி.வி, பம்பாபதி, ஓவியர்கள் ரவி, தாணு, சில்பி, ‘நாடோடி’, சிதம்பர ரகுநாதன், வலம்புரி சோமநாதன், ‘சரஸ்வதி’ விஜயபாஸ்கரன், ‘வானதி’ திருநாவுக்கரசு என பலரைக் குறித்த அபூர்வமான பதிவுகளும் ‘காதல்’ (அரு.ராமநாதன்), காலச்சக்கரம் (பெ.தூரன்), ‘ஹனுமான்’ (சக்தி), ‘சமரன்’, ‘சரஸ்வதி’ (விஜயபாஸ்கரன்), ‘ஜில்ஜில்’ (வானதி நடத்திய குழந்தைகள் இதழ்), ‘ஜிங்லி’ (குமுதம் குழுமத்திலிருந்த வெளியான சிறுவர் இதழ்) என அந்தக் காலத்தில் வெளியான இதழ்களைக் குறித்த தகவல்களும் இந்த நூலின் சிறப்பு.



தமிழில் பொது வாசகர்களை உருவாக்கியதில் ‘கல்கி’, ‘குமுதம்’, ‘விகடன்’ போன்ற வார இதழ்களின் பங்கு முக்கியமானது. ஒவ்வொரு இதழும் தனக்கான வாசகர்களை உருவாக்கி வளர்த்தது. அதே சமயத்தில் ஒன்றையொன்று இட்டுநிரப்புபவையாகவும் விளங்கின. இந்த நூலின் வழியாக அந்த இதழ்களைக் குறித்து இப்போது யோசிக்கும்போது அவ்வாறான இதழ்கள் இன்று இல்லாமல்போனது எத்தனை பெரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது என்பதை உணரமுடிகிறது. வெகுஜன ரசனைக்கான இதழ்களாகவே அவை இருந்தன இன்று அவற்றைக் குறித்து விமர்சிக்கலாம். ஆனால், எளிய ஒரு வாசகன் அவ்வாறான இடத்திலிருந்துதான் படிக்கத் தொடங்குகிறான். புத்தகங்களின் உலகத்துக்குள் நுழைகிறான்.

கடந்து ஐம்பது ஆண்டுகளில் வெளியான பல்வேறு வார, மாத இதழ்களைக் குறித்த ஆய்வும் அவை தமிழ் வாசக ரசனையில் ஏற்படுத்திய மாற்றங்களைக் குறித்துமான சீரிய பதிவுகள் தமிழில் வெளிவரவேண்டியதின் அவசியத்தை ரா.கி.ரா வின் இந்த நூல் உணர்த்துகிறது.

0

முதல் சம்பவத்தில் மகளின் கல்யாணத்துக்கு உதவி கேட்ட எழுத்தாளர், கரிச்சான் குஞ்சு. பத்திரிகை ஆசிரியர் ‘குமுதம்’ எஸ்.ஏ.பி.

இரண்டாவது சம்பவத்தில் சொல்லப்பட்டிருக்கும் எழுத்தாளர் கு.அழகிரிசாமி.

0

 

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...